மலிவாய் கிடைக்கிறது அன்பு இங்கே ...

போலிகளுடன் அசலும் சேர்கிறது ...
போலிகள் என்பதில் சற்றும் சந்தேகமில்லை நிஜமான  போலிகள் தான் அவைகள்...

சின்ன சின்ன சண்டைகள்
சில சந்தப்பங்களில் செல்லச் சண்டையாய் முடிவதுமுண்டு...

மூட நம்பிக்கைகளை சமூகத்திலிருந்து கழைவதற்காய் பகுத்தறிவாளிகள் எனும் ஆடையை உடுத்தியிருக்கும் சிலர்...

உலகம் பிரசவிக்கும் புதுப் புது கருவிகளை அதன் குறை நிறைகளோடும் முந்திக்கொண்டும் இதை வாழ் நாளில் எப்போவாது ஓர் நாள் நானும் அனுபவிப்பேன் என்று முனுமுனுத்துக் கொண்டு திரிபவர்களிடம் எந்த வித எதிர்பார்ப்புமின்றி எத்தி வைக்கும் தொழிநுட்ப வாதிகளாய் சிலர்...

என்றாவது ஓர் நாள் நானும் பிரபலமாவேன் என்ற எண்ணத்தில் காலடி எடுத்து வைத்து ஏன் தான் காலடி வைத்தோம் என புலம்பிக்கொண்டு திரியும் புதியவர்களும் இங்கே...

டிசம்பரில் உலகம் அழியப்போகிறது என கவலையுடன் சிலர். எதுவித கவலைகளும் இல்லாமல் தலைக்கும் தளபதிக்குமாய் சண்டையிடும் இன்னும் சிலருமிங்கே...

வரலாறுகள் போல் ஏடுகளில்  பதிக்க வேண்டிய கவலைகளையும் சந்தோஷங்களையும் ஓரிரு வரிகளுக்குள் மிக அழகாகவும் தெளிவாகவும் வேண்டியவர்களுக்கு உறைக்கும் வகையிலும் கவியாய் படைக்கவும் சிலர்...

பூமியின் இறுதி நாள் வரையிலும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தன் ஆயுளை பூமியின் ஆயுளுக்கும் மேலாக நினைத்தும் இன்னும் சிரிப்பை தாரை வார்த்தும் ஆயுளை அதிகரித்துக் கொண்டு வாழ் நாளின் மிகுதிப் பகுதிகளை வேற்றுக் கிரகங்களில் வாழ்வதற்காக மாத்தி யோசித்து மொக்கைகளால் எல்லோர் முகங்களிலும் புன்னகையின் அடையாளங்களை ஏற்படுத்திச் செல்லும் சிலரும்...சாக்கடைக்குள் இறங்கியிருக்கும் சிலரின் அழுக்குகளை அகற்றுவதற்காக வெளியில் நின்று கொண்டு அழுக்கிள் மூழ்கியிருப்பவனிடம் சுத்தத்தைப் பற்றி மனம் தளராது சொல்லிக் கொண்டும் தங்களை சிறந்த அரசியல் விமர்சகர்களாகவும் காட்டிக் கொள்ளும் சிலருமிங்கே...

உலகத்தில் என்னதான் நடந்தாலும் தானும் தன் நிலையும் என்று தான் கூற வந்த விடயத்தை  சொதப்பி இறுதியில் யாருக்கும் வலிக்காமலும் விடயத்தினைப் சரியான முறையிலும் பூர்த்தி செய்யாமலும் தானும் உயிரோடு இருக்கிறேன் என்று கூறிக்கொள்ளும் என்னைப் போன்றவர்களும் இங்கே....

இன்னும் இன்னும் ஏறாளமாக பல வகை கொள்கையுடையோரும்....

எப்படியான கொள்கையுடையவராக இருந்தாலும் ,  தன் கருத்துக்களை யாரும் ஏற்காவிட்டாலும்  , தன் கருத்துக்களால் சண்டைகள் ஏற்பட்டாலும் இவர்கள் கொண்ட அன்புக்கு நிகர் ஏதுமிருக்கென்று அறியேன் அடியேன்...

