Looking For Anything Specific?

ads header

பதுமராகம் ஒரு பார்வை

பொதுவாக நாவல்களில் அதிகளவு நாட்டமில்லை, தமிழகம் ஓரளவுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும் எனது தேசத்து நாவல்களில் பதுமராகம் புதிதாக சுவைக்கும் நாவல், நாவல் கையில் கிடைத்த தினம் அட்டைப்படம், அதற்கடுத்ததாய் உள்ள நாவல் பற்றிய தகவல்கள் அடங்கிய இரண்டு பக்கங்களையுமே சுவைக்க முடிந்தது, அட்டைப்படத்தைப் பார்த்தவுடனேயே உள்ளே இருக்கும் சரக்கு எப்படியாய் இருக்கும் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிந்தது. பின்னர் இரண்டு நாட்களின் பிற்பாடு நாவலை சுவைக்க ஆரம்பித்தேன், பெரிதாக நாட்கள் தேவைப்படவில்லை, சுவைக்க ஆரம்பித்த தினத்திலேயே ருசி கண்டேன், அத்தினமே சுவைத்துத் தீர்த்தேன்.

நான் அறிந்த, அனுபவித்த வகையில் இலங்கையில் பெண்கள் இலக்கியத்தினுள் புரள்வது அரிது, அதிலும் இஸ்லாமிய பெண்கள் திருமணமாகும் வரையில் அல்லது ஏதாவது ஒரு பொறுப்பினை சுமக்கும் வரையில் தான் இலக்கியத்தோடு பயணித்திருக்கின்றார்கள்.  நிறைய பெண்கள் பத்திரிகைகளோடு மட்டும் தங்கள் இலக்கிய உறவினை மட்டுப்படுத்தியிருக்கிறார்கள், அவர்கள் மத்தியில் பதுமராகம் அதுவும் நாவல் வடிவில் வெளிவந்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியதொன்று, நூலாசிரியர் வாழும் சூழலே இப்படியான ஒரு நாவலை பிரசவிக்க காரணமாக இருந்திருக்க வேண்டும். இலங்கையில் நூலாக்கத்திற்கு பெருமளவில் காசைக் கரைக்கவேண்டி வேதனைமிகு நிலையும் உண்டென்பது கூடுதல் தகவல்.

நாவலின் உயிர் மிகவும் அவசியமானதொன்று, பொதுவாக கிழக்கு மண்ணைப் போர்த்தியிருக்கும், பெண்களைப் பெற்றவர்களைப் பீடித்திருக்கும் இதுவரை காலமும் யாராலும் குணப்படுத்த முடியாத  நோய்களான சீதனம், பெரிய வீடுகட்டி மாப்பிள்ளை எடுத்தல் போன்றவைகளை அலசிச் செல்கின்றது, கிழக்கு மண் இந் நோயின் விளைவுகள் பற்றி அடிக்கடி சிறுகதைள், குறும்படங்கள், கவிதைகள், பட்டிமன்றங்களில் விழிப்புணர்வு செய்துகொண்டேயிருக்கின்றது, அப்படியான ஒரு விழிப்புணர்வுகளில் ஒன்றுதான் பதுமராகமும்.

எனக்குப் பழக்கப்பட்ட மொழிநடையில் நகர்வதால் புரிந்துகொள்ள சிரமப்படவேண்டிய அவசியமிருக்கவில்லை, காதல் என்றாலே கஸ்டம்தான் ,  கிழக்கு மண்னின் காதல் ரொம்பவே கஸ்டம், அதிலும் கிழக்கு மண்ணில் அக்கா தங்கையுடன் பிறந்திருந்தால் அவனுக்கு காதல் எட்டாக்கனி. அப்படியாக அக்கா தங்கையுடன் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹரீஸ் அவனுடைய காதல் என நகர்கிறது நாவல் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு இப் பார்வையை நிறுத்திக்கொள்ள எனக்கு நாட்டமில்லை, இன்னும் கொஞ்சம் ஆழமாக அலச ஆசைகொள்கிறேன்.

