யாசித்தல்...

இது எனதெழுத்து
புரிந்துகொள்ள பலருக்கு
வருடங்கள் பலவாகலாம்
சிலருக்கு தாசாப்தங்களுமாகலாம்
இன்னும் சிலரோ முன்ஜென்மத்தில்
பழக்கப்பட்டிருப்பர்

எழுத்துக்கும் எனதான்மாவுக்கும்
தொப்புள் தொடர்பிருக்கின்றது
தடித்த எழுத்துக்களில்
சொல்லின், ஆன்மாவை உயிர்ப்பிக்க‌
எழுத்துக்களை நான் சுவைக்க வேண்டும்
எழுத்துகளை மட்டுமே...

சமயங்களில் எழுத்துகள்
எட்டாக்கனியாகின்றன எவ்வளவும்
முயற்சித்தும், ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்
இதோ இப்போது நான்
எழுதுவதைப் போன்று.... அப் பொழுதுகளில்
எனதான்மாவே என்னை பழிக்கும்,
கேவலமாய், நக்கலாய் எனை விளிக்கும்.

பின்னிரவு எழுத்துக்கள்
எப்போதுமே எனக்கு சாதகமானவை
அவ்வெழுத்துக்கள் வீரியம்,
காதல் நிறைந்தவை , வேசமிட தயங்குபவை

அவசரமாக வெகு அவசரமாக‌
எழுத்துக்களைச் சுவைக்க வேண்டிய நிர்ப்பந்தம்
இச் சமயம் சுயநலமில்லை, சுக நலமில்லாத‌
ஒரு ஆன்மாவுக்காக... என் சுவைத்தலின்
விரைவு அப் பிரிதான்மாவின் இருத்தல்.
இணைந்து ஓர் பின்னிரவும் அவசியப்படுகின்றது
என் பகல் பொழுதுகள் பின்னிரவுகளை
கொள்ளையிட்டுச் செல்கின்றன...!