கமல் + பீ ஜே = விஸ்பரூபம்... ?

மதங்கள் யாவும் நலவையே போதிக்கின்றன என்பது என் தாழ்மையான எண்ணப்பாடு. எம்மில் பலர் எல்லா மதமும் சம்மதமே எனும் எண்ணப்பாட்டுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.
 
இன்று விஸ்பரூபத்துக்கு முஸ்லிம்களும் + சில அரசியல்வாதிகளும் எழுப்பியுள்ள எதிர்ப்பின் மூலம் படத் தயாரிப்புக் குழுவுக்கு அதனை விளம்பரப்படுத்தல் செலவு அவசியப்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன். இது திரையுலகின் புதிய விளம்பரப்படுத்தல் யுக்தியாகவும் இருக்கலாம் .

நாத்திகம் பேசுபவர்களில் பலர் நாத்திகர்களாகவே இல்லை என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் சார்ந்த அல்லது அவருக்குப் பிடித்தமான கடவுளுக்குத் தலைவணங்குகிறார்கள் என்பதே உண்மை.

நடைமுறை வாழ்வியலுக்குப் பொருத்தமான கருத்துக்களையும் சம்பவங்களையும் கருவாக வைத்து  திரைப்படங்கள் எடுக்கப்பட்ட காலம் விரைவாகக் கடந்து சென்றுவிட்டது. இப்போதிருக்கும் பல முன்னணி இயக்குனர்களும் அந்தக் காலகட்டத்தில் அழகான கருத்துக்களைக் கொண்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார்கள். அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது. அதன் மூலம் தான் அவர்களால் இன்று வரை திரையுலகில் நிலைத்திருக்க முடிந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது

ஆனால் இன்று நல்ல கருத்துக்களைக் கொண்ட திரைப்படங்கள் வெளிவருவதென்பது மிக அரிதாகவே இருக்கிறது. இயக்குனர்கள் + தயாரிப்பாளர்களுக்கு நல்ல கருக்கள் கிடைக்கவில்லையோ அல்லது ரசிகர்கள் நல்ல கருத்துள்ள திரைப்படங்களை விரும்ப மறுக்கிறார்களோ தெரியாது :(

சில திரைப்படங்கள் குறிப்பிட்ட சில சமூகங்களை முன்வைத்து ஒளிப்படமாக்கப்படுவதும் பேசப்பட வேண்டிதே. சமூகம் சார்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் போது நடுநிலமையினைக் கையாள வேண்டியது திரைப்படத் தயாரிப்புக் குழுவின் முக்கிய பொறுப்பாகும். இலாபமீட்ட வேண்டுமென்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவது முட்டாள் தனமும் சுயநலனுமாகும். சிறந்த கலைஞனிடம் இவையிரண்டும் இருக்கமாட்டது என்பது என் கணிப்பு.

தன்னுடைய செயற்பாட்டினால் பாதிப்புகள் அதிகமாகும் எனத் தெரியவரும் போது அதைத் தவிர்ப்பதே நல்லது இதைக் கூட உணராத அளவுக்கு  திரையுலகத்தினர் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. கலையா சமூகமா என்று பார்க்கும் போது சமூகத்துக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். சமூகமில்லாவிட்டால் கலை அங்கு தனிமரம்தான்.

கமல் அங்கிள் நீங்க திரைப்படம் தயாரிக்குறிங்க... உங்க படமென்றாலே அதற்கு விளம்பரப்படுத்தல் அவசியப்படாது. உங்களுக்கு பல கோடி ரசிகர்கள் எல்லா மதத்துலயும் இருக்கிறார்கள். பலரின் மனதினையும் மதத்தினையும் புண்படுத்தி காணும் இலாபத்தில் நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்கப் போகிறீர்கள்...

