கொஞ்சம் கிறுக்கு ரொம்பவே இருக்கு ...

யாரும் எதிர்பாராத அசாதாரண நிகழ்வாக அச் சம்பவம் நடந்துவிடுகிறது. மிகச் சிறந்த ஜோசியக் காரர்களால் கூட துளியளவும் சிந்திக்க முடியாததாக அச் சம்பவம் அமைந்துவிட்டது. இனிமேல் போலி சாமியார்களுக்கு இப் பூமியில் வாழப்பிடிக்குமோ தெரியவில்லை.பல தசாப்தங்களின் பின் சாதனை ஒன்று பதியபடும் யாரோ ஒரு மாணவன் பரீட்சையில் பெற்ற குறைந்த மதிப்பெண்கள். தெருவோர மரநிழலில் சலூன் கடை வைத்திருந்தவர்கள் சொந்தமாக வாங்கிய நிலங்களில் குளிரூட்டிய அறைகளில் முடிவெட்டி முகச்சவரமும் செய்துவிடுவார்கள். ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தினதும் வருவாயீட்டும் பிரதான மூலமாக சலூன் தொழில் மாறிவிடும்.
 
அன்பின் அடையாளமான பரிசுப் பொருட்கள் வியாபாரத்தில் முதலீடு செய்தவர்கள் மூலைகளில் குந்திக்கொண்டு வயிற்றுப் பசியார வழிதேடி சிந்திப்பார்கள். காக்காய் கலரில் இருப்பவர்களை கத்தரினா கைFப் ரேஞ்சுக்கு கொண்டுபோய்விடும் அழகுசாதன நிலையங்கள் ஆள் அரவமற்றுக் கிடக்கும் ஆடையகங்களும் அமைதியாகக் கிடக்கும், போன் கடைகளும் ரீசார்ஜ் கடைகளும் ஆளாளுக்கு முகத்தை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருப்பார்கள், குடும்பங்களில் யாராலும் மாற்ற முடியாத வரலாற்று நிகழ்வாயிருந்த மாமியார் மருமகள் சண்டை இனிமேல் கிடையவே கிடையாது.

குழந்தைகள் பாவம், அழுமூஞ்சியாய் எப்போதுமே திரியும். வழமையில் சின்னதாய் ஒரு சண்டையின் பின் பாடசாலை செல்லும் குழந்தைகள் இனிமேல் உலக மகா யுத்தமொன்றை புரிந்துவிட்டுத்தான் பாடசாலைக்குப் போவார்கள். யுத்தம் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது இனிமேல் ISIS அமைப்பு யாதொரு பெண்னையும் சீண்டவில்லை, பாதுகாப்பாக அப் பெண்ணின் தாய் தேசம் அனுப்பி வைத்துள்ளோம் என்று அறிக்கையிட முடியாது. டெல்லி பேரூந்துகளில் இனிமேல் எந்தப் பெண்களும் பலாத்காரப்படுத்தப்பட மாட்டார்கள்.  நித்தியானந்தாவும், கடாபியும் பாக்கியம் பெற்றவர்களாக இனிவரும் காலங்களில் இளைஞர்களால் நோக்கப்படுவார்கள்.

சினிமாவையே நம்பியிருந்தவர்கள் சீனீ மூட்டை தூக்கும் நிலமைக்கு வந்துவிடுவார்கள், கவிஞர்கள் கருப்பொருள் தேடி செவ்வாய் கிரகம் சென்றும் வெரும்கையும் வீசிய கையுமாக திரும்பிவருவார்கள், தன் பத்தினித் தனத்தை நிரூபிக்க இனி எந்தவொரு பெண்ணும் எந்தவொரு நகரத்தையும் எரிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது, ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் அவசியம் எனும் கோரிக்கைகளும் பதாகைகளும் திடீரென குறைந்துவிடும், ஜேசுதாஸ் இனிமேல் கவலையில்லாமல் தன் எண்ணப்பாடுகளை வெளியிடலாம் எந்தவொரு எதிர்ப்பும் இராது, ஆண்களின் வாழ்வைச் சீரழிக்கும் மது, மாது , சூது எனும் வரிசையிலிருந்து மாது தூக்கப்பட்டுவிடும், மாது தூக்கப்பட்டால் ஏனைய இரண்டும் நீடிக்க வாய்ப்பில்லை, ஆகவே எல்லா ஆண்களும் தூய்மையானவர்களாக மாறிவிடுவார்கள்.

