இனியும் வேண்டாம் இப்படியொரு பொழுது

இரவுகளின் ஆரம்பப் பொழுதுகளை கடற்கரைகளில் கழிப்பது எங்களது வழக்கமாக இருக்கிறது. அன்றும் அப்படித்தான் நண்பர்கள் எல்லோரும் மாலைப்பொழுதில் கடற்கரைக்குச் சென்றுவிட நான் மட்டும் சிறிது தாமதமாகிவிட்டேன்.அது ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுது...
 
என்னைத் தாமதப்படுத்திய வேலைகளை முடித்துவிட்டு நண்பர்கள் இருக்குமிடம் தேடிச் சென்றேன். கடற்கரையில் வழமையாக நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அவர்கள் இருக்கவில்லை. நிலவொளியில் ஆங்காங்கே தெரிந்த கூட்டங்களை நோட்டமிட்டேன் அங்கும் அவர்கள் இல்லை. ஒரு வேளை கடலோரம் சென்றிருப்பார்களோ என்று எண்ணி, என் கண்ணுக்குப் புலப்பட்ட ஒரு மண் மேட்டில் சிறிது நேரம் படுத்துக் கொண்டேன். குளிர் கலந்த கடற்கரைக் காற்றில் நிலவொளியில் மின்னும் வானத்தையும் அதில் பவணிவரும் வெள்ளை மேகங்களையும் இரசிப்பதில் உள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை ஏனோ தெரியவில்லை.

அடுத்த நாள் ஞாயிறு காலை 8.30 மணியளவில் என்னை அம்மா குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். குளிக்கும் போது நேற்றிரவைய ஒன்று கூடலில் இன்று காலையில் எல்லோரும் கடலில் குளிக்கப் போக  திட்டமிட்டுருப்பதாக நண்பன் ஒருவன் கூறியதையும் ஞாபகப் படுத்திக் கொள்கிறேன்.

குளித்து முடிந்து தலையைத் துவட்டிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லோரும் சப்தமாக கதைத்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் என்ன கதைக்கிறார்கள் என்பது தெளிவாகக் கேட்கவில்லையெனக்கு.

என்ன ஒரே சப்தமாக இருக்கிறது என்று என் சப்தத்தை உயர்த்தினேன். கடற்கரை வீட்டுத் திட்டதினுள் கடல் வந்துவிட்டதாவும் அப்பிரதேச மக்கள் அங்குமிங்கும் சிதறிக் கொண்டுமிருப்பதாகவும் என் வீட்டிலிருந்து சப்தம் வந்தது.

எனக்கு புதுமையாக இருந்தது... கடல் வந்துவிட்டதா எனச் சிரித்துக் கொண்டே ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று நபி சொல்லித் தந்திருக்கிறார்கள் அல்லவா அவ்வாறு செய்வது தானே என்று கூறிக் கொண்டு டவலை உடுத்தியவனாக வீதியில் என்ன நடக்கிறது எனப் பார்க்கச் சென்றேன்.

வீதியில் அம்மா அப்பா அக்கா தங்கை என எல்லோரும் நின்றிருந்தனர். கடற்கரைப் பிரதேச பெண்களில் ஒருவர் சித்தப்பா என் வீட்டை கடல் கொண்டு போய்விட்டது என்று என் அப்பாவைப் பார்த்துக் கூறியவராக எங்களிடமும் நிற்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருந்தார்.

ஏதோ நிகழ்ந்து விட்டது மட்டும் புரிந்தது எனக்கு... அப் பெண் சென்று சற்று நேரத்தில் எனக்குத் தெரிந்த இன்னுமொருவர் பிரதான வீதிக்கு கடல் வந்துவிட்டது என்னுடைய சைக்கிளையும் கொண்டுபோய்விட்டது. STF உம் நானும் ரெலிகொம் டவர்ல ஏறி நின்னு தண்ணி போனதுக்குப் பொறகுதான் வாறோம் என்றார். அவரின் நிலையைப் பார்த்தேன் இடுப்பு வரையுள்ள அவரது ஆடை யாவும் நனைந்திருந்தது. அதன் பின் தான் உணர்ந்து கொண்டேன் கடல் வந்திருக்கிறது என்பதனை. இது நடக்கும் போது நேரம் காலை 9.10 இருக்கும். எனக்கு இன்னமும் அந்தக் கடிகாரமும் அந்த நிகழ்வும் ஞாபகமிருக்கிறது.

