ஆதலால் நாம் ஏழைகள்...

உண்மையில் ஒரு நபரின் செல்வாக்கு அவரின் வழித்தோன்றல்கள் மற்றும் அவரிடமிருக்கும் சொத்து செல்வங்களின் நிலையைப் பொருத்துத்தான் அமையும் என்று சொல்வதில் தப்பில்லை என்றே கருதுகின்றேன். தனி நபரை மட்டுமல்லாது தேசத்தையும் ஏழை செல்வந்தன் என்று வகைப்படுத்தும் காலத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வறுமையால் தற்கொலை செய்து கொண்டவர்களும் , தன் கௌரவத்தை பாராமல் தன்னுடைய படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததனால் குடும்ப சுமை போக்க ஹோட்டல்களில் தினக் கூலிக்கு வேலை செய்யும் இளம் பருவத்தினரும், அக்கா, தங்கைகளின் திருமணம் மட்டுமல்லாது இன்னும் கொஞ்சம் சொத்திருந்தால் வாழ்க்கை நன்றாக அமையும் என்றெண்ணி அயல் தேசங்களில் வெயில் பனி பாராது உழைக்கும் ஒவ்வொரு தம்பியும் அண்ணனும் சான்றாக இருக்கின்றார்கள் இந்த உலகு சொத்து செல்வங்களில் தான் தங்கியிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக.

தான் உழைத்த பணத்தைக் கொண்டு கடல்கடந்து சுற்றுலாச் செல்பவர்கள் கூட தாம் சுற்றுலாவைப் போக்கும் இடங்களில் பணம் திரட்ட ஏதும் வழியிருக்கின்றதா என்று நோட்டமிடுகின்றனர். பணம் தான் இங்கு அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துகொண்டிருக்கின்றது. இரவு - பகல், வெயில் - மழை,குளிர் பாராது  உழைக்கும் பணத்தில் நாம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். நான் இங்கு சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன். நாம் இன்னும் பணக்காரர்களாகாததற்கு ம்ம்ம்ம்ம் நாம் இன்னும் ஏழைகளாக இருப்பதற்கு அவைகளும் காரணமாக இருக்கலாம்.

மேலதிக செலவுகள்

பண்டிகைக்கால செலவுகள், திடீர் சுகயீனம் காரணமாக ஏற்படும் செலவுகள் போன்றவற்றை இங்கு நான் மேலதிக செலவுகளாக சொல்லவில்லை. ஏனெனில் ஒவ்வொரு குடும்பத்திலும் இவற்றுக்கென்று சிறு சேமிப்பு இருக்கும் அதனைக் கொண்டு இத் திடீர் செலவுகளை ஈடு செய்ய முடியும். மாறாக வீட்டுக்கு வந்திருக்கும் சொந்த பந்தங்களுக்காக தேவைக்கு அதிகமான சிற்றூண்டிகள்,குடிபாணங்களை வாங்குவதும் பாவணையின் பின் மேலதிகமானதை வீசிவிடுவதும்,பகட்டுக்காக விலையுயர்ந்ததும் நாகரீகமானது என்றும் சொல்லப்படும் ஆடைகளை கொள்வனவு செய்வது, இரண்டு நாட்களின் பின்னர் அவைகளை உடுத்துவதைத் தவிர்ப்பதும், முக்கியமாக செல்பேசிக்காக செலவிடுவது மணிக்கணக்கில் பேசுவதும் அதற்காக ரீ சார்ச் செய்வதும் இவை போன்றவை.

போதிய அளவு சேமிப்பின்மை

குடும்பங்களில் ஏதோ சின்னதாக ஒரு சேமிப்பு இருக்கும். நான் முன்னர் குறிப்பிட்டது போல அவைகள் திடீரென ஏற்படும் செலவுகளுக்கு ஈடு செய்யப்படுவதால், பிள்ளைகளுக்கு பிரபல்ய பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அவ் வாய்ப்பு தவறப்படலாம். அல்லது பிள்ளைகளின் வேறு பல கல்லூரித் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். அல்லது சேமிப்பின் அளவுக்கேற்ற வகையில் இலாபத்தில் சொத்தொன்று கொள்வனவு செய்ய வாய்ப்பிருந்தும் தவறப்படலாம். ஏனைய தேவைகளுக்கு கடன் பட வேண்டிய நிலையிலிருந்து தவிர்த்துக் கொள்ள சேமிப்பின் அளவில் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

சிறந்த திட்டமிடல் இன்மை

திட்டமிடல் என்பதை விட எதிர்காலம் பற்றி போதிய தெளிவின்மை என்றே சொல்லலாம். நாட்டின் பொருளாதார நிலைமை குறிப்பாக பணவீக்க , பணச் சுருக்க நிலைமைகள் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். எதிர்காலத்தில் குறிப்பிட்ட சொத்தொன்றை கொள்வனவு செய்வதற்குத் திட்டமிட்டிருந்தால் நாட்டுப் பணத்தின் தற்காலப் போக்கு பற்றிய தெளிவைப் பெற்று அதற்கு தகுந்தாற்போல் சொத்தின் பெறுமதியை நிர்ணயித்து கொள்வனவிற்கான அத்திவாரமிடல் வேண்டும். நாட்டில் பணவீக்கமிருப்பின் எதிர்காலத்தில் மேலதிக செலவு தவிர்க்க முடியாததாயிருக்கும். சொத்துக் கொள்வனவும் பகல் கனவாய் போய்விடும்.

பிந்திய முயற்சி

வங்கிகளிலோ அல்லது வேறு யாரிடமோ கடன் பெற்றிருப்பின் அக் கடனை அடைப்பதற்காக மட்டுமே தங்கள் வருமானத்தில் சிறு பகுதியை சேமிக்கும் பழக்கம் கொண்டிருத்தல் மேலும் சேமிப்பின் அவசியத்தை காலம் கடந்து உணர்ந்துகொள்ளல் இதனால் நமது சொத்துக் கொள்வனவு செய்யும் கனவும் தடைப்பட்டுச் செல்கின்றது. இன்னும் சந்தைக்குப் பொருத்தமற்ற இலாபமீட்டல் முயற்சிகளில் அல்லது சந்தைக்குப் பொருத்தமாயிருந்தும் நடைமுறைக்கு ஒப்பாகாத முயற்சிகளில் முதலீடு செய்தல்.