கிளியோபற்றா முதல் கிளியோசியக்காரன் பொன்டாட்டி வரை பெண்களையும் பெண்களின் அழகையும் பெண்டியம் கொம்பியூட்டரில் பாதுகாப்பாக வைப்பதிலேயே இளைஞர்களது பொழுது கழிந்துவிடும், அசினோ, நயனோ ஏன் தெருமுனையின் செருப்புத்தைக்கும் முனியம்மாவின் புகைப்படமும் அதிகூடிய தொகைக்கு ஏலம்விடப்படும், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஏன் பல வருடங்களுக்குப் பிறகு கைக்குட்டைகள் கழுவப்படலாம், சரவணன் மீனாட்சி, கஸ்தூரி, சிந்து பைரவி வடிவில் வரும் கண்ணீருக்கு இனி சக்தி கிடையாது அழுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்.

பேஸ்புக்கில் கமண்டுகளும் லைக்குகளும் திடீரென குறைந்துவிடும், ஃபேக் ஐடிகளில் இனி எவரும் வலம் வர மாட்டார்கள்,  யூடியூப் தன் பெயருடன் சேர்த்து ஆபாசமான வார்த்தையையோ அல்லது தன் லோகோவில் ஆபாசமான படமொன்றையோ இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கும் அந்த அளவிற்கு யூடியூபில் ஆபாசமான வீடியோக்களுக்கு ஹிட்ஸ் அள்ளிக் கிடைக்கும், இரவு முழுக்க போனிலும் , சமூக தளங்களிலும் கடலை போடுவது இல்லாமல் போனாலும் ஆண்கள் அலுவலகங்களுக்கு நேரத்தோடு செல்வது குறைந்துவிடும். ஆனாலும் எந்தவித டென்சனும் இல்லாமல் அலுவலகங்களில் ஆண்கள் தன் கடமையில் சிந்தனையைக் குவிப்பார்கள்.

ஐயோ சம்பவம் என்னவென்று சொல்லாமல் இப்படியே சொல்லிக் கொண்டு போன எப்பூடி என்று கல்லைத் தூக்காதீங்க, இவ்வளவு சொல்லியும் அச்சம்பவம் என்னவென்று கொஞ்சமேனும் அனுமானிக்க முடியாதவர்களாக என் நட்புகள் இருக்கமாட்டார்கள், இருந்தும் அச் சம்பவம் என்னவென்று சொல்லிவிடுகிறேன்.

உலகத்தில திடீரென பெண்களனைவரும் மறைக்கப்பட்டோ, அழிக்கப்பட்டோ விட்டார்கள். பெண்கள் இனி பலநூற்றாண்டுகளுக்கு உலகத்தில் தோன்ற வாய்ப்பில்லையென்று தலைசிறந்த அறிவியலாளர்கள், ஞானிகள், மதகுருக்கள் எல்லோரும் ஒருமித்துச் சொல்லிவிட்டார்கள். அதனால் தான் நான் மேலே சொன்ன மாற்றங்கள் ஏற்பட்டு உலகம் ஒரு சீரான நிலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் போது,

சுமார் பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு சம்பவம் நடக்கின்றது, உலகின் எங்கோ யாருமே கேள்விப்படாத எந்த வித தொழில் நுட்ப வசதிகளுமற்ற ஒரு சேரிப் பிரதசேத்தில் சாதாரண வனப்புக் கொண்ட ஒரு பெண் வசிப்பதாக உலகமக்கள் கேள்விப்படுறார்கள். இந் நிலையில் உலகின் நிலை ? அப் பெண்ணின் நிலை ?

கொஞ்சம் கிறுக்கு ரொம்பவே இருக்கு ...

எழுத்தின் நிலை...

மிகவும் பழமைவாய்ந்த நாளொன்றில் தோற்றமே யறியா உறவொன்று கூறிய வார்த்தை என் ஆழ் மனதில் மிக ஆழத்தில் ஆதலால் நான் அவ் வார்த்தையாய் மாற நிகழ்காலத்திலும் முயற்சிக்கிறேன், எதிர்காலத்திலும் முயற்சித்துக் கொண்டேதானிருப்பேன் என்பதை  என் கூண்டுக்குள் நுழையும் வரை உணரவில்லை.

