Looking For Anything Specific?

ads header

எழுத்தின் நிலை...

மிகவும் பழமைவாய்ந்த நாளொன்றில் தோற்றமே யறியா உறவொன்று கூறிய வார்த்தை என் ஆழ் மனதில் மிக ஆழத்தில் ஆதலால் நான் அவ் வார்த்தையாய் மாற நிகழ்காலத்திலும் முயற்சிக்கிறேன், எதிர்காலத்திலும் முயற்சித்துக் கொண்டேதானிருப்பேன் என்பதை  என் கூண்டுக்குள் நுழையும் வரை உணரவில்லை.

காரிருளை வானம் போர்த்திக் கொண்ட நாளொன்றில் பச்சை நிற தென்னங் கீற்றுகளிடையே நான் கண்ட காட்சியும் அவ் வார்த்தை போன்றே என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது. காட்சியை விபரித்தால் வார்த்தை நிஜமாகிடும் என்ற பேராசையில் காட்சியை விபரிக்க என் கூடு சேர்கிறேன். முதுரையால் செய்யப்பட்ட கதவுகளையும் யன்னல்களையும் கொண்டது என் கூடு, இறுதி தசாப்தத்தின் பின் என் கூண்டினுள் நுழைகிறேன். பல போராட்டங்களின் பின் என்னை அனுமதிக்கும் கதவு இன்று எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் திறந்துகொண்டது. 

சிலந்திகள் கலவரம் செய்த இடம் போன்று தோற்றமளித்தது என் கூடு. சென்றமுறை நான் இட்ட கட்டளையை துடைப்பம் செய்ததாகத் தெரியவில்லை. துடைப்பத்தை நோக்கினேன், தோல்கள் சுருங்கி வயிறு முதுகோடு ஒட்டியதாக ஒரு மூளையில் மயங்கிய நிலையில் கிடந்தது. என்றோ ஒரு நாள் அருந்திய ஃபண்டா போத்தல் என் மேசை மீது அங்குமிங்கும் அசைந்தவாறு காணப்பட்டது. அருகில் சென்றதும் அசைவை நிறுத்திய ஃபண்டா போத்தல் எனைப்பார்த்து ஒரு கேலிப் புன்னகை உதிர்த்துவிட்டு மீண்டும் அசையத்தொடங்கியதை என் கரம் கொண்டு நிறுத்தி மீதியாய்ருந்த ஃபண்டாவை துடைப்பத்தின் மீது தெளித்தேன்.

என் கூண்டினுள் என் கருத்துகள் , செயற்பாடுகளுக்கு ஆமா போடுவது துடைப்பம் மட்டும் தான். அதனால் எனது எல்லா எண்ணங்களையும் துடைப்பதிடம் மட்டுமே சொல்லிவந்தேன். எப்போதுமே என் சொல்லுக்கு மாற்றம் செய்யாததும் கூட துடைப்பம் மட்டும் தான்.  எத்தனை நூற்றாண்டுகள் இறந்தாலும் களைப்போ இறப்போ நெருங்க முடியாவண்ணம் மிகவும் சக்திவாய்ந்த பொருட்களைக் கொண்டுதான் துடைப்பத்தை செய்தேன். துடைப்பம் இப்படி உணர்விழந்து கிடப்பதற்குக் காரணம் அவைகளாகத் தான் இருக்க முடியும். நாசமாப் போனவைகள் என் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ அவைகளுக்கு,

 ஃபண்டா துளிகள் துடைப்பத்தின் மீது பட்டதும் நீண்ட கால வறட்சியை அனுபவித்த  நிலத்தில் திடீரெனப் பெய்த  மழையின் பின் வளரும் பசுமையான  புற்களைப் போல புத்துணர்ச்சி பெற்று துள்ளிக் குதித்து எழுந்து கொண்டது துடைப்பம். அருகில் நான் இருப்பதைக் கண்டதும் தலை குனிந்து கொண்டது. முன்னரைப் போன்று வன்முறை இல்லாமல் என் விசாரணை தொடங்கியது. விசாரணையில் அவைகளின் சூழ்ச்சியில் துடைப்பம் மாட்டிவிட்டது என்பதை தெரியமுடிந்தது.

அவைகள் பற்றி விசாரித்தேன். என் கூண்டினுள் விருந்தாளிகளுக்கென்று சில போதை பானங்கள் இருக்கும், அவைகளுக்கு அப் பானங்களை கொஞ்சமேனும் சுவைத்துப் பார்க்க வேண்டும், ஆனால் நான் அனுமதிப்பதில்லை. கூண்டிற்குள்ளான என் வருகை நீண்ட நாட்களானதால் பானத்தில் சிறிதளவை சுவைத்துவிட்டு, சுவையறிந்த பின் மிகுதியை தங்களுக்குள் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட முரண்பாட்டில் பானம் தரையில் சிதறியதால், வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த தரைக்கு போதை தலைக்கேறி தரை இறந்துவிட்டதாகவும் அதன் பின் அவைகள் ஒன்றையொன்று முகம் நோக்காமல் திரும்பிக் கொண்டதாகவும் துடைப்பம் கவலைப்பட்டது.

கதவு சிரமமின்றி திறந்துகொண்டபோதே நான் புரிந்துகொண்டிருக்க வேண்டும் அவைகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் கதவை திறக்கவிடாமல் என்னைச் சோர்வடையச் செய்திருக்கும். அவைகளை நோக்கினேன் நான் வந்தது கூட புரியாமல் முகங்களை திருப்பிக் கொண்டிருந்தன. சில வேளை என்னை ஒரு உயிராக கருதாமலும் இருக்கலாம் .