உங்களுக்கு எந்த மதத்திலும் நம்பிக்கையில்லை நீங்கள் பிறந்து ஒரு ஐம்பது அல்லது அறுபது வருடங்கள் இருக்கும், ஆனால் மதங்கள் பிறந்து ஆயிரம் வருடங்கள் பல கடந்து விட்டன. உங்களின் இந்த அறுபது வருடகால வாழ்க்கையில் எல்லா மதத்தையும் ஆய்வு செய்த பின்னர்தான் உங்களுக்கு மதங்கள் மீதான நம்பிக்கை இல்லாமல் போயிருக்கும்... அவ்வாறே நினைக்கிறேன்

நீங்கள் ஆய்வு செய்ததில் உங்கள் அறிவுக்கு எது சிறந்த மதம் என்று ஒரு தீர்மானம் எடுக்க முடியாமல் போய்விட்டது. அது உங்களின் பலவீனமே தவிர மதங்களைப் போதித்தவர்கள்  மற்றும் உருவாக்கியவர்கள் செய்த தவறென்று கூறவே முடியாது. உங்களுக்கு முதல் உங்களை விட சிறந்த அறிவாளிகள் இந்த உலகில் வாழ்ந்து மதங்களில் உள்ள சிறந்தவைகளை எடுத்துச் சொல்லியும்விட்டார்கள்.

சமூகத்தில் வெளிக்கொண்டு வர வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன. சில விடயங்கள் சார்ந்து சமூகம் விழிப்புணர்வுக்குட்படுத்த வேண்டிய நிலமை இன்றும் இருக்கின்றது, பணம்தான் தேவையெனில் அதனைப் பெருக்க பல வழிகளும் இருக்கின்றன.

இதை நான் உங்களிடம் மட்டுமே கேட்பதாக கருத வேண்டாம். திரையுலகிலும் இன்னும் பிற செயற்பாடுகளின் மூலமும் மனங்களையும் மதங்களையும் நோகடிக்கும் விதத்தில் செயற்படும் ஒவ்வொருவரிடமும் கேட்கிறேன்.

பீ ஜே அங்கிள் உங்களின் மதப் போதனைகள் கண்டு உங்களுக்கு பல இஸ்லாமிய சகோதர்கள் ரசிகர்களாகிவிட்டார்கள். இஸ்லாம் தொடர்பான பிரச்சனைகள் சிலவற்றில் உங்கள் கருத்துக்களுக்கும் முக்கியத்துவமளிக்கின்றனர்.

இப்படி பலரினால் முக்கியத்துவமளிக்கப்படும் நீங்கள் உங்கள் பேச்சுக்களிலும் செயற்பாடுகளிலும் நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். உங்கள் சொற்பொழிவுகளைக் கேட்டு நீங்கள் இஸ்லாத்தில் குழப்பத்தினை உண்டு பண்ணிவிடுவீர்களோ என்று பல முறை அஞ்சியிருக்கிறேன்

உங்கள் பிரச்சார முறை தலையைத் தடவி கண்ணைப்பிடுங்குவதைப்  போல் இருக்கிறது. பிற மதங்களின் தவறுகள் இருக்கின்றன என்று பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி அதன் மூலம்  இரண்டு பிற மதத்தவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்குறீர்கள் ஆனால் நீங்கள் அறிந்தே இரண்டாயிரம் பேர் உங்கள் போதனையின் மூலம் இஸ்லாத்தில் வெறுப்புக் கொள்கிறார்கள் என்பது உங்கள் ஒவ்வொரு மார்க்கச் சொற்பொழிவின் பின்னும் எழும் எதிர்ப்புக்கள் மூலம் புலனாகிறது.