காரிருளை வானம் போர்த்திக் கொண்ட நாளொன்றில் பச்சை நிற தென்னங் கீற்றுகளிடையே நான் கண்ட காட்சியும் அவ் வார்த்தை போன்றே என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது. காட்சியை விபரித்தால் வார்த்தை நிஜமாகிடும் என்ற பேராசையில் காட்சியை விபரிக்க என் கூடு சேர்கிறேன். முதுரையால் செய்யப்பட்ட கதவுகளையும் யன்னல்களையும் கொண்டது என் கூடு, இறுதி தசாப்தத்தின் பின் என் கூண்டினுள் நுழைகிறேன். பல போராட்டங்களின் பின் என்னை அனுமதிக்கும் கதவு இன்று எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் திறந்துகொண்டது. 

சிலந்திகள் கலவரம் செய்த இடம் போன்று தோற்றமளித்தது என் கூடு. சென்றமுறை நான் இட்ட கட்டளையை துடைப்பம் செய்ததாகத் தெரியவில்லை. துடைப்பத்தை நோக்கினேன், தோல்கள் சுருங்கி வயிறு முதுகோடு ஒட்டியதாக ஒரு மூளையில் மயங்கிய நிலையில் கிடந்தது. என்றோ ஒரு நாள் அருந்திய ஃபண்டா போத்தல் என் மேசை மீது அங்குமிங்கும் அசைந்தவாறு காணப்பட்டது. அருகில் சென்றதும் அசைவை நிறுத்திய ஃபண்டா போத்தல் எனைப்பார்த்து ஒரு கேலிப் புன்னகை உதிர்த்துவிட்டு மீண்டும் அசையத்தொடங்கியதை என் கரம் கொண்டு நிறுத்தி மீதியாய்ருந்த ஃபண்டாவை துடைப்பத்தின் மீது தெளித்தேன்.

என் கூண்டினுள் என் கருத்துகள் , செயற்பாடுகளுக்கு ஆமா போடுவது துடைப்பம் மட்டும் தான். அதனால் எனது எல்லா எண்ணங்களையும் துடைப்பதிடம் மட்டுமே சொல்லிவந்தேன். எப்போதுமே என் சொல்லுக்கு மாற்றம் செய்யாததும் கூட துடைப்பம் மட்டும் தான்.  எத்தனை நூற்றாண்டுகள் இறந்தாலும் களைப்போ இறப்போ நெருங்க முடியாவண்ணம் மிகவும் சக்திவாய்ந்த பொருட்களைக் கொண்டுதான் துடைப்பத்தை செய்தேன். துடைப்பம் இப்படி உணர்விழந்து கிடப்பதற்குக் காரணம் அவைகளாகத் தான் இருக்க முடியும். நாசமாப் போனவைகள் என் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ அவைகளுக்கு,

 ஃபண்டா துளிகள் துடைப்பத்தின் மீது பட்டதும் நீண்ட கால வறட்சியை அனுபவித்த  நிலத்தில் திடீரெனப் பெய்த  மழையின் பின் வளரும் பசுமையான  புற்களைப் போல புத்துணர்ச்சி பெற்று துள்ளிக் குதித்து எழுந்து கொண்டது துடைப்பம். அருகில் நான் இருப்பதைக் கண்டதும் தலை குனிந்து கொண்டது. முன்னரைப் போன்று வன்முறை இல்லாமல் என் விசாரணை தொடங்கியது. விசாரணையில் அவைகளின் சூழ்ச்சியில் துடைப்பம் மாட்டிவிட்டது என்பதை தெரியமுடிந்தது.

அவைகள் பற்றி விசாரித்தேன். என் கூண்டினுள் விருந்தாளிகளுக்கென்று சில போதை பானங்கள் இருக்கும், அவைகளுக்கு அப் பானங்களை கொஞ்சமேனும் சுவைத்துப் பார்க்க வேண்டும், ஆனால் நான் அனுமதிப்பதில்லை. கூண்டிற்குள்ளான என் வருகை நீண்ட நாட்களானதால் பானத்தில் சிறிதளவை சுவைத்துவிட்டு, சுவையறிந்த பின் மிகுதியை தங்களுக்குள் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட முரண்பாட்டில் பானம் தரையில் சிதறியதால், வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த தரைக்கு போதை தலைக்கேறி தரை இறந்துவிட்டதாகவும் அதன் பின் அவைகள் ஒன்றையொன்று முகம் நோக்காமல் திரும்பிக் கொண்டதாகவும் துடைப்பம் கவலைப்பட்டது.

