என் அச்சங்கள்...!

ஒழிந்திருக்கும் என் அச்சங்களில் கலந்திருக்கிறது பெறுமதி மறந்த உனைப்பற்றிய நல விசாரணைகள், ஒரு நாள் உச்சபட்ச என் தைரியத்தை ஆயுதமாய் பாவிக்க நினைத்து, என் மீதான உன் புரிதல், அக்கறை, நேசிப்பைப் பற்றி உரையாடுகின்றேன், நீயோ அலட்சியப்படுத்தியவளாய் நடைபோடுகின்றாய், இன்னும் சொல்லப் போனால் நான் உன்னிடம் பேசும் போது உன் முகத்தைக் கூட தெளிவாகப் பார்க்கவில்லை, ஏதோ பின் இரவுக் கனவுகளில் தோன்றும் உருவமாய் அன்று நீ தோன்றியாய்
திடீரென ஏதோ என் மனதில் தோன்ற முன்னைய தினம் உன்னுடன் பேசியதை மீட்டுகிறேன், நான் பேசிய எதுவொன்றுக்கும் நீ பெறுமதியிட்டதாய் தோன்றவில்லை, ஆனால் நீ மிகவும் கெட்டிக்காரி, மரியாதை தெரிந்தவள், பிறரிடம் பிழையாக பாவணை செய்பவள் அல்ல என உன் தோழியிடம் வம்பு செய்த போது தெரிந்துகொண்டேன், உன்னிடம் பேசும் போது என் ஆசைத் தோழன் முத்தலிபும் என்னுடன் இருந்தான், நிச்சயமாக நாம் பேசிக் கொண்டது கனவுதான், ஏனெனில் என் ஆசைத் தோழன் ஆத்மா சாந்தியடைந்து அகவையொன்று அழிந்துவிட்டது...

கனவிலும் உன் முகம் காண ஏனிந்த அச்சமெனக்கு...

என் அச்சங்களை மறைப்பதற்கு முயற்சிக்கிறேன், சிரமப்படுகிறேன்.... என்னைப் போன்றவர்கள் யாராவது இருக்கிறார்களா என அகிலம் முழுவதும் அலசுகிறேன் ஆலோசனை கேட்க, எனக்கு யாராவது தெம்பான வார்த்தைகளைப் பொழிந்து உற்சாகம் தரமாட்டார்களா என ஏங்குகின்றேன், வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா, சிந்திக்கிறேன், எனக்கு என் அச்சம் தொலைக்க வேண்டும், உன் முகத்தை ஒரு கனமாவது நான் நேருக்கு நேர் பார்க்க வேண்டும், மூன்றாவது என்ன, நான்காவது, ஐந்தாவது உலக யுத்தங்களை நடத்தியாவது உனை நான் காண வேண்டும், உனைப் பிடித்திருக்கிறது என்ற  வார்த்தையை உதிர்க்க வேண்டும்,

எனக்கு நம்பிக்கையிருக்கிறது என்றாவது ஓர் நாள் என் அச்சம் தொலைந்துவிடும், அன்று என்னுடன் நட்பாகுவர் சிலர், அவர்கள் தான் என் நம்பிக்கைக்குரிய நட்புகளாகவும் பின் நாட்களில் மின்னுவார்கள், ஏனெனில் இன்று எனைப் பற்றி, என் குறைகள், என் பலவீனங்களை அறிந்து எனைக் கேலி, கிண்டல், செய்பவர்களும் வார்த்தைகளால் எனை அதிகம் காயப்படுத்தியவர்களும் அவர்களே.... எனைப்பார்த்து அவர்கள் நகைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைத்துக் கொள்வேன் முத்தலிப் இல்லாத குறையை நீங்கள் தான் நிறப்பிவைப்பீர்கள் என, முத்தலிப் என் மூச்சாக இருந்தான், ஆரம்பத்தில் முத்தலிபும் எனை கிண்டல் செய்தவன், பிழையாக வழி நடத்தியவன்தான், பின் நாட்களில் எப்படியவன் என்னுள் நுழைந்தான், அவனுக்கு நான் எப்படி உயிர்த் தோழனானேன் என்பதையெல்லாம் நினைத்தால்  நீண்டதொரு வறட்சியின் பின் பொழிந்த மழைக்கு வானத்தை எட்டிப்பார்க்கும் பச்சைப் புற்களாகிவிடுகின்றது மனசு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நிறுத்திக் கொள்கிறேன் முத்தலிப் புராணத்தை இன்னும் அவனைப் பற்றி சொல்லிச் சென்றால் நாளைக்கு அழுவதற்கு கண்களில் நீர் இருக்குமோ தெரியவில்லை....