ஒரு நாள் அல்லது ஏதோ ஒரு வேலையின் காரணமாக சிறிது காலம் ஒருவரின்  அசைவு இல்லாத போது அவரிடம் வந்து குவியும் நல விசாரிப்பு மெயில்களும் SMS களும் சொல்கிறது அவர்களுக்கு இருக்கும் உறவையும் அன்பையும்...

போலியாய் முகவரிகள் கொண்டாலும் இவர்கள் கொண்ட அன்பில் போலியில்லை என்பதே உண்மை

எத்தனையோ நபர்கள் அன்பைத்தேடி எங்கேயெல்லாம் செல்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் தொலைத்த பொருளைத்தான் தேடி அலைய வேண்டும். தொலையாத அன்பு எம்மிடம் இருக்க ஏன் அதை தேட வேண்டும். தொலையாத பொருள் எவ்வளவு தான் தேடியும் கிடைக்கப் போவது கிடையாது.

ஏதோ சொல்லனும் போல் தோன்றியது சொல்லிவிட்டேன்...
மலிவாய்க் கிடைக்கிறது அன்பு இங்கே....

முக்கிய செய்தி......

சென்ற பதிவில் என் பெயரை மாற்றுவதாக கூறியிருந்தேன் அதற்கு உங்களிடம் உதவியும் கோரியிருந்தேன். எல்லோரும் பல அருமையானதும் பிடித்தமானதுமான கருத்துக்களையும் எனக்கு சூட்டிக் கொள்ள அழகான பெயர்களையும் சொல்லிச் சென்றீர்கள்...

இதற்கு நன்றி என்ற ஒன்றைச் சொல் போதாது என்றே நினைக்கிறேன். உலகத்தில் உள்ள பெருமைப்படுத்தும் வார்த்தைகளையெல்லாம் அன்பு உள்ளங்கள் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 
அது போதா விட்டாலும் எங்கெல்லாம் வேறு எந்தக் கிரகங்களிலெல்லாம் பெருமைப்படுத்தும் வார்த்தைகளும் நன்றிக்குறிய சொற்களும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று அவ் வார்த்தைகளைச் சேகரித்து உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

பின்னூட்டத்தில் சொன்ன அழகான பெயர்களில் ஏதும் நான் தேர்வு செய்யவில்லை. பல காரணங்கள் உண்டு அதற்கு... பின்புதான் காரணங்களியும் உணர்ந்து கொண்டேன். அதனால் நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்று நம்பிக்கை வைக்கிறேன்.

இன்று முதல் என்பெயரை ஆத்மாவாக மாற்றிக் கொள்கிறேன். சில நாட்களுக்கு சிட்டுக் குருவியுடன் ஆத்மா பயணிக்கும். பின் நாட்களில் ஆத்மாவாகவே மாறிடும்.


புதிதாய் பிறக்கிறேன்... பிரசவிக்க வருவீர்களா...?

சிறியதொரு இடைவெளி... இப்படியான இடைவெளி எடுத்துக் கொண்டது கிடையாது என்று சொல்லிவிடவும்  முடியாது.
 
இனிமேல் இடைவெளிகள் ஏற்படாது என்று சொல்லவும் முடியாது.

நான் புதியவன், சிறியவன், அனுபவமில்லாதவன் என்னை விட அனுபவம் நிறைந்தவர்கள் பதிவுலகில் நிறைய இருக்கிறார்கள்.

இடைவெளிகளும் அவர்களுக்கு வசப்பட்டிருக்கும்.

சென்ற மாத நடுப்பகுதியிலிருந்து இன்று வரை ...

யாருடைய வலைப் பக்கத்திற்கு வரவுமில்லை கருத்திடவுமில்லை...
அதனால் என்ன என் மீது கோபம் கொள்ளப் போகிறீர்களா ? நிச்சயமாக கோபம் கொள்வதற்கு உங்களுக்குஉரிமை இல்லாவிட்டால்...? 
என்றாவது ஒரு நாள் உங்கள் கோபம் தனியும் அதுவரையில் நான் உங்களோடு இருப்பேன்...  நீங்கள் என்னோடு இல்லாவிட்டாலும் சரியே... :P

இனியென்ன இறைவன் நாடினால் தொடருவேன்.

என் மனதில் இருந்த நீண்ட கால குழப்பமிது. ஆலோசனை கிடைக்கும் எனும் ந(ட்)ப்பாசையில் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

நான் வலைப்பதிவிட தொடங்கி சிறிது காலத்தில் தெரிந்து கொண்டேன் சிட்டுக் குருவி என திருவாளர் விமலன் சாரும் தன் வலைப்பக்கத்திற்கு நாமமிட்டுள்ளதை.

சில நண்பர்கள் பின்னூட்ட பெட்டிகளில் என்னை விமலன் என்றும் அழைத்திருக்கிறார்கள்.

இதன் போதெல்லாம் என் மனதில் எந்த விதமான வேறுபட்ட சிந்தனைகளும் உணர்ச்சிகளும் தோன்றவில்லை. மாற்றமாக விடயத்தைத் தெளிவுபடுத்தினதே தவிர வேறில்லை.

ஆனால் இப்போது சில நாட்களாய் என் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி... தவறிழைத்துவிட்டோமோ என்கிற பயம் தொற்றிக் கொண்டுவிட்டது...

நான் பாடம் கற்க வேண்டிய மூத்த பதிவர் விமலன் சார். எனக்கு முதல் அவருக்கே சிட்டுக் குருவி நாமம் சொந்தமானது. இனிமேலும் தவறிழைக்க என் மனம் இடம் தறாது.

முடிவெடுத்துவிட்டேன் என்னுடைய (சிட்டுக் குருவி) அடையாளத்தை மாற்றுவதாய்.

இது நீங்கள் வளர்த்த சிட்டுக் குருவி
உங்கள் அன்பு என் வலைத்தளம் முழுதும் இறக்கைகள் முளைத்துப் பறந்து திரிகின்றது. 

எல்லோருக்கும் அழகாகத் தெரியும் வசந்த பருவ மரம் நான். நான் எனும் மரத்திற்கு ஆணி வேறே நீங்கள் தான். வாழையாய் இருந்த என்னை ஆலையாய் மாற்றியவர்கள் நீங்கள்.

என் அன்புக்குறியவரி(ளி)ன் SMS இல் கிடைக்கும் பூரிப்பை  உங்களிடம் ஆலோசிப்பதில் கிடைக்கும் சந்தோஷம் மிகைத்து விடுகிறது. 

எனக்கு சொல்லிச் செல்லுங்கள்...

என் வலைப்பக்கத்திற்கு என்ன அடையாளம் (பெயர்) வைக்கலாம் என்பதனை...

வலையுலகில் உங்களோடு உறவாடியதில் + உரையாடியதில் உங்களின் நினைவாய் உங்களில் ஒருவர் சொல்லும் அழகான பெயரினை என் தளத்திற்குச் சூட்டுவதாய் எண்ணியுள்ளேன்.

கவனியுங்கள் இதுவரையில் நான் இட்ட பதிவுகளின் தன்மையினையும் கருத்தில் கொண்டு அழகான நாமத்தினை வெளிப்படுத்துங்கள்.

முடிவில் மாற்றம் வைப்பதாய் எண்ணமில்லை...

வலையுலகில் இனி சிட்டுக் குருவி என விமலன் சார் மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன்.

இடைவெளியில் என் தளம் வந்து சென்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி இன்னும் தொடருங்கள் நான் களிப்படைவதில் களைப்படைய மாட்டேன்....:)


சமூக தளங்களில் ஆபாசம் எது ...?