அதிர்ஷ்ட்டத்தை நம்பியிருத்தல்

பங்குச் சந்தைகளிலோ அல்லது பந்தயங்களிலோ சொற்ப தொகையை முதலீடு செய்துவிட்டு என்றாவது ஒரு நாள் நமக்கும் அதிர்ஷ்டம் கிட்டும் என்று இலவு காத்த கிளி போல அதிர்ஷ்ட்டத்தையே நம்பியிருத்தல். அதே போல தினமும் சேமிக்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அப் பணத்தினை லொட்டரி சீட்டுகளில் விரயம் செய்தல். பதவியுயர்வு அல்லது சம்பள உயர்வு கிட்டுமென நம்பியிருத்தல்

எல்லாமே விதி என்றிருத்தல்

ஏழையாகவே பிறந்திட்டோம் ஏழையாகவே செத்து மடிவோம் எல்லாமே விதி என்று சொல்லிக் கொண்டு பணமீட்டல் முயற்சிகளில் ஈடுபடாமல் இருத்தல். அல்லது நான் பணக்காரனாக வருவேன் என்று விதியில் இருந்தால் நான் பணக்காரன் ஆகிவிடுவேன் விதியில் இருக்கும் போது நான் ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்று எந்த வித முதலீடுகளிலும் ஈடுபடாமல் இருத்தல்.

இவைகளைத் தவிர்த்து கடின உழைப்பும் கடின முயற்சியும் இருப்பின் ஏழை எனும் சொல் விரைவில் புழக்கத்திலில்லாமல் போய்விடும்.

கிறுக்குப் பயல் ஏதோ சொல்லிட்டுப் போறேன். தனியா என்னை புலம்ப விட்டுட்டு நீங்களும் ஓடிவிடாம ஏதாவது சொல்லிட்டுப் போங்க... :Pபொழுதுபோக்குகளும் புத்திசாலித்தனமும்

பொழுதுபோக்கு இந்த வார்த்தைக்கு அடிமையாகாத  மனிதன் இல்லையேன்றே சொல்லலாம். சிறு குழந்தை முதல் வயோதிபத்தை ருசித்துக் கொண்டிருப்பவர்கள் என எல்லோருக்குமே பொழுதுபோக்கு அவசியமானதாகவிருக்கின்றது. நீந்துதல், செஸ் விளையாடுதல், புத்தகம் படித்தல்,வீடியோ கேம்ஸ் விளையாடுதல், புகைப்படமெடுத்தல், நல்ல சினிமாக்களை பார்த்தல்,மீன் பிடித்தல், குழந்தைகளோடு பொழுதைக் கழித்தல் என இப்படி நீண்டதொரு  பட்டியலை பொழுதுபோக்கினுள் அடக்கலாம் . இவற்றில் எது பிரயோசனமானது, அறிவை வளர்க்கக் கூடியது எது பிரயோசனமற்றது என்றெல்லாம் நாம் கவனிப்பது கிடையாது. காரணம் எப்படியோ எமது ஓய்வு நேரம் கழிந்தால் சரி என்ற எண்ணத்தில் நாம் இருப்பதனாலாகும்.

எம்மில் சிலர் தொலைக்காட்சிகளில் முகம் புதைத்தும், வீண் பேச்சுக்களிலும் தங்கள் ஓய்வு நேரங்களை விரயம் செய்கின்றனர் என்பதனையும் ஞாபகப் படுத்திச் செல்கின்றேன்.

நாம் உட்பட நமது குழந்தைகளுக்கு பிரயோசனமானதும் அறிவை வளர்க்கக் கூடியதுமான பொழுதுபோக்குகளைப் பற்றி அறிந்துவைத்திருந்தால் எதிர்காலத்தில் எமது நுண்ணறிவு, பொது அறிவை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு துணையாக இருக்கும். என்னடா இவன் பொது அறிவு , நுண்ணறிவு என்றெல்லாம் கதைக்கிறானென்று வேற மாதிரி என்னை எடை போட வேண்டாம். பொழுது போக்குக்குத் தான்  எழுதுகிறேன். நாலு பேருக்கு உதவியதென்றால் சின்னதாய் ஒரு மனதிருப்தி கிடைக்கும். இங்க எல்லோரும் சொல்லுவாங்களே நாலு பேருக்கு நல்லது நடக்குமென்றால் எதுவும் செய்யலாமென்று அது போலதான் இதுவும் :). எமக்குப் பிரயோசனப்படுமென்று சொல்லப்படுகின்ற ஒரு சில பொழுது போக்குகளை குறிப்பிடுகிறேன்.

பிற நாட்டு மொழிகளைக் கற்றுக் கொள்ளுதல் 

இது பொழுதுபோக்காக அமைவது மட்டுமல்லாமல் எமது மொழியியல் திறனை வளர்த்துக் கொள்ளவும் உதவியாய் இருக்கும். எப்போதுமே ஒரே கலாச்சாரம் ஒரே சமூகம் என்றில்லாமல் பல மொழிகளை அறிவதன் மூலம் அவ் மொழிகளைப் பேசக்கூடிய சமூகங்களின் பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், வரலாறுகள் போன்றவற்றை எம்மால் அறிய முடிவதுடன் வித்தியாசமான ஒரு அனுபவத்தினையும் பெற்றுக் கொள்ளலாம். எமது குழந்தைகளுக்கு இந்த பொழுது போக்கின் நன்மைகளை எடுத்துச் சொல்லி குழந்தைப் பருவத்திலேயே பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக அவர்களை மாற்றினால் அவர்களின் நட்பு வட்டம் கடல் கடந்ததாய் அமைந்து விடுவதுடன், பல மொழிகளிலுமுள்ள புத்தகங்களையும், வலைத்தளங்களையும் படிக்கக் கூடியதாய் இருக்கும்.

வீடியோ கேம்ஸ் விளையாடுதல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கும் சாதனமாக இவைகள் இருக்கின்றன. ஒரு வகையில் வாழ்க்கைப் பயிற்சி என்றே இதனை எடுத்துக் கொள்ளலாம். இதில் எல்லா வகையான கேம்ஸ் ளையும் சொல்ல முடியாது. உள்ளத்தில் வன்முறைகளைத் தோற்றுவிக்கக் கூடிய கேம்ஸ்களைத் தவிர்த்தல் நல்லது. எமது செயற்பாடுகள், பார்வை போன்றவற்றை ஒருங்கிணைத்து ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதற்கு ஏதுவாய் இவைகள் அமையும். புதிய சிந்தனைகள் ,மாற்றுவழிகள் போன்றவைகளை விரைவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

புதிர்கள்

புதிர்கள் பிடிக்காதவர்கள் யாருமேயில்லை. மிகவும் சுவாரஷ்யம் மிகுந்த பொழுதுபோக்கு. சிறு வயதுகளில் பத்திரிகைகளில்  கண்டிருப்போம் குறுக்கெழுத்துப் போட்டியாக. சில வகைப் புதிர்கள் எரிச்சலூட்டக் கூடியவைகளாகவும் இருக்கும். அவைகளில் கொஞ்சம் அதிக கவனம் எடுப்போமேயானால் இறுதி வரை தீர்வு காணாமல் விட்டுச் செல்ல மனம் இடமளிக்காது. பிரயாணங்களின் போது நல்ல துணையாக இருக்கும் பொழுதுபோக்காக இருப்பது மட்டுமல்லாமல் எந்தவொரு விடயத்தையும் அதன் சாதக, பாதக விடயங்களை முன்னிறுத்தி அனுகுவதற்கு அடிப்படையாய் அமையும்.