அதன் பின் பாதை முழுவதும் சனநெரிசல். கையில் அகப்பட்ட பொருட்களுடனும் கைக் குழந்தைகளுடனும் என் சொந்தகள் எல்லாம்... பலர் எங்கு செல்கிறார்கள் என்று தெரியாமல் சென்று கொண்டிருந்தனர் என் குடும்பம் உள்ளடங்களாக கொஞ்சத் தொகையினர் பள்ளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். நானும் சென்றேன்.

எல்லோரையும் பள்ளிவாசலுக்குள் வருமாறும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் சொல்லிக் கொண்டிந்தார்கள் மௌலவிகள். வெளி நிகழ்வுகள் ஒன்றும் தெரியாது. சொற்ப நிமிடங்களுக்கு ஒருமுறை கடல் இந்தச் சந்தி அருகில் வந்து விட்டது என்றும் உல்லை முழுவதும் கடலில் மூழ்கியிருப்பதாகவும் மையித்துகள் தண்ணீரில் மிதப்பதாகவும் பெரியவர்கள் கூறிக் கொள்வது மட்டும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

இவர்களின் பேச்சுக்கள் யாவையும் கேட்டு என்னுள் நான் ஒரு காட்சியை உருவாக்கிக் கொண்டேன் அந்தக் காட்சியும் இன்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது. 

என் பெற்றோர் மிகுந்த கவலையில் காரணம் என் அண்ணன்கள் எல்லோரும் வெளியூர்களில் இருந்திருந்தார்கள். இவர்களின் நிலை என்னவாகியிருக்குமோ  என்ற சிந்தனையில் அவர்கள் . தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியாத நிலை.

நேரம் 11.00 மணியிருக்கும் நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாகவே பேச்சுக்கள் இரண்டு மூன்று தடவைகள் கடல் வந்து சென்றதாகவும் இன்னும் எத்தனை தடவை வரப் போகிறதோ என்று தெரியாததால் எல்லோரையும் பள்ளிவாசல்களிலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்கள் எங்க ஏரியா பெரிசுகள் ஆனாலும் நான் வீட்டுக்குச் சென்று பார்த்து வருவதாகக் கூறிவிட்டு நண்பர்கள் சிலருடன் கடற்கரை நோக்கிச் சென்றேன்.

வீடுகள், மதில்கள், கிணறுகள் என எல்லாமுமே பிடுங்கப்பட்டு அங்குமிங்குமாய் கிடந்தன. கடலருகே சென்றேன் கடல் எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல் வழமை போன்றே காணப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு ஏரியாவையும் சென்று பார்வையிட்டேன். சில இடங்களில் பாதிப்பு அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் இருந்தது. வீடுகள் ஆள் நடமாற்றமற்றுக் கிடந்தன. வயலுக்குச் சென்றவர்கள் வருவதற்குப் பாதைகள் இல்லை இரண்டு பாலங்கள் நொருங்கிவிட்டன.
 பாதிக்கப்பட்ட பாலங்களில் ஒன்று
களப்பருகே சென்றேன். அங்கு படையினரும் இன்னும் சில ஊர்மக்களுமாய் சேர்ந்து களப்பின் மறு முனையில் இருப்பவர்களை படகுகளில் ஏற்றிவரத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு படகினில் ஏறி மற்றைய கரைக்குச் சென்றேன். அங்கே பாதிப்பு மிக மிக அதிகம் வீடுகள் முற்றாக பிடுங்கப்பட்டு வீடுகள் இருந்ததற்கான அடையாளமே இருக்கவில்லை. சில்லைறைக் காசுகளும் நூறு ரூபா போன்ற நோட்டுக்களும் கிடந்தன பணத்துக்கு அன்று பெறுமதியே இல்லாமல் இருந்தது. கடிகாரமொன்று 8.55 ஐக் காட்டியவாறு கிடந்தது. ஒரு திண்ணையில் நடுத்தர வயதுடைய ஒருவர் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்ததில் அது அவருடைய வீடு என்பது புரிந்தது.