என் அச்சத்தை மறைப்பதற்கு பெரிதும் முயற்சிக்கிறேன், நாய்கள் எப்பவுமே எனக்கு அச்சத்தையூட்டுபவைகள், பகல் வேளைகளிலும் நாய்கள் நடமாடும் பகுதிகளுக்குச் செல்வதில்லை, அச்சத்தைப் போக்க எடுத்த விசித்திரமான முயற்சிகளிலொன்று இராப் பொழுதுகளில் தன்னந்தனியாக நாய்கள் நடமாடும் பகுதிகளில் உலா வருவது, விசித்திர முயற்சியின் உச்சமெதுவென்றால் இரவில் உலா வரும்போது கைகளில் கற்கள், தடிகள் போன்ற பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் வைத்துக்கொள்வதில்லை , ஒரு முறை உலா செல்லும் போது வேற்றுக் கிரக  ஜீவன் ஒன்றுடன் சண்டையிடவேண்டியேற்பட்டது அது எனக்குள் புது உற்சாகத்தையும் ஏற்படுத்தியது வேற்றுக்கிரக ஜீவன் என் பால்யகால வில்லன் சலீமின் தோற்றத்தில் இருந்தது தான் என் உற்சாகத்துக்குக் காரணம். பால்யத்தில் பரிசாகக் கிடைத்த ஏதோவொன்றைப் பங்கிட்டுக் கொள்வதில் தளிர்விட்ட பகையது, இன்றும் தொடர்கிறது, சலீமின் பலம், பலயீனம் நான் அறிந்ததே அவனை முகம்கவிழச் செய்வது அவ்வளவு சிரமமல்ல, ஆனால் அவன் என்னை ஜென்ம விரோதியாகக் கருதி எனை எதிர்ப்பதற்கென்றே ஒரு கூட்டத்தை தன்னுடன் வைத்திருக்கின்றான் அவர்களை நினைத்தால் தான் பேதியாகின்றது......

என்னதான் ஆபத்து நிறைந்த செயல்களில் ஈடுபட்டு என்னை பன்படுத்தினாலும் அவள் முன் அவ் ஆபத்துக்களெல்லாம் சிதரிவிடுகின்றன, அவள் முகத்தைப் பார்ப்பதற்கே திரானியற்றுப் போகின்றேன், எனக்குள் வளர்த்துக் கொண்ட தன்னம்பிக்கைகள் செயலிழந்து தைரியம் கொண்டவன் போன்று பாசாங்கு செய்கின்றேன், என் முழு கவனத்தையும் ஓர் நிலைப்படுத்துகின்றேன், வழமையாக அவள் வரும் வழியில் காத்திருந்து எப்படியாவது அவளை எதிர்கொள்ள வேண்டுமென்று தீர்மானமெடுத்துவிட்டது மனது, இனி தேகம் தாயாராவதுதான் மிகுதி, வீட்டிலிருந்து ஆடையகம், ஆடையகமிருந்து வீடு இந்த இரண்டு சந்தர்ப்பங்கள் தான் உண்டு அவள் பார்வை என் மேல் விழுவதற்கும் என் பார்வை அவள் மேல் படர்வதற்கும், அவள் பயணிக்கும் பாதையோ நிழலறியாது, பாலைவனத்தில் தெரியும் பச்சை மரமாய் தெருவோரத்தில் அமைந்திருக்கும் பெரியதொரு மாமர நிழல் மாத்திரமே பேசிக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை தரக்கூடியது, மழை கண்டு பல அகவைகள் கடந்துவிட்ட எனதூரில் மழை கொடுக்கும் இன்பத்தின் சிறுபகுதியைத் தரக்கூடியது என ஒரு காலத்தில் பேசப்பட்டது இந்த மாமரம், தொடர்ச்சியான சுக்கிரனின் சூட்டினால் இலைகள் தளர்ந்து ஒரே சமயத்தில் நூறுபேருக்கு நிழல் கொடுத்த மரம் தற்போது போசாக்கின்மை காரணமாக இருபது பேருக்கு நிழல் கொடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, ஆனாலும் அப்பாதையை பயன்படுத்துபவர்கள் மாமர நிழலை சுவைக்க, சுவாசிக்கத் தவறுவதில்லை அவளும் தவறுவதில்லை.

