25 டொலர் அதி வேக கணனி

எல்லாமுமே கணனி மயப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நவீன உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாகிக்கொண்டேயிருக்கின்றது. வளர்ந்துகொண்டேயிருக்கும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற் போல் நம்மை நாமும் வளர்த்துக்கொள்வதென்பது தவிர்க்க முடியதவொன்றாக இருக்கின்றது. இப்படி தொழில்நுட்பத்திற்கு இணைந்ததாக நம்மை நாம் மாற்றிக்கொள்ளுதல் சாத்தியமாவது அதிக வருமானமீட்டும் வர்க்கத்தினரிடம் மட்டுமேயாகும். பண முதலைகளாகக் காணப்படும் இவர்கள் உலகில் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான தொழில்நுட்ப வளர்ச்சிகொண்ட சாதனங்களை அறிமுகமானவுடனேயே பயன்படுத்தி அதன் நன்மைகளை தாம் மட்டும் நுகர்ந்துகொண்ட பின் சமூக தளங்களிலும் தங்களுடைய இணைய பக்கங்களிலும் அதன் நன்மைகள், இலகுதன்மைகள் பற்றி பதிவிடுகின்றனர். குறைந்த வருமானமீட்டும் வர்க்கத்தினரோ இவர்களின் பின்னூட்டங்களைப் பார்த்து பெருமூச்சு விடுவதுடன் நிறுத்திக் கொள்வர்.

கணனி பாவிக்கும் எமக்குப் பல வகையான மென்பொருட்களையும் நிறுவவேண்டும் எனும் ஆசையில் கிடைத்த மென்பொருட்களையெல்லாம் நிறுவுவோம், அப்படி நிறுவிய மென்பொருட்களில் சில அதிர்ஷ்டவசமாக எந்தவித பிரச்சனைகளுமின்றி தொழிற்படும், ஆனால் பெரும்பாலான மென்பொருட்கள் நிறுவப்பட்ட பின் கணனியின் வேகம் குறைதல், எந்த வித இயக்கமுமின்றி கணனியிருத்தல், அடிக்கடி கணனி ரீ ஸ்ட்ராட் ஆகுதல் என தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இத் தொல்லைகளுக்குப் பிரதான காரணம் நாம் நிறுவிய மென் பொருட்கள் நமது கணனிக்கு பொருத்தமானதாக இல்லை என்பதனாலேயேயாகும். இந்த பென்பொருட்களைப் அவசியம் பாவிக்க வேண்டுமாகவிருந்தால் எம்மிடமிருக்கும் கணனியில் ரெம், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிதாக ஒரு கணனி வாங்க வேண்டும். அதிக வருமானம் கொண்டவர்களுக்கு இம் மாற்றங்களைச் செய்வது இலகு, சாதாரண வருமானமீட்டுபவர்களுக்கு  இன்றைய விலைவாசியைப் பொருத்தவரைக்கும் இது கொஞ்சம் சிரமமானதுதான்.

அதிக செலவில்லாமலும் கணனியின் மெமோரியில் மாற்றங்கள் செய்யாமலும்  நமக்குத் தேவையான மென்பொருட்களை நிறுவி கணனியினை பாவிப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சாதனம் தான் இந்த 25 டொலர் கணனி. இந்த சாதனத்தின் அறிமுகத்தினால் அதிகமாக பயன் பெறப் போவது நடுத்தர வருமான வர்க்கத்தினரே. 
25 டொலர் கணனி : உண்மையில் இது ஒரு கணனி அல்ல, இது ஒரு பென் ட்ரைவ் போன்ற ஒரு சாதனம் இந்த சாதனத்தை கணனியில் சொருகிய பின் எமது கணனியினை ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்தால் முன்னர் இருந்த வேகத்தை விட பல மடங்கு வேகமாக நமது கணனி இயங்க ஆரம்பிக்கும் என்று சொல்கின்றார்கள் இதனை சந்தைக்கும் அறிமுகப்படுத்தியிருக்கும் Xtra PC நிருவகத்தினர். நான்கு வகையான விலைகளில் கிடைக்கக் கூடியதாக தயாரித்திருக்கும் இந்த சாதனத்தின் அதி கூடிய விலை 80 டொலர்களாகும். ஒவ்வொரு விலைக்கும் தகுந்தாற் போல் அதன் வேகம் மற்றும் ஸ்டோரேஜ் அளவு என்பன மாறுபட்டுக் காணப்படுகின்றது.  மேலும் இந்த சாதனம் பொருத்தமான முறையில் இயங்கவில்லையென்றால் நம்முடைய பணத்தை மீளத் தருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இணையப் பாவனை, வீடியோ பார்த்தல், ஈமெயில் வசதிகள், சமூக தள வசதிகள், ஒன்லைன் வியாபாரம், கேம்ஸ் என சாதாரணமாக நாம் செய்யும் வேலைகளை இந்த சாதனத்தைக் கொண்டு வேகமாகவும் சிரமமின்றியும் செய்துகொள்ள முடியும். மேலும் இதனை ஹார்ட் டிஸ்க் இல்லாத மற்றும் ஹார்ட் டிஸ்க் பழுதடைந்த கணனிகளிலும் பொருத்தி இதனைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் நன்மை.  எதுவாயினும் மாதம் பதினைய்யாயிரம் சம்பளம் எடுக்கும் சாதாரண ஒருத்தர் திருப்தியான முறையில் கனனி பாவிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் வளர்ந்தால் போதும்.

மேலதிக தகவல்களை இந்த இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் https://www.xtra-pc.com/