நேரம் 1.00 மணியளவில் சந்தையை வந்தடைந்தேன். மீண்டும் கடல் வருவதாகக் கூறிக் கொண்டு வாகணங்கள் மிக வேகமாக செல்ல ஆரம்பித்தன. என்னடா இப்போதானே நாம அந்தப் பக்கமிருந்து வந்தோம் அதுக்குள்ள எப்பிடிடா என நண்பர்கள் நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டோம். பின் வேறு எங்கும்  செல்ல மனதின்றி வீடு வந்து சேர்ந்தேன். இப்போது பள்ளிவாசலில் யாருமில்லை எல்லோரும் வீடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

எங்க வீட்டு முற்றத்து மாமரத்தின் கீழ் பல குடும்பங்கள், சிறுவர்கள் பசியினை அம்மாக்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தனர். என் அம்மா தயாரித்து வைத்திருந்த காலைச் சாப்பாட்டையும் இன்னும் வீட்டிலிருந்த பிஸ்கட்டுக்களையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். கௌரவம் பட்டம் பதவி எதுவும் பாராமல் எல்லோரும் அன்று ஒன்றாகவும் ஒரே உணவுடனும்...

இரவுப் பொழுது நெருங்கிவிட்டது மின்சாரமில்லாததால் அனைத்து பிரதேசமும் முழுமதியில்  ஜொலித்துக் கொண்டிருந்தது. இரவில் பெண்களை வீடுகளில் வைத்துக் கொண்டிருப்பது சிரமம் என்பதால் என் குடும்பத்துடன் சேர்த்து இன்னும் சில பேர் மீண்டும் பள்ளிவாசலுக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க ஒரு சில ஆண்களும் சென்றுவிட்டார்கள். இம்முறை காலையில் இருந்ததை விட குறைவானவர்களே பள்ளிவாசலில் இருந்தார்கள். ஏனையவர்கள் எல்லோரும் உயர் பிரதேசங்களான வெளியூர்களிற்கு தங்களிடமிருந்த வாகணங்களில் சென்றுவிட்டார்கள்.

கடலை அண்டிய பிரதேசத்தில் உள்ள வீடுகளில் யாரும் இல்லை என்பதால் அங்கே திருடர்களின் நடமாட்டம் இருப்பதாக பேச்சு எழுந்தது. மொத்த ஏரியாவுக்கும் பாதுகாப்புக்கு நாங்கள் கொஞ்சப் பேர் இருந்தோம். குளிரைப் போக்க நெருப்பு மூட்டி அதில் உடம்பைக் சூடுபடுத்திக் கொண்டும், எதிர் வீட்டு மாமாவின் பெட்டரியில் இயங்கும் ரேடியோவுடனும் எங்கள் இராப் பொழுது ஆரம்பமானது. இடையில் பசி எழ அருகில் உள்ள கடை முதலாளியைத் தேடிச் சென்று பிஸ்கட்டுகளும் எங்களுடன் இருந்த பெரிசுகளுக்கு சிகரட்டும் வாங்கிவந்து கொடுத்தோம்.

நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைக் கடந்து அடிக்கடி மிக சொற்பத் தொகையினர் பிணங்களைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் யார் யாரெல்லாம் இறந்திருக்கிறார்கள் என்ற தகவல்களையும் திரட்டிக் கொண்டோம். சிறிசுகள் பெரிசுகள் நல்லவர்கள் கெட்டவர்கள் என கொஞ்சப் பேரை கடல் காவுகொண்டிருந்தது.

வெளியூர் தொடர்புகள் எதுவுமில்லாத எங்களுக்கு சக்தி எப் எம் மட்டுமே துணை புரிந்தது. பாடல்களுக்கு மத்தியில் அடிக்கடி சேதவிபரமும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். காலை 6.00 மணியிலிருந்து பாடல் ஒலிபரப்புவதைத் தவிர்த்துவிட்டு சோகம் கலந்த ஒரு இசையினை மட்டுமே ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள் சக்தி எப் எம் நிருவாகிகள். 7.00 மணி செய்தியில் தான் முதன் முதலாக கேட்டேன் அந்தப் பெயரை சுனாமி ... ஆனாலும் சுனாமி என்ற பெயரில் எனது ஊரில் ஒரு ஹோட்டல் இருந்ததும் என் ஞாபகத்தில் வராமலில்லை.

