அருகில் யார் ?

எல்லோருக்கும் வெற்றியடைதல் பிடிக்கும் வெற்றியை விரும்பாதவர்கள் எவருமிலர் என்றே சொல்லலாம். எதற்கும் முயற்சிக்காதவரை வெற்றியோ தோல்வியோ கிடைப்பதில்லை எனலாம். எல்லோர் வாழ்விலும் குறிக்கோள் அல்லது இலட்சியமென்று ஒரு மையப் புள்ளி இருக்கும். வாழ்வின் அனைத்துச் செயற்பாடுகளும் இந்த மையப் புள்ளியை பிரதானமாக வைத்தே நகர்த்தப்படுகின்றன. சிலர் மிக இலகுவாகவும், இன்னும் பலர் மிக சிரமத்தின் மத்தியிலும் இந்த மையப் புள்ளியை அடைந்துகொள்கின்றார்கள். பலர் மையப் புள்ளியை அடையாமலேயே இயற்கையெய்வதும் தவிர்க்கமுடியாததாய் அமைந்துவிடுகின்றது.

பிள்ளைகளின் இலட்சியத்தின் மீது அதிக சிரத்தையெடுப்பவர்களாக பெற்றோர்களே இருக்கின்றார்கள் என்பது உண்மை. தம் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் மிக நுணுக்கமாக அவதானித்து அதற்குத் தகுந்த அறிவுரைகளை வழங்குவதன் மூலம் தம் பிள்ளைகளை சாதனையாளர்களா மாற்றிவிடுகின்ற பெற்றோர்களும் இருக்கின்றார்கள். இப்படியான பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடத்தில் அடிக்கடி சொல்லும் மந்திர வார்த்தையாக  நல்ல நண்பர்களோடு சேர்ந்து கொள் என்பதாகத்தான் இருக்கும். இங்கு பெற்றோர்கள் சொல்லும் நல்ல நண்பர்கள் என்பது சிந்தனை, இலட்சியம்,பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் தூய எண்ணம் கொண்டவர்களையாகும்.

சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்களில் சிலர் தம் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டுத் தாங்கள் அவற்றை கடைப்பிடிக்காமல் மனம் போன போக்கில் செயற்படுகின்றனர். இப்படியான பெற்றோர்களினால் பிள்ளைகள் தங்களது இலட்சியங்களை அடைந்துகொள்ளவதில் தாமதமாகின்றனர். நிச்சயமாக பெற்றோர்கள் இவ்விடத்தில் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். பிள்ளைகள் சந்திக்கின்ற ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் ஏனையவர்களை விட பிள்ளைகள் மத்தியில் மிகவும் அருகிலும், அதிக நேரமும் இருப்பவர்கள் பெற்றோர்களே. தனக்குத் தேவையான அனுபவங்கள் மற்றும் அறிவுரைகளைக் பிள்ளைகள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் ஏனையவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதை விட பெற்றோர்களிடமிருந்து  கற்றுக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆகவே, பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லும் மந்திர வார்த்தைகளில் பெற்றோர்களே அதிகம் பத்தியம் காக்கவேண்டியவர்களாக இருக்கின்றனர்.

நாம் அடிப்படையிலேயே இன்னொருவர் சார்ந்துதான் வாழப் பழகிக் கொண்டோம். அதற்கு நாம் வசிக்கும் மற்றும் நமது பொருளாதார சூழல்களையும் காரணமாய்ச் சொல்லலாம். உதாரணத்திற்காக சொல்கிறேன் புதிதாக ஒரு பொருளை தமது நண்பன் வைத்திருக்கக் கண்டால் அது போன்ற ஒரு பொருள் தனக்கும் வேண்டுமென்று நம் குழந்தைப் பருவங்களில் நமது பெற்றோர்களை தொந்தரவு செய்திருப்போம். இப்போது எம் குழந்தைகள் எம்மைத் தொந்தரவு செய்கின்றன. இதனை நாம் சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள முடியாது. இதுவே நாமும் நமது பிள்ளைகளும் இன்னொருவர் சார்ந்து வாழப்பழகுவதற்கு அடிப்படையாய் அமைந்துவிடுகின்றது. சார்ந்து வாழ்தல் சரியா பிழையா என்பதற்கு தீர்வுகாண நான் விழையவில்லை. சார்ந்து வாழ்தல் என்பது வாழ்வில் அவசியமானதாகவிருந்தால் அது எப்படியிருக்க வேண்டும், யாரை நோக்கியதாக நம் சார்தல் இருக்க வேண்டும் என்பதையே பேசுகிறேன்.

மேலும் இருவர் பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு தூக்கும் வருவது போன்று இருக்கின்றது என்று ஒருத்தர் அவ்விடத்தில் கூறினால், மற்றவரும் எனக்கும் கூட தூக்கம் வருவது போன்றுதான் இருக்கிறது என்று கூறி அவர்கள் பேசிக்கொண்ட விடயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவதனை நாம் காணலாம். இன்னும் இலேசாகச் சொல்வதென்றால் பேசிக் கொண்டிருக்கும் இருவரில் ஒருவருக்கு கொட்டாவி எழுமானால் மற்றவரும் அவருக்குப் போட்டியாக கொட்டாவி விடுவதனை நம் அன்றாட வாழ்வில் காண்கிறோம். இதுவும் ஒருவகையில் சார்தலே. இதனை இயற்கை என்று எடுத்துக் கொள்ளவும் முடியாது.

இரவு நேரங்களில் வாகணமோட்டும் சாரதிகள் உற்சாகமான, கலகலப்பாக பேசக் கூடிய யாரைவாது அருகில் வைத்திருக்க விரும்புவார்கள். இதன் மூலம் அசதி, பயணத்தின் தொலைவு, தூக்கம் என்பன சாரதிக்கு மறக்கடிக்கப்பட்டு பயணத்தை எவ்வித ஆபத்துக்களுமின்றி நிறைவுக்குக் கொண்டுவர முடியும். மாற்றமாக அமையுமாக இருந்தால் வாகணத்தில் பயணிக்கும் அனைவரும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஏனெனில், சாரதியும் எம் சமூகத்தைச் சேர்ந்தவராதலால் அவரின் சார்தலும் எமக்கு சமனானதே.

ஒரு சில ரூபாய்க்களை நோக்கமாகக் கொண்டு வாகணமோட்டும் சாரதிகள் தன் இலக்கு சரியாக நிறைவேற மிகவும் சிறந்த தெரிவுகளையே தம் அருகில் வைத்திருக்க விரும்பும் போது, வாழ்க்கையெனும் வாகணத்தையோட்டும் சாரதியாக நாம் ஒவ்வொருவரும் நமக்கு அருகில் எப்படிப்பட்டவரை வைத்திருக்க வேண்டுமென்பதனை தீர்மானிப்பதில் தெளிவாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும்.

நமக்கென்று ஒரு மையப் புள்ளி இருக்கின்றது. அது சார்ந்துதான் நாம் வாழ்க்கையெனும் வாகணத்தை ஓட்டவிருக்கின்றோம். ஆகவே நமது மையப் புள்ளி சார்ந்தவர்களை நம் அருகில் வைத்துக் கொண்டால், வாழ்வு உற்சாகமாகவும் கலகலப்பாகவும் இருப்பதுடன், நமது இலக்கும் எவ்வித பிரச்சனைகளுமின்றி அடைந்துகொள்ளப்படும்.


கிறுக்குப் பயல் ஏதோ சொல்லிட்டுப் போறேன். தனியா என்னை விட்டுட்டு நீங்களும் ஓடிவிடாம ஏதாவது சொல்லிட்டுப் போங்க... :P