Looking For Anything Specific?

ads header

நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கின்றது

சில மரங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களை எண்ணிக் கணக்கெடுத்துவிட்டு  கனிகளைத் தருகின்றன. சில மரங்கள் உங்கள் பரம்பரையில் உள்ளவர்களுக்கெல்லாம் கனி தருகின்றன.
கடற்கரையோரமாக அமர்ந்திருக்கும் மலைத் தொடரில் ஒரு மலையைத் தொடும்போது அது எழுந்து வாலைக் கிளப்பிக் கொண்டு கடலை நோக்கி ஓடிச் செல்கிறது இதை கடும் கற்பனை என்று விலகிச் சென்றுவிடாமல் நம்பி வாசியுங்கள் நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கும்.

கவிதைகளை எழுதுபவர்களிடமே அதற்கான விளக்கமும் கேட்கவேண்டிய கவிஞர்கள் மத்தியில் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று சொல்வது சரியாகத்தான் தோன்றுகிறது எனக்கு. எண்ணிகையில் அதிகளவான கவிஞர்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை தற்போதுள்ள சமூக தளங்களையே சேரும் என்று சொல்வதும் தப்பில்லை.

கவிதைகளுக்குத் தட்டுப்பாடு என்பதே கிடையாது உறவுகளின் பிரிவுகளையும், வாழ்க்கைப் பயணத்தின் வெற்றிகளையும் தோல்விகளையும், இன்னும் பொழுதுபோக்குக்காகவும் வேறு வழியில் சொல்லப் போனால் கிறுக்குத் தனமாகவும் கவிதைகள் உருவாகிக்கொண்டேயிருக்கின்றது. ஆனால் ஒவ்வொரு கவிதையும் ரசிக்கக் கூடியதாகவும் பாராட்டப் படக் கூடியதாகவும் இருக்கின்றது என்பது உண்மை. இப்படியாக எழுதப்படும் கவிதைகள் உரியமுறையில் பாதுகாக்கப்படுவதில்லை என்பதும் இங்கு சொல்லப்படவேண்டியதே.

அதிகமாக கவிதைகள் புலங்கும் இடமாக சமூகதளங்களை சொல்லலாம். பேஸ்புக்கிலும் தனிப்பட்ட வலைத் தளங்களிலும் அதிகமான கவிதைகள் உட்பட கருத்தில் எடுத்துக்கொள்ளக் கூடிய ஆக்கங்கள் பதிவிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இப்படிப் பதிவிடப்படும் ஆக்கங்கள், கவிதைகள் களவாடப்படுவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, அதேபோன்று எனது கவிதைகள் களவாடப்பட்டு புத்தகங்களாக வெளிடப்பட்டுள்ளன என்று சமூக தளங்களில் புலம்பும் கவிஞர்களும் இல்லாமலில்லை. பிரபல கவிஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இணையத்தில் பதியப்படும் கவிதைகள் உட்பட ஆக்கபூர்வமாக அனைத்துப் பதிவுகளையும் ஆவணப்படுத்தி நூலுருவாக்கம் செய்தால் நன்றாக இருக்கும். தமிழ் பதிவர்கள் மத்தியில் இவ்வாறான ஒரு குழு/ அமைப்பு உருவாகுமானால் இலக்கியத்துறையில் எம்மை யாராலும் முந்திவிட முடியாது. பதிவர்கள் சந்திப்பு போன்றவை இதற்கு அடித்தளமிடும். இடம்பெறவிருக்கும் அடுத்த பதிவர்கள் சந்திப்பில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் இருக்கும் பதிவர்களின் நலன் கருதி இவ்வாறான குழுவொன்றை உருவாக்க முயற்சி செய்யுமாறு தொடர்புடையவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

"நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கின்றது" அதிகமாக சிந்திக்க வேண்டாம் சொல்லிவிடுகிறேன், அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பின் பெயர்.

கவிஞரைப் பற்றி சொல்லப்போனால் இன்றைய சமூகத்துக்குத் தகுந்தாற்போல தன்னை இணையத்துக்கு அடிமைபடுத்தி வைத்திருந்தாலும் தன் உள்ளத்தில் தோன்றும் சிறந்த கவிதைகளை இணைய நட்புகளிடம் இவர் பகிர்ந்துகொள்வது மிகக் குறைவு. இலக்கியத் திருட்டு கவிதைத் திருட்டினை காரணமாகச் சொல்கிறார். அவர் சொல்வதுவும் உண்மைதான்.

