Looking For Anything Specific?

ads header

ஆதலால் நாம் ஏழைகள்...

உண்மையில் ஒரு நபரின் செல்வாக்கு அவரின் வழித்தோன்றல்கள் மற்றும் அவரிடமிருக்கும் சொத்து செல்வங்களின் நிலையைப் பொருத்துத்தான் அமையும் என்று சொல்வதில் தப்பில்லை என்றே கருதுகின்றேன். தனி நபரை மட்டுமல்லாது தேசத்தையும் ஏழை செல்வந்தன் என்று வகைப்படுத்தும் காலத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வறுமையால் தற்கொலை செய்து கொண்டவர்களும் , தன் கௌரவத்தை பாராமல் தன்னுடைய படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததனால் குடும்ப சுமை போக்க ஹோட்டல்களில் தினக் கூலிக்கு வேலை செய்யும் இளம் பருவத்தினரும், அக்கா, தங்கைகளின் திருமணம் மட்டுமல்லாது இன்னும் கொஞ்சம் சொத்திருந்தால் வாழ்க்கை நன்றாக அமையும் என்றெண்ணி அயல் தேசங்களில் வெயில் பனி பாராது உழைக்கும் ஒவ்வொரு தம்பியும் அண்ணனும் சான்றாக இருக்கின்றார்கள் இந்த உலகு சொத்து செல்வங்களில் தான் தங்கியிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக.

தான் உழைத்த பணத்தைக் கொண்டு கடல்கடந்து சுற்றுலாச் செல்பவர்கள் கூட தாம் சுற்றுலாவைப் போக்கும் இடங்களில் பணம் திரட்ட ஏதும் வழியிருக்கின்றதா என்று நோட்டமிடுகின்றனர். பணம் தான் இங்கு அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துகொண்டிருக்கின்றது. இரவு - பகல், வெயில் - மழை,குளிர் பாராது  உழைக்கும் பணத்தில் நாம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். நான் இங்கு சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன். நாம் இன்னும் பணக்காரர்களாகாததற்கு ம்ம்ம்ம்ம் நாம் இன்னும் ஏழைகளாக இருப்பதற்கு அவைகளும் காரணமாக இருக்கலாம்.

மேலதிக செலவுகள்

பண்டிகைக்கால செலவுகள், திடீர் சுகயீனம் காரணமாக ஏற்படும் செலவுகள் போன்றவற்றை இங்கு நான் மேலதிக செலவுகளாக சொல்லவில்லை. ஏனெனில் ஒவ்வொரு குடும்பத்திலும் இவற்றுக்கென்று சிறு சேமிப்பு இருக்கும் அதனைக் கொண்டு இத் திடீர் செலவுகளை ஈடு செய்ய முடியும். மாறாக வீட்டுக்கு வந்திருக்கும் சொந்த பந்தங்களுக்காக தேவைக்கு அதிகமான சிற்றூண்டிகள்,குடிபாணங்களை வாங்குவதும் பாவணையின் பின் மேலதிகமானதை வீசிவிடுவதும்,பகட்டுக்காக விலையுயர்ந்ததும் நாகரீகமானது என்றும் சொல்லப்படும் ஆடைகளை கொள்வனவு செய்வது, இரண்டு நாட்களின் பின்னர் அவைகளை உடுத்துவதைத் தவிர்ப்பதும், முக்கியமாக செல்பேசிக்காக செலவிடுவது மணிக்கணக்கில் பேசுவதும் அதற்காக ரீ சார்ச் செய்வதும் இவை போன்றவை.

போதிய அளவு சேமிப்பின்மை

குடும்பங்களில் ஏதோ சின்னதாக ஒரு சேமிப்பு இருக்கும். நான் முன்னர் குறிப்பிட்டது போல அவைகள் திடீரென ஏற்படும் செலவுகளுக்கு ஈடு செய்யப்படுவதால், பிள்ளைகளுக்கு பிரபல்ய பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அவ் வாய்ப்பு தவறப்படலாம். அல்லது பிள்ளைகளின் வேறு பல கல்லூரித் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். அல்லது சேமிப்பின் அளவுக்கேற்ற வகையில் இலாபத்தில் சொத்தொன்று கொள்வனவு செய்ய வாய்ப்பிருந்தும் தவறப்படலாம். ஏனைய தேவைகளுக்கு கடன் பட வேண்டிய நிலையிலிருந்து தவிர்த்துக் கொள்ள சேமிப்பின் அளவில் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