விஸ்பரூபம் தொடர்பான உங்கள் பகிரங்கமான இந்த எதிர்ப்பின் மூலம்  சமூகங்களுக்கு நலன்கள் இருந்தாலும் கமலின் தனிப்பட்ட வாழ்வினைக் குறை கூறியதனால் அவ் நலன்களும் கெடுதிகளாக மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது.
உங்களின் உண்மையான சுய ரூபத்தினை கமல் ஸ்ரூதி தொடர்பாக நீங்கள் கூறிய கூற்று வெளிக்காட்டிவிட்டது. முன்னரை விட இக் கருத்தின் பின்னர் உங்கள் மத போதனைகளை கேட்பதற்கு பல முஸ்லீம் சகோதரர்களுக்கு கூட விருப்பமில்லாமல் இருப்பதுவும் சொல்லப்பட வேண்டியதே

மேலும் விஸ்பரூபம் விடயத்தில் நீங்கள் பயன்படுத்திய குர் ஆன் வசனத்தினையும் சற்று கவணித்துப் பயன்படுத்துங்கள்

அவர்கள் வரம்பு மீறினால் அது போல் நீங்களும் வரம்பு மீறலாம். திருக்குர்ஆன் 2:194 

இந்த வசனத்தை முழுமையாக படியுங்கள் புனிதமிக்க மாதங்களில் காபீர்கள் போர் செய்வதற்குத் தயாராகிவிட்டு அதில் அவர்கள் வரம்பு மீறினால் மாத்திரமே முஸ்லிம்களையும் வரம்பு மீறுமாறு சொல்லப்பட்டுள்ளது. இவ்வசனம் இவ்விடத்தில் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது தானா என்பதை சற்று கவணித்துப் பயன்படுத்துங்கள்.
இந்த வசனத்தின் முக்கியத்துவம் புனிதமிக்க மாதங்களில் போர் செய்வது கூடாது என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன் அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
 
நபி(ஸல்) அவர்களின் சுன்னாக்களை முற்றுமுழுதாக பின்பற்ற வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் கொள்கைச் சகோதரர்களும் தங்களது கருத்துக்களை மிகவும் ஆவேசமாகவும் கீழ்த்தரமுமாகவே வெளிப்படுத்துகிறீர்கள் போல் தோன்றுகிறது.

பல இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் விஸ்பரூபம் வெளியானால் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் தயாராகுங்கள் என்று ஒரு வித குழப்ப மனநிலையுடன் வெறி கொண்டவர்களாக பதிவிடுகிறார்கள். இப்படிப் பதிவிடுபவர்கள் முஸ்லிம்களின் எதிர்கால நிலமைகளையும் சற்று சிந்திக்க வேண்டும்.

விஸ்பரூபம் தயாரிக்கப்பட்டது சமூகத்தில் பிளவினை உண்டுபண்ணுவதற்காகத்தான் என்றால் விஸ்பரூபத்துக்கு எதிரான உங்கள் செயற்பாட்டின் மூலமும் சமூக பிளவு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் அமைந்திருந்ததே...

விஸ்பரூபம் போன்ற திரைப்படங்களை எதிர்ப்பது ஒரு புறமிருக்க, 

உங்கள் கருத்துக்களையும் சொற்பொழிவுகளையும் வேத வாக்காகக் கருதும் கொள்கைச் சகோதரர்கள் சிலருடைய  வலைப்பூக்களிலும் பேஸ்புக் பக்கங்களிலும் சினிமா திரைப்படங்களின் விமர்சனத்தையும் சினிமாப் பாடல்களை கொண்ட யூடியூப் லிங்குகளையும் ஜல்சா பக்கங்களில் லைக் பண்ணியிருப்பதையும் காண்கிறேன். இசையை ரசிப்பதும் சினிமாப் பார்ப்பதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இருப்பதாக ஏதாவது ஆதார பூர்வமாக கருத்துக்களைச் சொல்லி அவர்களை மூளைச் சலவை செய்திருக்கிறீர்களோ தெரியாது

எப்படியோ கமல் + பீ ஜே கூட்டணியில் விஸ்பரூபம் வெளிவரப் போகிறது வெளிவந்த பின் என்ன நடக்கப் போகிறது என்பதையும் பொருந்திருந்துதான் பார்த்திடுவோமே

என்னுடைய எண்ணத்தில் தோன்றியதை சொல்லியுள்ளேன் உங்கள் எண்ணத்தில் தோன்றியதை அழகாகச் சொல்லுங்கள.