சுனாமியின் பாதிப்பில் சுனாமி ஹோட்டல்
இரவு முழுவதும் விழித்திருந்ததால் காலையில் சிறிது நித்திரை கொள்வோம் என்றெண்ணி நித்திரை கொண்டேன். திடீரென முழக்கம் போன்ற சப்தம் கேட்டு இதயம் படபடக்க வெளியில் ஓடி வந்தேன். முற்றத்தில் எல்லோரும் அமர்ந்திருக்க வீட்டுக்கு மேலாக உலங்கு வாணுர்தி ஒன்று சென்று கொண்டிருந்தது. வீட்டுச் சிறுசுகள் யாவும் உயர்த்தி தலைகளைப் தாழ்த்தாமல் வாணுர்தியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின் நித்திரையில் இருக்கும் போது ஏதாவது சிறிய சப்தம் கேட்டாலும் திடீரென விழித்துக் கொள்வதும் இதயம் படபடப்பதும் வழக்கமாயிற்று. இன்றும் தொடர்கிறது.

அடுத்தடுத்த தினங்களில் வெளியூர்களுக்குச் சென்றவர்களும் ஊர் திரும்பினார்கள். வீடுகளை இழந்து பொது இடங்களில் இருப்போரின் பசி போக்க உரிமையாளர்களின் உரிமையின்றி ஆடு மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டன. சந்தையில் இருந்த சிங்கள தமிழ் சகோதர்களும் தங்கள் கடைகளைத் திறந்து எந்தவித எதிர்பார்ப்புமின்றி உணவுப்பண்டங்களும் அரிசி மூட்டைகளும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். பல கடைகள் உடைக்கப் பட்டும் பொருட்கள் எடுக்கப் பட்டிருந்தன.

காடுகளிலும் இடிபாடுகளுக்கும் மத்தியில் சிக்கியிருக்கும் பிணங்களை மீட்கும் பணியில் ஒரு சில இளைஞர்களும் ஊர்ப்பெரியவர்களும் ஈடுபட்டிருந்தார்கள். வெளிநாட்டுக் பிரஜைகள் படையினர்கள் என பிணங்கள் அடையாளம் காணப்பட்டன. பிண பூமியினை தூய்மைப் படுத்த தொடர்ந்து வந்த மூன்று நாட்களும் அடைமழை பொது இடங்களில் தங்கியிருந்தவர்களுக்கு மழைவெள்ளமும் அசௌகரியத்தைக் கொடுத்ததும் நினைவில் இருக்கிறது.

இது நடந்து 4 வருடங்களின் பின் வெளியூர் நண்பன் ஒருவனின் வீட்டில் இரவொன்றைக் கழிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது . அதிகாலையில் அவ்வூரிலிருந்து மக்கள் எல்லோரும் வேறு இடங்களுச் சென்று விட்டதாக காலையில் தகவலறிந்தேன் காரணம் வினவிய போது சுனாமி வருவதாக ஒரு தொலைபேசி அழைப்புக் கிடைத்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் உயரமாக இடம் நோக்கி நகர்ந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலை இன்றும் சில இடங்களில் தொடர்கிறது. கடல் தந்த வடுக்கள் இன்னும் மறக்க முடியாதவைகள். இந்த அனுபவத்தை விபரிக்க இவ்விடம் போதாது.அனுபவித்த பலரும் இதில் இருப்பீர்கள் என்று கருதுகிறேன். 

இனியும் வேண்டாம் இப்படியொரு பொழுது

32 கருத்துரைகள்

இப்படியொரு கொடுமை இனி நடக்கக்கூடாது..ஆனாலும் கடற்கரைவாசிகள் பயத்தில்தான் வாழ்கின்றனர்.இந்நாளில் உயிரை இழந்தவர்களுக்கு அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன்..

Reply

உண்மைதான் சிட்டு... டிஷம்பர் 26 வரும்போது கூடவே இந்த நினைவும் வந்துவிடுகிறது... அழகாக தொகுத்து எழுதியிருக்கிறீங்க .. படிக்க படிக்க நேரிலே அனுபவித்த பீலிங்...