நல்ல இருக்குடா, பார்க்கலாம், ஹீரோ புதுசுதான் ஆனா அட்டகாசமான நடிப்புடா மச்சான் எனக் கூறி நண்பனால் சிபாரிசு செய்யப்பட்ட ஏதோ ஒரு புதிதாய் வெளிவந்த தமிழ் சினிமாவில் இராப் பொழுதைக் கழித்ததில் என்னவளின் காலை தரிசனத்தை இழந்துவிட்டேன், வேலை முடிந்து வரும்வரையில் மாமர நிழலில்தான் நேரத்தைப் போக்க வேண்டும், நேரம் போக்குவது சிரமமல்ல, மாமரத்தையொட்டியிருக்கும் அகன்ற பாழடைந்த பொதுக்கிணற்றுக் கட்டில் குந்திக்கொண்டு எதையாவது சிந்தித்தவாரே கொண்டக் கடலை சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது, இந்த உப்புச் சப்பில்லா சிந்தனை, கொண்டக் கடலை சாப்பிடுதல், இரண்டும் என் பிரியங்களைச் சேரும், வீட்டிலிருக்க பிடிக்காவிட்டால் முத்தலிபின் வீட்டுக்குச் செல்வேன் அல்லது இந்தக் கிணற்றுக் கட்டை கொண்டக் கடலையுடன் தரிசிப்பேன் இதுதான்  முத்தலிப் உயிருடன் இருக்கும் வரை வழமை, முத்தலிபின் இழப்பின் பின் கிணற்றுக் கட்டையே வாடிக்கையாக்கிவிட்டேன். இந்தக் கிணற்றடியில் வைத்துத்தான் தளிர் விட்டது அவளின் மீதான என் பார்வைகள்...

வாழ்வின் அந்திம காலத்திலிருக்கும் அந்த மாரமத்தில் வருடத்திற்கு ஒரு முறை சில காய்கள் கிடைக்கும், கல்லடி படுவதை கடவுளின் வரமாகக் கொண்டவைகள்தான் தெருவோர மரங்கள், இந்த மரமும் மனிதப் பிஞ்சுகளின் கல்லடிக்குத் தன் பிஞ்சுகளையும் இழந்துகொண்டே போகின்றது, அப்படி சில மனிதப் பிஞ்சுகளின் கல்லடியில் கிடைத்த சில மாம்பிஞ்சுகளை, அச் பிஞ்சுச் சிறார்களை மிரட்டி அவள் கொள்ளையிட்டுச் செல்லும் போதுதான் முதன் முதலில் அவளைப் பார்தேன், ஆஹா, ஓஹோ, போட்டுச் சொல்லுமளவிற்கு அழகில்லை அவள், கருப்பழகி எனைக் கவர்ந்த அழகி, கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கனும்மென்பார்கள், கலையாக அவள் தெரிந்தால் எனக்கு,

என் நாடி, நரம்பு, ஹோர்மோன்கள்.... எல்லாம் துரிதமாய்ச் செயல்பட்டு அவள் பற்றிய தகவல்களைத் திரட்டின, என் வீட்டிலிருந்து ஒரு நான்கு தெரு தொலைதூரத்தில் தான் அவள் வீடு இருக்கிறது, அவள் வீடென்றால் சொந்தவீடில்லை, வாடகை வீடுதான், வெளியூரிலிருந்து இங்கு பிழைப்புக்காக வந்திருக்கிறார்கள், அவளும் அவள் ஆசை அம்மாவும் தான் வீட்டில், அனைத்துத் தகவல்களும் அவள் தோழி, ஒரு வகையில் என் தூரத்துச் சொந்தமாயிருந்து, என்னவளுக்காய் நெருங்கிய சொந்தமாக்கிக் கொண்ட மரியமிடமிருந்து பெற்றுக்கொண்டவைகள்.

நானும் முத்தலிபும் பலமுறை அவளிடம் பேச முயற்சித்திருக்கிறோம், ஏனோ தெரியவில்லை சந்தர்ப்பங்கள் எதுவும் சரியாக அமையவில்லை, சந்தர்ப்பம் என்று சொல்வதை விட என் அச்சங்கள் என்னை அனுமதிக்கவில்லை என்றே சொல்லலாம், பெண் நட்புகள், முன்னாள் காதலியின் வாசணைகளை இதுவரை நுகராததால், இது புது அனுபவமாக இருந்தது, எனக்கும் முத்தலிபுக்கு இடையேயான நெருங்கிய நேசத்தில் இடைவெளி எழ சந்தர்ப்பமிருந்தால் அதற்கு என் அச்சங்களே காரணமாய் அமையும், அந்தளவுக்கு என் அச்சங்களோடு முரண்படுவான் முத்தலிப்.