அவைகளைச் கண்டிக்குமளவு எனக்கு அவகாசம் தர மறுக்கிறது என் ஞாபக சக்தி. இன்னும் சிறிது நேரத்துக்குள் என் கனணிக்கு நான் கண்ட காட்சியை சொல்லியேயாகவேண்டும். கனணியை நோக்கினேன் பூஞ்சல் வெளிச்சம் கனணி இருக்கும் இடத்தை காட்டியது. அப் பூஞ்சல் வெளிச்சம் கூட கனணியில் இருந்துதான் வெளியாகிறது. கனணியின் திரைமுழுவதும் தூசுகளும் புளுதியும் நிறைந்திருந்தன. துடைப்பத்தை திரும்பிப் பார்த்தேன் மிக வேகமாக செயற்பட்டு கனணி திரையை சுத்தம் செய்ததில் துடைப்பம் பழைய வலுவான நிலையில் இருப்பதை ஊர்ஜீதப்படுத்திக் கொண்டேன்.

கனணி திரையில் என் பார்வையைக் குவித்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் நான் பாவித்த அதே ஃபயர் ஃபாக்ஸ் உலாவி  இறுதியாக ப்ளாக்கர் போஸ்ட் பகுதியில் நான் எடிட் செய்த போஸ்ட்டுடன் திறந்திருந்து. அருகில் பேஸ்புக், ப்ளாக்கர் ப்ரிவீவ், கூகுள் சேர்ச் டேப்புகளும் திறந்திருந்தன. இணைய இணைப்பும் செயற்பாட்டிலேயேயிருந்தது. போஸ்ட் பகுதிக்குச் சென்று புதிய போஸ்ட் ஒன்றினை எடிட் செய்வதற்காக தயாராகினேன். சிந்தனையை ஓர் நிலைப்படுத்தி கண்ட காட்சியை ஞாபகத்திற்குக் கொண்டுவந்தவனாக கீபோடில் தட்ட ஆரம்பித்தேன்.

கீபோடில் விரல்கள் பட்டதும் நுளம்புகள் விழித்துக் கொண்டன. எது நடந்தாலும் பரவாயில்லை என்று என் மனதில் உள்ளவைகளை கனணியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நுளம்புகளும் என்னை விட்டதாக தெரியவில்லை என் கால்கள், காதுகள் என புகுந்து விளையாடிக் கொண்டிருந்தன. நுளம்புகளின் சூழ்ச்சி போதாதென்றூ ஒரே ஒரு ஈ என் மூக்கின் உச்சி, முகம் , கைகள் என உணர்ச்சியற்றுப் போன இடங்களுக்கு உணர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தன.

எப்படியோ கண்ட காட்சியில் அரைவாசியை பதிவாக்கியாச்சு,இன்னும் அரைவாசி உள்ளது அதில் முடிவுப் பகுதியும் முக்கியமானது. இதற்கிடையில் மிகுதி அரைவாசிப் பகுதிக்குமானவைகள் முழுவதும் மறந்துவிட்டன. மிகுதிப் பகுதியை நிறைவு செய்து, முழுப் பதிவொன்றினை போஸ்ட் செய்து நீயும் ஒரு எழுத்தாளன் தான் என்கின்ற அவ் வார்த்தையை மெய்ப்பிப்பது  எப்படியென்று தீவிரமாக சிந்திக்கலானேன். நீண்ட காலத்திற்குப் பின் ஆழமாக சிந்திப்பதாலும் ஆழ் உறக்கம் கொண்டு வெகு நாட்களானதாலும் சிந்தனையில் ஆழ்ந்தவாறே  தூங்கியேவிட்டேன்.

யாரோ சிலரின் பேச்சுச் சப்தம்கேட்க கண்விழித்துக் கொண்டேன், எனைச் சுற்றி , நான் இருந்த கதிரை, என் கணனி என எல்லா இடமும் சிலந்தி வலை பிண்ணப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. வெகு காலம் உறங்கியுள்ளேன் என்பதை எனக்கெழுந்த பேய்ப் பசியுணர்த்தியது. என்ன நடந்திருக்கும் என்பதைச் சிந்திக்கலானேன். மெய் மறந்த உறக்கத்தில் எனது தலை எனக்கருலிருந்த சுவர் மீது பட்டதும் உடனே சுவர்கள் தங்கள் முகங்களைத் திருப்பி நான் வந்திருப்பதை உணர்ந்து என் தலையை வருடி எனக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரவைத்திருக்கின்றன. இப்படியே ஒவ்வொரு முறையும் அவைகள் செய்வதனால், எனக்குள் இருக்கும் கற்பனைகளும் காட்சிகளும் மறைந்துவிடுகின்றன.

இம்முறையும் என்னால் அவ் வார்த்தையை நிஜப்படுத்த முடியாமல் போய்விட்டது, அடுத்த காட்சிகளும் கற்பனைகளும் என்னுள் எழ இன்னும் எத்தனை வருடம் போகுமோ தெரியவில்லை. அடுத்த முறை மிகவும் விழிப்பாக செயற்பட வேண்டும் என்று மனதில் திடம் கொண்டபோது, போ... போ... நீயெல்லாம் எழுத்தாளனாகி என்ன கிழிக்கப் போற என்று ஏளனமாக கேட்கின்றது மூலையில் குவித்து வைத்த அழுக்குச் சட்டைகளின் ஒன்று.




Post a Comment

4 Comments

  1. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி விரைவில் இணைந்துகொள்கிறேன்

      Delete
  2. சரி சரி... எப்படியோ எதுவும் இருந்து விட்டு போகட்டும்... தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்தமைக்கு நன்றி சார்

      Delete