Looking For Anything Specific?

ads header

நெஞ்சத்துக் கீறல்கள் மறையும் நாட்கள் எப்போதோ...?

பல இன்னல்கள் துயரங்கள் இன்னும் கவலைகளைத் தரக்கூடிய நிறைய விடயங்களை நாங்கள் சந்திப்பது எங்களுக்கொன்றும் புதிதல்ல. ஆரம்ப காலங்களில் சந்தோஷமாகதான் இருந்தனர்.
பின் நாட்களில் ஏற்பட்ட ஒரு சில தவறான புரிந்துணர்வுகளினாலும் அரசியல் குள்ள நரிகளின் விருப்பமான விளையாட்டினாலும் அடிக்கடி சந்தோஷங்கள் விடுமுறையெடுத்து சென்றாலும் பதில் கடமைக்கு கவலைகளையும் பயத்தையும்  விட்டுச் செல்வதை மறக்கவில்லை.

என்னைவிட  இன்னல்களை ஆடையாக உடுத்திக் கொண்டவர்கள் இங்கு அதிகமானவர்கள் இருக்கிறார்கள். நான் அறிந்தவகையில் என்னால் மறக்கமுடியாத பல வடுக்கள் இன்னும் மனதினுள் ஆழமாக இன்னும் ஆழமாக வேறூன்றிக் கிடக்கின்றன. 

அரசினால் நகர்த்தப்பட்ட இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள் அதன் பாதிப்புகளை ஒரு போதும் மறக்கமாட்டார்கள். அதனால் ஏற்படுத்தப்பட்ட வடுக்களுக்கு மருந்துகள் கிடைக்க இன்னும் பல வருடங்கள் இல்லை பல தசாப்தங்களும் போகலாம். இதனை பற்றி சொல்லப் போனால் இன்னுமின்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பதிவின் நோக்கமும் இப்படியான ஒரு வடுவை மீட்டுவதுதான்

2004 டிசம்பரில் இயற்கையினால் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள் பலரின் நெஞ்சத்தைவிட்டு இன்னும் நீங்கவில்லை ஏன் நான் கூட மனதளவில் இன்னும் மீளவில்லை என்று சொல்வதில் தப்பில்லை என தோன்றுகிறது.

இந்த இயற்கை வடுவிற்கு ஈடாக இன்னும் பலராலும் பல பெண்களினாலும் மறக்கப்பட முடியாத வடுவினை நாட்டின் பல பாகங்களிலும் விட்டுச்சென்றுள்ளனர் பெரும்பாண்மை சக்திகள். சென்ற வருடம் (2011) ஜூலையின் இறுதிப் பகுதிகளில் இருந்து ஆரம்பிக்கப் பட்டு ஆகஸ்டின் நடுப்பகுதியில் உச்சக்கட்டத்தை அடைந்து பல உயிர்களை பலியெடுத்துப் பின் தனிந்து போன, பெரும்பாண்மை சக்திகளின் அரசியல் காய் நகர்த்தலுக்காக தோற்றுவிக்கப்பட்ட கிரீஸ் மனிதர்கள்.

குறிப்பாக சிறுபாண்மையின மக்களின் மீது ஏவப்பட்ட ஏவுகனைகளாகத்தான் இதனைக் கருதமுடியும்.நாட்டின பல பாகங்களிலுமுள்ள சிறுபாண்மையினர் செரிந்து வாழும் பகுதிகளிலும் கூட பகல்களில் அடைக்கப்பட்ட வீடுகளிலும் பெண்கள் இருப்பதற்கு அச்சங்கொண்ட நாட்களவைகள்.

பகல்களில் வேலைக்குச் சென்ற ஆண்கள்  அரை நாள் கூலிக்கு வேலைசெய்துவிட்டு வீடுகளுக்குள் முடங்கிய பொழுதுகளவைகள், பெண்கள் வீட்டு முற்றத்துக்குள் தனது கால்களை வைக்க தயங்கிய மாலை வேளைகளவைகள், இளைஞர்கள்  பொழுது சாய்வதற்கு முதல் நட்புகளுக்கு விடைசொல்லி,இன்பத் தூக்கத்தை மறந்து, தங்கள் உறவுகளுக்காக தடிகளுடன்  காவல் செய்த வீரப் பொழுதுகள்...விளையாடித் திரிந்த சிறுவர்கள் கூட கிரிகெட் மட்டைகளுடனும் இரவுத் தூக்கத்தை மறந்த நாட்களவைகள்...

