25 டொலர் அதி வேக கணனி

எல்லாமுமே கணனி மயப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நவீன உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாகிக்கொண்டேயிருக்கின்றது. வளர்ந்துகொண்டேயிருக்கும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற் போல் நம்மை நாமும் வளர்த்துக்கொள்வதென்பது தவிர்க்க முடியதவொன்றாக இருக்கின்றது. இப்படி தொழில்நுட்பத்திற்கு இணைந்ததாக நம்மை நாம் மாற்றிக்கொள்ளுதல் சாத்தியமாவது அதிக வருமானமீட்டும் வர்க்கத்தினரிடம் மட்டுமேயாகும். பண முதலைகளாகக் காணப்படும் இவர்கள் உலகில் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான தொழில்நுட்ப வளர்ச்சிகொண்ட சாதனங்களை அறிமுகமானவுடனேயே பயன்படுத்தி அதன் நன்மைகளை தாம் மட்டும் நுகர்ந்துகொண்ட பின் சமூக தளங்களிலும் தங்களுடைய இணைய பக்கங்களிலும் அதன் நன்மைகள், இலகுதன்மைகள் பற்றி பதிவிடுகின்றனர். குறைந்த வருமானமீட்டும் வர்க்கத்தினரோ இவர்களின் பின்னூட்டங்களைப் பார்த்து பெருமூச்சு விடுவதுடன் நிறுத்திக் கொள்வர்.

கணனி பாவிக்கும் எமக்குப் பல வகையான மென்பொருட்களையும் நிறுவவேண்டும் எனும் ஆசையில் கிடைத்த மென்பொருட்களையெல்லாம் நிறுவுவோம், அப்படி நிறுவிய மென்பொருட்களில் சில அதிர்ஷ்டவசமாக எந்தவித பிரச்சனைகளுமின்றி தொழிற்படும், ஆனால் பெரும்பாலான மென்பொருட்கள் நிறுவப்பட்ட பின் கணனியின் வேகம் குறைதல், எந்த வித இயக்கமுமின்றி கணனியிருத்தல், அடிக்கடி கணனி ரீ ஸ்ட்ராட் ஆகுதல் என தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இத் தொல்லைகளுக்குப் பிரதான காரணம் நாம் நிறுவிய மென் பொருட்கள் நமது கணனிக்கு பொருத்தமானதாக இல்லை என்பதனாலேயேயாகும். இந்த பென்பொருட்களைப் அவசியம் பாவிக்க வேண்டுமாகவிருந்தால் எம்மிடமிருக்கும் கணனியில் ரெம், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிதாக ஒரு கணனி வாங்க வேண்டும். அதிக வருமானம் கொண்டவர்களுக்கு இம் மாற்றங்களைச் செய்வது இலகு, சாதாரண வருமானமீட்டுபவர்களுக்கு  இன்றைய விலைவாசியைப் பொருத்தவரைக்கும் இது கொஞ்சம் சிரமமானதுதான்.

அதிக செலவில்லாமலும் கணனியின் மெமோரியில் மாற்றங்கள் செய்யாமலும்  நமக்குத் தேவையான மென்பொருட்களை நிறுவி கணனியினை பாவிப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சாதனம் தான் இந்த 25 டொலர் கணனி. இந்த சாதனத்தின் அறிமுகத்தினால் அதிகமாக பயன் பெறப் போவது நடுத்தர வருமான வர்க்கத்தினரே. 
25 டொலர் கணனி : உண்மையில் இது ஒரு கணனி அல்ல, இது ஒரு பென் ட்ரைவ் போன்ற ஒரு சாதனம் இந்த சாதனத்தை கணனியில் சொருகிய பின் எமது கணனியினை ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்தால் முன்னர் இருந்த வேகத்தை விட பல மடங்கு வேகமாக நமது கணனி இயங்க ஆரம்பிக்கும் என்று சொல்கின்றார்கள் இதனை சந்தைக்கும் அறிமுகப்படுத்தியிருக்கும் Xtra PC நிருவகத்தினர். நான்கு வகையான விலைகளில் கிடைக்கக் கூடியதாக தயாரித்திருக்கும் இந்த சாதனத்தின் அதி கூடிய விலை 80 டொலர்களாகும். ஒவ்வொரு விலைக்கும் தகுந்தாற் போல் அதன் வேகம் மற்றும் ஸ்டோரேஜ் அளவு என்பன மாறுபட்டுக் காணப்படுகின்றது.  மேலும் இந்த சாதனம் பொருத்தமான முறையில் இயங்கவில்லையென்றால் நம்முடைய பணத்தை மீளத் தருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இணையப் பாவனை, வீடியோ பார்த்தல், ஈமெயில் வசதிகள், சமூக தள வசதிகள், ஒன்லைன் வியாபாரம், கேம்ஸ் என சாதாரணமாக நாம் செய்யும் வேலைகளை இந்த சாதனத்தைக் கொண்டு வேகமாகவும் சிரமமின்றியும் செய்துகொள்ள முடியும். மேலும் இதனை ஹார்ட் டிஸ்க் இல்லாத மற்றும் ஹார்ட் டிஸ்க் பழுதடைந்த கணனிகளிலும் பொருத்தி இதனைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் நன்மை.  எதுவாயினும் மாதம் பதினைய்யாயிரம் சம்பளம் எடுக்கும் சாதாரண ஒருத்தர் திருப்தியான முறையில் கனனி பாவிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் வளர்ந்தால் போதும்.

மேலதிக தகவல்களை இந்த இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் https://www.xtra-pc.com/

பதுமராகம் ஒரு பார்வை

பொதுவாக நாவல்களில் அதிகளவு நாட்டமில்லை, தமிழகம் ஓரளவுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும் எனது தேசத்து நாவல்களில் பதுமராகம் புதிதாக சுவைக்கும் நாவல், நாவல் கையில் கிடைத்த தினம் அட்டைப்படம், அதற்கடுத்ததாய் உள்ள நாவல் பற்றிய தகவல்கள் அடங்கிய இரண்டு பக்கங்களையுமே சுவைக்க முடிந்தது, அட்டைப்படத்தைப் பார்த்தவுடனேயே உள்ளே இருக்கும் சரக்கு எப்படியாய் இருக்கும் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிந்தது. பின்னர் இரண்டு நாட்களின் பிற்பாடு நாவலை சுவைக்க ஆரம்பித்தேன், பெரிதாக நாட்கள் தேவைப்படவில்லை, சுவைக்க ஆரம்பித்த தினத்திலேயே ருசி கண்டேன், அத்தினமே சுவைத்துத் தீர்த்தேன்.

நான் அறிந்த, அனுபவித்த வகையில் இலங்கையில் பெண்கள் இலக்கியத்தினுள் புரள்வது அரிது, அதிலும் இஸ்லாமிய பெண்கள் திருமணமாகும் வரையில் அல்லது ஏதாவது ஒரு பொறுப்பினை சுமக்கும் வரையில் தான் இலக்கியத்தோடு பயணித்திருக்கின்றார்கள்.  நிறைய பெண்கள் பத்திரிகைகளோடு மட்டும் தங்கள் இலக்கிய உறவினை மட்டுப்படுத்தியிருக்கிறார்கள், அவர்கள் மத்தியில் பதுமராகம் அதுவும் நாவல் வடிவில் வெளிவந்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியதொன்று, நூலாசிரியர் வாழும் சூழலே இப்படியான ஒரு நாவலை பிரசவிக்க காரணமாக இருந்திருக்க வேண்டும். இலங்கையில் நூலாக்கத்திற்கு பெருமளவில் காசைக் கரைக்கவேண்டி வேதனைமிகு நிலையும் உண்டென்பது கூடுதல் தகவல்.

நாவலின் உயிர் மிகவும் அவசியமானதொன்று, பொதுவாக கிழக்கு மண்ணைப் போர்த்தியிருக்கும், பெண்களைப் பெற்றவர்களைப் பீடித்திருக்கும் இதுவரை காலமும் யாராலும் குணப்படுத்த முடியாத  நோய்களான சீதனம், பெரிய வீடுகட்டி மாப்பிள்ளை எடுத்தல் போன்றவைகளை அலசிச் செல்கின்றது, கிழக்கு மண் இந் நோயின் விளைவுகள் பற்றி அடிக்கடி சிறுகதைள், குறும்படங்கள், கவிதைகள், பட்டிமன்றங்களில் விழிப்புணர்வு செய்துகொண்டேயிருக்கின்றது, அப்படியான ஒரு விழிப்புணர்வுகளில் ஒன்றுதான் பதுமராகமும்.

எனக்குப் பழக்கப்பட்ட மொழிநடையில் நகர்வதால் புரிந்துகொள்ள சிரமப்படவேண்டிய அவசியமிருக்கவில்லை, காதல் என்றாலே கஸ்டம்தான் ,  கிழக்கு மண்னின் காதல் ரொம்பவே கஸ்டம், அதிலும் கிழக்கு மண்ணில் அக்கா தங்கையுடன் பிறந்திருந்தால் அவனுக்கு காதல் எட்டாக்கனி. அப்படியாக அக்கா தங்கையுடன் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹரீஸ் அவனுடைய காதல் என நகர்கிறது நாவல் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு இப் பார்வையை நிறுத்திக்கொள்ள எனக்கு நாட்டமில்லை, இன்னும் கொஞ்சம் ஆழமாக அலச ஆசைகொள்கிறேன்.

நாவலின் உயிர் ஹரீஸ்- நூர்ஜஹான் காதலாக இருந்தாலும் அந்தக் காதலுக்குள்ளேயே கதையை நகர்த்திச் செல்லாமல் தாய்ப் பாசத்துக்கென தத்தளிக்கும் ஹஸ்னா எனும் குழந்தையில் ஆரம்பித்து, தனது அண்ணியின் சூழ்ச்சியினால் தன் ஆசைகளைத் தொலைத்து சாச்சாவிற்கு இரண்டாம் தாரமாகியிருக்கும் சாமிலாவின் சிரமங்கள், முதல் மனைவியை இழந்து தன் குழந்தை ஹஸ்னாவிற்காகவே வாழும் சாச்சா இரண்டாம் தாரத்தினால் அனுபவிக்கும் இன்னல்கள், தன் பிள்ளையை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க சிரமப்படும் உதுமான், தன் குடும்ப நலன் கருதி கட்டார் சென்றிருக்கும் ஹரீஸ், ஹரீஸின் உயிர்த் தோழன் முஜீப், ஹரீஸ் - நூர்ஜஹான் காதலுக்காக மூஜீப் எதிர்கொள்ளும் சங்கடங்கள், ஹரீஸிற்கு சாதகமாய் ஆறுதலாய் அமைந்த கட்டார் நண்பர்கள்,  ஹரீஸையே நினைத்து காலத்தை போக்கும் நூர்ஜஹான், இடியப்ப குமரி என பல பரப்புகளுக்குள் சென்று பல விடயங்களை அலசுகின்றது வெருமனே கிட்டத்தட்ட 200 பக்கங்களைக் கொண்ட பதுமராகம். 