நாணயங்கள் மற்றும் ஏனைய பொருட்களை சேகரித்தல் 

நிச்சயமாக இன்னுமொரு சிறந்த பொழுதுபோக்காக இதை நான் கூறுவேன். எம்மைச் சுற்றியுள்ள உலகு பற்றி மேலும் பல சுவாரஷ்யமான தகவல்களைப் பெறக் கூடியதாக இருப்பதுடன் சில சமயங்களில் எதிர்கால வரலாற்றில் எமது பெயரை இடம் பெறச் செய்யக் கூடியதாகவும் அமைந்துவிடும். அரிய வகை நாணயங்கள், முத்திரைகள், மற்றும் பிற பொருட்களை சேகரிப்பதன் மூலம் அவை பற்றிய தகவல்களை தேடி அறிந்துகொள்ள முடிவதுடன் முன்னோர்களின் வரலாற்றுக்கு உயிரூட்டியதாகவும் அமைந்துவிடுகின்றது. அரிய பொருட்களை சேகரிக்கும் ஆசை மேலும் மேலும் அதிகரிக்குமானால் அது தொடர்பான மேற்படிப்புகளை படிப்பதனூடாக இந்த உலகத்தை அரச செலவுகளினூடே சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பமும் கிட்டும்.

வாசிப்பு

சந்தேகத்திற்கிடமில்லாமல் மிகவும் அழகான பொழுதுபோக்காக வாசித்தலை எடுக்கலாம். கோடிக்  கணக்கான புத்தகங்கள் பல மொழிகளிலும் உள்ளன. ஒரு மனிதன்  இதுவரை இவைகளில் 1 வீதத்தையேனும் தன் வாழ்நாளில் வாசிக்கவில்லையென்றும் சொல்லப்படுகின்றது. நான் முதலாவதாக குறிப்பிட்டிருக்கும் பொழுதுபோக்கிற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. நாம் சிறந்த மனிதனாக இருப்பதற்கு வாசித்தல் பிரதானமாய் அமைகின்றது. இந்த உலகோடு நாம் பேசக்கூடிய ஒரு ஊடகமாக வாசித்தலை கொள்ளலாம்.

கிறுக்குப் பயல் ஏதோ சொல்லிட்டுப் போறான் என்று விட்டு விடாமல். நீங்களும் ஏதாவது சொல்லிட்டுப் போங்களேன் :)
அருகில் யார் ?

எல்லோருக்கும் வெற்றியடைதல் பிடிக்கும் வெற்றியை விரும்பாதவர்கள் எவருமிலர் என்றே சொல்லலாம். எதற்கும் முயற்சிக்காதவரை வெற்றியோ தோல்வியோ கிடைப்பதில்லை எனலாம். எல்லோர் வாழ்விலும் குறிக்கோள் அல்லது இலட்சியமென்று ஒரு மையப் புள்ளி இருக்கும். வாழ்வின் அனைத்துச் செயற்பாடுகளும் இந்த மையப் புள்ளியை பிரதானமாக வைத்தே நகர்த்தப்படுகின்றன. சிலர் மிக இலகுவாகவும், இன்னும் பலர் மிக சிரமத்தின் மத்தியிலும் இந்த மையப் புள்ளியை அடைந்துகொள்கின்றார்கள். பலர் மையப் புள்ளியை அடையாமலேயே இயற்கையெய்வதும் தவிர்க்கமுடியாததாய் அமைந்துவிடுகின்றது.

பிள்ளைகளின் இலட்சியத்தின் மீது அதிக சிரத்தையெடுப்பவர்களாக பெற்றோர்களே இருக்கின்றார்கள் என்பது உண்மை. தம் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் மிக நுணுக்கமாக அவதானித்து அதற்குத் தகுந்த அறிவுரைகளை வழங்குவதன் மூலம் தம் பிள்ளைகளை சாதனையாளர்களா மாற்றிவிடுகின்ற பெற்றோர்களும் இருக்கின்றார்கள். இப்படியான பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடத்தில் அடிக்கடி சொல்லும் மந்திர வார்த்தையாக  நல்ல நண்பர்களோடு சேர்ந்து கொள் என்பதாகத்தான் இருக்கும். இங்கு பெற்றோர்கள் சொல்லும் நல்ல நண்பர்கள் என்பது சிந்தனை, இலட்சியம்,பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் தூய எண்ணம் கொண்டவர்களையாகும்.

சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்களில் சிலர் தம் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டுத் தாங்கள் அவற்றை கடைப்பிடிக்காமல் மனம் போன போக்கில் செயற்படுகின்றனர். இப்படியான பெற்றோர்களினால் பிள்ளைகள் தங்களது இலட்சியங்களை அடைந்துகொள்ளவதில் தாமதமாகின்றனர். நிச்சயமாக பெற்றோர்கள் இவ்விடத்தில் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். பிள்ளைகள் சந்திக்கின்ற ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் ஏனையவர்களை விட பிள்ளைகள் மத்தியில் மிகவும் அருகிலும், அதிக நேரமும் இருப்பவர்கள் பெற்றோர்களே. தனக்குத் தேவையான அனுபவங்கள் மற்றும் அறிவுரைகளைக் பிள்ளைகள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் ஏனையவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதை விட பெற்றோர்களிடமிருந்து  கற்றுக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆகவே, பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லும் மந்திர வார்த்தைகளில் பெற்றோர்களே அதிகம் பத்தியம் காக்கவேண்டியவர்களாக இருக்கின்றனர்.

நாம் அடிப்படையிலேயே இன்னொருவர் சார்ந்துதான் வாழப் பழகிக் கொண்டோம். அதற்கு நாம் வசிக்கும் மற்றும் நமது பொருளாதார சூழல்களையும் காரணமாய்ச் சொல்லலாம். உதாரணத்திற்காக சொல்கிறேன் புதிதாக ஒரு பொருளை தமது நண்பன் வைத்திருக்கக் கண்டால் அது போன்ற ஒரு பொருள் தனக்கும் வேண்டுமென்று நம் குழந்தைப் பருவங்களில் நமது பெற்றோர்களை தொந்தரவு செய்திருப்போம். இப்போது எம் குழந்தைகள் எம்மைத் தொந்தரவு செய்கின்றன. இதனை நாம் சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள முடியாது. இதுவே நாமும் நமது பிள்ளைகளும் இன்னொருவர் சார்ந்து வாழப்பழகுவதற்கு அடிப்படையாய் அமைந்துவிடுகின்றது. சார்ந்து வாழ்தல் சரியா பிழையா என்பதற்கு தீர்வுகாண நான் விழையவில்லை. சார்ந்து வாழ்தல் என்பது வாழ்வில் அவசியமானதாகவிருந்தால் அது எப்படியிருக்க வேண்டும், யாரை நோக்கியதாக நம் சார்தல் இருக்க வேண்டும் என்பதையே பேசுகிறேன்.