கதவு சிரமமின்றி திறந்துகொண்டபோதே நான் புரிந்துகொண்டிருக்க வேண்டும் அவைகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் கதவை திறக்கவிடாமல் என்னைச் சோர்வடையச் செய்திருக்கும். அவைகளை நோக்கினேன் நான் வந்தது கூட புரியாமல் முகங்களை திருப்பிக் கொண்டிருந்தன. சில வேளை என்னை ஒரு உயிராக கருதாமலும் இருக்கலாம் .

அவைகளைச் கண்டிக்குமளவு எனக்கு அவகாசம் தர மறுக்கிறது என் ஞாபக சக்தி. இன்னும் சிறிது நேரத்துக்குள் என் கனணிக்கு நான் கண்ட காட்சியை சொல்லியேயாகவேண்டும். கனணியை நோக்கினேன் பூஞ்சல் வெளிச்சம் கனணி இருக்கும் இடத்தை காட்டியது. அப் பூஞ்சல் வெளிச்சம் கூட கனணியில் இருந்துதான் வெளியாகிறது. கனணியின் திரைமுழுவதும் தூசுகளும் புளுதியும் நிறைந்திருந்தன. துடைப்பத்தை திரும்பிப் பார்த்தேன் மிக வேகமாக செயற்பட்டு கனணி திரையை சுத்தம் செய்ததில் துடைப்பம் பழைய வலுவான நிலையில் இருப்பதை ஊர்ஜீதப்படுத்திக் கொண்டேன்.

கனணி திரையில் என் பார்வையைக் குவித்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் நான் பாவித்த அதே ஃபயர் ஃபாக்ஸ் உலாவி  இறுதியாக ப்ளாக்கர் போஸ்ட் பகுதியில் நான் எடிட் செய்த போஸ்ட்டுடன் திறந்திருந்து. அருகில் பேஸ்புக், ப்ளாக்கர் ப்ரிவீவ், கூகுள் சேர்ச் டேப்புகளும் திறந்திருந்தன. இணைய இணைப்பும் செயற்பாட்டிலேயேயிருந்தது. போஸ்ட் பகுதிக்குச் சென்று புதிய போஸ்ட் ஒன்றினை எடிட் செய்வதற்காக தயாராகினேன். சிந்தனையை ஓர் நிலைப்படுத்தி கண்ட காட்சியை ஞாபகத்திற்குக் கொண்டுவந்தவனாக கீபோடில் தட்ட ஆரம்பித்தேன்.

கீபோடில் விரல்கள் பட்டதும் நுளம்புகள் விழித்துக் கொண்டன. எது நடந்தாலும் பரவாயில்லை என்று என் மனதில் உள்ளவைகளை கனணியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நுளம்புகளும் என்னை விட்டதாக தெரியவில்லை என் கால்கள், காதுகள் என புகுந்து விளையாடிக் கொண்டிருந்தன. நுளம்புகளின் சூழ்ச்சி போதாதென்றூ ஒரே ஒரு ஈ என் மூக்கின் உச்சி, முகம் , கைகள் என உணர்ச்சியற்றுப் போன இடங்களுக்கு உணர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தன.

எப்படியோ கண்ட காட்சியில் அரைவாசியை பதிவாக்கியாச்சு,இன்னும் அரைவாசி உள்ளது அதில் முடிவுப் பகுதியும் முக்கியமானது. இதற்கிடையில் மிகுதி அரைவாசிப் பகுதிக்குமானவைகள் முழுவதும் மறந்துவிட்டன. மிகுதிப் பகுதியை நிறைவு செய்து, முழுப் பதிவொன்றினை போஸ்ட் செய்து நீயும் ஒரு எழுத்தாளன் தான் என்கின்ற அவ் வார்த்தையை மெய்ப்பிப்பது  எப்படியென்று தீவிரமாக சிந்திக்கலானேன். நீண்ட காலத்திற்குப் பின் ஆழமாக சிந்திப்பதாலும் ஆழ் உறக்கம் கொண்டு வெகு நாட்களானதாலும் சிந்தனையில் ஆழ்ந்தவாறே  தூங்கியேவிட்டேன்.

யாரோ சிலரின் பேச்சுச் சப்தம்கேட்க கண்விழித்துக் கொண்டேன், எனைச் சுற்றி , நான் இருந்த கதிரை, என் கணனி என எல்லா இடமும் சிலந்தி வலை பிண்ணப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. வெகு காலம் உறங்கியுள்ளேன் என்பதை எனக்கெழுந்த பேய்ப் பசியுணர்த்தியது. என்ன நடந்திருக்கும் என்பதைச் சிந்திக்கலானேன். மெய் மறந்த உறக்கத்தில் எனது தலை எனக்கருலிருந்த சுவர் மீது பட்டதும் உடனே சுவர்கள் தங்கள் முகங்களைத் திருப்பி நான் வந்திருப்பதை உணர்ந்து என் தலையை வருடி எனக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரவைத்திருக்கின்றன. இப்படியே ஒவ்வொரு முறையும் அவைகள் செய்வதனால், எனக்குள் இருக்கும் கற்பனைகளும் காட்சிகளும் மறைந்துவிடுகின்றன.

இம்முறையும் என்னால் அவ் வார்த்தையை நிஜப்படுத்த முடியாமல் போய்விட்டது, அடுத்த காட்சிகளும் கற்பனைகளும் என்னுள் எழ இன்னும் எத்தனை வருடம் போகுமோ தெரியவில்லை. அடுத்த முறை மிகவும் விழிப்பாக செயற்பட வேண்டும் என்று மனதில் திடம் கொண்டபோது, போ... போ... நீயெல்லாம் எழுத்தாளனாகி என்ன கிழிக்கப் போற என்று ஏளனமாக கேட்கின்றது மூலையில் குவித்து வைத்த அழுக்குச் சட்டைகளின் ஒன்று.
நட்பு

ச்சே...
வெளியாகும் போது வானத்த ஒரு முறை பார்த்திருந்தால் இப்படி கண்ட இடத்துல ஒதுங்கிற அவசியம் ஏற்பட்டிருக்காது என்று மனதுக்குள் தன்னைத்தானே நொந்துகொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடை வாசலில் ஒதுங்கிக் கொண்டார் சகாயம் வாத்தியார்.

சகாயம் வாத்தியார் மாங்குடி பிரதேசத்தில் மிகவும் மரியாதை மிக்கவர் எந்த பிரச்சனைகளுக்கும் செல்வதுமில்லை தன் தொழில் காலத்தில் யாரையும் காயப்படுத்துமளவு செயற்பட்டதுமில்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுப் போன புகைப்பிடித்தலைத் தவிர வேறு கெட்டபழக்கங்கள் எதுவுமில்லாதவர். முப்பது வருஷம் ஆசிரியர் தொழிலில் அனுபவம் உள்ள சகாயம் வாத்தியாருக்கு அந்த முப்பது வருஷத்திலும் தன் மூன்று பிள்ளைகளுக்கும் படிப்பு தவிர வேறு எதையும் செய்யமுடியவில்லை. 

மூத்தவன் சர்மிளனை அவரைப் போல வாத்தியாராக்கிவிட்டார், இளையவன் அனோஜன் இப்போதுதான் பல்கலைக்கழகத்தில் முன்றாவது வருடத்தில் இருக்கிறான், கடைசி கஸ்தூரி சகாயம் வாத்தியாரின் ஒரே ஒரு பெண் பிள்ளை. பார்ப்பதற்கு இப்போ இருக்கிற நயந்தாரா மாதிரி அழகானவள். அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவள். உயர்தரக் கல்வியை முடித்துவிட்டு மேலதிக படிப்புக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறாள். ஆண் பிள்ளைகள் இருவரும் வீட்டிலிருப்பது குறைவென்பதாலும் ஒரே ஒரு பெண் பிள்ளை கஸ்தூரி என்பதாலும் சகாயம் வாத்தியார் கஸ்தூரியிடமே அதிகமான நேரத்தையும் அன்பையும் பகிர்ந்து கொண்டார்.

