Looking For Anything Specific?

ads header

பேஸ்புக்கிற்கு ஒரு பகிரங்க மடல்

அன்புள்ள பேஸ்புக்...

நானும் நீயும் கொண்ட நட்புக்கு வருடம் ஐந்து முடிவடையப் போகின்றது. இடைப்பட்ட இந்த காலத்தில் என்னால் செய்யப்பட்ட தவறுகளைப் புரிந்துகொண்டு அதனை உரிய நேரத்தில். உரிய இடத்தில் உரிமையுடன் சுட்டிக் காட்டி திருத்தச் சொல்லியிருந்தாய், நானும் திருத்திக் கொண்டேன் அதற்கு நான் கோடி நன்றிகளைச் சொல்கிறேன். நீ கூட எனக்குப் பிடிக்காத சில விடயங்களைச் செய்துகொண்டுதான் இருந்தாய். அவற்றை நான் பெரிதுபடுத்தவில்லை. நீ பிடிவாதக்காரன் உன் தவறுகளை உன்னிடமே சுட்டிக் காட்டுவதை விரும்பவுமாட்டாய் அதனை ஒரு போதும் நீ உள்வாங்கி கொள்ளவுமாட்டாய் என்று எனக்குத் தெரியும்.

உன் பழக்க வழக்கங்களைத் திருத்துவதாயின் உன்னைப் பற்றி உன் அப்பாவிடம் முறையிட வேண்டும். உன் அப்பாவோ சிடுமூஞ்சிக் காரர்.முன்பு ஒரு வருடம் எனது நண்பர்களை அதிகாமாக்க எண்ணி சில நண்பர்களுக்குக் கோரிக்கை விடுத்த போது, அது பிடிக்காத உன் அப்பா என்னை ஒரு வாரம் உன்னோடு பேசாமல் தண்டித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. அதனாலும் மேலும் உன் அப்பாவோடு பேசக் கூடிய அளவுக்கு நன்றாக எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதனாலும் நான் உன்னுடைய செயல்கள் பற்றி வாய்திறப்பதில்லை. இதனையே உனக்கு சாதகமாக்கிக் கொண்டு நீ மேலும் மேலும் என்னைக் கஷ்டப்படுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை.

புதியவர்களைக் காணும் வரைதான் பழையவர்கள் நட்பு என்று மனிதர்களுக்குள் சொல்லிக் கொள்வார்கள். இணை பிரியாமல் இணையமான உன்னோடு நான் கொண்ட நட்பையும் மனிதர்கள் நட்புக்குக் ஒப்பாக்கிக் கொண்டாய் என்பதற்கு ஆதாரமாக உன் அண்மைக்கால மாற்றங்கள் அமைந்திருக்கின்றது. நான் மனிதனாக இருப்பதனால்தான் என்னை உன்னிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறாய் என நினைக்கிறேன். ஆனால் நானோ உன்னையும் ஒரு உயிராகவே பார்க்கிறேன் என்பது மட்டும் உனக்கு இதுவரைகாலமும் புரியாமல் இருப்பதுதான் கவலையாகவிருக்கின்றது.

இனிமேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. சகிக்க முடியாத உன்னுடைய சில செயல்களை உன் அப்பாவிடம் மட்டுமல்ல உன்னோடு நண்பர்களாக இருக்கும் ஒவ்வொருவரிடமும் சொல்லப் போகிறேன்.

முதலில்

உன் முதுகில் பதியப்படும் கருத்துக்கள், தகவல்களை வரிசைப்படுத்தியதாக அதன் கால ஒழுங்கு முறைக்கமைய அது பகிரப்பட்ட நேரத்தின் அடிப்படையில் எனக்குக் காண்பி. பழைய பதிவுகளை முன்னால் கொண்டுவந்து ஏன் கோபத்தை ஏற்படுத்துகிறாய். பழைய பதிவுகளைப் பகிர்கிறார்கள் என்பதற்காகத்தானே நான் பலரை இன்றுவரையும் என்னோடு நட்பாக்கிக் கொள்ளாமல் இருக்கிறேன்.இதைக் கூட நீ அறிந்துதானே இருக்கின்றாய்.

அடுத்து என் நண்பர்கள் இதனை விரும்பியிருக்கிறார்கள், இதற்குக் கருத்திட்டிருக்கிறார்கள் என்று எனக்கும் நான் இதனை விரும்பியிருக்கிறேன் இதற்கு கருத்திட்டிருக்கிறேன் என்று என் நண்பர்களுக்கும் சொல்லிக் கொண்டு திரியாதே. இதனால் பலருடைய எண்ணங்களை என்னால் படிக்க முடியாமல் இருக்கின்றது. மேலும் உன் புத்தியை சரிவர அறியாத புது நண்பர்கள் விரும்பும் அந்தமாதிரியான சமாச்சாரங்களையெல்லாம் எனக்கும் தெரியப்படுத்தாதே. உன்னுடைய இந்த கீழ்த்தரமான செயலால் பலர் உன்னோடு வாழ்நாளிலும் நட்பு வைப்பதில்லை என்ற முடிவிலிருக்கின்றார்கள்.