சீனத்தும்மாவின் மூத்த மருமகன் றாசீக்கினால் ஹரீஸ் குடும்பத்துக்குக் கொடுக்கப்படும் தொல்லைகள் கிழக்கைப் பொருத்தவரைக்கும் நிஜம். இப்படியான மருமகன்களினால் இன்றும் பல பெண்களைப் பெற்ற பொற்றோர்கள் தன் பிள்ளைகளின் வீடுகளுக்குச் செல்லாமல் தங்களுக்கென தனித்துவமான  வசிப்பிடங்களை நாடுவதோடு தான் பெற்ற பிள்ளைகளோடு தொடர்பில்லாமலும் இருக்கின்றனர் இவ்விடத்தில் நாவலுக்கு உரத்துப் பேச சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம், அதே போல் கட்டாரில் சீதனம் பற்றிய பேச்சுக்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக்கியிருக்கலாம். நாவலால் சமூகத்துக்குச் சொல்லப்படும் செய்தியாக கட்டார் உரையாடல்களை நான் கருதுகின்றேன், ஆதலால் இன்னும் அழுத்தம் அவசியப்படுகின்றது. ஹரீஸ்- நூர்ஜஹான் காதல் ரொம்ப அழகு, ஒரு சில இடங்களில் அடுத்து இதுதான் நடக்கப் போகின்றது என்பதை இலகுவாக அறியமுடிந்தாலும் ஆசிரியரின் கதை நகர்தல் இன்னும் விருவிருப்பைத் தூண்டுகிறது.

இன்னும் கொஞ்சம் கறிவேப்பிலை, மிளகு, அஜினமோட், ரம்பை, குருமா சேர்த்திருந்தால் நல்லதொரு சினிமா ஏற்படுத்தும் பாதிப்பை என்னுள் உணர்ந்திருப்பேன்.

இது அவசர உலகு, வாசிப்பு குறைந்துவருகின்றது, திருக்குறள் போல சொற்ப வரிகளில் பல ஆழமான அர்த்தமுள்ள விடயங்ளைச் சொல்லக் கூடிய அளவுக்கு நவீன திருவள்ளுவர்கள் தோன்றியுள்ள இந்தக் காலப்பகுதியில் அதற்கு இசைவான வாசர்களும்  மலிந்து காணப்படுகின்றனர், இப்படியான சோர்ட் அண்ட் சுவீட் காலப்பகுதியில் நாவல்கள் பெரும் சாவால்களே, சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு சில தவறுகள் இருந்தும் அவைகளை இங்கு நான் வெளியிட விரும்பவில்லை, தனிப்பட்ட ரீதியில் நூலாசிரியரிடம் சொல்வது ஆரோக்கியமானது என்றே கருதுகின்றேன். பிழைகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யுமளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்பது கூடுதல் தகவல் :)நூல் : பதுமராகம் - நாவல்
நூலாசிரியர் : இறக்காமம் பர்சானா றியாஸ்
தொடர்புகளுக்கு : farsana.ba@gmail.com
விலை - 700/-

அதாவுல்லா காக்கா நீங்க எங்களுக்கு வேணும் காக்கா


உங்கள் அதிகாரம் சதிகாரர்களால்
சமாதியாகிட்டதே என்றெண்ணி
அகங்காரம் கொண்டாடும் அடிமட்ட‌
அதிகாரிகளுக்கு
காலம் பதில் சொல்லும் காக்கா,
அரங்கினையும், சுற்றியுள்ளைவையையும்
அழங்கரித்த‌ உங்கள்
பெனர்கள், இன்றும் அழுதுகொண்டிருக்கின்றன,
ராஜகுமாரன் தரிசனம் பார்த்து....

பிரதான தெரு முழுக்க கட்சியினைப்
பிரதிபலிக்கும் கொடிகளுக்கு
நீங்கள் கொடுத்த கதாநாயக பாத்திரத்தை இன்று
கருங்கொடியில் யாரால் கொடுக்க முடியும் ?
அக்கரையில் சக்கரையாய்
சேர் ஊருக்கு வாரார் என்று சொல்லி
அடிக்கடி
உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்புகளும்
பேன்ட் இசைப்புக்களும்.... இனி
எம் காதுகளில் என்றுதான் ஒலிக்குமோ ?

நான் அக்கரையான் இல்லை
ஆனால் உங்களில் அக்கறை கொண்டவன்
உங்கள் அக்கறையால் எங்கள் வாழ்வு
சக்கரையாய் இனித்ததே...
நீங்கள் செய்தவைகளில் சொற்பமேனும்
சாணக்கியங்கள் செய்த மறுப்பேதேனோ ?
இனிமேலும் செய்யுமா ? தெரியாதே ...
வேலைகள் உங்களைக் கணதியாக்கிய போதும்
வேலாவேளைக்கு எட்டிப் பார்ப்பீரே எங்கள் ஊரையும்
இன்று நீங்களின்றி வெறுமையாய் கருங்கொடி ?

தோலுக்கு மேல் வளர்ந்தவர்களையெல்லாம்
தோழனாய் கொண்டீரே, தொழில் கொடுத்தீரே
இன்று
மொத்தக் குடும்பமும் உங்கள் தோழனாய்...
தொழில் பெற்றவர்க்கெல்லாம் தொல்லை
கொடுக்க வந்தனரே... தோல்வியில் துவண்டனரே

வருமானம் பெருக்க தென்னையிடுங்களென்று
தெனாவட்டாய் சொன்னீரே இன்று
தென்னையும் இல்லாமல் தொண்டையில்
தண்ணீரும் இல்லாமல் நாங்கள்... :(

நீங்கள் கவனத்தில் கொள்ளத் தவறிய ?
ஒன்று கருங்கொடி வெறுமையில் கிடக்கும் போது
கவனிக்கப்பட்டு வெள்ளை பூசப்படுகிறதே...
தட்டிக்கேட்க நாதியில்லையென்றெண்ணி
தடுமாற்றமின்றித் திரிகின்றனரோ சதிகாரர்கள்.
சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன் ஒருவன்
இருக்கின்றான் என்பதை மதி பேதலித்தவர்கள்
மறந்ததேனோ ?

எங்களுக்கு நீங்கள் வேணும் காக்கா

அன்புடன் அக்கறைத்  தம்பியாசித்தல்...

இது எனதெழுத்து
புரிந்துகொள்ள பலருக்கு
வருடங்கள் பலவாகலாம்
சிலருக்கு தாசாப்தங்களுமாகலாம்
இன்னும் சிலரோ முன்ஜென்மத்தில்
பழக்கப்பட்டிருப்பர்

எழுத்துக்கும் எனதான்மாவுக்கும்
தொப்புள் தொடர்பிருக்கின்றது
தடித்த எழுத்துக்களில்
சொல்லின், ஆன்மாவை உயிர்ப்பிக்க‌
எழுத்துக்களை நான் சுவைக்க வேண்டும்
எழுத்துகளை மட்டுமே...

சமயங்களில் எழுத்துகள்
எட்டாக்கனியாகின்றன எவ்வளவும்
முயற்சித்தும், ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்
இதோ இப்போது நான்
எழுதுவதைப் போன்று.... அப் பொழுதுகளில்
எனதான்மாவே என்னை பழிக்கும்,
கேவலமாய், நக்கலாய் எனை விளிக்கும்.

பின்னிரவு எழுத்துக்கள்
எப்போதுமே எனக்கு சாதகமானவை
அவ்வெழுத்துக்கள் வீரியம்,
காதல் நிறைந்தவை , வேசமிட தயங்குபவை

அவசரமாக வெகு அவசரமாக‌
எழுத்துக்களைச் சுவைக்க வேண்டிய நிர்ப்பந்தம்
இச் சமயம் சுயநலமில்லை, சுக நலமில்லாத‌
ஒரு ஆன்மாவுக்காக... என் சுவைத்தலின்
விரைவு அப் பிரிதான்மாவின் இருத்தல்.
இணைந்து ஓர் பின்னிரவும் அவசியப்படுகின்றது
என் பகல் பொழுதுகள் பின்னிரவுகளை
கொள்ளையிட்டுச் செல்கின்றன...!
என் அச்சங்கள்...!

ஒழிந்திருக்கும் என் அச்சங்களில் கலந்திருக்கிறது பெறுமதி மறந்த உனைப்பற்றிய நல விசாரணைகள், ஒரு நாள் உச்சபட்ச என் தைரியத்தை ஆயுதமாய் பாவிக்க நினைத்து, என் மீதான உன் புரிதல், அக்கறை, நேசிப்பைப் பற்றி உரையாடுகின்றேன், நீயோ அலட்சியப்படுத்தியவளாய் நடைபோடுகின்றாய், இன்னும் சொல்லப் போனால் நான் உன்னிடம் பேசும் போது உன் முகத்தைக் கூட தெளிவாகப் பார்க்கவில்லை, ஏதோ பின் இரவுக் கனவுகளில் தோன்றும் உருவமாய் அன்று நீ தோன்றியாய்
திடீரென ஏதோ என் மனதில் தோன்ற முன்னைய தினம் உன்னுடன் பேசியதை மீட்டுகிறேன், நான் பேசிய எதுவொன்றுக்கும் நீ பெறுமதியிட்டதாய் தோன்றவில்லை, ஆனால் நீ மிகவும் கெட்டிக்காரி, மரியாதை தெரிந்தவள், பிறரிடம் பிழையாக பாவணை செய்பவள் அல்ல என உன் தோழியிடம் வம்பு செய்த போது தெரிந்துகொண்டேன், உன்னிடம் பேசும் போது என் ஆசைத் தோழன் முத்தலிபும் என்னுடன் இருந்தான், நிச்சயமாக நாம் பேசிக் கொண்டது கனவுதான், ஏனெனில் என் ஆசைத் தோழன் ஆத்மா சாந்தியடைந்து அகவையொன்று அழிந்துவிட்டது...

கனவிலும் உன் முகம் காண ஏனிந்த அச்சமெனக்கு...

என் அச்சங்களை மறைப்பதற்கு முயற்சிக்கிறேன், சிரமப்படுகிறேன்.... என்னைப் போன்றவர்கள் யாராவது இருக்கிறார்களா என அகிலம் முழுவதும் அலசுகிறேன் ஆலோசனை கேட்க, எனக்கு யாராவது தெம்பான வார்த்தைகளைப் பொழிந்து உற்சாகம் தரமாட்டார்களா என ஏங்குகின்றேன், வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா, சிந்திக்கிறேன், எனக்கு என் அச்சம் தொலைக்க வேண்டும், உன் முகத்தை ஒரு கனமாவது நான் நேருக்கு நேர் பார்க்க வேண்டும், மூன்றாவது என்ன, நான்காவது, ஐந்தாவது உலக யுத்தங்களை நடத்தியாவது உனை நான் காண வேண்டும், உனைப் பிடித்திருக்கிறது என்ற  வார்த்தையை உதிர்க்க வேண்டும்,

எனக்கு நம்பிக்கையிருக்கிறது என்றாவது ஓர் நாள் என் அச்சம் தொலைந்துவிடும், அன்று என்னுடன் நட்பாகுவர் சிலர், அவர்கள் தான் என் நம்பிக்கைக்குரிய நட்புகளாகவும் பின் நாட்களில் மின்னுவார்கள், ஏனெனில் இன்று எனைப் பற்றி, என் குறைகள், என் பலவீனங்களை அறிந்து எனைக் கேலி, கிண்டல், செய்பவர்களும் வார்த்தைகளால் எனை அதிகம் காயப்படுத்தியவர்களும் அவர்களே.... எனைப்பார்த்து அவர்கள் நகைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைத்துக் கொள்வேன் முத்தலிப் இல்லாத குறையை நீங்கள் தான் நிறப்பிவைப்பீர்கள் என, முத்தலிப் என் மூச்சாக இருந்தான், ஆரம்பத்தில் முத்தலிபும் எனை கிண்டல் செய்தவன், பிழையாக வழி நடத்தியவன்தான், பின் நாட்களில் எப்படியவன் என்னுள் நுழைந்தான், அவனுக்கு நான் எப்படி உயிர்த் தோழனானேன் என்பதையெல்லாம் நினைத்தால்  நீண்டதொரு வறட்சியின் பின் பொழிந்த மழைக்கு வானத்தை எட்டிப்பார்க்கும் பச்சைப் புற்களாகிவிடுகின்றது மனசு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நிறுத்திக் கொள்கிறேன் முத்தலிப் புராணத்தை இன்னும் அவனைப் பற்றி சொல்லிச் சென்றால் நாளைக்கு அழுவதற்கு கண்களில் நீர் இருக்குமோ தெரியவில்லை....

