வார்த்தைகளால் மாறும் வாழ்க்கை

பிரச்சனைகள் இல்லாத மனிதனே இல்லையென்று சொல்வார்கள், யாரோடு பேச்சுத் தொடுத்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றி கூறாமல் தன் பேச்சை நிறுத்த மாட்டார்கள் என்று சொல்லுமளவிற்கு பிரச்சனைகள் இவ்வுலகத்தில் நிறைந்து காணப்படுகிறது. தொழில்நுட்பம் உலகை ஆளுகின்ற காலம் மறைந்து இனிவரும் காலங்களில் பிரச்சனைகள் தான் இந்த உலகத்தை ஆளப் போகிறதோ தெரியவில்லை. அப்படியாகாமல் இருக்க வேண்டும்.

மனிதன் தன் வாழ்வைப் பூரணப்படுத்துவதற்கு இறைவனால் வரமாக வழங்கப்பட்ட பார்வை,செவிமடுத்தல்,பேச்சு, நடத்தைகள் போன்றவைதான் இன்று குடும்பங்களில் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கின்ற பிரதான காரணிகளாய் அமைந்துவிடுகின்றன. குறிப்பாக எமது நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் பிறர் மனதில் ஏற்படுத்தும் தாக்கமானது மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

 நீண்ட காலப் பகை கொண்ட இருவரிடம் பகைக்கான காரணம் கேட்டால் எங்கோ ஒரு மூளையிலிருந்து பொறுக்கியெடுத்து சின்னதாய் ஒரு காரணத்தைச் சொல்வார்கள். அவர் இன்ன வார்த்தையைப் பயன்படுத்தி என்னிடம் கதைத்துவிட்டார் அல்லது தன்னையோ அல்லது தனக்கு வேண்டப்பட்டவர்களையோ வேறு கோணத்தில் பார்த்துவிட்டார் அல்லது தனக்குச் சொந்தமான பொருட்கள் சிலவற்றை அபகரித்துவிட்டார் என்பதாக காரணங்களை அடுக்குவார்கள். வெளியிலிருந்து பார்க்கும் போது ஒரு சில காரணங்களைத் தவிர மற்றயவைகள் சில்லறைத்தனமானதாகவும் ஒன்றுக்கும் பெறுமதியற்றதாகவும் இருப்பதைக் காணலாம்.

உயிர் இருக்கின்ற அனைத்தும் என்றாவது ஒருநாள் மரணத்தை சுவைத்தேயாகவேண்டும் என்பது நியதி. வார்த்தைகளும் அப்படித்தான்  அவைகள்  வெளிப்படுத்தப்படும் சந்தர்ப்பம், சூழல் என்பவற்றைப் பொறுத்து அவை உயிருள்ளதாகவும் மரணித்ததாகவும் கருதப்படுகின்றன. ஒரு வைத்தியர் அல்லது வக்கீலின் வார்த்தைகளை உதாரணத்துக்குக் எடுக்கலாம். அன்பையும் சிந்தனையைத் தூண்டக் கூடிய வகையிலமைந்த வார்த்தைகளுக்கு மரணம்கிடையாது என்பதனை  முன்னோர்கள் சொல்லிச் சென்ற பொன்மொழிகள் இன்றும் புலக்கத்தில் இருப்பதை வைத்து மதிப்பிடலாம்.

வார்த்தைகள் யாரை நோக்கி வெளிப்படுத்தப்படுகின்றது அந்த நபரின் அப்போதைய மனநிலை  என்பவற்றைக் கருத்தில் கொள்வதும் மிக அவசியம். பருவவயதினர் மத்தியில் மிகவும் இலசான வார்த்தைகளையே பிரயோகிக்கவேண்டுமெனும் சூழ்நிலைக்கு இன்றைய சமூகம் தள்ளப்பட்டுள்ளதுக்கு அண்மையில் இலங்கையின் குருநாகல் பிரதேச 16 வயது பாடசாலை மாணவியின் தற்கொலையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
வார்த்தைகள் அம்பைவிட வேகமானவையும் கூர்மையானவையும் என்று சொல்லப்படுகிறது, இந்த மாணவியின் விடயத்திலும் கூட பாடசாலை அதிபரின் நாவிலிருந்து வெளியான வார்த்தைகள் மாணவியின் உள்ளத்தை வேகமாக பாதித்துவிட்டது என்பதை அவ் மாணவி எழுதிவைத்த இறுதிக் கடிதத்தின் மூலம் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. இறுதியில் மாணவி உயிருடனில்லை தற்கொலைக்கு காரணமாவிருந்தார் எனும் குற்றத்தில் அதிபர் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் எனக்குக் காயம் வருமளவு அடித்திருந்தாலும் பரவாயில்லை அந்தமாதிரி அவர் கதைச்சிருக்கக் கூடாது என்று சொல்லுபவர்களின் மூலம் தெளிவாகின்றது வார்த்தைகளினால் ஏற்படுத்தப்படும் வலியின் ஆழம். இவ்விடத்தில் என்னுடைய அனுபவமொன்றையும் பகிர்ந்து கொள்கிறேன். (சலித்துக்கொள்ளாதீர்கள்) இது நடைபெற்று சுமார் 5 வருடங்கள் இருக்கும், செஞ்சிலுவைச் சங்கத்தில் நான் கடமைசெய்யும் போது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று சில தகவல்களைத் திரட்டவேண்டியிருந்தது. முன்னரே தயாரிக்கப்பட்டிருந்த வினாக் கொத்தினை அடிப்படையாக வைத்து தகவல்களைத் திரட்டிக்கொண்டிருந்தேன், பெரும்பாலான வீடுகளில் குடும்பத் தலைவர்கள் அன்றைய தினம் வீட்டிலிருந்ததினால் எல்லாவகையான வினாக்களுக்கும் தெளிவாகவும் விரைவாகவும்  பதில்களை அளித்தார்கள். ஒரு வீட்டில் குடும்பத் தலைவன்(கணவன்) வெளியில் சென்றிருப்பதாக குடும்பத் தலைவி(மனைவி) கூறி தேவையான தகவல்களை தான் தருவதாகவும் சொன்னார். யார் சொன்னாலென்ன நமக்குறிய தகவல்கள் கிடைத்தால் வேலை இன்றோடு முடிந்துவிடும் என்றெண்ணி அந்த அம்மாவிடம் எனது வழமையான வினாக்களைத் தொடுக்க ஆரம்பித்தேன்.