நாவலின் உயிர் ஹரீஸ்- நூர்ஜஹான் காதலாக இருந்தாலும் அந்தக் காதலுக்குள்ளேயே கதையை நகர்த்திச் செல்லாமல் தாய்ப் பாசத்துக்கென தத்தளிக்கும் ஹஸ்னா எனும் குழந்தையில் ஆரம்பித்து, தனது அண்ணியின் சூழ்ச்சியினால் தன் ஆசைகளைத் தொலைத்து சாச்சாவிற்கு இரண்டாம் தாரமாகியிருக்கும் சாமிலாவின் சிரமங்கள், முதல் மனைவியை இழந்து தன் குழந்தை ஹஸ்னாவிற்காகவே வாழும் சாச்சா இரண்டாம் தாரத்தினால் அனுபவிக்கும் இன்னல்கள், தன் பிள்ளையை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க சிரமப்படும் உதுமான், தன் குடும்ப நலன் கருதி கட்டார் சென்றிருக்கும் ஹரீஸ், ஹரீஸின் உயிர்த் தோழன் முஜீப், ஹரீஸ் - நூர்ஜஹான் காதலுக்காக மூஜீப் எதிர்கொள்ளும் சங்கடங்கள், ஹரீஸிற்கு சாதகமாய் ஆறுதலாய் அமைந்த கட்டார் நண்பர்கள்,  ஹரீஸையே நினைத்து காலத்தை போக்கும் நூர்ஜஹான், இடியப்ப குமரி என பல பரப்புகளுக்குள் சென்று பல விடயங்களை அலசுகின்றது வெருமனே கிட்டத்தட்ட 200 பக்கங்களைக் கொண்ட பதுமராகம். 

சீனத்தும்மாவின் மூத்த மருமகன் றாசீக்கினால் ஹரீஸ் குடும்பத்துக்குக் கொடுக்கப்படும் தொல்லைகள் கிழக்கைப் பொருத்தவரைக்கும் நிஜம். இப்படியான மருமகன்களினால் இன்றும் பல பெண்களைப் பெற்ற பொற்றோர்கள் தன் பிள்ளைகளின் வீடுகளுக்குச் செல்லாமல் தங்களுக்கென தனித்துவமான  வசிப்பிடங்களை நாடுவதோடு தான் பெற்ற பிள்ளைகளோடு தொடர்பில்லாமலும் இருக்கின்றனர் இவ்விடத்தில் நாவலுக்கு உரத்துப் பேச சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம், அதே போல் கட்டாரில் சீதனம் பற்றிய பேச்சுக்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக்கியிருக்கலாம். நாவலால் சமூகத்துக்குச் சொல்லப்படும் செய்தியாக கட்டார் உரையாடல்களை நான் கருதுகின்றேன், ஆதலால் இன்னும் அழுத்தம் அவசியப்படுகின்றது. ஹரீஸ்- நூர்ஜஹான் காதல் ரொம்ப அழகு, ஒரு சில இடங்களில் அடுத்து இதுதான் நடக்கப் போகின்றது என்பதை இலகுவாக அறியமுடிந்தாலும் ஆசிரியரின் கதை நகர்தல் இன்னும் விருவிருப்பைத் தூண்டுகிறது.

இன்னும் கொஞ்சம் கறிவேப்பிலை, மிளகு, அஜினமோட், ரம்பை, குருமா சேர்த்திருந்தால் நல்லதொரு சினிமா ஏற்படுத்தும் பாதிப்பை என்னுள் உணர்ந்திருப்பேன்.

இது அவசர உலகு, வாசிப்பு குறைந்துவருகின்றது, திருக்குறள் போல சொற்ப வரிகளில் பல ஆழமான அர்த்தமுள்ள விடயங்ளைச் சொல்லக் கூடிய அளவுக்கு நவீன திருவள்ளுவர்கள் தோன்றியுள்ள இந்தக் காலப்பகுதியில் அதற்கு இசைவான வாசர்களும்  மலிந்து காணப்படுகின்றனர், இப்படியான சோர்ட் அண்ட் சுவீட் காலப்பகுதியில் நாவல்கள் பெரும் சாவால்களே, சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு சில தவறுகள் இருந்தும் அவைகளை இங்கு நான் வெளியிட விரும்பவில்லை, தனிப்பட்ட ரீதியில் நூலாசிரியரிடம் சொல்வது ஆரோக்கியமானது என்றே கருதுகின்றேன். பிழைகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யுமளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்பது கூடுதல் தகவல் :)



நூல் : பதுமராகம் - நாவல்
நூலாசிரியர் : இறக்காமம் பர்சானா றியாஸ்
தொடர்புகளுக்கு : farsana.ba@gmail.com
விலை - 700/-

Post a Comment

1 Comments

  1. தேடி இனித்தான் வாசிக்க வேண்டும் அறிமுகம் செய்தற்கு நன்றி சகோ!

    ReplyDelete