என் அச்சத்தை மறைப்பதற்கு பெரிதும் முயற்சிக்கிறேன், நாய்கள் எப்பவுமே எனக்கு அச்சத்தையூட்டுபவைகள், பகல் வேளைகளிலும் நாய்கள் நடமாடும் பகுதிகளுக்குச் செல்வதில்லை, அச்சத்தைப் போக்க எடுத்த விசித்திரமான முயற்சிகளிலொன்று இராப் பொழுதுகளில் தன்னந்தனியாக நாய்கள் நடமாடும் பகுதிகளில் உலா வருவது, விசித்திர முயற்சியின் உச்சமெதுவென்றால் இரவில் உலா வரும்போது கைகளில் கற்கள், தடிகள் போன்ற பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் வைத்துக்கொள்வதில்லை , ஒரு முறை உலா செல்லும் போது வேற்றுக் கிரக  ஜீவன் ஒன்றுடன் சண்டையிடவேண்டியேற்பட்டது அது எனக்குள் புது உற்சாகத்தையும் ஏற்படுத்தியது வேற்றுக்கிரக ஜீவன் என் பால்யகால வில்லன் சலீமின் தோற்றத்தில் இருந்தது தான் என் உற்சாகத்துக்குக் காரணம். பால்யத்தில் பரிசாகக் கிடைத்த ஏதோவொன்றைப் பங்கிட்டுக் கொள்வதில் தளிர்விட்ட பகையது, இன்றும் தொடர்கிறது, சலீமின் பலம், பலயீனம் நான் அறிந்ததே அவனை முகம்கவிழச் செய்வது அவ்வளவு சிரமமல்ல, ஆனால் அவன் என்னை ஜென்ம விரோதியாகக் கருதி எனை எதிர்ப்பதற்கென்றே ஒரு கூட்டத்தை தன்னுடன் வைத்திருக்கின்றான் அவர்களை நினைத்தால் தான் பேதியாகின்றது......

என்னதான் ஆபத்து நிறைந்த செயல்களில் ஈடுபட்டு என்னை பன்படுத்தினாலும் அவள் முன் அவ் ஆபத்துக்களெல்லாம் சிதரிவிடுகின்றன, அவள் முகத்தைப் பார்ப்பதற்கே திரானியற்றுப் போகின்றேன், எனக்குள் வளர்த்துக் கொண்ட தன்னம்பிக்கைகள் செயலிழந்து தைரியம் கொண்டவன் போன்று பாசாங்கு செய்கின்றேன், என் முழு கவனத்தையும் ஓர் நிலைப்படுத்துகின்றேன், வழமையாக அவள் வரும் வழியில் காத்திருந்து எப்படியாவது அவளை எதிர்கொள்ள வேண்டுமென்று தீர்மானமெடுத்துவிட்டது மனது, இனி தேகம் தாயாராவதுதான் மிகுதி, வீட்டிலிருந்து ஆடையகம், ஆடையகமிருந்து வீடு இந்த இரண்டு சந்தர்ப்பங்கள் தான் உண்டு அவள் பார்வை என் மேல் விழுவதற்கும் என் பார்வை அவள் மேல் படர்வதற்கும், அவள் பயணிக்கும் பாதையோ நிழலறியாது, பாலைவனத்தில் தெரியும் பச்சை மரமாய் தெருவோரத்தில் அமைந்திருக்கும் பெரியதொரு மாமர நிழல் மாத்திரமே பேசிக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை தரக்கூடியது, மழை கண்டு பல அகவைகள் கடந்துவிட்ட எனதூரில் மழை கொடுக்கும் இன்பத்தின் சிறுபகுதியைத் தரக்கூடியது என ஒரு காலத்தில் பேசப்பட்டது இந்த மாமரம், தொடர்ச்சியான சுக்கிரனின் சூட்டினால் இலைகள் தளர்ந்து ஒரே சமயத்தில் நூறுபேருக்கு நிழல் கொடுத்த மரம் தற்போது போசாக்கின்மை காரணமாக இருபது பேருக்கு நிழல் கொடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, ஆனாலும் அப்பாதையை பயன்படுத்துபவர்கள் மாமர நிழலை சுவைக்க, சுவாசிக்கத் தவறுவதில்லை அவளும் தவறுவதில்லை.

நல்ல இருக்குடா, பார்க்கலாம், ஹீரோ புதுசுதான் ஆனா அட்டகாசமான நடிப்புடா மச்சான் எனக் கூறி நண்பனால் சிபாரிசு செய்யப்பட்ட ஏதோ ஒரு புதிதாய் வெளிவந்த தமிழ் சினிமாவில் இராப் பொழுதைக் கழித்ததில் என்னவளின் காலை தரிசனத்தை இழந்துவிட்டேன், வேலை முடிந்து வரும்வரையில் மாமர நிழலில்தான் நேரத்தைப் போக்க வேண்டும், நேரம் போக்குவது சிரமமல்ல, மாமரத்தையொட்டியிருக்கும் அகன்ற பாழடைந்த பொதுக்கிணற்றுக் கட்டில் குந்திக்கொண்டு எதையாவது சிந்தித்தவாரே கொண்டக் கடலை சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது, இந்த உப்புச் சப்பில்லா சிந்தனை, கொண்டக் கடலை சாப்பிடுதல், இரண்டும் என் பிரியங்களைச் சேரும், வீட்டிலிருக்க பிடிக்காவிட்டால் முத்தலிபின் வீட்டுக்குச் செல்வேன் அல்லது இந்தக் கிணற்றுக் கட்டை கொண்டக் கடலையுடன் தரிசிப்பேன் இதுதான்  முத்தலிப் உயிருடன் இருக்கும் வரை வழமை, முத்தலிபின் இழப்பின் பின் கிணற்றுக் கட்டையே வாடிக்கையாக்கிவிட்டேன். இந்தக் கிணற்றடியில் வைத்துத்தான் தளிர் விட்டது அவளின் மீதான என் பார்வைகள்...

வாழ்வின் அந்திம காலத்திலிருக்கும் அந்த மாரமத்தில் வருடத்திற்கு ஒரு முறை சில காய்கள் கிடைக்கும், கல்லடி படுவதை கடவுளின் வரமாகக் கொண்டவைகள்தான் தெருவோர மரங்கள், இந்த மரமும் மனிதப் பிஞ்சுகளின் கல்லடிக்குத் தன் பிஞ்சுகளையும் இழந்துகொண்டே போகின்றது, அப்படி சில மனிதப் பிஞ்சுகளின் கல்லடியில் கிடைத்த சில மாம்பிஞ்சுகளை, அச் பிஞ்சுச் சிறார்களை மிரட்டி அவள் கொள்ளையிட்டுச் செல்லும் போதுதான் முதன் முதலில் அவளைப் பார்தேன், ஆஹா, ஓஹோ, போட்டுச் சொல்லுமளவிற்கு அழகில்லை அவள், கருப்பழகி எனைக் கவர்ந்த அழகி, கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கனும்மென்பார்கள், கலையாக அவள் தெரிந்தால் எனக்கு,

என் நாடி, நரம்பு, ஹோர்மோன்கள்.... எல்லாம் துரிதமாய்ச் செயல்பட்டு அவள் பற்றிய தகவல்களைத் திரட்டின, என் வீட்டிலிருந்து ஒரு நான்கு தெரு தொலைதூரத்தில் தான் அவள் வீடு இருக்கிறது, அவள் வீடென்றால் சொந்தவீடில்லை, வாடகை வீடுதான், வெளியூரிலிருந்து இங்கு பிழைப்புக்காக வந்திருக்கிறார்கள், அவளும் அவள் ஆசை அம்மாவும் தான் வீட்டில், அனைத்துத் தகவல்களும் அவள் தோழி, ஒரு வகையில் என் தூரத்துச் சொந்தமாயிருந்து, என்னவளுக்காய் நெருங்கிய சொந்தமாக்கிக் கொண்ட மரியமிடமிருந்து பெற்றுக்கொண்டவைகள்.

நானும் முத்தலிபும் பலமுறை அவளிடம் பேச முயற்சித்திருக்கிறோம், ஏனோ தெரியவில்லை சந்தர்ப்பங்கள் எதுவும் சரியாக அமையவில்லை, சந்தர்ப்பம் என்று சொல்வதை விட என் அச்சங்கள் என்னை அனுமதிக்கவில்லை என்றே சொல்லலாம், பெண் நட்புகள், முன்னாள் காதலியின் வாசணைகளை இதுவரை நுகராததால், இது புது அனுபவமாக இருந்தது, எனக்கும் முத்தலிபுக்கு இடையேயான நெருங்கிய நேசத்தில் இடைவெளி எழ சந்தர்ப்பமிருந்தால் அதற்கு என் அச்சங்களே காரணமாய் அமையும், அந்தளவுக்கு என் அச்சங்களோடு முரண்படுவான் முத்தலிப்.

பெண்கள்  கூட்டமொன்று என் திசை நோக்கி வந்துகொண்டிருந்தது, வழமையில் கொஞ்சம் பெரிதாக, இன்னும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் ஆடையகப் பெண்கள் கூட்டம் வெளியேரும், இன்று ஒரு மணி நேரம் முன்னாடி பெண்கள் கூட்டம் ? யாரும் வெளியூர் திருமணம், வைத்தியசாலை சென்றிருப்பார்கள் அவர்களாக இருக்குமென்றெண்ணினேன், ஆனால் கூட்டம் எனை நெருங்க அது ஆடையகத்தில் வேலை செய்யும் ஒரு சில பெண்கள் என அடையாளம் காண முடிந்தது, அக் கூட்டத்தினுள் என்னவளும், மரியமும் இருந்தனர். இது என்ன சோதனை இன்னும் ஒரு மணி நேரமிருக்கிறது இன்னும் கொஞ்சம் தயார் படுத்திக்கொள்ளலாம் என்றிருந்தேன் அதற்குள் ??? எல்லாம் அவன் செயல் என் அச்சத்திற்கு அவன் புறமிருந்து வந்திருக்கும் சவால், எப்படியோ இன்று அவளிடம் பேசிவது என்ற தீர்மானத்திலிருந்து மனசு சற்றும் பிசகாமல் இருந்தது,