மூன்று மாதத்திற்கு முதல் தான் ஆசிரியர் தொழிலிருந்து ஓய்வு பெற்ற சகாயம் வாத்தியார், தன் பென்சன் பணத்தைக் கொண்டும் மூத்தவன் சர்மிளன் பேரில் வங்கியில் ஒரு கடனெடுத்தும் கஸ்தூரிக்கு ஒரு வீட்டைக் கட்டி எப்படியாவது அவளது திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்றெண்ணி வங்கி அதிகாரியை சந்திக்க வெளியானவர்தான் அரை மணி நேரத்துக்கு முதல் இருட்டிவந்த கருமேகத்தை  கவனிக்க தவறிவிட்டார் அதனால் தான் இந்தப் புலம்பல்.

மழை மெல்ல மெல்ல அதிகரிக்க அதிகரிக்க, பெட்டிக்கடை கூறை வழியாக வந்த மழைநீர் தன் மேல் படாமல் இருக்க மேலும் கடையின் சுவரோடு ஒட்டிக் கொண்டார் வாத்தியார். இரண்டு நிமிட கணதியான மழையின் பின்னர் சின்னதாய் ஒரு இடைவெளியைத் தந்தது காலநிலை ஆனாலும் குடையில்லாமல் வெளியில் செல்ல முடியாதவாறு இலேசாக மழை பெய்து கொண்டிருந்தது. தலையில் ஒரு பொலித்தீன் பையைப் போட்டவாறு சற்றுத் தொலைவில் சிறுவனொருவன் விரைவாக வாத்தியார் நின்றிருக்கும் பெட்டிக்கடை நோக்கி வந்துகொண்டிருந்தான். சிறுவன் கடையை அண்மிக்கவும் மழை மீண்டும் கணமாக பொழியவும் சரியாக இருந்தது.

மழை விடும்வரை பூட்டப்பட்டிருந்த பெட்டிக்கடையருகே வாத்தியாரும் சிறுவனும் ஒதுங்கவேண்டியதாயிற்று. பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் மழை குறைவதாகத் தெரியவில்லை. மழை ஆரம்பித்ததிலிருந்து மழை எப்போது விடும், மழை விட்டு நாம் போகும் போது அதிகாரி வீட்டிலிருப்பாரா , லோன் எப்ப கிடைக்கும், பென்சன் பணம் சீக்கிரமாகக் கிடைக்குமா என்றெல்லாம் பலதையும் சிந்தித்துக் கொண்டிருந்த வாத்தியாரின் கவனம் திடீரென சிறுவனின் பக்கம் திரும்பியது.

ஒரு பதின்னான்கு அல்லது பதினைந்து வயதுதானிருக்கும் அச் சிறுவனுக்கு. வாத்தியாரை வெறித்துப் பார்ப்பதும் பின் தன் இடுப்பை தடவிக் கொள்வதுமாக செயற்பட்டதுதான் வாத்தியாருக்கு சிறுவன் மேல் கவனம் திரும்ப காரணமாகவிருந்தது.வயதுக்கும் உடலுக்கும் சற்றும் பொறுத்தமில்லாத ஆடையுடுத்தியிருந்தான். கழுத்திலும் ஒரு பெரிய சங்கிலி தொங்கியது வலது கைகயில் கைக்குட்டயைச் சுற்றிக் கொண்டும் ஒரு முரடனைப் போல காட்சியளித்தான். முகத்திலிருந்த அரும்பு மீசை சற்றுப் பெரிதாக இருந்தால் அசல் முரடன் தான்.

பார்ப்பத்ற்கு வெளியூர்க்காரன் போலத் தெரிந்தாலும் போனவருடம் தன்னிடம் ஒன்பதாவது படித்த ஒரு மாணவனின் முகத்தோற்றத்தை போலிருந்தது வாத்தியாருக்கு அவனின் முகம் . சிறுவன் மீண்டும் தன் இடுப்பை ஒரு முறை தடவி வாத்தியாரையும் பார்த்தான். வாத்தியாரின் பார்வை சிறுவனின் இடுப்பை நோக்கிச் செல்ல இடுப்பிலிருப்பது ஏதோ ஒரு ஆயுதம் போல தென்படவும் வாத்தியாருக்குப் பயம் தொற்றிக் கொண்டது. தன் சேவைக் காலத்தில் யார் யாருக்கெல்லாம் அடித்திருக்கிறோம், யாரோடெல்லாம் கோபமாக பேசியிருக்கிறோம் என்றெல்லாம் வாத்தியார் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். இடையில் இடைவிடாது பெய்யும் மழையையும் வைதுகொண்டார்.