மேலும் இருவர் பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு தூக்கும் வருவது போன்று இருக்கின்றது என்று ஒருத்தர் அவ்விடத்தில் கூறினால், மற்றவரும் எனக்கும் கூட தூக்கம் வருவது போன்றுதான் இருக்கிறது என்று கூறி அவர்கள் பேசிக்கொண்ட விடயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவதனை நாம் காணலாம். இன்னும் இலேசாகச் சொல்வதென்றால் பேசிக் கொண்டிருக்கும் இருவரில் ஒருவருக்கு கொட்டாவி எழுமானால் மற்றவரும் அவருக்குப் போட்டியாக கொட்டாவி விடுவதனை நம் அன்றாட வாழ்வில் காண்கிறோம். இதுவும் ஒருவகையில் சார்தலே. இதனை இயற்கை என்று எடுத்துக் கொள்ளவும் முடியாது.

இரவு நேரங்களில் வாகணமோட்டும் சாரதிகள் உற்சாகமான, கலகலப்பாக பேசக் கூடிய யாரைவாது அருகில் வைத்திருக்க விரும்புவார்கள். இதன் மூலம் அசதி, பயணத்தின் தொலைவு, தூக்கம் என்பன சாரதிக்கு மறக்கடிக்கப்பட்டு பயணத்தை எவ்வித ஆபத்துக்களுமின்றி நிறைவுக்குக் கொண்டுவர முடியும். மாற்றமாக அமையுமாக இருந்தால் வாகணத்தில் பயணிக்கும் அனைவரும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஏனெனில், சாரதியும் எம் சமூகத்தைச் சேர்ந்தவராதலால் அவரின் சார்தலும் எமக்கு சமனானதே.

ஒரு சில ரூபாய்க்களை நோக்கமாகக் கொண்டு வாகணமோட்டும் சாரதிகள் தன் இலக்கு சரியாக நிறைவேற மிகவும் சிறந்த தெரிவுகளையே தம் அருகில் வைத்திருக்க விரும்பும் போது, வாழ்க்கையெனும் வாகணத்தையோட்டும் சாரதியாக நாம் ஒவ்வொருவரும் நமக்கு அருகில் எப்படிப்பட்டவரை வைத்திருக்க வேண்டுமென்பதனை தீர்மானிப்பதில் தெளிவாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும்.

நமக்கென்று ஒரு மையப் புள்ளி இருக்கின்றது. அது சார்ந்துதான் நாம் வாழ்க்கையெனும் வாகணத்தை ஓட்டவிருக்கின்றோம். ஆகவே நமது மையப் புள்ளி சார்ந்தவர்களை நம் அருகில் வைத்துக் கொண்டால், வாழ்வு உற்சாகமாகவும் கலகலப்பாகவும் இருப்பதுடன், நமது இலக்கும் எவ்வித பிரச்சனைகளுமின்றி அடைந்துகொள்ளப்படும்.


கிறுக்குப் பயல் ஏதோ சொல்லிட்டுப் போறேன். தனியா என்னை விட்டுட்டு நீங்களும் ஓடிவிடாம ஏதாவது சொல்லிட்டுப் போங்க... :P


பேஸ்புக்கிற்கு ஒரு பகிரங்க மடல்

அன்புள்ள பேஸ்புக்...

நானும் நீயும் கொண்ட நட்புக்கு வருடம் ஐந்து முடிவடையப் போகின்றது. இடைப்பட்ட இந்த காலத்தில் என்னால் செய்யப்பட்ட தவறுகளைப் புரிந்துகொண்டு அதனை உரிய நேரத்தில். உரிய இடத்தில் உரிமையுடன் சுட்டிக் காட்டி திருத்தச் சொல்லியிருந்தாய், நானும் திருத்திக் கொண்டேன் அதற்கு நான் கோடி நன்றிகளைச் சொல்கிறேன். நீ கூட எனக்குப் பிடிக்காத சில விடயங்களைச் செய்துகொண்டுதான் இருந்தாய். அவற்றை நான் பெரிதுபடுத்தவில்லை. நீ பிடிவாதக்காரன் உன் தவறுகளை உன்னிடமே சுட்டிக் காட்டுவதை விரும்பவுமாட்டாய் அதனை ஒரு போதும் நீ உள்வாங்கி கொள்ளவுமாட்டாய் என்று எனக்குத் தெரியும்.

உன் பழக்க வழக்கங்களைத் திருத்துவதாயின் உன்னைப் பற்றி உன் அப்பாவிடம் முறையிட வேண்டும். உன் அப்பாவோ சிடுமூஞ்சிக் காரர்.முன்பு ஒரு வருடம் எனது நண்பர்களை அதிகாமாக்க எண்ணி சில நண்பர்களுக்குக் கோரிக்கை விடுத்த போது, அது பிடிக்காத உன் அப்பா என்னை ஒரு வாரம் உன்னோடு பேசாமல் தண்டித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. அதனாலும் மேலும் உன் அப்பாவோடு பேசக் கூடிய அளவுக்கு நன்றாக எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதனாலும் நான் உன்னுடைய செயல்கள் பற்றி வாய்திறப்பதில்லை. இதனையே உனக்கு சாதகமாக்கிக் கொண்டு நீ மேலும் மேலும் என்னைக் கஷ்டப்படுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை.

புதியவர்களைக் காணும் வரைதான் பழையவர்கள் நட்பு என்று மனிதர்களுக்குள் சொல்லிக் கொள்வார்கள். இணை பிரியாமல் இணையமான உன்னோடு நான் கொண்ட நட்பையும் மனிதர்கள் நட்புக்குக் ஒப்பாக்கிக் கொண்டாய் என்பதற்கு ஆதாரமாக உன் அண்மைக்கால மாற்றங்கள் அமைந்திருக்கின்றது. நான் மனிதனாக இருப்பதனால்தான் என்னை உன்னிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறாய் என நினைக்கிறேன். ஆனால் நானோ உன்னையும் ஒரு உயிராகவே பார்க்கிறேன் என்பது மட்டும் உனக்கு இதுவரைகாலமும் புரியாமல் இருப்பதுதான் கவலையாகவிருக்கின்றது.

இனிமேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. சகிக்க முடியாத உன்னுடைய சில செயல்களை உன் அப்பாவிடம் மட்டுமல்ல உன்னோடு நண்பர்களாக இருக்கும் ஒவ்வொருவரிடமும் சொல்லப் போகிறேன்.

முதலில்

உன் முதுகில் பதியப்படும் கருத்துக்கள், தகவல்களை வரிசைப்படுத்தியதாக அதன் கால ஒழுங்கு முறைக்கமைய அது பகிரப்பட்ட நேரத்தின் அடிப்படையில் எனக்குக் காண்பி. பழைய பதிவுகளை முன்னால் கொண்டுவந்து ஏன் கோபத்தை ஏற்படுத்துகிறாய். பழைய பதிவுகளைப் பகிர்கிறார்கள் என்பதற்காகத்தானே நான் பலரை இன்றுவரையும் என்னோடு நட்பாக்கிக் கொள்ளாமல் இருக்கிறேன்.இதைக் கூட நீ அறிந்துதானே இருக்கின்றாய்.

