ஆதலால் நாம் ஏழைகள்...

உண்மையில் ஒரு நபரின் செல்வாக்கு அவரின் வழித்தோன்றல்கள் மற்றும் அவரிடமிருக்கும் சொத்து செல்வங்களின் நிலையைப் பொருத்துத்தான் அமையும் என்று சொல்வதில் தப்பில்லை என்றே கருதுகின்றேன். தனி நபரை மட்டுமல்லாது தேசத்தையும் ஏழை செல்வந்தன் என்று வகைப்படுத்தும் காலத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வறுமையால் தற்கொலை செய்து கொண்டவர்களும் , தன் கௌரவத்தை பாராமல் தன்னுடைய படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததனால் குடும்ப சுமை போக்க ஹோட்டல்களில் தினக் கூலிக்கு வேலை செய்யும் இளம் பருவத்தினரும், அக்கா, தங்கைகளின் திருமணம் மட்டுமல்லாது இன்னும் கொஞ்சம் சொத்திருந்தால் வாழ்க்கை நன்றாக அமையும் என்றெண்ணி அயல் தேசங்களில் வெயில் பனி பாராது உழைக்கும் ஒவ்வொரு தம்பியும் அண்ணனும் சான்றாக இருக்கின்றார்கள் இந்த உலகு சொத்து செல்வங்களில் தான் தங்கியிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக.

தான் உழைத்த பணத்தைக் கொண்டு கடல்கடந்து சுற்றுலாச் செல்பவர்கள் கூட தாம் சுற்றுலாவைப் போக்கும் இடங்களில் பணம் திரட்ட ஏதும் வழியிருக்கின்றதா என்று நோட்டமிடுகின்றனர். பணம் தான் இங்கு அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துகொண்டிருக்கின்றது. இரவு - பகல், வெயில் - மழை,குளிர் பாராது  உழைக்கும் பணத்தில் நாம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். நான் இங்கு சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன். நாம் இன்னும் பணக்காரர்களாகாததற்கு ம்ம்ம்ம்ம் நாம் இன்னும் ஏழைகளாக இருப்பதற்கு அவைகளும் காரணமாக இருக்கலாம்.

மேலதிக செலவுகள்

பண்டிகைக்கால செலவுகள், திடீர் சுகயீனம் காரணமாக ஏற்படும் செலவுகள் போன்றவற்றை இங்கு நான் மேலதிக செலவுகளாக சொல்லவில்லை. ஏனெனில் ஒவ்வொரு குடும்பத்திலும் இவற்றுக்கென்று சிறு சேமிப்பு இருக்கும் அதனைக் கொண்டு இத் திடீர் செலவுகளை ஈடு செய்ய முடியும். மாறாக வீட்டுக்கு வந்திருக்கும் சொந்த பந்தங்களுக்காக தேவைக்கு அதிகமான சிற்றூண்டிகள்,குடிபாணங்களை வாங்குவதும் பாவணையின் பின் மேலதிகமானதை வீசிவிடுவதும்,பகட்டுக்காக விலையுயர்ந்ததும் நாகரீகமானது என்றும் சொல்லப்படும் ஆடைகளை கொள்வனவு செய்வது, இரண்டு நாட்களின் பின்னர் அவைகளை உடுத்துவதைத் தவிர்ப்பதும், முக்கியமாக செல்பேசிக்காக செலவிடுவது மணிக்கணக்கில் பேசுவதும் அதற்காக ரீ சார்ச் செய்வதும் இவை போன்றவை.