எதுக்கும் இரண்டடி தள்ளி நிற்போம் என்றெண்ணி நகர்ந்தவரால் ஒரு அடிக்கும் குறைவான தூரம்தான் நகர முடிந்தது. இன்னும் ஒரு இன்ச் நகர்ந்தாலும் கொட்டோ கொட்டனக் கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்துவிடுவார். ஏற்கனவே இடையிடையே வீசிய குளிர்ந்த காற்றின் மூலம் ஏற்பட்ட மழைச்சாரலினால் வேட்டி நனைந்திருந்தது.சிறுவனை ஓரக்கண்ணால் பார்ப்பதும் பின் வானத்தின் பக்கம் பார்வையைச் செலுத்தி எப்போது மழை விடும் என்று பார்ப்பதுமாகவிருந்த வாத்தியாரின் கையடக்கத் தொலைபேசி சினுங்கியது. இடுப்பில் பத்திரமாக வைத்திருந்த கைபேசியை எடுத்து அழைப்பது யாரென்று பார்த்து அழைப்பு வீட்டிலிருந்து வருகிறதென அறிந்தவுடன் பேச்சுத் தொடுத்தார். மறுமுனையில் கஸ்தூரி, குடையெடுத்துச் செல்ல மறந்ததையும் இப்போது இருக்குமிடம், குடை எடுத்து வரவா என்றெல்லாம் கேட்ட கஸ்தூரியிடம் இல்லம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல மழை விட்டுடும் நான் வந்துடுவேன் என்று சொல்லித் அழைப்பைத் துண்டித்தவரின் கண்கள் மறுபடியும் சிறுவனைத் தேடின.

இப்போது சிறுவன் இடுப்பினில் எதுவுமில்லாமலிருக்க, கைகளில் ஏதோ ஒரு சிறிய பொட்டலமொன்றை சிறுவன் பிரித்துக் கொண்டிருப்பதை வாத்தியார் கண்டுவிட்டார். வாத்தியார் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல்  அவசர அவசரமாக பொட்டலத்தை பிரிப்பதிலேயே சிறுவன் குறியாக இருந்தான். பொட்டலம் சிறிதாக பிரிபட பொட்டலட்தினுள் இருப்பது என்னவென்று ஓரளவுக்குத் தெரிந்ததும் வாத்தியார் திகைத்துப் போய்விட்டார். ஒரு சின்னப் பயள் எப்படி இப்படியான பொருட்களையெல்லாம் கைகளில் வைத்துக் கொள்ள முடியும் , காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு, இவனுக்கு அப்பா அம்மா இல்லையா, இவனைப் இப் போக்கில் இன்னும் கொஞ்ச காலம் விட்டுவிட்டால் இவனின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடுமே என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்த வாத்தியாருக்கு சிறுவனின் அடுத்த நடவடிக்கை வியப்பையும் பயத்தையும் கொடுத்தது.   சிறுவன் தான் கைகளில் வைத்திருந்ததை வாத்தியாரின் கழுத்துக்கு நேரே நீட்டிவிட்டான். சிறுவனின் உயரத்திற்கு வாத்தியாரின் கழுத்தளவுக்குத்தான் நீட்ட முடிந்தது இல்லாவிட்டால் முகத்துக்கு நேராகவே நீட்டியிருப்பான்.

சிறுவனின் திடீரென்ற இச் செயற்பாடு வாத்தியாரை நிலைகுழையச் செய்ததுடன் கோபத்தையும் அதிகப்படுத்தியது. ஆனாலும் வெளியில் பெய்து கொண்டிருக்கும் கணத்த மழை, மழையுடன் கூடிய குளிர்ந்த காற்று யாருமற்ற தனிமையான பெட்டிக் கடைச் சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு தனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்தி சிறுவன் நீட்டியதை வாங்கிக் கொண்ட வாத்தியார் சிறுவனிடமே தீப்பெட்டியையும் வாங்கி சிறுவன் நீட்டிய சிகரடை பத்தவைத்துக் கொண்டு சிறுவன் பற்றி தெரிந்துகொள்ள அவனிடம் பேச்சுத் தொடுத்தார்.


---- நட்புக்கு வயது வித்தியாசம் கிடையாதாம், அப்படி வயது வித்தியாசம் கிடையாத நட்பு வேர்விடுவது புகைவிடுவதில் தானாமே ----