சிறந்த திட்டமிடல் இன்மை

திட்டமிடல் என்பதை விட எதிர்காலம் பற்றி போதிய தெளிவின்மை என்றே சொல்லலாம். நாட்டின் பொருளாதார நிலைமை குறிப்பாக பணவீக்க , பணச் சுருக்க நிலைமைகள் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். எதிர்காலத்தில் குறிப்பிட்ட சொத்தொன்றை கொள்வனவு செய்வதற்குத் திட்டமிட்டிருந்தால் நாட்டுப் பணத்தின் தற்காலப் போக்கு பற்றிய தெளிவைப் பெற்று அதற்கு தகுந்தாற்போல் சொத்தின் பெறுமதியை நிர்ணயித்து கொள்வனவிற்கான அத்திவாரமிடல் வேண்டும். நாட்டில் பணவீக்கமிருப்பின் எதிர்காலத்தில் மேலதிக செலவு தவிர்க்க முடியாததாயிருக்கும். சொத்துக் கொள்வனவும் பகல் கனவாய் போய்விடும்.

பிந்திய முயற்சி

வங்கிகளிலோ அல்லது வேறு யாரிடமோ கடன் பெற்றிருப்பின் அக் கடனை அடைப்பதற்காக மட்டுமே தங்கள் வருமானத்தில் சிறு பகுதியை சேமிக்கும் பழக்கம் கொண்டிருத்தல் மேலும் சேமிப்பின் அவசியத்தை காலம் கடந்து உணர்ந்துகொள்ளல் இதனால் நமது சொத்துக் கொள்வனவு செய்யும் கனவும் தடைப்பட்டுச் செல்கின்றது. இன்னும் சந்தைக்குப் பொருத்தமற்ற இலாபமீட்டல் முயற்சிகளில் அல்லது சந்தைக்குப் பொருத்தமாயிருந்தும் நடைமுறைக்கு ஒப்பாகாத முயற்சிகளில் முதலீடு செய்தல்.

அதிர்ஷ்ட்டத்தை நம்பியிருத்தல்

பங்குச் சந்தைகளிலோ அல்லது பந்தயங்களிலோ சொற்ப தொகையை முதலீடு செய்துவிட்டு என்றாவது ஒரு நாள் நமக்கும் அதிர்ஷ்டம் கிட்டும் என்று இலவு காத்த கிளி போல அதிர்ஷ்ட்டத்தையே நம்பியிருத்தல். அதே போல தினமும் சேமிக்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அப் பணத்தினை லொட்டரி சீட்டுகளில் விரயம் செய்தல். பதவியுயர்வு அல்லது சம்பள உயர்வு கிட்டுமென நம்பியிருத்தல்

எல்லாமே விதி என்றிருத்தல்

ஏழையாகவே பிறந்திட்டோம் ஏழையாகவே செத்து மடிவோம் எல்லாமே விதி என்று சொல்லிக் கொண்டு பணமீட்டல் முயற்சிகளில் ஈடுபடாமல் இருத்தல். அல்லது நான் பணக்காரனாக வருவேன் என்று விதியில் இருந்தால் நான் பணக்காரன் ஆகிவிடுவேன் விதியில் இருக்கும் போது நான் ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்று எந்த வித முதலீடுகளிலும் ஈடுபடாமல் இருத்தல்.

இவைகளைத் தவிர்த்து கடின உழைப்பும் கடின முயற்சியும் இருப்பின் ஏழை எனும் சொல் விரைவில் புழக்கத்திலில்லாமல் போய்விடும்.

கிறுக்குப் பயல் ஏதோ சொல்லிட்டுப் போறேன். தனியா என்னை புலம்ப விட்டுட்டு நீங்களும் ஓடிவிடாம ஏதாவது சொல்லிட்டுப் போங்க... :P



Post a Comment

8 Comments

  1. பணம் எனும் மாயை வைத்து ஏழை / பணக்காரன் இல்லை தோழரே...

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் பணம் தான் இங்கு அனைத்தையும் தீர்மானிப்பதாய் அமைந்துவிடுகிறதே :(

      Delete
  2. நீங்களா கிறுக்குப்பயல்? படு புத்திசாலியாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஏதோ நம்மளால முடிஞ்சது :) மிக்க நன்றி சகோ

      Delete
  3. சொத்தெனப்படும் பணமுதல்கள் பல சமயங்களில் கழுதை முன் கட்டப்பட்ட கரட் போலவே..எட்டப்படுவதில்லை.ஓட்டங்கள் முடிவிற்கு வருவதும்இல்லை.வாழ்த்துக்கள் ஆத்மாவின்பதிவிற்காய்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ... மிக்க நன்றி :)

      Delete
  4. வணக்கம் சார்,தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டிருக்கிறது,
    விபரம்.www.vimalann.blogspot.com

    ReplyDelete
  5. அருமையான அலசல்
    அனைவரும் அவசியம்
    அறிந்து கொள்ளவேண்டியதும் கூட..
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete