அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீதின் ஆட்டோகிராப்

ஒரு காலப்பகுதியில் அதிகமான நேரத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே தொலைத்திருந்தேன். ஆனால் இப்போது தொலைக்காட்சியைக் கண்டாலே தொலைவில் போய்விடுகிறேன். கிடைக்கும் ஓய்வு நேரங்களையும் இணையத்தில் செலவிடுவதனால் இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது மிக மிக குறைவு.

தைப்பொங்கல் தினமான நேற்று எதேர்ச்சையாக தொலைக்காட்சியை திறந்தேன் வசந்தம் தொலைக்காட்சியின் ஆட்டோகிராப் நிகழ்ச்சியில் முஷர்ரப்போடு சேர்த்து பிரபல அறிவிப்பாளர் பீ எச் அப்துல் ஹமீதையும் காணக் கிடைத்தது.

பீ எச் அப்துல் ஹமீத் எனக்கு மிகவும் பிடித்த அறிவிப்பாளர். அவர் குரலின் தெளிவும் கம்பீரமும் அழகான தமிழ் சொற்களின் உச்சரிப்பும் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கவணம் சிதராமல் பார்த்துக் கொண்டிருக்கத் தூண்டும். இவர் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்க பார்த்திருக்கிறேன் ஆனால் இவரை யாரும் நேர் காணல் செய்யும் நிகழ்ச்சிகளை நான் பார்த்தது கிடையாது. 

ஏற்கனவே சில பத்திரிகைகளில் பீ எச் அப்துல் ஹமீதுடைய நேர்காணல்களைப் படித்திருந்தாலும் அது நேரடியாக அவர் குரலில் அவருடைய அனுபவங்களைக் கேட்பது பார்ப்பது போல் இல்லாமையினால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடிப்போம் என்று முடிவெடுத்துவிட்டேன். தைப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக அது அமைந்திருந்ததும் நிகழ்ச்சியின் அரைவாசியைத் தவறவிட்டுவிட்டேன் என்பதையும் பின்னர் அறிந்து வருந்தவும் செய்தேன்.

நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய இடம் இயற்கைச் சூழல். பொருத்தமானதும் அழகானதுமான இடத் தெரிவு. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் முஷர்ரப் என் மண்னுக்குச் சொந்தக்காரர். மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கினார். மிகவும் மரியாதை கலந்த தொனியிலேயே அவருடைய வினாக்கள் பீ எச் அப்துல் ஹமீதை நோக்கியதாக இருந்திருந்தது. இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்வது போல் நிகழ்ச்சி அமைந்திருந்தது.


ஆட்டோகிராப் நிகழ்ச்சியின் இந்த நேர்காணலில் பல விடயங்கள் பிரபல அறிவிப்பாளர் சார்ந்து எனக்குப் புதிதாகவே இருந்தது. சினிமாத் துறையினுள் அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் நுழைந்த அனுபவம் ஏற்கனவே பத்திரிகைகளின் மூலம் அறிந்திருந்தாலும் அவர் பாடலாசிரியராகவும் திரைக்கதை வசன அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார் என்பது எனக்குப் புதிதே.

ஏற்கனவே தெனாலியின் ஆழங்கட்டி மழை தலாட்ட வந்தாச்சா என்ற பாடலில்  சில வரிகள் இலங்கை மண்ணுக்குச் சொந்தமாக இருப்பதாய் நான் உணர்ந்தேன். நேற்றுதான் அந்த வரிகளின் சொந்தக்காரர் பீ எச் அப்துல் ஹமீத் என்பது தெரிந்தது.

அதே போன்றுதான் கண்ணத்தில் முத்தமிட்டால் படத்திலும் இவர் பங்களிப்பு இருக்கிறதென்பது நேற்றுவரை எனக்குத் தெரியாமலே இருந்தது. signore signore என்று ஆரம்பிக்கும் பாடலில் இவர் பங்களிப்பின் அனுபவப் பகிர்வு மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது.

பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி பற்றி அவர் கூறியதும் அதில் இப்போதிருக்கும் பிரபல பாடகர்களை இனங்காண முடிந்ததையும் அழகாகக் கூறினார். எந்த வித தயக்கமுமின்றி வருமானத்துக்காகத் தான் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை செய்வதாகவும் அவர் கூறியது மெய்சிலிர்க்க வைத்தது.

ஒரு புதிய பிரபலத்தின் அனுபவப் பகிர்வுபோல் பிடித்தமான இடங்கள் நன்றி கூற விரும்பும் நபர்கள் ஊக்கமளித்தவர்கள் என எல்லோரையும் ஞாபகப்படுத்தினார் மிகப்பெரிய பிரபலம். தமிழ் அறிவிப்பாளர்கள் மத்தியில் இன்று வரை இவர் முதன்மை வகிப்பதற்கு இந்த எளிமைத் தன்மைதான் காரணமோ தெரியாது.

ஒரு பிரபலத்தின் அனுபவத்தினை அழகான  முறையிலும் ரசிக்கக் கூடிய விதத்திலும் பகிர்ந்த வசந்தம் தொலைக்காட்சிக்கும் அதனை அழகாக தொகுத்து வழங்கிய முஷர்ரபிற்கும் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும்.