கூட்டம் மாமரத்தை நெருங்கிவிட்டது, நானும் கிணற்றடியிலிருந்து சன்று நகர்ந்து மாமரத்தை அண்டிவிட்டேன், வழமைக்கு மாற்றமாக என்னவள் மரநிழலை சுவைக்க மறுத்து மரத்தையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றாள், என்ன இது இன்று எல்லாமுமே மாற்றமாக இருக்கிறது, சில வேளை என்னவளுக்கு சுகயீனமாக இருக்குமோ ? எனைத் தாண்டிச் செல்லும் மரியமை அழைத்து என்னவளுடன் பேச வேண்டுமென்றேன், மரியமுக்கு என்னவள் மீதான என் பிரியம் ஏற்கனவே தெரிந்ததே அதானால் பிரச்சனைகள் எதுவுக்கும் விதையிடாமல் என்னவளிடம் சென்று விடயத்தை எத்திவைக்கிறாள், மரியமுடன் பேசிக்கொண்டே நடந்தவள் நடை வேகத்தை சற்றுத் தளர்த்துவதை ஒரு இருபதடி தூரத்திற்குப் பின்னால் நின்று அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நடையின் வேகம் இன்னும் தளர்ந்து ஏனைய  பெண்கள் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல என்னவளும்,மரியமும் ஓரிடத்தில் நின்று விடுகின்றனர்,

இதுதான் சந்தர்ப்பம் என்னவள் எனக்கென சில நிமிடங்களை ஒதுக்கிவிட்டாள் என நினைத்தவனாக, முப்பதடி தூரத்தில் நிற்கும் அவளிடன் பேசுவதற்கு கால்கள் நகர்ந்துகொண்டிருக்க மனசு மூவாயிரம் மடங்கு வேகத்தில் படபடக்கின்றது, என்னுள் ஏற்பட்ட படபடப்புகள், அச்சங்கள் அனைத்தையும் ஒரு ஓரமாய் வைத்துவிட்டு என்னவளை அண்மித்து, சென்ற வேகத்திலேயே உன்னைப் பிடித்திருக்கிறது என்றேன், என்னவளிடமிருந்து எந்தவித எதிர்ப்போ, முகச்சுழிப்போ எழவில்லை, உதட்டிலிடுந்து எழுந்த சிறு புன்னகையைத் தவிர, புன்னகைத்தவாரே முன்னோக்கி நகர்கிறாள் கூடவே மரியமும் நகர்கிறாள். எதுவும் சொல்லாமல் செல்கிறாளே என என் மண்டை கணமானது, சுகயீனமில்லாததால் அவளால் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாமல் செல்கிறாளா ? அல்லது மரியம் அவளிடம் என்னைப் பற்றி ஏலவே சொல்லியிருப்பாளா ? பிடிக்காமல் இருந்திருந்தால் முறைத்திருப்பாளே...! சில வேளை நாளை ஏதும் திட்டம் வைத்திருப்பாளோ ? தெரியவில்லை, அவள் நகர்கிறாள், அவளது புன்னகை என் மனதிலிருந்த சுமையொன்றை குறைத்த திருப்தியில் நான் அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்.

வலது தோற்பட்டையில் பலமான அடி விழ திடீரென திரும்பிப் பார்க்கிறேன் அருகில் காதர் வாய் நிறையப் பற்களுடன் இவன் இப்படித்தான் ரொம்ப நாளைக்குப் பிறகு யாரையாவது சந்திக்கக் கிடைத்தால் கைலாகு செய்வதை விட தோற்பட்டை, முதுகு போன்றவைகளில் அடித்து அதிர்ச்சி கொடுப்பதுதான் இவன் வேலை, முத்தலிபின் இழப்பின் பின் கொழும்புக்குச் சென்றவனை இன்றுதான் பார்க்கிறேன், எங்களுக்குள்ளான நல விசாரணைகள் தொடர்ந்தன.... நடையும் தொடர்ந்தது, என் மனமோ என்னவளின் பின்னாலேயே சென்றுவிட்டது. மனசு இன்னும் இலேசகவிருந்தது தெருவில் செல்லும் போது புதிதாக ஒரு உலகத்தினுள் செல்வது போன்றிருந்தது, கண்களில் தென்படுபவர்களெல்லாம் மனித ஜாதியில் மிக உயர்ந்த பண்பு, பாசம் கொண்டவர்களாகத் தெரிகிறார்கள், இவ்வளவு நாட்களாக ஏன் இவை எனக்குத் தென்படவில்லை, குழந்தைகளிடம் செல்ல விளையாட்டுக்களில் மனம் ஒன்றித்துப் போய்விடுகிறது ஏன் இவ்வளவு காலமும் நான் பித்துப் பிடித்தவனைப் போன்றிருந்தேன், என்னவள் என்னுள் ஆழமாகிவிட்டதனாலா ?

இஞ்சியுடன் தேநீர் பருகினால் நன்றாக இருக்குமென்றெண்ணி இருவரும் அருகில் தென்பட்ட கடையிலுள் நுழைந்தோம், கடை அமைந்திருந்த இடத்தில் கட்டடம் எதுவுமே இல்லாததுபோன்றே  இந்த நிமிடம் வரை உணர்ந்திருந்தேன், புதிதாக கட்டிடம் கட்டி யாரோ கடைதிறந்திருக்கிறார்கள் போல என நினைத்தவாற கடையிலுள் நுழைந்து  என்ன நானா கட புதுசாயிருக்குது எப்ப திறந்த என்று கேட்டேன், தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தவன் என்னை முறைத்துப் பார்க்கிறான், இப்போது தானே எண்ணியிருந்தேன் இவ்வுலகம்  அழகானது இவ்வளவு நாளும் ரசிக்க மறந்துவிட்டேன், இவன் ஏன் இப்படி முறைக்கிறான் என்றெண்ணியவனாக, அருகிலிருக்கும் சுவரைப் பார்க்கிறேன், லத்தீப் பாக்கி 135 ரூபா என சரியாக ஒரு வருடத்திற்கு முன்னரான திகதியொன்றையிட்டு கரியினால் எழுதப்பட்டிருந்தது...!

அருகிலிருக்கும் மேசை மீதிருந்த இன்றைய நாளிதழை, வாடைக் காற்றும் வாசிக்க ஆரம்பித்திருக்கின்றது போல, பக்கம் பக்கமாக புரட்டிக்கொண்டே செல்கின்றது காற்று, காற்று பத்திரைகையை வாசித்துவிட்டு தூக்கியெறிந்துவிடுமோ என்றெண்ணி ஓடிப்போய் பத்திரிகையைப் பிடிக்கிறேன், கையில் அகப்பட்ட பக்கதில் பெரிய எழுத்துகளில்  2020 இல் உலகம் அழியுமா என பெரியதொரு கேள்விக்குறியுடன் செய்தியொன்று காணப்பட்டது,

இன்று நள்ளிரவுடன் 2019 வருடம் கழிகிறது....

(கற்பனைகள்)

இரண்டு வகை மனிதர்கள்...

மனிதர்கள் யாவரும் ஒரே பண்புகள், ஒரே சிந்தனைகள் கொண்டவர்கள் கிடையாது, அப்படியிருந்தால் இவ்வுலகத்தில் சுவாரஷ்யம் என்பது இல்லாமல் போய்விடும். குறுகிய கால இவ்வுலக வாழ்க்கையை சந்தோஷமாகவும், ஏனையவர்களுக்குப் பிடித்ததாகவும் பிரயோசனமுள்ளதாகவும் வாழும் போதுதான் இவ்வுலக வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படுகின்றது. சிலர் இப்படித்தான் வாழவேண்டும் என தங்களுக்குள் ஒரு வரைமுறையை ஏற்படுத்தி வாழ்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்களது அன்றாட செயற்பாடுகளுக்கென ஒரு வடிவத்தை/உருவத்தை/முறைமையை ஏற்படுத்தி அதன்படிதான் செயற்படுவார்கள். இவர்களை அவதானிக்கும் போது இவர்களின் உடையுடுத்துதல்  அல்லது உணவு உண்ணுதல் அல்லது பிறரிடம் அனுகுதல்,பழகுதல் இன்னும் பிற கொடுக்கல் வாங்கல்கள் என ஒவ்வொரு செயற்பாடுகளும் மிகவும் நாகரீகமானதாகவும், தூய்மைத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டுமென்பதற்காக அதிக சிரத்தையெடுத்துக் கொள்வார்கள்.

குடும்பம் , உறவினர்களிடத்தில் உறவாடுதல், குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்குதல், நண்பர்கள் சந்திப்பு, டீவி, சினிமா இன்னும் பிற பொழுதுபோக்குகள், அதிகாலையில் தூக்கத்தை விட்டெழல், இரவில் நித்திரைக்குச் செல்லல் என ஒவ்வொன்றையும் நேர அடிப்படையிலேயே செயற்படுத்துவார்கள். இன்னுமிவர்கள் தங்கள் சந்தோஷம், துக்கம், பாராட்டுதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதுக்குக் கூட தான் இருக்கும் சூழலை அவதானிக்கக் கூடியவர்களாக இருப்பர். 

மேலுமிவர்கள் தங்களது எதிர்கால செயற்பாடுகள் பற்றி மிகவும் துள்ளியமாகத் திட்டமிட்டு செயற்படுவார்கள். இப்படிப்பட்டவர்களின் பெரும்பாலான திட்டமிடல்கள் வெற்றியை நோக்கியே நகர்ந்து செல்லக் கூடியதாகவிருக்கும். மேலும் இவர்களது சமூகத்துடனான தொடர்பினை நோக்கும் போது குறிப்பிட்ட ஒரு வகையினரோடுதான் இவர்கள் தொடர்புவைத்திருப்பார்கள் அதுவும் அவர்களின் தொழில் அந்தஸ்து அல்லது  படிப்போடு தொடர்புடையதாகவேயிருக்கும்.  

இப்படியானவர்கள் தாங்கள் சந்தோசமாக இருப்பதாக சமூகத்தின் ஏனைய படிகளில் இருப்பவர்களுக்குக் காட்டிக்கொள்வார்கள். உண்மையும் அதுதான் அவர்களுக்கென அவர்கள் கீறிக்கொண்ட வட்டத்தினுள் அவர்கள் வாழும்போது அதைவிட சந்தோஷம் வேறொன்றுமில்லை. அவர்களின் வாழ்வை இப்படியாக அமைத்துக்கொள்வதில் அவர்களுக்கு கொள்ளை சந்தோஷம், அப்படி வாழ்வது ஒரு வகை சுவாரஷ்யத்தைத் தருகிறதென்றால், இன்னுமொரு வகையினர் இருக்கின்றார்கள்

இவர்கள் எப்படி வாழ்ந்தாலும் சரிதான் எனும் கொள்கை கொண்டவர்களாக இருப்பார்கள், இவர்களது அன்றாட செயற்பாடுகளில் தூய்மைத்துவம் என்பது குறைவாகவிருக்கும். இவர்களிடத்தில் தங்களுக்கென ஒரு முறையான கொள்கையிருக்காது, தான் திட்டமிட்ட செயற்பாடுகளை செயற்படுத்தி சமயங்களில் பாதியிலேயே விட்டுவிடுவார்கள், எல்லோரிடத்திலும் மிகவும் சாதாரணமாகப் பழகுவார்கள், இவர்களின் வீடு இவர்கள் வசிக்கும் அறைகளை நோட்டமிட்டால் பொருட்களெல்லாம் சிதறி ஒரு ஒழுங்கற்ற முறையில், இன்னும் சொல்லப் போனால் இப்போதைய இளைஞர்களின் அறைகளைப் போன்று காணப்படும்.