தென்னைமர ஓலைகள் காற்றிலசையும் சப்தமும் அச்சத்தைக் கொடுத்தது, ஆண்களில்லா வீடுகளுக்கு மின்சாரமே துணையாக இருந்தது ,வயிற்றுப் பிழைப்புக்காக காலையில் வீட்டுவாசலில் நிற்கும் பிச்சைக் காரணையும் சந்தேகமாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொருவரும். அறிமுகமில்லா வெளியூர்காரர்களிடம் வருவோர் போவோரெல்லாம் ஆயிரம் வினாக்களை தொடுத்து இம்சைப்படுத்தியமை.


சூரியன் மறையத் தொடங்கியவுடனே இந்த தெருவில் இரண்டு பெண்களை பயமுறுத்திவிட்டு செல்கிறார்கள் என்று ஒரு திசையைக் காட்ட எல்லோரும் அந்தப் பக்கமாக துரத்திச் செல்ல இன்னுமொரு பக்கமிருந்து அலறல்கள் பின் அந்தத் திசை நோக்கிச் செல்ல ஒரு அரை மணி நேர இடைவெளி பின் தூரத்தே ஒரு அலறல் மீண்டும் அத்திசை நோக்கி செல்ல அந்த பகுதி இளைஞர்களும் தடியுடன் எங்களை நோக்கி வருகின்றனர்


யாரும் சரியான தோற்றத்தை கூட பார்த்தது கிடையாது கருப்பு நிறத்தில் ஆடை அணிந்திருப்பதாகவும் காலில் பெரிய சப்பாத்து போட்டிருப்பதாகவும் சில பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள் ஆனால் அவர்களும் சரியாக பார்க்கவில்லை.


கிரிஸ் மனிதன் இந்த தெருவால் போகிறான் என கேள்விப்பட்டு துரத்திச் சென்ற இளைஞனையே கிரிஸ் மனிதனாக கருதி அலறிய பெண்களின் சம்பவங்களுமுண்டு.


ஆகஸ்ட் 10 மாலைப்பொழுதில் ஒரு பகுதியில் சில கிரீஸ் மனிதர்களை பிடித்து வைத்திருப்பதாக கேள்விப்பட்டு அவர்களைப் பார்க்கச் சென்ற பொதுமக்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரிய கலவரத்தை தோற்றுவித்தது சம்பவம் பார்க்கச் சென்ற  10 -15 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர் பாதுகாப்புப் பிரிவினர்

இதனை ஊர் பெரியவர்களுக்கு சொல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து பாதையைக் கடந்த மாடுகளுடன் மோதி காயப்பட்ட சில இளைஞர்கள். இவர்களை ஏற்றிச் சென்ற அம்பியுலன்ஸ் வண்டி இன்னுமொரு வாகணத்துடன் மோதுண்டதாக வீடுகளில் காவலிருக்கும்  பெரியவர்களுக்கு செய்தி,செய்தி கேட்டு அந்த பீதியை உண்டு பண்ணும் இரவுகளிலும் ஒரு சில ஆண்களின் துணையுடன் தன் பிள்ளைகளைத் தேடும் தாய்கள் ஒரு புறம்


ஆகஸ்ட் 11 காலையில் அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் அவசரமாக கூடி கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதாக வாக்குறுதியளிக்கின்றனர். சொல்லப்பட்ட நேரத்துக்குள் இளைஞர்கள் விடுவிக்கப் படவில்லை ,அவசரமாக பொதுமக்கள் கூடி அமைதியான பாதுகாப்புப் படைக்கு எதிராரன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர், ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு படையின் வாகணத்திற்கு கற்களால் ஒரு சில காடையர்கள் எறிய மீண்டும் நிலைமை மோசமாகிறது

பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டதற்காக ஒரு ஏழைத்தாயின் மகனுடைய கைது தொடர்பில் அரசியல் தலைவர் ஒருவரை சந்திக்கச் செல்கிறார் இரண்டு குழந்தைகளின் தந்தை. தலைவரோடு  கதைத்துக் கொண்டிருக்கும் போது இன்னுமொரு இளைஞனுக்கு பாதுகாப்புப் பிரிவினர் அடிப்பதனைப் பார்த்த அந்த தந்தை அதனை தடுக்க அவ்விடம் ஓடி வருகிறான் ...............அவனை நோக்கி இரண்டு துப்பாக்கி குண்டுகள் சென்று மார்பிலும் தலையிலும் புதைகிறது..........அவ்விடத்திலே சரிந்து விழ அவனுயிர் இவ்வுலகை விட்டு பிரிகிறது......அனைத்தையும் அரசியல் தலைவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் ... ஒரு விபத்தைக் கூட தடுக்க முடியாத நிலையில் அரசியல் தலைவர் இவரைத்தான் மக்கள் தங்கள் பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர்...