போதிய அளவு சேமிப்பின்மை

குடும்பங்களில் ஏதோ சின்னதாக ஒரு சேமிப்பு இருக்கும். நான் முன்னர் குறிப்பிட்டது போல அவைகள் திடீரென ஏற்படும் செலவுகளுக்கு ஈடு செய்யப்படுவதால், பிள்ளைகளுக்கு பிரபல்ய பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அவ் வாய்ப்பு தவறப்படலாம். அல்லது பிள்ளைகளின் வேறு பல கல்லூரித் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். அல்லது சேமிப்பின் அளவுக்கேற்ற வகையில் இலாபத்தில் சொத்தொன்று கொள்வனவு செய்ய வாய்ப்பிருந்தும் தவறப்படலாம். ஏனைய தேவைகளுக்கு கடன் பட வேண்டிய நிலையிலிருந்து தவிர்த்துக் கொள்ள சேமிப்பின் அளவில் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

சிறந்த திட்டமிடல் இன்மை

திட்டமிடல் என்பதை விட எதிர்காலம் பற்றி போதிய தெளிவின்மை என்றே சொல்லலாம். நாட்டின் பொருளாதார நிலைமை குறிப்பாக பணவீக்க , பணச் சுருக்க நிலைமைகள் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். எதிர்காலத்தில் குறிப்பிட்ட சொத்தொன்றை கொள்வனவு செய்வதற்குத் திட்டமிட்டிருந்தால் நாட்டுப் பணத்தின் தற்காலப் போக்கு பற்றிய தெளிவைப் பெற்று அதற்கு தகுந்தாற்போல் சொத்தின் பெறுமதியை நிர்ணயித்து கொள்வனவிற்கான அத்திவாரமிடல் வேண்டும். நாட்டில் பணவீக்கமிருப்பின் எதிர்காலத்தில் மேலதிக செலவு தவிர்க்க முடியாததாயிருக்கும். சொத்துக் கொள்வனவும் பகல் கனவாய் போய்விடும்.

பிந்திய முயற்சி

வங்கிகளிலோ அல்லது வேறு யாரிடமோ கடன் பெற்றிருப்பின் அக் கடனை அடைப்பதற்காக மட்டுமே தங்கள் வருமானத்தில் சிறு பகுதியை சேமிக்கும் பழக்கம் கொண்டிருத்தல் மேலும் சேமிப்பின் அவசியத்தை காலம் கடந்து உணர்ந்துகொள்ளல் இதனால் நமது சொத்துக் கொள்வனவு செய்யும் கனவும் தடைப்பட்டுச் செல்கின்றது. இன்னும் சந்தைக்குப் பொருத்தமற்ற இலாபமீட்டல் முயற்சிகளில் அல்லது சந்தைக்குப் பொருத்தமாயிருந்தும் நடைமுறைக்கு ஒப்பாகாத முயற்சிகளில் முதலீடு செய்தல்.

அதிர்ஷ்ட்டத்தை நம்பியிருத்தல்

பங்குச் சந்தைகளிலோ அல்லது பந்தயங்களிலோ சொற்ப தொகையை முதலீடு செய்துவிட்டு என்றாவது ஒரு நாள் நமக்கும் அதிர்ஷ்டம் கிட்டும் என்று இலவு காத்த கிளி போல அதிர்ஷ்ட்டத்தையே நம்பியிருத்தல். அதே போல தினமும் சேமிக்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அப் பணத்தினை லொட்டரி சீட்டுகளில் விரயம் செய்தல். பதவியுயர்வு அல்லது சம்பள உயர்வு கிட்டுமென நம்பியிருத்தல்

எல்லாமே விதி என்றிருத்தல்

ஏழையாகவே பிறந்திட்டோம் ஏழையாகவே செத்து மடிவோம் எல்லாமே விதி என்று சொல்லிக் கொண்டு பணமீட்டல் முயற்சிகளில் ஈடுபடாமல் இருத்தல். அல்லது நான் பணக்காரனாக வருவேன் என்று விதியில் இருந்தால் நான் பணக்காரன் ஆகிவிடுவேன் விதியில் இருக்கும் போது நான் ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்று எந்த வித முதலீடுகளிலும் ஈடுபடாமல் இருத்தல்.

இவைகளைத் தவிர்த்து கடின உழைப்பும் கடின முயற்சியும் இருப்பின் ஏழை எனும் சொல் விரைவில் புழக்கத்திலில்லாமல் போய்விடும்.

கிறுக்குப் பயல் ஏதோ சொல்லிட்டுப் போறேன். தனியா என்னை புலம்ப விட்டுட்டு நீங்களும் ஓடிவிடாம ஏதாவது சொல்லிட்டுப் போங்க... :Pபொழுதுபோக்குகளும் புத்திசாலித்தனமும்

பொழுதுபோக்கு இந்த வார்த்தைக்கு அடிமையாகாத  மனிதன் இல்லையேன்றே சொல்லலாம். சிறு குழந்தை முதல் வயோதிபத்தை ருசித்துக் கொண்டிருப்பவர்கள் என எல்லோருக்குமே பொழுதுபோக்கு அவசியமானதாகவிருக்கின்றது. நீந்துதல், செஸ் விளையாடுதல், புத்தகம் படித்தல்,வீடியோ கேம்ஸ் விளையாடுதல், புகைப்படமெடுத்தல், நல்ல சினிமாக்களை பார்த்தல்,மீன் பிடித்தல், குழந்தைகளோடு பொழுதைக் கழித்தல் என இப்படி நீண்டதொரு  பட்டியலை பொழுதுபோக்கினுள் அடக்கலாம் . இவற்றில் எது பிரயோசனமானது, அறிவை வளர்க்கக் கூடியது எது பிரயோசனமற்றது என்றெல்லாம் நாம் கவனிப்பது கிடையாது. காரணம் எப்படியோ எமது ஓய்வு நேரம் கழிந்தால் சரி என்ற எண்ணத்தில் நாம் இருப்பதனாலாகும்.

எம்மில் சிலர் தொலைக்காட்சிகளில் முகம் புதைத்தும், வீண் பேச்சுக்களிலும் தங்கள் ஓய்வு நேரங்களை விரயம் செய்கின்றனர் என்பதனையும் ஞாபகப் படுத்திச் செல்கின்றேன்.

நாம் உட்பட நமது குழந்தைகளுக்கு பிரயோசனமானதும் அறிவை வளர்க்கக் கூடியதுமான பொழுதுபோக்குகளைப் பற்றி அறிந்துவைத்திருந்தால் எதிர்காலத்தில் எமது நுண்ணறிவு, பொது அறிவை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு துணையாக இருக்கும். என்னடா இவன் பொது அறிவு , நுண்ணறிவு என்றெல்லாம் கதைக்கிறானென்று வேற மாதிரி என்னை எடை போட வேண்டாம். பொழுது போக்குக்குத் தான்  எழுதுகிறேன். நாலு பேருக்கு உதவியதென்றால் சின்னதாய் ஒரு மனதிருப்தி கிடைக்கும். இங்க எல்லோரும் சொல்லுவாங்களே நாலு பேருக்கு நல்லது நடக்குமென்றால் எதுவும் செய்யலாமென்று அது போலதான் இதுவும் :). எமக்குப் பிரயோசனப்படுமென்று சொல்லப்படுகின்ற ஒரு சில பொழுது போக்குகளை குறிப்பிடுகிறேன்.

பிற நாட்டு மொழிகளைக் கற்றுக் கொள்ளுதல் 

இது பொழுதுபோக்காக அமைவது மட்டுமல்லாமல் எமது மொழியியல் திறனை வளர்த்துக் கொள்ளவும் உதவியாய் இருக்கும். எப்போதுமே ஒரே கலாச்சாரம் ஒரே சமூகம் என்றில்லாமல் பல மொழிகளை அறிவதன் மூலம் அவ் மொழிகளைப் பேசக்கூடிய சமூகங்களின் பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், வரலாறுகள் போன்றவற்றை எம்மால் அறிய முடிவதுடன் வித்தியாசமான ஒரு அனுபவத்தினையும் பெற்றுக் கொள்ளலாம். எமது குழந்தைகளுக்கு இந்த பொழுது போக்கின் நன்மைகளை எடுத்துச் சொல்லி குழந்தைப் பருவத்திலேயே பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக அவர்களை மாற்றினால் அவர்களின் நட்பு வட்டம் கடல் கடந்ததாய் அமைந்து விடுவதுடன், பல மொழிகளிலுமுள்ள புத்தகங்களையும், வலைத்தளங்களையும் படிக்கக் கூடியதாய் இருக்கும்.