முன்னர் கூறிய வகையினருக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே இவர்களது நடத்தைகள் இருக்கும். இன்னும் சமூகத்தில் சகல தரப்பினர்களிடத்திலும் தொடர்புவைத்திருப்பார்கள். பல சுவாரஷ்யமான நினைவுகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்வில் பிறர் சொல்லிக்கொள்ளுமளவுக்கு முன்னேற்றமென்பது இருக்காது ஆனால் இவர்களுக்குள்ளாகவே முன்னேற்றமைடந்திருப்பார்கள்,லைப்ரரி, இணையம் போன்றவற்றில் நேரமிடுவது குறைவாகவேயிருக்கும், ஆனாலும் புராதண, சமகால உலக நடப்புக்களில் பரீட்சையில் தேறுமளவுக்கு தெரிந்துவைத்திருப்பார்கள்.

இவர்கள் வசிக்குக் அறை, மொபைல் போன், கொம்பியூட்டர், பேர்பியூம், ஸ்லீப்பர்ஸ் போன்றவற்றை யார் வேண்டுமானும் பாவிப்பதற்கு அனுமதிப்பார்கள். அரசியல், சமூக சேவை போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் வீண்விரயத்துக்குப் பெயர்போன இவர்களின் வாழ்வும் மிகவும் சந்தோசமானதாகவிருக்கும்,  முரண்பாடு கொண்ட இரு வகை மனிதர்களின் செயற்பாடுகள் ஒன்றாகவிருந்த போதிலும் அதை செயற்படுத்தும் விதத்தில் தான் வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வித்தியாசங்கள்தான் வாழ்வினை சுவாரஷ்யமானதாக்குகின்றது. மேலும் இரு வகையினரும் தாங்கள் இருப்பது போன்றே வாழ்வின் இறுதிவரை இருந்தால் பிரச்சனையில்லை, இரண்டாம் வகையினர் முதல் வகையினர் போன்று நேரம் மற்றும் ஒழுங்கு முறையில் அமைந்த (தூய்மைத்தன்மையான) செயற்பாடுகளைச் தன் வாழ்வில் கொண்டுவருவதற்கும், முதல் வகையினர் இரண்டாம் வகை போன்று சமூகத்தோடு ஒன்றித்து வாழ்வதற்கும் முயற்சிக்கும் போதுதான் பிரச்சனைகள் எழுகின்றன. அப் பிரச்சனைகளும் வாழ்வை சுவாரஷ்யமாக்குமென்பது வேறுவிசயம்.

இவ்விரண்டு வகையினரும் ஒரே குடும்பத்தில், ஒரே விட்டில் வாழ்ந்தால் இன்னும் சுவாரஷ்யமாகவிருக்கும்.

சைக்கோயிசம்

கொஞ்ச நாட்களாகவே நம்ம நட்புகளெல்லாம் கம்பு நிஷா பத்தியே பேசிட்டுத் திரியிராங்க, யார்ரா இவள் புதுசா இருக்காளே நடிகை கிடிகையாக இருப்பாளோ என்னுட்டு அவளப்பத்தி விசாரிச்சா கம்பு நிஷா இல்லையாம் அது கம்மியூனிசமாம். சரி சரி அது கம்மி யூனிஃபார்மோ, கம்மி யூரினோ எப்பிடியோ இருந்திட்டுப் போகட்டுமே நம்ம பாட்டுக்கு நாம இருப்பம் எதுக்கு வம்பு என்னுட்டு இருந்தப்போ டீவில தளபதி இட்லி வடையோட கம்மியூனிபார்மை ச்ச்ச்சீ கம்மியூனிசத்தைப் பத்தியும் சொல்லிட்டுருந்தாரு. அட சாப்பாட்டு ஐட்டம் புதுசா அறிமுகப்படுத்தியிருக்கான்கள் போல என்னு நினைச்சிட்டு, நம்ம பயல்தான் ஹோட்டல் வச்சிருக்கானே அவனுக்கிட்ட விசாரிச்சு இன்னைக்கு ஒரு புடி புடிச்சிட வேண்டியதுதான் என்னு நினைச்சி போனப் போட்டு கம்மியூனிஷம் இருந்தா  இரண்டு பார்சல் அனுப்பி வை மச்சான் என்றேன்.

என்னைய விட்டுட்டு தனியா தண்ணி போட்டிருக்காயாடா லூசுப் பயல என்னு திட்ட ஆரம்பிச்சுட்டான். இல்ல மச்சான் சீரியஸ்சாத் தான் சொல்லுறேன். ஏதோ புது ஐட்டம் போல மச்சான் உன் ஹோட்டல்ல இல்லாட்டியும் பக்கத்துலயாவது வாங்கி அனுப்பு இங்க தளபதி சும்மா கிழி கிழினுன்னு கிழிக்காரு இட்லி வடையோட சேர்த்துன்னேன்.   லூசுப் பயலே அது சாப்பாட்டு ஐட்டமில்லடா இது இது தான் இப்பிடி இப்பிடித்தான் என்றெல்லாம் சொல்லிட்டே போனான். அவன் சொன்னதுல கம்மியூனிசம் என்றா தண்ணி போட்டவனும் தண்ணி போடுற இடத்துல இருக்கிறவனும் பேசுற மேட்டர் என்கிறதைத் தவிற வேற எதுவும் புரியல்ல :( 

சரி சரி யார் யாரோவெல்லாம் கம்மியூனிசம் பத்திப் பேசுறாங்க நாம கொஞ்ச வித்தியாசமா யோசிச்சு சைக்கோயிசம் பத்தி பேசுவோம் மச்சி நைட்டுக்கு செட்டாவு என்றான். பல பல பல்லானா விடயங்களோட நைட்டு அவன் ரூமுக்குப் போனா நீ என்ன சைக்கோவாடா கம்மியூனிஷம் பத்திப் பேசுற என்னு கைய நீட்டிட்டான். டேய் மச்சி கம்மியூனிசத்த விட்டுடு சைக்கோ என்றெல்லாம் சொல்லிடாத தளபதி வேற கம்மியூனிசம் பத்திப் பேசியிருக்காரு, பிரச்சனையாகிடும். இந்த சைக்கோயிசம் பத்திச் சொல்லேன் புதுசா இருக்குதே என்றேன். நான் சொன்னாலும் சொல்லாட்டியும் நீ சைக்கோதான் மச்சி என்னு என்னுல இருந்தே ஆரம்பிச்சிட்டான். எப்பிடிடா என்றேன் மண்டைய சொறிஞ்சிகிட்டே... பேஸ்புக்குல எவ்வளவோ ஸ்ட்டேஸ் போட்டிருக்கேன், எவ்வளவு விடயங்கள சேர் பண்ணியிருக்கன் ஒன்னுக்காச்சும் லைக், கமண்ட் போட்டிருக்கயா நீ, இப்பிடி லைக் போடாம உம்முனு சைலண்டா எப்போதுமே ஆன்லைன்ல இருந்துட்டு யாராச்சும் ஒரு பொண்ணு ம்ம்ம்ம் பொண்ணு பேர்ல இருக்கிறவங்க ஸ்மைலி ய ஸ்டேட்டசாப் போட்டாலும் விழுந்து விழுந்து லைக்கும் கமண்டும் போடுவியே இது ஒரு வகை சைக்கோதான் மச்சி என்னுட்டான். பாவிப் பயல் லைக் கிடைக்காம ரொம்பத்தான் பாதிக்கப்பட்டிருக்கான் போல.

ஃபேக் ஐடிலதான் வருவான், வந்தவுடனேயே இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏசுவான்,  கிரிஸ்டியனா இருப்பானோ என்னு நினைச்சா அடுத்த ஸ்டேட்டசுல கிரிஸ்டியன்களையும் கிண்டலடிச்சு எழுதுவான். இப்பிடி ரொம்பக் கொழப்புவான், எப்பவுமே மதவாதிகளுக்கும் இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு கொஞ்சகாலம் ஏசிட்டே திரிவான் அப்புறமா சைலண்டாகிடுவான். வந்த தடயமே இருக்காது. இவனும் சைக்கோதான். இந்த விதி பேஸ்புக்கிற்கு மட்டுமில்ல எல்லா சமூக தளங்களுக்கும் பொருந்தும்னு வேற சொல்லுறான்.

இந்த சமூக தளங்கள எடுத்துக் கொண்டா நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம் மச்சி, ஒரு பிரபல மொன்றோட நட்பு வச்சிக் கொண்டா கொஞ்சம் நல்லா இருக்குமே என்னு நினைச்சு சமூக தளங்கள்ல இருக்கிற பிரபலங்கள ஃபலோ பண்ணுவோம், இல்லாட்டி ப்ரெண்ட் ரிகுவஸ்ட் குடுப்போம் அதுதானே வழமை , அதுதானே ஒலக வழக்கம். (நம்ம ரிகுவஸ்ட்ட ஒரு 6 மாதத்துக்குப் பின்னாடிதான் அவங்க அக்ஸப்ட் பண்ணுவாங்க அது வேற விசியம்.) அவங்க என்ன செய்வாங்க நம்மள யார் யாரெல்லாம் ஃபலோ பண்ணுறாங்க, யார் யாரோடெல்லாம் நாம்  நட்பு வச்சிருக்கிறோம் என்றெல்லாம் பார்க்காம தங்களை பிஸியான ஆளாக் காட்டிக் கொண்டேயிருப்பாங்க, அவங்க போடுற மொக்கைக்கெல்லாம் லைக்ஸ், ரிட்வீட் ... சும்மா அள்ளும். அவங்க கூட ப்ரெண்டா இருக்கிற இன்னொரு பிரபலமோ, அல்லது பிரபலமாகத் துடிக்கும் ஒருத்தனோ நல்லதா, கருத்தா, நாலு போருக்கு பிரயோசனமானதா ஏதாவது போட்டா அதுக்கு எந்தவித ரியாக்ஸனும் அவங்களிட மிருந்த வரவே வராது. இப்படிப்பட்ட பிரபலமும் சைக்கோதான், இப்படிப்பட்ட பிரபலமோட கூட்டு வச்சிருக்கிற நாமளும் சைக்கோதான் மச்சி என்னுட்டு இரண்டு பாட்டில் பீரக் காலி பண்ணிட்டான்.

நான் சொல்லுற அடுத்த விசயத்தை நீ கூட அவதானிச்சிருப்ப, அனுபவிச்சிருப்ப அதாவது, பஸ் ட்றாவல் பண்ணும் போது பஸ்ஸில நிறைய இருக்கைகள் காலியா இருக்கும் அப்பிடி இருக்கும் போதும் ஒருத்தன் வந்து ஒரு பொண்ணுபக்கத்துல போயி நிற்பான் சான்ஸ் கிடைக்கும் போது அது பக்கத்துல உட்காரவும் செய்வான், இன்னும் கொஞ்சப் பேரு இருக்காங்க பஸ்ஸு சரியான சனநெரிசலா இருக்கும் ஒத்தக் காலவச்சே நிற்கிறத்துக்கு மிகவும் சிரமப்படுவாங்க. ஆனா நம்மாளு யாரையும்   கவனியாம காதுல ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு குனிஞ்ச தலையோட போன்ல ஆராய்ச்சி செஞ்சிட்டு சீட்டுல இருப்பான். ஆராய்ச்சில மூழ்கினவன் பக்கத்துல நெறமாசக் கர்ப்பிணி நிற்கிறது கூட தெரியமாட்டா அந்தளவுக்கு அவனோட ஆராய்சி பிஸியானதா இருக்கும். ஏதோ ஞானம் வந்தவன் போல திடீர்னு கொஞ்சம்போல தலையத்  திருப்பி சுத்து முற்றும் பார்ப்பான் பார்த்திட்டு அவனுக்கு இரண்டு சீட்டுக்கு முன்னாடி இல்லாட்டி பின்னாடி நிக்கிற சுமாரான பிகரப் பார்த்து இருக்கப் போறீங்களா என்னு கேட்பான். அந்தப் பொண்ணு ஓரளவுக்கு மனச்சாட்சியான பொண்ணா இருந்தா என்ன செய்யும் பக்கத்துல இருக்கிற கர்ப்பிணிப் பெண்ண உட்காரச் சொல்லிக் கேட்டு இவனுக்கு பல்பு வாங்கிக் கொடுக்கும். அப்பிடி இல்லாமல் மனசுல ஒரு வித கறல் கொண்ட பெண்ணா இருந்தா, நம்மாளு கொடுத்த சீட்டுல வந்து உக்காந்துக்கும், இப்படியான பொண்ணு பையன் எல்லாருமே சைக்கோதான் மச்சி.

அட எதுக்கு நம்ம அங்க இங்க நடக்கிறத சொல்லிக்கொண்டு, நம்ம கேங்குலயே பல சைக்கோக்கள் இருக்கிறானுகளடா என்றான், என்ன மச்சி சொல்லுற என்னையச் சைக்கோ எண்ட , மனசக் கல்லாக்கிக் கொண்டு ஒத்துக் கொண்டேன், இப்போ நம்ம கேங்கையே சைக்கோ எங்கிற முடிவா என்னதாண்டா சொல்ல வர்ர என்றேன் நான், 

இல்ல மச்சான் நம்ம கேங்குல மொத்தம் எத்தன பேரு இருப்போம் என்றான். எனக்குப் பிடிக்காத ஒரு சில எதிரி நண்பர்களக் கூட்டிக் கழிச்சி ஒரு 20 பேர் என்றேன். ஆ... அந்த இருபது பேரும் ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோமா என்று கேட்டான், எப்பிடிடா கொஞ்ச பேர்தான் வெளியூர்ல இருக்கானுகளே பின்ன எப்பிடி சந்திக்க முடியும், ஏதாவது விசேசமென்றா மட்டும்தானே சந்திக்கலாம் அதுலயும் ஒன்னு இரண்டு பேர் மிஸ்ஸாவானுகள் என்றேன். இப்ப மேட்டருக்கு வாரேன் என்றான், எப்பயாவது ஒரு நாளைக்குத்தானே நாம எல்லோரும் சந்திச்சி சந்தோசமா இருக்கிறோம். அப்பிடி சந்திக்கும் போது நம்மல்ல இரண்டு மூனு பேர் நம்மளோட இருக்கிற மாதிரியே இருந்துகொண்டு போனையே பார்த்துக்கொண்டும் போனிலேயே பேசிக்கொண்டும் இருப்பானுகளே அவதானிச்சிருப்பாயே என்றான். அட நம்ம கனேசு , குமாரு,... போன் பைத்தியங்கள் அவனுகளையா சொல்லுறாய் என்றேன். 

ஆமா... ஆமா... இந்த கனேசு, குமாரப் போன்றவங்க நம்ம கேங்குல மட்டுமில்லாம வயது வித்தியாசமின்றி அனைத்து குறூப்புலயும் இருப்பாங்க, இவங்களால குறூப்ல இருக்கிற மத்தவங்களுக்கு பெரிசா எதுவும் ஆகிறதில்ல அவங்க வருவாங்க அவங்க பாட்டுக்கு போன நோண்டிட்டு இருப்பாங்க பின் எல்லாரும் கிளம்புறப்போ அவங்களும் கிளம்பிடுவாங்க, இவங்களும் ஒரு வகை சைக்கோதான் மச்சி என்றான் நீண்டதொரு பெருமூச்சு விட்டுக் கொண்டே :( 

ஹம்ம்ம்ம் .... என்னத்தச் சொல்ல கருத்துச் சுதந்திரம் மண்டையில் பட்ட எல்லாத்தையும் சொல்லுறான் அவன் சொல்லுறதப் பார்த்தாலும் நியாயமாத்தான் இருக்கு, இப்பிடியே விட்டா இரவைக்கு நம்மல தூங்க விடமாட்டான் மிச்சமிருக்கிற மிக்ஸர அப்பிடியே நான் சாப்பிட்டு வாமச்சி மணி மூனாவது போய்ப்படுப்போமென்றேன், எங்க, அவன் எழும்பனுமே... 
நமக்கு முன்னாடியே அவன் தூங்கிட்டான் போதையில.... 

ரொம்ப நாளாவே ட்ராப்ட்ல இருந்த பதிவு இன்னைக்கு முடிச்சாச்சு.... இந்தப் பதிவைப் பார்த்திட்டு கடைசில என்னையும் சைக்கோ என்று சொல்லுவீங்க என்பது மட்டும் உண்மை :)))) 

கொஞ்சம் கிறுக்கு ரொம்பவே இருக்கு ...

யாரும் எதிர்பாராத அசாதாரண நிகழ்வாக அச் சம்பவம் நடந்துவிடுகிறது. மிகச் சிறந்த ஜோசியக் காரர்களால் கூட துளியளவும் சிந்திக்க முடியாததாக அச் சம்பவம் அமைந்துவிட்டது. இனிமேல் போலி சாமியார்களுக்கு இப் பூமியில் வாழப்பிடிக்குமோ தெரியவில்லை.பல தசாப்தங்களின் பின் சாதனை ஒன்று பதியபடும் யாரோ ஒரு மாணவன் பரீட்சையில் பெற்ற குறைந்த மதிப்பெண்கள். தெருவோர மரநிழலில் சலூன் கடை வைத்திருந்தவர்கள் சொந்தமாக வாங்கிய நிலங்களில் குளிரூட்டிய அறைகளில் முடிவெட்டி முகச்சவரமும் செய்துவிடுவார்கள். ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தினதும் வருவாயீட்டும் பிரதான மூலமாக சலூன் தொழில் மாறிவிடும்.
 
அன்பின் அடையாளமான பரிசுப் பொருட்கள் வியாபாரத்தில் முதலீடு செய்தவர்கள் மூலைகளில் குந்திக்கொண்டு வயிற்றுப் பசியார வழிதேடி சிந்திப்பார்கள். காக்காய் கலரில் இருப்பவர்களை கத்தரினா கைFப் ரேஞ்சுக்கு கொண்டுபோய்விடும் அழகுசாதன நிலையங்கள் ஆள் அரவமற்றுக் கிடக்கும் ஆடையகங்களும் அமைதியாகக் கிடக்கும், போன் கடைகளும் ரீசார்ஜ் கடைகளும் ஆளாளுக்கு முகத்தை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருப்பார்கள், குடும்பங்களில் யாராலும் மாற்ற முடியாத வரலாற்று நிகழ்வாயிருந்த மாமியார் மருமகள் சண்டை இனிமேல் கிடையவே கிடையாது.

குழந்தைகள் பாவம், அழுமூஞ்சியாய் எப்போதுமே திரியும். வழமையில் சின்னதாய் ஒரு சண்டையின் பின் பாடசாலை செல்லும் குழந்தைகள் இனிமேல் உலக மகா யுத்தமொன்றை புரிந்துவிட்டுத்தான் பாடசாலைக்குப் போவார்கள். யுத்தம் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது இனிமேல் ISIS அமைப்பு யாதொரு பெண்னையும் சீண்டவில்லை, பாதுகாப்பாக அப் பெண்ணின் தாய் தேசம் அனுப்பி வைத்துள்ளோம் என்று அறிக்கையிட முடியாது. டெல்லி பேரூந்துகளில் இனிமேல் எந்தப் பெண்களும் பலாத்காரப்படுத்தப்பட மாட்டார்கள்.  நித்தியானந்தாவும், கடாபியும் பாக்கியம் பெற்றவர்களாக இனிவரும் காலங்களில் இளைஞர்களால் நோக்கப்படுவார்கள்.

சினிமாவையே நம்பியிருந்தவர்கள் சீனீ மூட்டை தூக்கும் நிலமைக்கு வந்துவிடுவார்கள், கவிஞர்கள் கருப்பொருள் தேடி செவ்வாய் கிரகம் சென்றும் வெரும்கையும் வீசிய கையுமாக திரும்பிவருவார்கள், தன் பத்தினித் தனத்தை நிரூபிக்க இனி எந்தவொரு பெண்ணும் எந்தவொரு நகரத்தையும் எரிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது, ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் அவசியம் எனும் கோரிக்கைகளும் பதாகைகளும் திடீரென குறைந்துவிடும், ஜேசுதாஸ் இனிமேல் கவலையில்லாமல் தன் எண்ணப்பாடுகளை வெளியிடலாம் எந்தவொரு எதிர்ப்பும் இராது, ஆண்களின் வாழ்வைச் சீரழிக்கும் மது, மாது , சூது எனும் வரிசையிலிருந்து மாது தூக்கப்பட்டுவிடும், மாது தூக்கப்பட்டால் ஏனைய இரண்டும் நீடிக்க வாய்ப்பில்லை, ஆகவே எல்லா ஆண்களும் தூய்மையானவர்களாக மாறிவிடுவார்கள்.

கிளியோபற்றா முதல் கிளியோசியக்காரன் பொன்டாட்டி வரை பெண்களையும் பெண்களின் அழகையும் பெண்டியம் கொம்பியூட்டரில் பாதுகாப்பாக வைப்பதிலேயே இளைஞர்களது பொழுது கழிந்துவிடும், அசினோ, நயனோ ஏன் தெருமுனையின் செருப்புத்தைக்கும் முனியம்மாவின் புகைப்படமும் அதிகூடிய தொகைக்கு ஏலம்விடப்படும், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஏன் பல வருடங்களுக்குப் பிறகு கைக்குட்டைகள் கழுவப்படலாம், சரவணன் மீனாட்சி, கஸ்தூரி, சிந்து பைரவி வடிவில் வரும் கண்ணீருக்கு இனி சக்தி கிடையாது அழுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்.

பேஸ்புக்கில் கமண்டுகளும் லைக்குகளும் திடீரென குறைந்துவிடும், ஃபேக் ஐடிகளில் இனி எவரும் வலம் வர மாட்டார்கள்,  யூடியூப் தன் பெயருடன் சேர்த்து ஆபாசமான வார்த்தையையோ அல்லது தன் லோகோவில் ஆபாசமான படமொன்றையோ இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கும் அந்த அளவிற்கு யூடியூபில் ஆபாசமான வீடியோக்களுக்கு ஹிட்ஸ் அள்ளிக் கிடைக்கும், இரவு முழுக்க போனிலும் , சமூக தளங்களிலும் கடலை போடுவது இல்லாமல் போனாலும் ஆண்கள் அலுவலகங்களுக்கு நேரத்தோடு செல்வது குறைந்துவிடும். ஆனாலும் எந்தவித டென்சனும் இல்லாமல் அலுவலகங்களில் ஆண்கள் தன் கடமையில் சிந்தனையைக் குவிப்பார்கள்.

ஐயோ சம்பவம் என்னவென்று சொல்லாமல் இப்படியே சொல்லிக் கொண்டு போன எப்பூடி என்று கல்லைத் தூக்காதீங்க, இவ்வளவு சொல்லியும் அச்சம்பவம் என்னவென்று கொஞ்சமேனும் அனுமானிக்க முடியாதவர்களாக என் நட்புகள் இருக்கமாட்டார்கள், இருந்தும் அச் சம்பவம் என்னவென்று சொல்லிவிடுகிறேன்.

உலகத்தில திடீரென பெண்களனைவரும் மறைக்கப்பட்டோ, அழிக்கப்பட்டோ விட்டார்கள். பெண்கள் இனி பலநூற்றாண்டுகளுக்கு உலகத்தில் தோன்ற வாய்ப்பில்லையென்று தலைசிறந்த அறிவியலாளர்கள், ஞானிகள், மதகுருக்கள் எல்லோரும் ஒருமித்துச் சொல்லிவிட்டார்கள். அதனால் தான் நான் மேலே சொன்ன மாற்றங்கள் ஏற்பட்டு உலகம் ஒரு சீரான நிலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் போது,

சுமார் பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு சம்பவம் நடக்கின்றது, உலகின் எங்கோ யாருமே கேள்விப்படாத எந்த வித தொழில் நுட்ப வசதிகளுமற்ற ஒரு சேரிப் பிரதசேத்தில் சாதாரண வனப்புக் கொண்ட ஒரு பெண் வசிப்பதாக உலகமக்கள் கேள்விப்படுறார்கள். இந் நிலையில் உலகின் நிலை ? அப் பெண்ணின் நிலை ?

கொஞ்சம் கிறுக்கு ரொம்பவே இருக்கு ...

எழுத்தின் நிலை...

மிகவும் பழமைவாய்ந்த நாளொன்றில் தோற்றமே யறியா உறவொன்று கூறிய வார்த்தை என் ஆழ் மனதில் மிக ஆழத்தில் ஆதலால் நான் அவ் வார்த்தையாய் மாற நிகழ்காலத்திலும் முயற்சிக்கிறேன், எதிர்காலத்திலும் முயற்சித்துக் கொண்டேதானிருப்பேன் என்பதை  என் கூண்டுக்குள் நுழையும் வரை உணரவில்லை.

காரிருளை வானம் போர்த்திக் கொண்ட நாளொன்றில் பச்சை நிற தென்னங் கீற்றுகளிடையே நான் கண்ட காட்சியும் அவ் வார்த்தை போன்றே என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது. காட்சியை விபரித்தால் வார்த்தை நிஜமாகிடும் என்ற பேராசையில் காட்சியை விபரிக்க என் கூடு சேர்கிறேன். முதுரையால் செய்யப்பட்ட கதவுகளையும் யன்னல்களையும் கொண்டது என் கூடு, இறுதி தசாப்தத்தின் பின் என் கூண்டினுள் நுழைகிறேன். பல போராட்டங்களின் பின் என்னை அனுமதிக்கும் கதவு இன்று எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் திறந்துகொண்டது. 

சிலந்திகள் கலவரம் செய்த இடம் போன்று தோற்றமளித்தது என் கூடு. சென்றமுறை நான் இட்ட கட்டளையை துடைப்பம் செய்ததாகத் தெரியவில்லை. துடைப்பத்தை நோக்கினேன், தோல்கள் சுருங்கி வயிறு முதுகோடு ஒட்டியதாக ஒரு மூளையில் மயங்கிய நிலையில் கிடந்தது. என்றோ ஒரு நாள் அருந்திய ஃபண்டா போத்தல் என் மேசை மீது அங்குமிங்கும் அசைந்தவாறு காணப்பட்டது. அருகில் சென்றதும் அசைவை நிறுத்திய ஃபண்டா போத்தல் எனைப்பார்த்து ஒரு கேலிப் புன்னகை உதிர்த்துவிட்டு மீண்டும் அசையத்தொடங்கியதை என் கரம் கொண்டு நிறுத்தி மீதியாய்ருந்த ஃபண்டாவை துடைப்பத்தின் மீது தெளித்தேன்.

என் கூண்டினுள் என் கருத்துகள் , செயற்பாடுகளுக்கு ஆமா போடுவது துடைப்பம் மட்டும் தான். அதனால் எனது எல்லா எண்ணங்களையும் துடைப்பதிடம் மட்டுமே சொல்லிவந்தேன். எப்போதுமே என் சொல்லுக்கு மாற்றம் செய்யாததும் கூட துடைப்பம் மட்டும் தான்.  எத்தனை நூற்றாண்டுகள் இறந்தாலும் களைப்போ இறப்போ நெருங்க முடியாவண்ணம் மிகவும் சக்திவாய்ந்த பொருட்களைக் கொண்டுதான் துடைப்பத்தை செய்தேன். துடைப்பம் இப்படி உணர்விழந்து கிடப்பதற்குக் காரணம் அவைகளாகத் தான் இருக்க முடியும். நாசமாப் போனவைகள் என் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ அவைகளுக்கு,

 ஃபண்டா துளிகள் துடைப்பத்தின் மீது பட்டதும் நீண்ட கால வறட்சியை அனுபவித்த  நிலத்தில் திடீரெனப் பெய்த  மழையின் பின் வளரும் பசுமையான  புற்களைப் போல புத்துணர்ச்சி பெற்று துள்ளிக் குதித்து எழுந்து கொண்டது துடைப்பம். அருகில் நான் இருப்பதைக் கண்டதும் தலை குனிந்து கொண்டது. முன்னரைப் போன்று வன்முறை இல்லாமல் என் விசாரணை தொடங்கியது. விசாரணையில் அவைகளின் சூழ்ச்சியில் துடைப்பம் மாட்டிவிட்டது என்பதை தெரியமுடிந்தது.

அவைகள் பற்றி விசாரித்தேன். என் கூண்டினுள் விருந்தாளிகளுக்கென்று சில போதை பானங்கள் இருக்கும், அவைகளுக்கு அப் பானங்களை கொஞ்சமேனும் சுவைத்துப் பார்க்க வேண்டும், ஆனால் நான் அனுமதிப்பதில்லை. கூண்டிற்குள்ளான என் வருகை நீண்ட நாட்களானதால் பானத்தில் சிறிதளவை சுவைத்துவிட்டு, சுவையறிந்த பின் மிகுதியை தங்களுக்குள் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட முரண்பாட்டில் பானம் தரையில் சிதறியதால், வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த தரைக்கு போதை தலைக்கேறி தரை இறந்துவிட்டதாகவும் அதன் பின் அவைகள் ஒன்றையொன்று முகம் நோக்காமல் திரும்பிக் கொண்டதாகவும் துடைப்பம் கவலைப்பட்டது.

கதவு சிரமமின்றி திறந்துகொண்டபோதே நான் புரிந்துகொண்டிருக்க வேண்டும் அவைகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் கதவை திறக்கவிடாமல் என்னைச் சோர்வடையச் செய்திருக்கும். அவைகளை நோக்கினேன் நான் வந்தது கூட புரியாமல் முகங்களை திருப்பிக் கொண்டிருந்தன. சில வேளை என்னை ஒரு உயிராக கருதாமலும் இருக்கலாம் .

அவைகளைச் கண்டிக்குமளவு எனக்கு அவகாசம் தர மறுக்கிறது என் ஞாபக சக்தி. இன்னும் சிறிது நேரத்துக்குள் என் கனணிக்கு நான் கண்ட காட்சியை சொல்லியேயாகவேண்டும். கனணியை நோக்கினேன் பூஞ்சல் வெளிச்சம் கனணி இருக்கும் இடத்தை காட்டியது. அப் பூஞ்சல் வெளிச்சம் கூட கனணியில் இருந்துதான் வெளியாகிறது. கனணியின் திரைமுழுவதும் தூசுகளும் புளுதியும் நிறைந்திருந்தன. துடைப்பத்தை திரும்பிப் பார்த்தேன் மிக வேகமாக செயற்பட்டு கனணி திரையை சுத்தம் செய்ததில் துடைப்பம் பழைய வலுவான நிலையில் இருப்பதை ஊர்ஜீதப்படுத்திக் கொண்டேன்.

கனணி திரையில் என் பார்வையைக் குவித்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் நான் பாவித்த அதே ஃபயர் ஃபாக்ஸ் உலாவி  இறுதியாக ப்ளாக்கர் போஸ்ட் பகுதியில் நான் எடிட் செய்த போஸ்ட்டுடன் திறந்திருந்து. அருகில் பேஸ்புக், ப்ளாக்கர் ப்ரிவீவ், கூகுள் சேர்ச் டேப்புகளும் திறந்திருந்தன. இணைய இணைப்பும் செயற்பாட்டிலேயேயிருந்தது. போஸ்ட் பகுதிக்குச் சென்று புதிய போஸ்ட் ஒன்றினை எடிட் செய்வதற்காக தயாராகினேன். சிந்தனையை ஓர் நிலைப்படுத்தி கண்ட காட்சியை ஞாபகத்திற்குக் கொண்டுவந்தவனாக கீபோடில் தட்ட ஆரம்பித்தேன்.

கீபோடில் விரல்கள் பட்டதும் நுளம்புகள் விழித்துக் கொண்டன. எது நடந்தாலும் பரவாயில்லை என்று என் மனதில் உள்ளவைகளை கனணியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நுளம்புகளும் என்னை விட்டதாக தெரியவில்லை என் கால்கள், காதுகள் என புகுந்து விளையாடிக் கொண்டிருந்தன. நுளம்புகளின் சூழ்ச்சி போதாதென்றூ ஒரே ஒரு ஈ என் மூக்கின் உச்சி, முகம் , கைகள் என உணர்ச்சியற்றுப் போன இடங்களுக்கு உணர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தன.

எப்படியோ கண்ட காட்சியில் அரைவாசியை பதிவாக்கியாச்சு,இன்னும் அரைவாசி உள்ளது அதில் முடிவுப் பகுதியும் முக்கியமானது. இதற்கிடையில் மிகுதி அரைவாசிப் பகுதிக்குமானவைகள் முழுவதும் மறந்துவிட்டன. மிகுதிப் பகுதியை நிறைவு செய்து, முழுப் பதிவொன்றினை போஸ்ட் செய்து நீயும் ஒரு எழுத்தாளன் தான் என்கின்ற அவ் வார்த்தையை மெய்ப்பிப்பது  எப்படியென்று தீவிரமாக சிந்திக்கலானேன். நீண்ட காலத்திற்குப் பின் ஆழமாக சிந்திப்பதாலும் ஆழ் உறக்கம் கொண்டு வெகு நாட்களானதாலும் சிந்தனையில் ஆழ்ந்தவாறே  தூங்கியேவிட்டேன்.

யாரோ சிலரின் பேச்சுச் சப்தம்கேட்க கண்விழித்துக் கொண்டேன், எனைச் சுற்றி , நான் இருந்த கதிரை, என் கணனி என எல்லா இடமும் சிலந்தி வலை பிண்ணப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. வெகு காலம் உறங்கியுள்ளேன் என்பதை எனக்கெழுந்த பேய்ப் பசியுணர்த்தியது. என்ன நடந்திருக்கும் என்பதைச் சிந்திக்கலானேன். மெய் மறந்த உறக்கத்தில் எனது தலை எனக்கருலிருந்த சுவர் மீது பட்டதும் உடனே சுவர்கள் தங்கள் முகங்களைத் திருப்பி நான் வந்திருப்பதை உணர்ந்து என் தலையை வருடி எனக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரவைத்திருக்கின்றன. இப்படியே ஒவ்வொரு முறையும் அவைகள் செய்வதனால், எனக்குள் இருக்கும் கற்பனைகளும் காட்சிகளும் மறைந்துவிடுகின்றன.