கணவன்/மனைவி/ வீட்டில் யாராவது போதைப் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருக்கின்றார்களா ? என்ற ஒரு வினாவினைத் அந்த அம்மாவிடம் நான் தொடுத்த போது அவர் பதட்டமடைந்து அழுதுகொண்டே சொன்னார், என்ன மகன் இப்பிடிக் கேட்குறீங்க அவர் (கணவன்) பீடி கூட குடிப்பது கிடையாது என்று சொன்னார். ஆனாலும் அவருடைய பதட்டமும் அழுகையும் குறையவில்லை. அந்த அம்மாவின் செயல் என் உள்ளத்தை வேகமாய் பாதித்துவிட்டது, ஏன் இப்படியான ஒரு கேள்வியைக் கேட்டேன் என்று என் மனதுக்குள் போராட்டமே நடந்துகொண்டிருந்தது, அந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் கூட என் இதயத்துடிப்பு அதிகரித்துவிடுகின்றது.

எனக்குறிய தகவல் கிடைக்க வேண்டும் என்பதும், தற்போது போதைப் பாவனை சாதாரண ஒன்றாக மாறிக்கொண்டிருப்பதுவும் தான் என்னை எதுவுமே சிந்திக்கிவிடாமல் அவ் வினாவினைத் தொடுப்பதற்கு காரணமாய்  அமைந்திருக்க வேண்டும். ஆனால் நான் தொடுத்த வினா அந்த அம்மாவின் உள்ளத்தில் அழுதுவிடுமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த சம்பவத்திற்குப் பின்னர் அந்த வினாவினை தவிர்த்தே எனக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டேன்.

இதே போன்றுதான் எமக்குத் தேவையானவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பின்விளைவுகள் எதையுமே சிந்திக்காமல் குறிப்பிட்ட அந்த நொடிக்கான இலாபத்தினை மட்டும் மையமாகக் கொண்டும் எம்மால் வெளிப்படுத்தப்படும் வார்த்தைகள் மற்றும் செய்கைகள் மற்றவர் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அவர்களுடைய எதிர்கால வாழ்விலும் தாக்கம்  செலுத்தக்கூடியதாக அமைந்துவிடுகின்றது.

மேலும் முன்கோபம், பொறுமையின்னை போன்றவைகளும் மனங்களில் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய வார்த்தைகளை நாவிலிருந்து வெளிப்படுத்திவிடுகின்றன. உள்ளத்திற்கு நிம்மதியை, சந்தோஷத்தைக் கொடுப்பதில் வார்த்தைகளின் பங்கு மிக முக்கியமானது என்று சொல்வதில் தவறில்லை என்றே கருதுகிறேன். இவ்வாறு அவசரத்தில் வெளிப்படும் (கெட்ட)வார்த்தைகளின் ஒரு சிறு பகுதியை கடலில் இட்டால் கடல் முழுவதும்  விரைவாக துர்வாடை மிக்கதாக  மாறிவிடுமென்று சொல்லப்படுகிறத. இன்னும், வார்த்தைகளை அளவுகோலாகக் கொண்டு சிலரது குணங்களை அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும்.

இதனால் தான் முன்னோர்கள் பேசுவதன் மூலம் வெள்ளிப் பாத்திரத்திம் கிடைக்குமென்றால் மௌனனமாக இருப்பதன் மூலம் தங்கப் பாத்திரத்திரம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்களோ தெரியவில்லை.

எப்படியோ நம்முடைய வார்த்தைகள் மற்றும் நடத்தைகள் மூலம் இன்னொருவருக்கு தீங்கு வராமல் இருக்கும் வரை நமக்கு சந்தோசம்தான். வார்த்தைகளை அளவோடு பேசி நீண்ட ஆயுளுக்கு அத்திவாரமிடுவோம்.3 கருத்துரைகள்

உலகத்திலே பயங்கரமான ஆயுதத்தை கவனமாகத் தான் பயன்படுத்த வேண்டும்...!

Reply

"//முன்னோர்கள் பேசுவதன் மூலம் வெள்ளிப் பாத்திரத்திம் கிடைக்குமென்றால் மௌனனமாக இருப்பதன் மூலம் தங்கப் பாத்திரத்திரம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்களோ தெரியவில்லை.//" - மௌனம் நிறைய நேரங்களில் சிறந்த மருந்து.

Reply

Visit : http://www.seenuguru.com/2014/03/tamil-blogging-day-1.html

Reply

Post a Comment