Looking For Anything Specific?

ads header

ஆரோக்கியமும் ஓய்வுநேரமும்

இறைவனால் எமக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அருட்கொடைகளில் ஆரோக்கியம், ஓய்வு நேரம் மிகவும் பிரயோசமனாகப் பயன்படுத்தப்பட வேண்டியவை. இப்போதிருப்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் வினவினால் நேரமில்லை, நேரம் போதாது என்பதே பதிலாகும்.
ஒருவருக்கு ஓய்வுநேரமும் ஆரோக்கியமும் இணைந்து கிடைக்கும் காலம் வெகு சொற்பம், நிலையற்ற , நிம்மதியற்ற இந்த உலகிற்காக இரவு பகல் பாராது எமது பெறுமதியான வினாடிகளை செலவளிக்கின்றோம். பலர் என்ன நோக்கத்திற்காக வினாடிகளை செலவிட்டனரோ அதனை அடையுமுன்னரே மண்ணில் புதையுண்டு போகின்றனர். ஆக, இவ்வுலகில் செலவளிக்கப்படும் வினாடிகள் எமக்கு மிகப் பிரயோசனம் தரக்கூடியவைகளுக்குச் செலவளிக்கப்படுமாக இருந்தால் நன்று.
உடல் தெம்பாக இருக்கும் நிலையில் எம்மில் பலருக்கு ஓய்வுநேரம் கிடைப்பதில்லை, வாழ்வின் அந்திம பகுதியில் உடலின் ஆரோக்கியத்திற்காக பலர் ஓய்வெடுக்கின்றனர். உடல்நலமற்று நன்மையான விடயங்களையும் ஓடி ஆடி செய்ய முடியாமல் படுக்கையில் கிடக்கும் போது உடல் தெம்பாக இருந்த காலப்பகுதியில் செய்யப்பட்ட நன்மையான விடயங்களுக்கு கிடைத்த கூலியில் சற்றும் குறைவில்லாமல் அதே போன்ற கூலி இறைவனிடமிருந்து கிடைத்துக்கொண்டேயிருக்கும் என்பதை மறந்தவர்களாக எமது ஆரோக்கியமுள்ள இளமைப்பருவத்தை இவ்வுலகிற்காக வீணடிக்கிறோம் என்பது கவலையே...
இவ்வுலகில் எமக்கு வாக்களிக்கப்பட்ட மூச்சுக்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம் அதையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே, வாக்களிக்கப்பட்ட மூச்சுகளில் ஆரோக்கியமான மூச்சுக்களின் எண்ணிக்கை கேள்விக்குறியே... இளமைப்பருவ மரணங்கள் இவ்வுலக மூச்சுக்களின் எண்ணிக்கைக்கு சாட்சியாயிருக்கின்றன.
ஓய்வு நேரம் கிடைக்கும் கிடைக்கும் என ஓய்வு நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால்... அது தள்ளாடும் வயதிலோ அல்லது கிடைக்காமலோ போய்விடும். நாளைய நாளை கேள்விக்குறியோடு எத்ரிபார்க்கும் நாம் நன்றே செய் அதை இன்றே செய் எனும் மூத்தோர் கூற்றுக்கிணங்க புலரும் ஒவ்வொரு பொழுதிலும் நம் மரணத்தின் பின்னும் நம்மை வந்தடையக்கூடிய நன்மையான விடயங்களைச் செய்வோமாகவிருந்தால் மறுமை வாழ்வு பற்றிய கவலையிலிருந்து ஓரளவுக்கேனும் விடுபட்டுக்கொள்ளலாம்.
வல்ல இறைவன் அவன் விரும்பும் நல்ல காரியங்களை அதிகம் அதிகம் செய்யக்கூடியவர்களாக நம் அனைவரையும் ஆக்குவானாக ... ஆமீன் !
2017.03.03

Post a Comment

0 Comments