Reply

இழப்புக்கள் ஈடுசெய்யமுடியாதவை.. வீடு, பணம் போகலாம்... ஆனால் எத்தனை உயிர்கள்.. குடும்பமாகப் போனால் ஓரளவு கவலையில்லை... பிரித்துப் பிரித்தல்லவா கொண்டுபோய்விட்டது சுனாமி...

Reply

இந்த கொடுமை இனி நிகழவேன்டாம்..

Reply

இனியும் வேண்டாம் இப்படியொரு பொழுது !!
த.ம. 2

Reply

மறக்க முடியவில்லை மீண்டுமா?

Reply

ரணமான நினைவுகள்! பதைக்கவைத்தது! பகிர்வுக்கு நன்றி!

Reply

இனியும் வேண்டாம் இப்படியொரு பொழுது

Reply

//கடல் தந்த வடுக்கள் இன்னும் மறக்க முடியாதவைகள். //
அவை மறையாது.

Reply

மாற்றவோ மறக்கவோ முடியாத மரண வலி மிகுந்த தடங்கள்....:(

Reply

நினைவுகளின் தடங்கலள் இன்னும் மறையவில்லை என்பதை உங்கள் எழுத்துகள் நிரூபிக்கின்றன. தென்னை மரத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் பயமிகு கண்கள் கொண்ட சிறுமியின் புகைப்படம் சொல்கிறது ஆயிரம் கதை.

Reply

நல்லதையே நினைப்போம்.. இறையருளால் நல்லதே நடக்கும் என நம்புவோம். அந்தச் சிறுமியின் புகைப்படத்திலிருந்து கண்களை அசைக்கமுடியவில்லை.

Reply

சுனாமி நேரடி அனுபவம் கேட்பதற்கே மலைப்பை உள்ளது... இயற்கை பொங்கினால் நாம் எல்லாம் தூசு, இருந்தும் நாம் தான் பெரியவன் என்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டுள்ளோம்

Reply

கடலோடு உறவ்கொண்டு வாழ்த மீனவர்கள் கூட கடலைக்கண்டு பயந்த நாள் அது,ஆழிப்பேரலை தன் கோரமுகம் காட்டிய நாளை மறக்கமுடியாது பாதிப்புக்குள்ளான மக்கள்.ஆனாலும் மறக்கத்தான் வேணும்,இல்லயென்றால் வாழ்க்கை ஓட்டம் தடைபட்டுப்போகும்,

Reply

அப்பப்பா! எவ்வளவு பயங்கரம்.இனி எப்போதும் அப்படி நடக்க கூடாது பிரார்த்திப்போம்.

Reply

உங்கள் முதல் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம் சார்..
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி :)

Reply

மிக்க நன்றி ..
இதுக்கெல்லாம் தேம்ஸ்ல போய் நின்னுடாதீங்கோ

Reply

உண்மைதான் .. சுனானியில் கணவனை இழந்தவள் இன்னமும் கணவனைத் தேடாமலும் மனைவியை இழந்தவன் புதிய மனைவியைத் தேடாமலும் விரக்தியில் இன்றும் இருப்பதைக் காண்கிறேன்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பூஸார்

Reply

நீண்ட நாட்களின் பின் உங்கள் வருகை கண்டது சந்தோஷம் சார்..
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கவிதாயினி

Reply

உண்மைதான் இன்றும் நினைவில் இருக்கிறது ஐயா
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

வருகை கண்டதில் சந்தோஷம்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

உண்மைதான் குட்டரே
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி :)

Reply

ம்ம்ம்ம்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ தொடர்ச்சியான வருகை சந்தோஷமளிக்கிறது

Reply

உங்கள் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம்...
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி :)

Reply

உங்கள் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம்...
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி :)

Reply

எல்லாம் ஒரு ஆபத்து வரும் வரையில்தான் எழுத்தாளரே

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி :)

Reply

உங்கள் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம்...
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி :)

Reply

உங்கள் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம் ஐயா
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி :)

Reply

கலங்க வைத்த தினத்தை மீட்டிப்பார்க்கும்போதுகூட அதே வலிதான்.இப்போகூட அதே இயற்கை நம் மக்களை நிம்மதியாய் இருக்கவிடேல்லத்தானே !

Reply

Post a Comment