பெண்கள்  கூட்டமொன்று என் திசை நோக்கி வந்துகொண்டிருந்தது, வழமையில் கொஞ்சம் பெரிதாக, இன்னும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் ஆடையகப் பெண்கள் கூட்டம் வெளியேரும், இன்று ஒரு மணி நேரம் முன்னாடி பெண்கள் கூட்டம் ? யாரும் வெளியூர் திருமணம், வைத்தியசாலை சென்றிருப்பார்கள் அவர்களாக இருக்குமென்றெண்ணினேன், ஆனால் கூட்டம் எனை நெருங்க அது ஆடையகத்தில் வேலை செய்யும் ஒரு சில பெண்கள் என அடையாளம் காண முடிந்தது, அக் கூட்டத்தினுள் என்னவளும், மரியமும் இருந்தனர். இது என்ன சோதனை இன்னும் ஒரு மணி நேரமிருக்கிறது இன்னும் கொஞ்சம் தயார் படுத்திக்கொள்ளலாம் என்றிருந்தேன் அதற்குள் ??? எல்லாம் அவன் செயல் என் அச்சத்திற்கு அவன் புறமிருந்து வந்திருக்கும் சவால், எப்படியோ இன்று அவளிடம் பேசிவது என்ற தீர்மானத்திலிருந்து மனசு சற்றும் பிசகாமல் இருந்தது,

கூட்டம் மாமரத்தை நெருங்கிவிட்டது, நானும் கிணற்றடியிலிருந்து சன்று நகர்ந்து மாமரத்தை அண்டிவிட்டேன், வழமைக்கு மாற்றமாக என்னவள் மரநிழலை சுவைக்க மறுத்து மரத்தையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றாள், என்ன இது இன்று எல்லாமுமே மாற்றமாக இருக்கிறது, சில வேளை என்னவளுக்கு சுகயீனமாக இருக்குமோ ? எனைத் தாண்டிச் செல்லும் மரியமை அழைத்து என்னவளுடன் பேச வேண்டுமென்றேன், மரியமுக்கு என்னவள் மீதான என் பிரியம் ஏற்கனவே தெரிந்ததே அதானால் பிரச்சனைகள் எதுவுக்கும் விதையிடாமல் என்னவளிடம் சென்று விடயத்தை எத்திவைக்கிறாள், மரியமுடன் பேசிக்கொண்டே நடந்தவள் நடை வேகத்தை சற்றுத் தளர்த்துவதை ஒரு இருபதடி தூரத்திற்குப் பின்னால் நின்று அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நடையின் வேகம் இன்னும் தளர்ந்து ஏனைய  பெண்கள் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல என்னவளும்,மரியமும் ஓரிடத்தில் நின்று விடுகின்றனர்,

இதுதான் சந்தர்ப்பம் என்னவள் எனக்கென சில நிமிடங்களை ஒதுக்கிவிட்டாள் என நினைத்தவனாக, முப்பதடி தூரத்தில் நிற்கும் அவளிடன் பேசுவதற்கு கால்கள் நகர்ந்துகொண்டிருக்க மனசு மூவாயிரம் மடங்கு வேகத்தில் படபடக்கின்றது, என்னுள் ஏற்பட்ட படபடப்புகள், அச்சங்கள் அனைத்தையும் ஒரு ஓரமாய் வைத்துவிட்டு என்னவளை அண்மித்து, சென்ற வேகத்திலேயே உன்னைப் பிடித்திருக்கிறது என்றேன், என்னவளிடமிருந்து எந்தவித எதிர்ப்போ, முகச்சுழிப்போ எழவில்லை, உதட்டிலிடுந்து எழுந்த சிறு புன்னகையைத் தவிர, புன்னகைத்தவாரே முன்னோக்கி நகர்கிறாள் கூடவே மரியமும் நகர்கிறாள். எதுவும் சொல்லாமல் செல்கிறாளே என என் மண்டை கணமானது, சுகயீனமில்லாததால் அவளால் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாமல் செல்கிறாளா ? அல்லது மரியம் அவளிடம் என்னைப் பற்றி ஏலவே சொல்லியிருப்பாளா ? பிடிக்காமல் இருந்திருந்தால் முறைத்திருப்பாளே...! சில வேளை நாளை ஏதும் திட்டம் வைத்திருப்பாளோ ? தெரியவில்லை, அவள் நகர்கிறாள், அவளது புன்னகை என் மனதிலிருந்த சுமையொன்றை குறைத்த திருப்தியில் நான் அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்.