அடுத்து என் நண்பர்கள் இதனை விரும்பியிருக்கிறார்கள், இதற்குக் கருத்திட்டிருக்கிறார்கள் என்று எனக்கும் நான் இதனை விரும்பியிருக்கிறேன் இதற்கு கருத்திட்டிருக்கிறேன் என்று என் நண்பர்களுக்கும் சொல்லிக் கொண்டு திரியாதே. இதனால் பலருடைய எண்ணங்களை என்னால் படிக்க முடியாமல் இருக்கின்றது. மேலும் உன் புத்தியை சரிவர அறியாத புது நண்பர்கள் விரும்பும் அந்தமாதிரியான சமாச்சாரங்களையெல்லாம் எனக்கும் தெரியப்படுத்தாதே. உன்னுடைய இந்த கீழ்த்தரமான செயலால் பலர் உன்னோடு வாழ்நாளிலும் நட்பு வைப்பதில்லை என்ற முடிவிலிருக்கின்றார்கள்.

நீ வேகமானவன், எல்லோருடைய கருத்துக்களையும் காதுதாழ்த்தி கேட்கக் கூடியவன் என்பதற்காகத்தான் இன்றுவரை நான் உட்பட பல நண்பர்கள் உன் நட்பினை இழக்கவிரும்பாமல் உன் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறோம். உன்னிடம் நாங்கள் அதிகம் எதிர்பார்ப்பது உன் சுறுசுறுப்பு மற்றும் நீ விரும்பும் புதுமைகளைத்தான். அப்படியிருக்க Top Stories எனும் ஒரு வகை வியாதியை நாங்கள் விரும்பாமலேயே எங்களுக்குத் தந்துவிட்டாய். இதனால் நீ பெற்ற இன்பம் என்னவோ? Top Stories இதன் மூலம் புளித்துப் போன தகவல்களை மூஞ்சிக்குக் முன்னாலேயே கிடத்திவிடுகின்றாய்.

அடுத்து ஏதாவது தவறுகளை நான் அறியாமல் செய்திருந்தால்... செய்திருந்தால் இல்லை செய்திருக்கிறேன் இனி செய்யவுமாட்டேன் என்றும் சொல்லவுமுடியாது. அப்படியான சந்தர்ப்பங்களின் போது மிருதுவான வார்த்தைப் பிரயோகங்களைக் கடைப்பிடித்து உரையாடு. எடுத்த எடுப்பில் நீ இந்தத் தவறைச் செய்துவிட்டாய் அதனால் உன்னை நான் இன்றிலிருந்து ப்ளாக் செய்துவிடுகிறேன் என்று பயமுறுத்தும் வார்த்தைகளைக் கூறி அடிவயிற்றில் புளியை கரைக்காதே.சென்ற வாரம் நான் பட்ட பாடு இருக்குதே... அப்பப்பா...

இன்னுமொன்று நானும் நீயும் நமது நண்பர்களும் ஆரம்ப காலங்களில் பேசிக்கொண்டவைகளை மீண்டும் நினைவூட்டிப் பார்க்க முடியாமல் ஞாபகசக்தி இழந்திருப்பதும் கவலையாகவிருக்கின்றது. எத்தனையோ பேருக்கு நல்லது செய்யும் உனக்கு இப்படி ஒரு பலயீனம் இருப்பது இதுவரை உன் அப்பாவுக்குத் தெரியாமல் இருப்பது உனக்கும் உன் அப்பாவுக்குமான உறவில் உள்ள விரிசல்களை காட்டுவதாய் அமைகின்றது. ஒரு முறை உன் குடும்ப வைத்தியர் தவிர்த்து பிறிதொரு வைத்தியரிடம் உன்னைப் பரிசோதனை செய்து பார்.

இறுதியாக உன்னுடைய ஆடைகள், உடலமைப்புக்கள் பற்றி சொல்லியாகவேண்டும். சென்ற வருடம் உன்னுடைய ஆடைகளும் நீ அலங்கரித்துக் கொண்ட விதங்களும் மிகவும் நன்றாகவிருந்தது. ஆனால் இந்தவருட உன்னுடைய அலங்கரிப்புக்கள் பிடிக்கவேயில்லை. என்ன மாதிரி இருக்கிறது. நீ ஒரு வெள்ளைக்கர வீட்டுப் பிள்ளை உன் ஆடை அலங்காரங்களில் நீ அதிகம் சிரத்தையெடுப்பது வரவேற்கத்தக்கது தான் அதற்காக மொக்குத் தனமாகவெல்லாம் அலங்கரித்து எங்களுக்கு வெறுப்பை உண்டுபண்ணாதே... சென்ற வருட அலங்கரிப்பில் என்ன குறை ? யார் கேட்டார்கள் நீ இப்பொது இந்தமாரித்தான் அலங்கரிக்க வேண்டுமென்று ?

ஆரம்பத்தில் நீ இருந்த விதமும் உன் அலங்கரிப்புகளும் தான் என்னை மிகவும் கவர்ந்தது. நீ பழையபடி மாறிவிடு உன் கர்வம் அகங்காரம் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு உன்னையே நம்பியிருக்கும் உன் நண்பர்களுக்காக ஒரு முறை மாறித்தான் பாரேன்...

இப்படிக்கு
உன் அன்பு
நண்பன்


வார்த்தைகளால் மாறும் வாழ்க்கை

பிரச்சனைகள் இல்லாத மனிதனே இல்லையென்று சொல்வார்கள், யாரோடு பேச்சுத் தொடுத்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றி கூறாமல் தன் பேச்சை நிறுத்த மாட்டார்கள் என்று சொல்லுமளவிற்கு பிரச்சனைகள் இவ்வுலகத்தில் நிறைந்து காணப்படுகிறது. தொழில்நுட்பம் உலகை ஆளுகின்ற காலம் மறைந்து இனிவரும் காலங்களில் பிரச்சனைகள் தான் இந்த உலகத்தை ஆளப் போகிறதோ தெரியவில்லை. அப்படியாகாமல் இருக்க வேண்டும்.

மனிதன் தன் வாழ்வைப் பூரணப்படுத்துவதற்கு இறைவனால் வரமாக வழங்கப்பட்ட பார்வை,செவிமடுத்தல்,பேச்சு, நடத்தைகள் போன்றவைதான் இன்று குடும்பங்களில் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கின்ற பிரதான காரணிகளாய் அமைந்துவிடுகின்றன. குறிப்பாக எமது நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் பிறர் மனதில் ஏற்படுத்தும் தாக்கமானது மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

 நீண்ட காலப் பகை கொண்ட இருவரிடம் பகைக்கான காரணம் கேட்டால் எங்கோ ஒரு மூளையிலிருந்து பொறுக்கியெடுத்து சின்னதாய் ஒரு காரணத்தைச் சொல்வார்கள். அவர் இன்ன வார்த்தையைப் பயன்படுத்தி என்னிடம் கதைத்துவிட்டார் அல்லது தன்னையோ அல்லது தனக்கு வேண்டப்பட்டவர்களையோ வேறு கோணத்தில் பார்த்துவிட்டார் அல்லது தனக்குச் சொந்தமான பொருட்கள் சிலவற்றை அபகரித்துவிட்டார் என்பதாக காரணங்களை அடுக்குவார்கள். வெளியிலிருந்து பார்க்கும் போது ஒரு சில காரணங்களைத் தவிர மற்றயவைகள் சில்லறைத்தனமானதாகவும் ஒன்றுக்கும் பெறுமதியற்றதாகவும் இருப்பதைக் காணலாம்.

உயிர் இருக்கின்ற அனைத்தும் என்றாவது ஒருநாள் மரணத்தை சுவைத்தேயாகவேண்டும் என்பது நியதி. வார்த்தைகளும் அப்படித்தான்  அவைகள்  வெளிப்படுத்தப்படும் சந்தர்ப்பம், சூழல் என்பவற்றைப் பொறுத்து அவை உயிருள்ளதாகவும் மரணித்ததாகவும் கருதப்படுகின்றன. ஒரு வைத்தியர் அல்லது வக்கீலின் வார்த்தைகளை உதாரணத்துக்குக் எடுக்கலாம். அன்பையும் சிந்தனையைத் தூண்டக் கூடிய வகையிலமைந்த வார்த்தைகளுக்கு மரணம்கிடையாது என்பதனை  முன்னோர்கள் சொல்லிச் சென்ற பொன்மொழிகள் இன்றும் புலக்கத்தில் இருப்பதை வைத்து மதிப்பிடலாம்.

வார்த்தைகள் யாரை நோக்கி வெளிப்படுத்தப்படுகின்றது அந்த நபரின் அப்போதைய மனநிலை  என்பவற்றைக் கருத்தில் கொள்வதும் மிக அவசியம். பருவவயதினர் மத்தியில் மிகவும் இலசான வார்த்தைகளையே பிரயோகிக்கவேண்டுமெனும் சூழ்நிலைக்கு இன்றைய சமூகம் தள்ளப்பட்டுள்ளதுக்கு அண்மையில் இலங்கையின் குருநாகல் பிரதேச 16 வயது பாடசாலை மாணவியின் தற்கொலையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
வார்த்தைகள் அம்பைவிட வேகமானவையும் கூர்மையானவையும் என்று சொல்லப்படுகிறது, இந்த மாணவியின் விடயத்திலும் கூட பாடசாலை அதிபரின் நாவிலிருந்து வெளியான வார்த்தைகள் மாணவியின் உள்ளத்தை வேகமாக பாதித்துவிட்டது என்பதை அவ் மாணவி எழுதிவைத்த இறுதிக் கடிதத்தின் மூலம் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. இறுதியில் மாணவி உயிருடனில்லை தற்கொலைக்கு காரணமாவிருந்தார் எனும் குற்றத்தில் அதிபர் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் எனக்குக் காயம் வருமளவு அடித்திருந்தாலும் பரவாயில்லை அந்தமாதிரி அவர் கதைச்சிருக்கக் கூடாது என்று சொல்லுபவர்களின் மூலம் தெளிவாகின்றது வார்த்தைகளினால் ஏற்படுத்தப்படும் வலியின் ஆழம். இவ்விடத்தில் என்னுடைய அனுபவமொன்றையும் பகிர்ந்து கொள்கிறேன். (சலித்துக்கொள்ளாதீர்கள்) இது நடைபெற்று சுமார் 5 வருடங்கள் இருக்கும், செஞ்சிலுவைச் சங்கத்தில் நான் கடமைசெய்யும் போது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று சில தகவல்களைத் திரட்டவேண்டியிருந்தது. முன்னரே தயாரிக்கப்பட்டிருந்த வினாக் கொத்தினை அடிப்படையாக வைத்து தகவல்களைத் திரட்டிக்கொண்டிருந்தேன், பெரும்பாலான வீடுகளில் குடும்பத் தலைவர்கள் அன்றைய தினம் வீட்டிலிருந்ததினால் எல்லாவகையான வினாக்களுக்கும் தெளிவாகவும் விரைவாகவும்  பதில்களை அளித்தார்கள். ஒரு வீட்டில் குடும்பத் தலைவன்(கணவன்) வெளியில் சென்றிருப்பதாக குடும்பத் தலைவி(மனைவி) கூறி தேவையான தகவல்களை தான் தருவதாகவும் சொன்னார். யார் சொன்னாலென்ன நமக்குறிய தகவல்கள் கிடைத்தால் வேலை இன்றோடு முடிந்துவிடும் என்றெண்ணி அந்த அம்மாவிடம் எனது வழமையான வினாக்களைத் தொடுக்க ஆரம்பித்தேன்.

கணவன்/மனைவி/ வீட்டில் யாராவது போதைப் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருக்கின்றார்களா ? என்ற ஒரு வினாவினைத் அந்த அம்மாவிடம் நான் தொடுத்த போது அவர் பதட்டமடைந்து அழுதுகொண்டே சொன்னார், என்ன மகன் இப்பிடிக் கேட்குறீங்க அவர் (கணவன்) பீடி கூட குடிப்பது கிடையாது என்று சொன்னார். ஆனாலும் அவருடைய பதட்டமும் அழுகையும் குறையவில்லை. அந்த அம்மாவின் செயல் என் உள்ளத்தை வேகமாய் பாதித்துவிட்டது, ஏன் இப்படியான ஒரு கேள்வியைக் கேட்டேன் என்று என் மனதுக்குள் போராட்டமே நடந்துகொண்டிருந்தது, அந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் கூட என் இதயத்துடிப்பு அதிகரித்துவிடுகின்றது.

எனக்குறிய தகவல் கிடைக்க வேண்டும் என்பதும், தற்போது போதைப் பாவனை சாதாரண ஒன்றாக மாறிக்கொண்டிருப்பதுவும் தான் என்னை எதுவுமே சிந்திக்கிவிடாமல் அவ் வினாவினைத் தொடுப்பதற்கு காரணமாய்  அமைந்திருக்க வேண்டும். ஆனால் நான் தொடுத்த வினா அந்த அம்மாவின் உள்ளத்தில் அழுதுவிடுமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த சம்பவத்திற்குப் பின்னர் அந்த வினாவினை தவிர்த்தே எனக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டேன்.