நீ வேகமானவன், எல்லோருடைய கருத்துக்களையும் காதுதாழ்த்தி கேட்கக் கூடியவன் என்பதற்காகத்தான் இன்றுவரை நான் உட்பட பல நண்பர்கள் உன் நட்பினை இழக்கவிரும்பாமல் உன் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறோம். உன்னிடம் நாங்கள் அதிகம் எதிர்பார்ப்பது உன் சுறுசுறுப்பு மற்றும் நீ விரும்பும் புதுமைகளைத்தான். அப்படியிருக்க Top Stories எனும் ஒரு வகை வியாதியை நாங்கள் விரும்பாமலேயே எங்களுக்குத் தந்துவிட்டாய். இதனால் நீ பெற்ற இன்பம் என்னவோ? Top Stories இதன் மூலம் புளித்துப் போன தகவல்களை மூஞ்சிக்குக் முன்னாலேயே கிடத்திவிடுகின்றாய்.

அடுத்து ஏதாவது தவறுகளை நான் அறியாமல் செய்திருந்தால்... செய்திருந்தால் இல்லை செய்திருக்கிறேன் இனி செய்யவுமாட்டேன் என்றும் சொல்லவுமுடியாது. அப்படியான சந்தர்ப்பங்களின் போது மிருதுவான வார்த்தைப் பிரயோகங்களைக் கடைப்பிடித்து உரையாடு. எடுத்த எடுப்பில் நீ இந்தத் தவறைச் செய்துவிட்டாய் அதனால் உன்னை நான் இன்றிலிருந்து ப்ளாக் செய்துவிடுகிறேன் என்று பயமுறுத்தும் வார்த்தைகளைக் கூறி அடிவயிற்றில் புளியை கரைக்காதே.சென்ற வாரம் நான் பட்ட பாடு இருக்குதே... அப்பப்பா...

இன்னுமொன்று நானும் நீயும் நமது நண்பர்களும் ஆரம்ப காலங்களில் பேசிக்கொண்டவைகளை மீண்டும் நினைவூட்டிப் பார்க்க முடியாமல் ஞாபகசக்தி இழந்திருப்பதும் கவலையாகவிருக்கின்றது. எத்தனையோ பேருக்கு நல்லது செய்யும் உனக்கு இப்படி ஒரு பலயீனம் இருப்பது இதுவரை உன் அப்பாவுக்குத் தெரியாமல் இருப்பது உனக்கும் உன் அப்பாவுக்குமான உறவில் உள்ள விரிசல்களை காட்டுவதாய் அமைகின்றது. ஒரு முறை உன் குடும்ப வைத்தியர் தவிர்த்து பிறிதொரு வைத்தியரிடம் உன்னைப் பரிசோதனை செய்து பார்.

இறுதியாக உன்னுடைய ஆடைகள், உடலமைப்புக்கள் பற்றி சொல்லியாகவேண்டும். சென்ற வருடம் உன்னுடைய ஆடைகளும் நீ அலங்கரித்துக் கொண்ட விதங்களும் மிகவும் நன்றாகவிருந்தது. ஆனால் இந்தவருட உன்னுடைய அலங்கரிப்புக்கள் பிடிக்கவேயில்லை. என்ன மாதிரி இருக்கிறது. நீ ஒரு வெள்ளைக்கர வீட்டுப் பிள்ளை உன் ஆடை அலங்காரங்களில் நீ அதிகம் சிரத்தையெடுப்பது வரவேற்கத்தக்கது தான் அதற்காக மொக்குத் தனமாகவெல்லாம் அலங்கரித்து எங்களுக்கு வெறுப்பை உண்டுபண்ணாதே... சென்ற வருட அலங்கரிப்பில் என்ன குறை ? யார் கேட்டார்கள் நீ இப்பொது இந்தமாரித்தான் அலங்கரிக்க வேண்டுமென்று ?

ஆரம்பத்தில் நீ இருந்த விதமும் உன் அலங்கரிப்புகளும் தான் என்னை மிகவும் கவர்ந்தது. நீ பழையபடி மாறிவிடு உன் கர்வம் அகங்காரம் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு உன்னையே நம்பியிருக்கும் உன் நண்பர்களுக்காக ஒரு முறை மாறித்தான் பாரேன்...

இப்படிக்கு
உன் அன்பு
நண்பன்


Post a Comment

4 Comments

  1. பதிவை இணைக்க மட்டும் முகநூலை பயன்படுத்துவதால், Top Stories உட்பட பல தகவலும் புதியவை...

    மற்றபடி மடல் நன்று...

    ReplyDelete
  2. Replies
    1. உங்கள் தளத்தில் "முதல் கருத்துரை" வேறு விதத்தில் தான் இப்போது கருத்துரை இட முடிந்தது...

      Post a Comment என்பதை சொடுக்கினால், கருத்துரை பெட்டி திறக்காமல் மீண்டும் மீண்டும் இங்கே --> http://www.athma.biz/2014/03/blog-post_24.html#comment-form செல்கிறது... Settings சரி பார்க்கவும்... நன்றி...

      Delete
    2. நன்றி சார் அழகான பின்னூட்டத்திற்கும் பிரச்சனையைச் சுட்டிக் காட்டியமைக்கும்

      இப்போது திருத்திவிட்டேன் என்று நினைக்கிறேன்

      Delete