வலது தோற்பட்டையில் பலமான அடி விழ திடீரென திரும்பிப் பார்க்கிறேன் அருகில் காதர் வாய் நிறையப் பற்களுடன் இவன் இப்படித்தான் ரொம்ப நாளைக்குப் பிறகு யாரையாவது சந்திக்கக் கிடைத்தால் கைலாகு செய்வதை விட தோற்பட்டை, முதுகு போன்றவைகளில் அடித்து அதிர்ச்சி கொடுப்பதுதான் இவன் வேலை, முத்தலிபின் இழப்பின் பின் கொழும்புக்குச் சென்றவனை இன்றுதான் பார்க்கிறேன், எங்களுக்குள்ளான நல விசாரணைகள் தொடர்ந்தன.... நடையும் தொடர்ந்தது, என் மனமோ என்னவளின் பின்னாலேயே சென்றுவிட்டது. மனசு இன்னும் இலேசகவிருந்தது தெருவில் செல்லும் போது புதிதாக ஒரு உலகத்தினுள் செல்வது போன்றிருந்தது, கண்களில் தென்படுபவர்களெல்லாம் மனித ஜாதியில் மிக உயர்ந்த பண்பு, பாசம் கொண்டவர்களாகத் தெரிகிறார்கள், இவ்வளவு நாட்களாக ஏன் இவை எனக்குத் தென்படவில்லை, குழந்தைகளிடம் செல்ல விளையாட்டுக்களில் மனம் ஒன்றித்துப் போய்விடுகிறது ஏன் இவ்வளவு காலமும் நான் பித்துப் பிடித்தவனைப் போன்றிருந்தேன், என்னவள் என்னுள் ஆழமாகிவிட்டதனாலா ?

இஞ்சியுடன் தேநீர் பருகினால் நன்றாக இருக்குமென்றெண்ணி இருவரும் அருகில் தென்பட்ட கடையிலுள் நுழைந்தோம், கடை அமைந்திருந்த இடத்தில் கட்டடம் எதுவுமே இல்லாததுபோன்றே  இந்த நிமிடம் வரை உணர்ந்திருந்தேன், புதிதாக கட்டிடம் கட்டி யாரோ கடைதிறந்திருக்கிறார்கள் போல என நினைத்தவாற கடையிலுள் நுழைந்து  என்ன நானா கட புதுசாயிருக்குது எப்ப திறந்த என்று கேட்டேன், தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தவன் என்னை முறைத்துப் பார்க்கிறான், இப்போது தானே எண்ணியிருந்தேன் இவ்வுலகம்  அழகானது இவ்வளவு நாளும் ரசிக்க மறந்துவிட்டேன், இவன் ஏன் இப்படி முறைக்கிறான் என்றெண்ணியவனாக, அருகிலிருக்கும் சுவரைப் பார்க்கிறேன், லத்தீப் பாக்கி 135 ரூபா என சரியாக ஒரு வருடத்திற்கு முன்னரான திகதியொன்றையிட்டு கரியினால் எழுதப்பட்டிருந்தது...!

அருகிலிருக்கும் மேசை மீதிருந்த இன்றைய நாளிதழை, வாடைக் காற்றும் வாசிக்க ஆரம்பித்திருக்கின்றது போல, பக்கம் பக்கமாக புரட்டிக்கொண்டே செல்கின்றது காற்று, காற்று பத்திரைகையை வாசித்துவிட்டு தூக்கியெறிந்துவிடுமோ என்றெண்ணி ஓடிப்போய் பத்திரிகையைப் பிடிக்கிறேன், கையில் அகப்பட்ட பக்கதில் பெரிய எழுத்துகளில்  2020 இல் உலகம் அழியுமா என பெரியதொரு கேள்விக்குறியுடன் செய்தியொன்று காணப்பட்டது,

இன்று நள்ளிரவுடன் 2019 வருடம் கழிகிறது....

(கற்பனைகள்)