இன்றைக்கு சமூக தளங்களில் அதிகமானோரால் பெரிதும் விமர்சனத்துக்குள்ளாகும் வார்த்தையாக ஆபாசம் எனும்  சொல் காணப்படுகிறது. இந்தச் சொல்லை மையப் பொருளாகக் கொண்டு பலர் பிழைப்புநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சில இணையத்தளங்கள் ஆபாசத்துக்கு முதலிடம் வழங்குவதன் மூலம் தமது வாசகர்களை தன்னகத்தே வைத்துக் கொள்கின்றது. பெரும்பாலான இணையத் தளங்களில் வெளியாகும் செய்திகளில் எங்கேயாவது ஓர் இடத்தில் ஒரு ஆபாசச் செய்தி இல்லாமலில்லை. இதன் மூலம் வாசகர்களும் ஆபாசத்தை விரும்புகிறார்கள் என்பது புலனாகின்றது.

பிரபலங்களை ஊடகங்கள் மிகவும் உண்ணிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் சாதாரண அன்றாட நடவடிக்கைகளை பிரதான விடயமாகக் கொண்டு செயற்படும் ஊடகங்களுக்கு பிரபலங்களின் அந்தரங்க மற்றும் ஆபாச செயற்பாடுகள் கிட்டும் போது கொண்டாட்டமே.

அண்மையில் பிரித்தானிய இளவரசர்களின் ஆபாச செயற்பாடுகளை தகுந்த ஆதாரங்களோடு சில ஊடகங்கள் அம்பலப்படுத்திருந்தன. இந்த செய்திகளை பல சமூக தளங்களின் பயனாளிகள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இதனை அவர்கள் ஒரு சாதாரண விடயமாகவே கருதி அந்த செய்தியைப் படித்ததுடன் அது தொடர்பான தங்களின் கருத்துக்களையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெளியிட்டுக் கொண்டுமிருந்தனர்.

அதே போன்று நிறைய சமூகத்தள பயனாளிகள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் போது இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.அந்த வார்த்தைகளை படிப்பவரின் மனநிலை மற்றும் அவர் அவ்வார்த்தையை புரிந்துகொள்ளும் விதத்தைப் பொருத்து அது நல்லது கெட்டது என அமைந்துவிடுகிறது.

இவ்வாறு இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைப் பயன்பாடுகளின் போது அங்கே ஆபாசம் என்பது சாதாரண ஒரு விடயமாகவே கருதப்படுகிறது.

பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் ஆபாசம் தொடர்பான குழுமங்கள் மற்றும் வாசகர் பக்கங்கள் போன்றனவும் இருக்கின்றன. இவைகளில் உறுப்பினராகி இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. எனவே இதில் உறுப்பினராகி இருப்பவர்கள் அனைவரும் ஆபாசத்தை சாதாரண ஒன்றாகவே கருதுகிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

நாம் கூறும் சமூக தளங்களுக்கப்பால் அனைவரும் ரசிக்கக்கூடிய  தமிழ் சினிமவில் கூட ஆபாச வார்த்தைகள் மற்றும் காட்சிகள் பயன்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் யாருமிருந்தால் தமிழ் சினிமாவில் மொழியக்கூடிய ஆபாச வார்த்தைகளையும் காட்சிகளையும் எதிர்ப்பதற்கு ஆளனி சேர்த்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் சினிமாவின் ஆபாச வார்த்தைகள் மற்றும் காட்சிகளை எதிர்க்க எந்த அமைப்பும் இல்லை.

மிகப் பெரிய பிரபலம் இயக்குனர் பாலு மகேந்திரா தன்னுடைய வலைப்பக்கத்தில் தன் அனுபவங்களைப் பகிரும் போது தான் கெமராவினை முதன் முதலில் தொட்டு உணர்ந்ததை மிகவும் ஆபாசமாகவே உவமைப்படுத்துகிறார்

ஏன் கவிஞர் கண்ணதாசன் உட்பட பல கவிஞர்கள் தமது கவிதைகளில் ஆபாசத்தை மையப்படுத்தியிருக்கிறார்கள்.அவர்கள் எழுதும் கவிதைகளை பாடல்களாகப் பாடும் எந்தவொரு பாடகரும் இதில் ஆபாச வார்த்தைகள் உண்டு அதனால் என்னால் இதனை பாட முடியாது என்று கூறியது கிடையாது. 