எல்லாம் நடந்து முடிந்து நாளை தொடங்கும் மாதத்துடன் ஒரு வருடமாகின்றன . ஆனாலும் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் நீதிமன்ற வாசல்களில் அலைகின்றனர். சிலர் அடிக்கடி வைத்திசாலையும் சென்று வருகின்றனர்.உயிர் நீத்த சகோதரனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் ஏதாவது செய்யப் பட்டதா என்றால் அதுவும்...?


இது இப்படியிருக்க நேற்று மாலைப் பொழுதினில் சிறியதொரு ஒழுங்கையினுள் வேகமாகச் சென்ற ஜீப் வண்டியினைப் பார்த்து கிரீஸ் மனிதனோ எனப் பயந்து வேகமாக வீடுகளுக்குள் நுழைந்த பெண்களைக் காண்கிறேன்...இன்னும் சில இளைஞர்களை சென்ற வாரம் விசாரணை தொடர்பில் அழைத்தும் செல்கின்றனர்....


இன்னமும் வெளியூர் மக்களின் வருகையில் சந்தேகம் கொண்டு பார்க்கும் பெரியவர்களைக் காண்கிறேன், சிறியவர்கள் முகங்களில் ஒரு வித மைகளை பூசிக் கொண்டு தங்களை கிரீஸ் மனிதர்களாக அடையாளப் படுத்தி விளையாடிக் கொள்வதையும் காண்கிறேன்


இரவுகளில் பக்கத்து வீட்டு உறவுக்காரன் கூட வாகணத்தில் வந்து இறங்கினால் அவனையும் சந்தேகமாகப் பார்க்கும் இளைஞர்களையும் காண்கிறேன். கருப்பு நிற ஆடைகளை பகலில் கண்டால் கூட பத்தடி தள்ளி நடக்கும் பள்ளி மாணவிகளையும் காண்கிறேன்...


மனிதனால் மனிதனுக்கு ஏற்படுத்தப்பட்ட இந்த வடுக்கள் எப்போது ஆற்றப்படும். இந்த வடுக்களுக்கு பொருத்தமான மருந்துகள் எங்கும் விற்பனைக்கு கிடைக்கின்றனவா...? சொல்லித்தாருங்கள் எனக்கு......என் உடம்பு அங்கங்களையாவது விற்று அம் மருந்துகளை வாங்கி என் உறவுகளுக்கு கொடுக்க ஆசைப்படுகிறேன்



Post a Comment

25 Comments

  1. வணக்கம் சிட்டுக்குருவி.இவை வேண்டுமென்றே திட்மிட்டு ஏற்படுத்தப்பட்ட சம்வங்கள்.இதன் பின்னணி,யாரெல்லாம் இதன் அமைப்பாளர்கள் எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் செய்யமுடியாத பரிதாப கரணமான பிறவிகள் நாங்கள்.சிறுபான்மைக்கென்றே வடிவமைக்கப்பட்டட குரோகங்கள் இவை.இதை பற்றி எழுதும்போதும்,இதை வாசிக்கும் போதும் ஏற்படும் கொதிப்பை அடக்கதெரியவல்லை.காலம் பதில் சொல்லும்; என்கிறார்களே!!!பார்டபோம் இதற்கெல்லாம் என்ன பதில் என்று.நன்றாக நினைவிருக்கிறது.உ.த பரீட்சை நாட்களில் இத்தொல்லையால் நாங்கள் பட்ட துன்பமும் சீர்கேடும்.நன்றி சொந்தமே இப்பதிவிற்காய்...!சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. சூடான முதல் வருகைக்கு மிதலில் நன்றிகள் உறவே....
      எல்லாவற்றையுமே சொல்லி விட்டீர்கள் எல்லாம் திட்ட்மிடப்பட்ட சதிகள் தான்.....உயர்தரப் பரீட்சையின் போது கிரீஸ் விளையாட்டு பெறு பேற்றின் பின் சதுரங்க விளையாட்டு
      என்ன செய்வது பொருத்துத் தான் போக வேண்டும்
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  2. படிக்கும் எங்களுக்கே தாள முடியவில்லை... பாதிக்கப்பட்ட நீங்கள்? வலிக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. வலி கூடியதுதான்......
      உணர்ந்தவர்களால் இன்னமும் மறக்க முடியவில்லை