இதே போன்றுதான் எமக்குத் தேவையானவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பின்விளைவுகள் எதையுமே சிந்திக்காமல் குறிப்பிட்ட அந்த நொடிக்கான இலாபத்தினை மட்டும் மையமாகக் கொண்டும் எம்மால் வெளிப்படுத்தப்படும் வார்த்தைகள் மற்றும் செய்கைகள் மற்றவர் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அவர்களுடைய எதிர்கால வாழ்விலும் தாக்கம்  செலுத்தக்கூடியதாக அமைந்துவிடுகின்றது.

மேலும் முன்கோபம், பொறுமையின்னை போன்றவைகளும் மனங்களில் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய வார்த்தைகளை நாவிலிருந்து வெளிப்படுத்திவிடுகின்றன. உள்ளத்திற்கு நிம்மதியை, சந்தோஷத்தைக் கொடுப்பதில் வார்த்தைகளின் பங்கு மிக முக்கியமானது என்று சொல்வதில் தவறில்லை என்றே கருதுகிறேன். இவ்வாறு அவசரத்தில் வெளிப்படும் (கெட்ட)வார்த்தைகளின் ஒரு சிறு பகுதியை கடலில் இட்டால் கடல் முழுவதும்  விரைவாக துர்வாடை மிக்கதாக  மாறிவிடுமென்று சொல்லப்படுகிறத. இன்னும், வார்த்தைகளை அளவுகோலாகக் கொண்டு சிலரது குணங்களை அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும்.

இதனால் தான் முன்னோர்கள் பேசுவதன் மூலம் வெள்ளிப் பாத்திரத்திம் கிடைக்குமென்றால் மௌனனமாக இருப்பதன் மூலம் தங்கப் பாத்திரத்திரம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்களோ தெரியவில்லை.

எப்படியோ நம்முடைய வார்த்தைகள் மற்றும் நடத்தைகள் மூலம் இன்னொருவருக்கு தீங்கு வராமல் இருக்கும் வரை நமக்கு சந்தோசம்தான். வார்த்தைகளை அளவோடு பேசி நீண்ட ஆயுளுக்கு அத்திவாரமிடுவோம்.சாதனைகள் சவாலானவை அல்ல

என் தேசத்து, என் கிராமத்து மக்கள் இப்போது சாதனையாளர்களை கௌரவப்படுத்த பழகிக் கொண்டார்கள். முன்னெரெல்லாம் சாதனைகள் நிகழ்த்திவரும் எம்மவர்களை அவர்களின் இறுதிச் சடங்குகளில்தான் இவர்கள் இன்ன இன்ன  சாதனைகள் புரிந்திருக்கிறார்கள்  என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் நிலமை இன்று தலைகீழாய் மாறிவிட்டது என்றே உணர்கிறேன். எம் தேசத்தவன் சந்திரமண்டலத்தில் சென்று சாதனை புரிந்தாலும் (புரிந்தாலும் அல்ல புரிவான்)  அவன் பூமிக்கு வந்து சேர்வதற்கு முன்னர் இன மத மொழி கலாச்சார வேறுபாடின்றி அவனைக் கௌரவப்படுத்த இன்று ஒரு கூட்டம் எம் தேசத்தில் உருவாகியிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியளிக்கிறது.

நேற்று நான் கலந்துகொண்ட பாராட்டு நிகழ்வொன்றில் தான் எனக்கு இப்படியான ஒரு கூட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை  உணர முடிந்தது. ஒரு சாதனையாளனை அவனது சொந்த கிராமத்தவர்கள் பாராட்டுகிறார்கள் என்பது சாதாரண விடயம். ஆனால் அதே சாதனையாளனை அவனது கிராமத்துக்கு அருகிலிருக்கின்ற கிராமங்களில் உள்ளவர்களும் பாராட்டுவதற்கு தயாராகவிருக்கின்றார்கள் என்றால் அதை நம்பமுடியாமலிருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை. மக்களின் மனங்கள் இப்போது சாதனைகளையும் சாதனையாளர்களையும் தேடியலைகின்றது , மக்கள் எம் தேசத்தின் குறைகளை இனங்கண்டுவிட்டார்கள்.  இலைமறை காய்களாக இருக்கும் சாதனையாளர்களுக்கு இனி பொருத்தமான களம் அமைய போகின்றது. இனிமேல் சாதனைகள் சாதாரணமாய் நிகழப்போகின்றது.

இந்தியாவின் கோவா மாநிலத்தில் சென்ற மாதம் 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடயிலான  லுசிபோனியா விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்து இலங்கையின் பதக்கப் பட்டியலில் மேலுமொரு தங்கப்பதக்கத்திற்கு இடமமைத்துக் கொடுத்தும் தன் தாய் நாட்டிற்கும் தான் பிறந்து வளர்ந்த தாய் மண்ணிற்கும் பெருமை சேர்த்திருக்கும் என் கிராமத்து சாதனையாளன் ஏ. எல் . எம் அஸ்ரப் இனை வாழ்த்தும் / பாராட்டும் நிகழ்வில் தான் நான் கலந்துகொண்டது.
நிகழ்வின் கதாநாயகன் நண்பன் அஷ்ரப்
காலை 9 மணிக்கு ஆரம்பித்து கிராமத்தின் முக்கியமான தெருக்களுடான பயணித்த பாராட்டு ஊர்வலம் பிற்பகல் 2 மணிவரை சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தை முடித்திருந்தது. சாதனை நாயகனுக்கு கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலுமிருந்து வாழ்த்துக்களும் பூ மாலைகளும் குவிந்தன.ஒவ்வொரு தாயும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். வயதான பாட்டிகளின் முத்தத்தால் சாதனை நாயகனின் முகம் நனைந்து போனது,பூக்களும் மாலைகளும் கொண்டு நாயகனது உடல் நிறைந்துவிட்டது, ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்களும் தான் வாழ்த்துச் சொல்லும் போது தன்னுடைய  வயிற்றிலிருக்கும் குழந்தைகளும் உன்னைப்போல் சாதனை புரியவேண்டும் என்று சொல்லிக் கொண்டனர்.

நீண்ட காலத்தின் பின்னர் குலவைச் சத்தங்களை எழுப்பி குடும்பப் பெண்களும் சத்த வெடிகள் வெடித்து கிராமத்து இளைஞர்களும் பாராட்டு ஊர்வலத்தை மேலும் மெருகேற்றியது சுமார் 15 வருடங்களுக்கு முன்னைய காலத்துக்கு என்னைக் கூட்டிச் சென்றுவிட்டது.(நல்லவேளை நண்பன் கையப் பிடிச்சி இழுத்து சுய நினைவுக்குக் கொண்டுவந்துட்டான் இல்லேன்னா நான் இப்ப 10 வயசு சிறுவனாத்தான் இருந்திருப்பேன்) தலைக்கவமசணிந்து மோட்டார் சைக்கிளில் போகும்போதும் போக்குவரத்துப் போலீஸைக் கண்டால் பயந்துகொள்ளும் சாரதி அனுமதிப்பத்திரமில்லாத இளைஞர்கள் போக்குவரத்துப் போலீசுக்கு முன்னால் தலைக்கவசமணியாமல் தைரியமாக மோட்டார்சைக்கிளோட்டிச் சென்றதை பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள், காற்றுவீசும் போது தூற்றிக் கொள் என்று இதைத்தான் சொல்வார்களோ (மக்கா நாளைக்கு மாட்டினீங்க சங்குதான் போலீஸ் மைண்ட் வாய்ஸ்). அரசியல் பிரமுகர்களும் போலீஸ் அத்தியட்சகர்களும் மூவின மதத் தலைவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு சாதனை நாயகன் அஸ்ரபிற்கு வாழ்த்துத் தெரிவித்தது கிராமத்தின் மூவின மக்களின் ஒற்றுமையையும் காட்டுகிறது என்று அரசியல்வாதிகள் போல் பேசுகிறது என் மனசு.

என் கிராமத்தான் என் மச்சான், என் நண்பன், என் மாமன், என் மன்னன் ,என் தளபதி அஸ்ரபுக்கு நானும் என் வாழ்த்தை என் வலைத்தளமூடாக தெரிவிக்கிறேன்  நீங்களும் அவருக்கு ஒரு வாழ்த்தைக் கூறிச் செல்லுங்கள். அஸ்ரப் நீ இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டும் நீ ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்துகொண்டு அதிலும் வெற்றியீட்டி எம் தேசத்துக்கும் எம் கிராமத்துக்கும் பெருமை சேர்க்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பிரதேச சபைத் தலைவர் மற்றும் கிராமத்தின் முக்கிய பிரமுகர்களுடன்

பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொன்னாடை அணிவித்தபோது

முன்னாள் ரக்பி தக்கப்பதக்க வின்னரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஜீட் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்த போது

இந்தவிடத்தில் இன்னுமொருத்தருக்கு நான் வாழ்த்துச் சொல்லியே ஆகவேண்டும் இவருக்கு ரிஸ்க் எடுப்பது சும்மா ரஸ்க்கு சாப்பிடுறமாதிரி,  களத்துல இறங்கினா இவரு தோனி, இவருக்கு இருக்கிற ஒரே ஆசை சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதில இவருடைய அம்மாவை வைத்து அழகு பார்க்க வேண்டுமென்று, நேற்று இவருடைய அந்தக் கனவும் நிறைவேறிவிட்டது, ஆமாங்க சூப்பர் சிங்கரின் தோனி திவாகர் நேற்று டைட்டில் வின்னராகிட்டார் என்கிறது எல்லோருக்கும் தெரிந்த விடயம்

திவாகர் வின்னரானதும் அவருடை முத்திலும் அவர் பெற்றோர் முகத்திலும் தெரிந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. திவாகர் இன்னும் பல வெற்றிகளைப் பெற வேண்டுமென்று நானும் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்

ஜானகி அம்மாவிடம் திவாகர் வாழ்த்துப் பெறுகின்ற காட்சி


பெண்கள் அதிக வருடம் உயிர் வாழ்வது எதனால்?

எமது முன்னோர்களில் பெரும்பாலானோர் நோய்களின் தாக்கமின்றியும் மேலும் அதிகமான வருடங்கள் உயிர்வாழ்ந்ததாகவும் அறிகிறோம். அதற்கு பிரதான காரணமாக அப்போதைய உணவுப் பழக்கவழக்கத்தினை கூறுகிறார்கள். இரசாயணக் கலவையற்ற உணவுகள் அந்த காலகட்டங்களில் மலிந்து இருந்ததனால், அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைத்தது. இருந்தும் அவர்களிடம் மருத்துவ  வசதிகள் குறைவாகக் காணப்பட்டதினால்,ஏற்படுகின்ற ஒரு சில நோய்களுக்கு சிறந்த மருத்துவமின்றி சிலர் உயிரிழந்ததாகவும் அறிகிறோம்.   

இன்றைக்கு ஒரு சில கிராமப் புறங்களில் மட்டும் இரசாயண கலவையற்ற இயற்கை உணவுகள் கிடைக்கின்றது. கிராமத்து ஆண்கள் பொருத்தமான வேலைகள் தேடியும் இன்னும் வேறுபல வேலைகளுக்காகவும், கிராமத்து இளைஞர்கள் தங்களுடைய படிப்பு தொடர்பாகவும் அடிக்கடி நகர்ப்புறங்களுக்கு போவதனால் நகரத்து இரசாயன உணவுகளை இவர்கள் உண்ணவேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆகவே கிராமத்தில் விளையும் இயற்கை உணவுகளை கிராமத்துப் பெண்களே உண்பதற்கு அதிக சந்தர்ப்பம் இருக்கிறது.

இன்றைக்கு உலக சனத்தொகையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுவருகிறது, இன்னும் சொற்ப வருடங்களின் பின்னர் இந்த முழு உலகத்தின் ஆட்சியும் பெண்களின் கைக்குக் கிட்டும் என்பது நிஜம்.

இன்றைய சூழ்நிலையில் சாலை விபத்துக்கள் தான் அதிகமான மரணத்தை ஏற்படுத்துகின்றன. பெண்களை விட ஆண்களுக்கு பொறுப்புக்களும் வெளியில் செல்லக்கூடிய தேவையும் அதிகமாக இருப்பதனால் சாலை விபத்துக்களில் அதிகமாக சிக்குவதும் ஆண்களேதான். சிகரட், போதைப்பொருள் பாவணை போன்றவற்றை அதிகமாக பாவிப்பதும் ஆண்கள் தான். பெண்களும் ஆண்களுக்கு போட்டியாக போதைப்பொருள் பாவனையில் இப்போது அதிரடியாக இறங்கியிருக்கின்றனர், இருந்தபோதிலும் விகிதாசார ரீதியில் பார்க்கும் போது ஆண்களே அதிகம்.

இன்னும் சுரங்கமகழ்தல், பெரிய பெரிய கட்டிடங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடல் போன்ற கடினமான வேலைகளை அதிகம் செய்வதும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே இப்படியான காரணங்கள் மூலம் ஆண்கள் அதிகமாக இளம் வயதுகளில் இறந்துவிடுகின்றனர். எனவேதான் பெண்கள் ஆண்களைவிட அதிகமான வருடம் உயிர் வாழ்கிறார்கள். 

மேலே சொன்ன விடயங்கள் யாவும் கற்பனை என்று சொல்லி பதிவை அரைகுறையாக முடிக்க விரும்பவில்லை, மேலே சொன்னவை அனைத்தும் என்னுடைய கருத்து ஆனால் நான் கீழே பதிவிடும் புகைப்படங்கள் யாவும் பெண்கள் அதிக வருடம் உயிர் வாழ்வதற்கான காரணம் என்று கூறி சில இணையத்தளங்களில் பதிவிடப்பட்டவைகளை தொகுத்திருக்கிறேன்.
இப்பவாச்சும் நம்புங்கப்பா :P