விருதுகளுக்காகவும் பாராட்டுக்காகவும் என பல கவிஞர்கள் இருக்கும் இன்றைய நாளில் விருதுகளை விரும்பாத ஒரு கவிஞராக இவரை நான் காண்கிறேன். எப்படியென்றாலும் உலகளவில் தான் பேசப்பட வேண்டும் என்ற ஒரு சிறிய ஆசையாவது இவர் மனதில் இருக்கும் என்பது எனது எண்ணப்பாடு.
நூலாசிரியர் அகமது ஃபைசல்
 2006 ஆம் வருட காலப்பகுதியில் "ஆயிரத்தோராவது வேதனையின் காலை" என்ற கவிதைத் தொகுப்பினை மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தால் வெளியிட்டுவைத்தார். இந்தக் கவிதைத் தொகுப்பில் என்ன விடயத்தைச் சொல்லவருகிறார், சொல்லியிருக்கிறார் என்பவை புரியவில்லை என்று இன்னொமொரு கவிஞர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

2012 ஆம் வருட காலப்பகுதியில் "நிலத்தோடு பேசுகிறேன்" என்ற கவிதைத் தொகுப்பினை தென்னிந்தியாவின் புது எழுத்து பதிப்பகத்தினால் வெளிட்டார். இந்த இரண்டு தொகுப்பும் முற்றிலும் மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டமைந்திருக்கின்றது. என்னைக் கேட்டால் இப்படியான கவிதைகளை இதுவரை யாரும் எழுதவில்லை என்றே சொல்வேன்.

இவரின் அடுத்த வெளியீடுதான் காகம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கின்றது. இந்தத் தொகுப்பும் கூட முன்னர் வெளிட்ட இரண்டு தொகுப்புகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. எமது சிந்தனையில் அடிக்கடி வந்து செல்லக் கூடிய விடயங்களைக் கூட தன் கற்பனைத் திறமையினால் அழகாகவும் நேர்த்தியாகவும் கவியாக்கியிருக்கிறார்.

இன்றைய நாட்களில் நம்மில் அநேகமானவர்கள் தான் வீட்டைவிட்டு வெளியில் கிளம்பும் போது தன்னுடைய கையடக்கப் பேசியை மறந்து வீட்டில் வைத்துவிட்டு திரும்பி வந்து அதனை எடுத்துக் கொள்கிறோம். நான் கூட இதற்கு விதிவிலக்கல்ல... கவிஞர் இதனை கடலோடு ஒப்பிடும் விதம் ரசிக்கக் கூடியது.

அழகிய கடல்தனை இப்படிச் சீர்குலைக்கலாம்
தொலைபேசியை எடுக்க மறந்து 
ஒரு அலை
திரும்பிச் செல்கின்றது   

இன்னும் சொல்வதென்றால் கவிதைகளுக்கு இவர் இடும் தலைப்பானது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. இந்தக் கவிதையை ஆயிரம் வருடங்களுக்குப் பின் வாசிக்கவும் ,விடியும் போது இந்தக் கவிதை இருக்கோ இல்லையோ, துப்பாக்கியை மேலுயர்த்தி சுட்டவுடன் ஓடும் படம் போன்ற தலைப்புக்கள் கவியுலகில் இதுவரை நான் வாசித்திராததும் பழக்கப்படுத்திராததுமான தலைப்புக்களாக இருக்கின்றன.
இன்றைய இலக்கிய உலகில் சமூகத்திற்குப் பரிச்சயமற்ற கவிதைகளை கொடுக்க முற்படும் மிகக் குறைந்த சிலரில் இவரும் ஒருவராக இருக்கிறார். நவீன கவிதையின் அடுத்த நிலையாகவும் இது இருக்கலாம்.

மேலதிக தேவைகளுக்கு எனது மின்னஞ்சல் முகவரியோடு தொடர்புகொள்ளுங்கள் jasmimoosa@gmail.com


நூல் தலைப்பு : நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கின்றது
ஆசிரியர் : அகமது ஃபைசல்
முதல் பதிப்பு : ஜூலை 2013
வெளியீடு : காகம் பதிப்பகம் மஃமுத் ஆலிம் வீதி வாழைச்சேனை
விலை : 340 /=


Post a Comment

11 Comments

  1. நல்லதொரு நூல் அறிமுகம்... நன்றி... அகமது ஃபைசல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்லதொரு அறிமுகம்இமிக்க நன்றியும் பாராட்டுகளும்.இப்போதெல்லாம் தலை தடவி விடும் படைப்போ இல்லை புரட்சி படைப்போ தெரிவு செய்வது கடினமாயு;ளது.தலை சுற்றுகிறது.பல தடவை வெறும் கையுடன் திரும்பியதுண'டு.வாழ்த்துக்களும் நன்றியும்.

    ReplyDelete
  3. அருமையானதொரு நூலின் அறிமுகம்..
    பகிர்வுக்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  4. நல்ல நூல் அறிமுகம்.விலை கொஞ்சம அதிர்ச்சியுறச்செய்கிறது.

    ReplyDelete
  5. நூல் அறிமுகப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சகோதரரே .பகிர்வுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  7. ஆழகானதொரு நூல் விளக்கம் நண்பா. பாராட்டுகள்...

    ReplyDelete
  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_39.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  9. ஏன் இப்போதெல்லாம் பதிவிற்கு இடைவெளி அதிகம் விழுகிறது...

    ReplyDelete
  10. நூல் அறிமுகம் அருமை...

    ??கவிதைகளை எழுதுபவர்களிடமே அதற்கான விளக்கமும் கேட்கவேண்டிய கவிஞர்கள் மத்தியில் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று சொல்வது சரியாகத்தான் தோன்றுகிறது எனக்கு. எண்ணிகையில் அதிகளவான கவிஞர்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை தற்போதுள்ள சமூக தளங்களையே சேரும் என்று சொல்வதும் தப்பில்லை.??



    எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்


    ReplyDelete