Looking For Anything Specific?

ads header

என் வீட்டில் சுனாமி

நான்
நம் பக்கத்து வீட்டாரிடமும்
இரண்டு வீட்டிற்கப்பாலுள்ள
மாமாவிடமும்
தெரு சந்தியில் இருக்கும் நம்
கடைசி தங்கச்சியிடமும்
அடுத்த தெருவில் இருந்த
மதினியிடமும்
உங்க பாஸ்போர்ட் தேடி உங்க
மாமியார் வீடு செல்ல,
பாஸ்போர்ட் எதற்கு
மாமி வினவ
மாமியிடமும் தகவல் சொன்ன போதும்
ஏன் தொலைபேசியில்
தகவல் கேட்ட இளைய மச்சானும்
சகோதரியும்…
கொழும்பிலிருந்து வந்துகொண்டிருக்கும்
உங்களைப் பற்றி நீங்கள் ஆசையாய்
தங்கும் மர்கசில் மசூரா செய்யும் போது
கூடியிருந்தவர்கள்…
இவர்களெல்லாம் விம்மியும்
கதறியும் கண்ணீர் விட்ட போதும்
என் கண்களில் வராத கண்ணீர்
நேற்று உங்கள் கப்ரு அருகினில்
சென்ற போது வந்ததே
அகவையொன்றின் பின் வடிந்த
என் கண்ணீரின் அர்த்தம் எதுவோ ?
நானறியேன் காக்கா
ஞாயிறொன்றில்தான் சுனாமி
துவட்டியது நம்மூரை
சென்றவருடம் இதே திகதி
ஞாயிறாய் இருக்க நம்
வீட்டில் சுனாமி
அன்று நானழவில்லை
வானம் அழுதது
நான் ஓட்டிய மோட்டார்
சைக்கிள் தடுமாறியது,
கைகள் நடுங்கியது
ஊரிலே மௌத்து நிகழ்வதுண்டு
ஊரே மௌத்தாகிப் போனது அன்று
உங்களை வேனிலிருந்து
மெதுவாகத் தூக்கியெடுத்தார்கள்
வேனுக்குள் உம்மா அழுதாங்க
வெளியில ஊர் அழுதது
நீங்கள் புன்னகையுடன்
ஆழ்ந்து உறங்கினீர்கள் உங்கள்
வதனம் முத்தத்தால் நனைந்தது
ஊரிற்கு நீங்கள் செய்தது நல்லவையல்லவோ
கட்டாரிலிந்து கடைசி நானா
வருமட்டும் காத்திருந்தோம்
உங்களைக் கப்ருக் குழியில் வைக்க
நானாவும் வந்தார் நா தழுதழுக்க
அழுதார்,
குர் ஆனை சுமந்தவர்கள் தான்
உங்களைச் சுமந்தார்கள்
உங்களுக்காக தொழுதார்கள்
துஆ கேட்டார்கள்
நீங்கள் எல்லாவற்றையும்
அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தீர்கள்
நீங்கள் பயணித்த பாதை
அல்லாஹ்வுடையது
உங்கள் மௌத்தும் அவன் பாதையிலேயே
இன்ஷா அல்லாஹ் நீங்கள்
சுவர்க்கத்திலிருப்பீர்கள்
ஆதலால் நானழவில்லை
என் கவலையெல்லாம் நம்
வாப்பாவைப் பற்றித்தான்
அவர் இன்றும் அழுதுகொண்டிருக்கிறார்
உங்களுக்கொன்று தெரியுமா காக்கா
நேற்றும் நம் பள்ளித் தலைவர்
அழுதார், பக்கத்தில் நின்றவரும்
அழுதார்

Post a Comment

0 Comments