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
      முதல் வருகை தொடர் வருகையானால் மேலும் சந்தோஷம்...:)

      Delete
  3. கிரீஸ் மனிதன் என்று நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை... ஆனால் அமைதியில்லா ஆனால் அமைதி தேடும் சகோதரர்களை நினைக்கும் பொழுது நெஞ்சம் கனக்கிறது கோபம் கொப்பளிகிறது

    ReplyDelete
    Replies
    1. கிரீஸ் மனிதர்கள் என்பது உடம்பு முழுவதும் ஒரு வித திரவத்தைப் பூசிக்கொண்டு இரவில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஒரு சில மனச்சாட்சியற்ற மனித மிருகங்கள்......
      இவர்களின் மூலம் பாதிக்கப் பட்ட பொதுமக்கள் ஏறாளம்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  4. Replies
    1. mmmmm வேதனை மிகுந்த நாட்கள் தான் அவைகள்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  5. ம்ம் வேதனைகளையே சொத்தாக கொண்ட துயரம் நம்மவர்களுக்கு !!!விடையில்லா துண்பம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியான அதிக சொத்துக்களை கொண்டவர்கள் நாங்கள் தானே சகோ
      நிச்சயம் விடைகிடைக்கும்

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  6. மனது மிகவும் வேதனைப் படுகிறது நண்பா....

    (TM 3)

    ReplyDelete
    Replies
    1. வேதனையிலும் வேதனைதான்
      நிச்சயம் ஆறுதல் கிடைக்கும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காலத்தை ஓட்டுகிறோம்

      வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  7. படிக்கப் படிக்க
    மனம் வேதனை கொள்கிறது

    ReplyDelete
  8. Replies
    1. நிச்சயமொருநாள் வேதனை தீரும் நம்பிக்கையில் இருக்கிறோம் சார்
      வருக்கைக்கும் அழகான கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்/

      Delete
  9. அதிலும் மக்களால் சுற்றி வளைக்கப்பட்ட மர்ம மனிதர்களை மனநலம் குன்றியவர்கள் என்று விடுவித்தார்களே....
    என்ன வடக்கு கிழக்கில் கீழ்ப்பாக்கமா நடத்துகிறோம்???
    கடுப்பேறுகிறது சகோதரா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அதுவும் உண்மைதான் வைத்திய சாலையி சேர வேண்டியவர்களை அரச கடமையில் சேர்த்தால் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் சகோ
      வேதனையை வெளிக்கொணரும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  10. வலிக்க வலிக்கத்தான் எழுதியிருப்பீர்கள்.இரத்தம் வடிய வடிய நெஞ்சத்தைக் கீறிக்கொண்டாலும் எழுதாத வார்த்தைகள் அதனோடும் வடியும்.அழமட்டுமே முடிகிறது !

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது வலிகள் அதிகரிக்க அதிகரிக்கத்தான் எழுத்துக்கள் எழுகின்றன மனதினில்......

      வருகைக்கும் வலிக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  11. ம்ம்.பயமும் வேதனையும் தந்த அந்த நாட்களினை மறக்கவும் முடியுமா? எல்லாம் மறத்தமிழ் பெண்களை கலங்கடிக்கச் செய்த சதிவேலைகள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சதி வேலைகள் தான் .....அனுபவிப்பார்கள் விளையாடியவர்கள்

      வருகைக்கும் அழகான உணர்வுப் பகிர்விற்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  12. சிட்டுக்குருவி... இதெல்லாம் உண்மையிலும் உண்மையாக நடந்ததா...?

    ஒரே பயமா இருக்குதுப்பா...

    ReplyDelete
    Replies
    1. எப்பிடிக் கேட்டாலும் ஒரே பதில் ஆமா என்பது மட்டும் தான்........

      நடந்த வடுக்கள் தான் எழுத்துவடிவில்
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  13. Replies
    1. ம்ம்ம்ம்ம்ம்ம் வேதனைகள் தான் பதிவாகவே வருகிறது......
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
      முதல் வ்ருகை தொடர்வருகையானால் சந்தோஷம் சந்திப்போம்

      Delete