எனவே கவிதைகள் எழுதும் போதும் பாடல்கள் பாடும் போதும் ஆபாசமென்ற ஒன்று சாதாரண விடயமாகவே கருதப்படுகிறது.

இங்கு நான் சமூக தளம் என்று கூறிவிட்டு கவிஞர்கள் மற்றும் சினிமாவை எடுத்துக் கொள்வது ஏனெனில் நாம் சமூக தளங்களாக கருதும் பேஸ்புக், ட்வீட்டர், ஓர்குட் போன்றவைகளை விட சினிமாத் துறையோடு சமூகம் தொடர்புபடும் வீதம் மிக அதிகம். பேஸ்புக் ட்வீட்டர் போன்ற சமூகத்தளங்களை பயன்படுத்தாதவர்கள் கூட சினிமாவை ரசிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சிறுவர்களுக்கும் சினிமா என்பது  விதிவிளக்கல்ல.இதனால் தான் சமூகம் அதிகமாக தொடர்புபடும் சினிமாவையும் நான் சமூக தளமாகவே கருதுகிறேன்.

ஆகவே தான் நான் மேற்சொன்ன அனைத்து சமூக தளங்களிலும் ஆபாசம் என்பது இரண்டரக் கலந்து விட்டது என்பது தெளிவாகப் புரிகிறது. ஆகவே சமூக தளங்களில் பயனாளிகள் ஆபாசம் என்ற ஒன்றை மிகச் சாதாரணமாகவே கருதுகிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம் என நினைக்கிறேன்.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது இன்றைய நவீன உலகில் ஆபாசத்தை வெறுப்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. நான் எப்பவுமே ஆபாசத்தை வெறுப்பவன் என்பதனையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

ஆக சமூக தளங்களைப் பயன்படுத்துபவர்கள் எதையுமே ஆபாசமாக எடுத்துக் கொள்வது கிடையாது. இது இப்படியிருக்க;

சமூக தளங்களில் ஆபாச வார்த்தையைப் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக ஒருவர் மீது பொலிஸில் புகார் கொடுத்து அவரை கைது செய்வதென்பது சமூக தளங்களைப் பயன் படுத்தத் தெரியாதவர்களின் செயலென்றுதான் சொல்ல வேண்டும். ஆபாசம் பிடிக்காதவர்கள் ஆபாசம் பயன் படுத்துபவர்களை தனது நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிடலாம். இப்படியான பல மேம்பட்ட வசதிகளுடன் தான் சமூக தளங்கள் இயங்குகின்றன.

ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக ஒருவரை கைதுசெய்திருக்கிறார்கள் என்றால் தமிழ் சினிமாவில் ஆபாச காட்சிகளை பயன்படுத்துபவர்களையும், ஆபாச கவிகளை எழுதுபவர்களையும் அதனைப் பாடல்களாக பாடுபவர்களையும் என்ன செய்ய வேண்டும். என்னைக் கேட்டால் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என்றே சொல்லுவேன்.

மேற் சொன்ன சினிமா , கவிஞர்கள் மற்றும் பாடகர்களால் பயன்படுத்தப்பட்ட ஆபாச வார்த்தையை விட மிக மோசமான வார்த்தையையா  ராஜன் சிம்மயி விடயத்தில் பயன்படுத்தினார். அப்படி என்ன வார்த்தையை சார் பயன் படுத்தினீங்க ?

எனக்கென்றால் இவையெல்லாம் சின்னப்பிள்ளைத் தனமாகவே தெரிகிறது. இதற்கு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கியஸ்தர்களும் விரைந்து துணைபோவதுதான் புதுமை.