வீடியோ கேம்ஸ் விளையாடுதல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கும் சாதனமாக இவைகள் இருக்கின்றன. ஒரு வகையில் வாழ்க்கைப் பயிற்சி என்றே இதனை எடுத்துக் கொள்ளலாம். இதில் எல்லா வகையான கேம்ஸ் ளையும் சொல்ல முடியாது. உள்ளத்தில் வன்முறைகளைத் தோற்றுவிக்கக் கூடிய கேம்ஸ்களைத் தவிர்த்தல் நல்லது. எமது செயற்பாடுகள், பார்வை போன்றவற்றை ஒருங்கிணைத்து ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதற்கு ஏதுவாய் இவைகள் அமையும். புதிய சிந்தனைகள் ,மாற்றுவழிகள் போன்றவைகளை விரைவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

புதிர்கள்

புதிர்கள் பிடிக்காதவர்கள் யாருமேயில்லை. மிகவும் சுவாரஷ்யம் மிகுந்த பொழுதுபோக்கு. சிறு வயதுகளில் பத்திரிகைகளில்  கண்டிருப்போம் குறுக்கெழுத்துப் போட்டியாக. சில வகைப் புதிர்கள் எரிச்சலூட்டக் கூடியவைகளாகவும் இருக்கும். அவைகளில் கொஞ்சம் அதிக கவனம் எடுப்போமேயானால் இறுதி வரை தீர்வு காணாமல் விட்டுச் செல்ல மனம் இடமளிக்காது. பிரயாணங்களின் போது நல்ல துணையாக இருக்கும் பொழுதுபோக்காக இருப்பது மட்டுமல்லாமல் எந்தவொரு விடயத்தையும் அதன் சாதக, பாதக விடயங்களை முன்னிறுத்தி அனுகுவதற்கு அடிப்படையாய் அமையும்.

நாணயங்கள் மற்றும் ஏனைய பொருட்களை சேகரித்தல் 

நிச்சயமாக இன்னுமொரு சிறந்த பொழுதுபோக்காக இதை நான் கூறுவேன். எம்மைச் சுற்றியுள்ள உலகு பற்றி மேலும் பல சுவாரஷ்யமான தகவல்களைப் பெறக் கூடியதாக இருப்பதுடன் சில சமயங்களில் எதிர்கால வரலாற்றில் எமது பெயரை இடம் பெறச் செய்யக் கூடியதாகவும் அமைந்துவிடும். அரிய வகை நாணயங்கள், முத்திரைகள், மற்றும் பிற பொருட்களை சேகரிப்பதன் மூலம் அவை பற்றிய தகவல்களை தேடி அறிந்துகொள்ள முடிவதுடன் முன்னோர்களின் வரலாற்றுக்கு உயிரூட்டியதாகவும் அமைந்துவிடுகின்றது. அரிய பொருட்களை சேகரிக்கும் ஆசை மேலும் மேலும் அதிகரிக்குமானால் அது தொடர்பான மேற்படிப்புகளை படிப்பதனூடாக இந்த உலகத்தை அரச செலவுகளினூடே சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பமும் கிட்டும்.

வாசிப்பு

சந்தேகத்திற்கிடமில்லாமல் மிகவும் அழகான பொழுதுபோக்காக வாசித்தலை எடுக்கலாம். கோடிக்  கணக்கான புத்தகங்கள் பல மொழிகளிலும் உள்ளன. ஒரு மனிதன்  இதுவரை இவைகளில் 1 வீதத்தையேனும் தன் வாழ்நாளில் வாசிக்கவில்லையென்றும் சொல்லப்படுகின்றது. நான் முதலாவதாக குறிப்பிட்டிருக்கும் பொழுதுபோக்கிற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. நாம் சிறந்த மனிதனாக இருப்பதற்கு வாசித்தல் பிரதானமாய் அமைகின்றது. இந்த உலகோடு நாம் பேசக்கூடிய ஒரு ஊடகமாக வாசித்தலை கொள்ளலாம்.

கிறுக்குப் பயல் ஏதோ சொல்லிட்டுப் போறான் என்று விட்டு விடாமல். நீங்களும் ஏதாவது சொல்லிட்டுப் போங்களேன் :)