இம்முறையும் என்னால் அவ் வார்த்தையை நிஜப்படுத்த முடியாமல் போய்விட்டது, அடுத்த காட்சிகளும் கற்பனைகளும் என்னுள் எழ இன்னும் எத்தனை வருடம் போகுமோ தெரியவில்லை. அடுத்த முறை மிகவும் விழிப்பாக செயற்பட வேண்டும் என்று மனதில் திடம் கொண்டபோது, போ... போ... நீயெல்லாம் எழுத்தாளனாகி என்ன கிழிக்கப் போற என்று ஏளனமாக கேட்கின்றது மூலையில் குவித்து வைத்த அழுக்குச் சட்டைகளின் ஒன்று.
நட்பு

ச்சே...
வெளியாகும் போது வானத்த ஒரு முறை பார்த்திருந்தால் இப்படி கண்ட இடத்துல ஒதுங்கிற அவசியம் ஏற்பட்டிருக்காது என்று மனதுக்குள் தன்னைத்தானே நொந்துகொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடை வாசலில் ஒதுங்கிக் கொண்டார் சகாயம் வாத்தியார்.

சகாயம் வாத்தியார் மாங்குடி பிரதேசத்தில் மிகவும் மரியாதை மிக்கவர் எந்த பிரச்சனைகளுக்கும் செல்வதுமில்லை தன் தொழில் காலத்தில் யாரையும் காயப்படுத்துமளவு செயற்பட்டதுமில்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுப் போன புகைப்பிடித்தலைத் தவிர வேறு கெட்டபழக்கங்கள் எதுவுமில்லாதவர். முப்பது வருஷம் ஆசிரியர் தொழிலில் அனுபவம் உள்ள சகாயம் வாத்தியாருக்கு அந்த முப்பது வருஷத்திலும் தன் மூன்று பிள்ளைகளுக்கும் படிப்பு தவிர வேறு எதையும் செய்யமுடியவில்லை. 

மூத்தவன் சர்மிளனை அவரைப் போல வாத்தியாராக்கிவிட்டார், இளையவன் அனோஜன் இப்போதுதான் பல்கலைக்கழகத்தில் முன்றாவது வருடத்தில் இருக்கிறான், கடைசி கஸ்தூரி சகாயம் வாத்தியாரின் ஒரே ஒரு பெண் பிள்ளை. பார்ப்பதற்கு இப்போ இருக்கிற நயந்தாரா மாதிரி அழகானவள். அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவள். உயர்தரக் கல்வியை முடித்துவிட்டு மேலதிக படிப்புக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறாள். ஆண் பிள்ளைகள் இருவரும் வீட்டிலிருப்பது குறைவென்பதாலும் ஒரே ஒரு பெண் பிள்ளை கஸ்தூரி என்பதாலும் சகாயம் வாத்தியார் கஸ்தூரியிடமே அதிகமான நேரத்தையும் அன்பையும் பகிர்ந்து கொண்டார்.

மூன்று மாதத்திற்கு முதல் தான் ஆசிரியர் தொழிலிருந்து ஓய்வு பெற்ற சகாயம் வாத்தியார், தன் பென்சன் பணத்தைக் கொண்டும் மூத்தவன் சர்மிளன் பேரில் வங்கியில் ஒரு கடனெடுத்தும் கஸ்தூரிக்கு ஒரு வீட்டைக் கட்டி எப்படியாவது அவளது திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்றெண்ணி வங்கி அதிகாரியை சந்திக்க வெளியானவர்தான் அரை மணி நேரத்துக்கு முதல் இருட்டிவந்த கருமேகத்தை  கவனிக்க தவறிவிட்டார் அதனால் தான் இந்தப் புலம்பல்.

மழை மெல்ல மெல்ல அதிகரிக்க அதிகரிக்க, பெட்டிக்கடை கூறை வழியாக வந்த மழைநீர் தன் மேல் படாமல் இருக்க மேலும் கடையின் சுவரோடு ஒட்டிக் கொண்டார் வாத்தியார். இரண்டு நிமிட கணதியான மழையின் பின்னர் சின்னதாய் ஒரு இடைவெளியைத் தந்தது காலநிலை ஆனாலும் குடையில்லாமல் வெளியில் செல்ல முடியாதவாறு இலேசாக மழை பெய்து கொண்டிருந்தது. தலையில் ஒரு பொலித்தீன் பையைப் போட்டவாறு சற்றுத் தொலைவில் சிறுவனொருவன் விரைவாக வாத்தியார் நின்றிருக்கும் பெட்டிக்கடை நோக்கி வந்துகொண்டிருந்தான். சிறுவன் கடையை அண்மிக்கவும் மழை மீண்டும் கணமாக பொழியவும் சரியாக இருந்தது.

மழை விடும்வரை பூட்டப்பட்டிருந்த பெட்டிக்கடையருகே வாத்தியாரும் சிறுவனும் ஒதுங்கவேண்டியதாயிற்று. பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் மழை குறைவதாகத் தெரியவில்லை. மழை ஆரம்பித்ததிலிருந்து மழை எப்போது விடும், மழை விட்டு நாம் போகும் போது அதிகாரி வீட்டிலிருப்பாரா , லோன் எப்ப கிடைக்கும், பென்சன் பணம் சீக்கிரமாகக் கிடைக்குமா என்றெல்லாம் பலதையும் சிந்தித்துக் கொண்டிருந்த வாத்தியாரின் கவனம் திடீரென சிறுவனின் பக்கம் திரும்பியது.

ஒரு பதின்னான்கு அல்லது பதினைந்து வயதுதானிருக்கும் அச் சிறுவனுக்கு. வாத்தியாரை வெறித்துப் பார்ப்பதும் பின் தன் இடுப்பை தடவிக் கொள்வதுமாக செயற்பட்டதுதான் வாத்தியாருக்கு சிறுவன் மேல் கவனம் திரும்ப காரணமாகவிருந்தது.வயதுக்கும் உடலுக்கும் சற்றும் பொறுத்தமில்லாத ஆடையுடுத்தியிருந்தான். கழுத்திலும் ஒரு பெரிய சங்கிலி தொங்கியது வலது கைகயில் கைக்குட்டயைச் சுற்றிக் கொண்டும் ஒரு முரடனைப் போல காட்சியளித்தான். முகத்திலிருந்த அரும்பு மீசை சற்றுப் பெரிதாக இருந்தால் அசல் முரடன் தான்.

பார்ப்பத்ற்கு வெளியூர்க்காரன் போலத் தெரிந்தாலும் போனவருடம் தன்னிடம் ஒன்பதாவது படித்த ஒரு மாணவனின் முகத்தோற்றத்தை போலிருந்தது வாத்தியாருக்கு அவனின் முகம் . சிறுவன் மீண்டும் தன் இடுப்பை ஒரு முறை தடவி வாத்தியாரையும் பார்த்தான். வாத்தியாரின் பார்வை சிறுவனின் இடுப்பை நோக்கிச் செல்ல இடுப்பிலிருப்பது ஏதோ ஒரு ஆயுதம் போல தென்படவும் வாத்தியாருக்குப் பயம் தொற்றிக் கொண்டது. தன் சேவைக் காலத்தில் யார் யாருக்கெல்லாம் அடித்திருக்கிறோம், யாரோடெல்லாம் கோபமாக பேசியிருக்கிறோம் என்றெல்லாம் வாத்தியார் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். இடையில் இடைவிடாது பெய்யும் மழையையும் வைதுகொண்டார்.

எதுக்கும் இரண்டடி தள்ளி நிற்போம் என்றெண்ணி நகர்ந்தவரால் ஒரு அடிக்கும் குறைவான தூரம்தான் நகர முடிந்தது. இன்னும் ஒரு இன்ச் நகர்ந்தாலும் கொட்டோ கொட்டனக் கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்துவிடுவார். ஏற்கனவே இடையிடையே வீசிய குளிர்ந்த காற்றின் மூலம் ஏற்பட்ட மழைச்சாரலினால் வேட்டி நனைந்திருந்தது.சிறுவனை ஓரக்கண்ணால் பார்ப்பதும் பின் வானத்தின் பக்கம் பார்வையைச் செலுத்தி எப்போது மழை விடும் என்று பார்ப்பதுமாகவிருந்த வாத்தியாரின் கையடக்கத் தொலைபேசி சினுங்கியது. இடுப்பில் பத்திரமாக வைத்திருந்த கைபேசியை எடுத்து அழைப்பது யாரென்று பார்த்து அழைப்பு வீட்டிலிருந்து வருகிறதென அறிந்தவுடன் பேச்சுத் தொடுத்தார். மறுமுனையில் கஸ்தூரி, குடையெடுத்துச் செல்ல மறந்ததையும் இப்போது இருக்குமிடம், குடை எடுத்து வரவா என்றெல்லாம் கேட்ட கஸ்தூரியிடம் இல்லம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல மழை விட்டுடும் நான் வந்துடுவேன் என்று சொல்லித் அழைப்பைத் துண்டித்தவரின் கண்கள் மறுபடியும் சிறுவனைத் தேடின.

இப்போது சிறுவன் இடுப்பினில் எதுவுமில்லாமலிருக்க, கைகளில் ஏதோ ஒரு சிறிய பொட்டலமொன்றை சிறுவன் பிரித்துக் கொண்டிருப்பதை வாத்தியார் கண்டுவிட்டார். வாத்தியார் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல்  அவசர அவசரமாக பொட்டலத்தை பிரிப்பதிலேயே சிறுவன் குறியாக இருந்தான். பொட்டலம் சிறிதாக பிரிபட பொட்டலட்தினுள் இருப்பது என்னவென்று ஓரளவுக்குத் தெரிந்ததும் வாத்தியார் திகைத்துப் போய்விட்டார். ஒரு சின்னப் பயள் எப்படி இப்படியான பொருட்களையெல்லாம் கைகளில் வைத்துக் கொள்ள முடியும் , காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு, இவனுக்கு அப்பா அம்மா இல்லையா, இவனைப் இப் போக்கில் இன்னும் கொஞ்ச காலம் விட்டுவிட்டால் இவனின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடுமே என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்த வாத்தியாருக்கு சிறுவனின் அடுத்த நடவடிக்கை வியப்பையும் பயத்தையும் கொடுத்தது.   சிறுவன் தான் கைகளில் வைத்திருந்ததை வாத்தியாரின் கழுத்துக்கு நேரே நீட்டிவிட்டான். சிறுவனின் உயரத்திற்கு வாத்தியாரின் கழுத்தளவுக்குத்தான் நீட்ட முடிந்தது இல்லாவிட்டால் முகத்துக்கு நேராகவே நீட்டியிருப்பான்.

சிறுவனின் திடீரென்ற இச் செயற்பாடு வாத்தியாரை நிலைகுழையச் செய்ததுடன் கோபத்தையும் அதிகப்படுத்தியது. ஆனாலும் வெளியில் பெய்து கொண்டிருக்கும் கணத்த மழை, மழையுடன் கூடிய குளிர்ந்த காற்று யாருமற்ற தனிமையான பெட்டிக் கடைச் சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு தனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்தி சிறுவன் நீட்டியதை வாங்கிக் கொண்ட வாத்தியார் சிறுவனிடமே தீப்பெட்டியையும் வாங்கி சிறுவன் நீட்டிய சிகரடை பத்தவைத்துக் கொண்டு சிறுவன் பற்றி தெரிந்துகொள்ள அவனிடம் பேச்சுத் தொடுத்தார்.


---- நட்புக்கு வயது வித்தியாசம் கிடையாதாம், அப்படி வயது வித்தியாசம் கிடையாத நட்பு வேர்விடுவது புகைவிடுவதில் தானாமே ----