ரொம்ப லோட்டா சொல்லிட்டேனோ... என்ன செய்யிறது ஒரு வாரத்துக்கு முதல் எழுதிய பதிவிது எடிட் செய்து பதிவிடுவதற்கு நேரம் கிடைக்கவே கிடைக்கவில்லை....

8 கருத்துரைகள்

Good Article. PJ should change his attitude.

Reply

முஸ்லிம்கள் இந்த படத்தை விளம்பரப் படுத்தவில்லை என்றால் "உண்மையாலும்" கமல்ஹாசன் தன வீட்டை பறிகொடுத்து விட்டு அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து இருப்பார்

படம் அவ்வளவு அபத்தம் பாவம் தமிழக மக்கள் ஏமாற போகின்றார்கள்

Reply

"படம் அவ்வளவு அபத்தம் பாவம் தமிழக மக்கள் ஏமாற போகின்றார்கள்"

நான் படம் பார்த்துவிட்டேன் படம் மிகவும் நன்றாக இருக்கின்றது.
சிலவேளை கமல் மீதான வெறுப்புடன் நீங்கள் படம் பார்த்திருப்பீர்கள் அதுதான் அபத்தமாக இருந்திருக்கும்

Reply

திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் மதம், அரசியல், விளம்பரம் செய்ததன் விளைவு 5% மக்களை 95% மக்களிடம் அந்நியப்படுத்தும் பேராபத்து ஏற்பட்டுள்ளது, பின்னணியில் 3% மக்களில் சிலர் இருக்கலாம் என்ற எண்ணமும் எழுகின்றது.மற்றபடி படம் மசாலா, பொழுதுபோக்கலாம்.

Reply

ஏதோ குட்டையைக் குழப்பி விட்டனர்.இனிமேல்தான் தமிழ் நாட்டு சினிமா பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும்.விதை விதைத்தவன் விதை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.பொறுத்திருந்து பார்ப்போம்.

Reply

மதங்களை மதிக்க வேண்டும் பொதுத்தளத்தில் இருப்பவர்கள் என்பது என் கருத்து ஆத்மா!

Reply

// நாத்திகம் பேசுபவர்களில் பலர் நாத்திகர்களாகவே இல்லை என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் சார்ந்த அல்லது அவருக்குப் பிடித்தமான கடவுளுக்குத் தலைவணங்குகிறார்கள் என்பதே உண்மை. //

The converse is more true.
Most of the so called theists don't believe in God. Hypocrites, at the best.

Reply

'உங்கள் கருத்துக்களையும் சொற்பொழிவுகளையும் வேத வாக்காகக் கருதும் கொள்கைச் சகோதரர்கள் சிலருடைய வலைப்பூக்களிலும் பேஸ்புக் பக்கங்களிலும் சினிமா திரைப்படங்களின் விமர்சனத்தையும் சினிமாப் பாடல்களை கொண்ட யூடியூப் லிங்குகளையும் ஜல்சா பக்கங்களில் லைக் பண்ணியிருப்பதையும் காண்கிறேன். இசையை ரசிப்பதும் சினிமாப் பார்ப்பதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இருப்பதாக ஏதாவது ஆதார பூர்வமாக கருத்துக்களைச் சொல்லி அவர்களை மூளைச் சலவை செய்திருக்கிறீர்களோ தெரியாது'தப்பு என்றால் தப்பு தான் கொள்கை சகோதரர்கள் செய்தாலும்.சிலருக்கு ஆர்வகோளாறு மிக அதிகமாகி விடுகிறது.
.... மூளைச் சலவை செய்திருக்கிறீர்களோ தெரியாது..தெரியாது என்பதை தெரிந்தது போல் எழுதி இருக்கிறேர்கள் நல்ல பதிவு நன்றி

Reply

Post a Comment