Looking For Anything Specific?

ads header

தற்கொலைகளை தூண்டும் தமிழ் இணையத்தளங்கள்...?

எந்த நாடாகட்டும், எந்த மதமாகட்டும் , எந்த சமூகமாகட்டும் , குடும்பத்தினர் உறவுக்காரர்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் எதிரிகள் அயல்வீட்டார் சகோதரர்கள் என யாரை எடுத்துக்
கொண்டாலும் எல்லோருடைய கருத்துக்களும் ஒன்றாய் சங்கமிக்கிற ஒரு விடயம் தற்கொலை தொடர்பானது.

உண்மையில் தற்கொலையினை எல்லோரும் எல்லாவிதத்திலும் எல்லா சந்தர்ப்பத்திலும் வெறுக்கின்றனர் அதை ஒரு கோழையின் செயல் என்றும் பாவமான செயல் என்றும் கூறுகின்றனர்.கணவன் மனைவியினுடைய பிரச்சனையின் போதும் கோபத்தின் உச்சக்கட்டமாக வெளிப்படுத்தப்படும் வார்த்தையான எதை செய்வதென்றாலும் என்னுடைய மரணத்துக்குப் பின் செய் என்ற ஒரு வார்த்தையால் அவர்கள் இருவருக்குமிடையிலான பிரச்சனைகள் ஓரளவுக்கு ஓய்வுக்கு வந்துவிடும்.மரணம் என்ற வார்த்தையை தாங்கிக்கொள்ளவே சக்தியற்றவர்களாக இருக்கும் எம்மிடத்தில் தற்கொலை செய்து கொள்வதென்பது சாத்தியமற்ற ஒன்றாக காணப்படுகின்றது.

வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைக் கண்டு தற்கொலைதான் முடிவு என தீர்மானித்து கடைசியில் தன்னால் தற்கொலை செய்யமுடியாமல் மீண்டு வந்தவர்கள் எத்தனையோ பேர் எம்மில் இருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் யாவரினதும் அந்த துன்பங்கள் யாவும் காலப்போக்கில் மறைக்கப்பட்டு பின் அவர்களும் அதனை மறந்து பல பல துறைகளில் பாண்டித்தியம் பெற்று செல்வச்செழிப்போடும் சந்தோசமாகவும் வாழவும் செய்கின்றனர். இன்னும் சிலர் பழைய நிலையிலேயே இருக்கின்றனர் ஆனாலும் அவர்களின் மனதிலிருந்து அந்த துன்பங்கள் யாவும் மறைந்து போயிருக்கும்.

இது இப்படியிருக்க இன்றைய உலகில் தற்கொலை செய்துகொள்பவர்களின் வீதம் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. தினம்தினம் ஏதோ ஒரு ஊடகத்தின் மூலம் யாராவது ஒருவர் உலகின் எங்கோ ஒரு மூலையில் தற்கொலை செய்து கொண்டார் என்பதினை நாம் கேள்விப்படாமலில்லை.
அந்தளவுக்கு தற்கொலையும் அதிகரித்துவிட்டது அதனை உடனுக்குடன் செய்திகளாக வெளியிடுவதற்கான ஊடகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டன.

இந்த ஊடகங்கள் அனைத்திலும் மிகவும் வேகமாக செய்திகளை /தகவல்களை வெளிக்கொண்டுவருவதில் முதல் இடம் வகிப்பது இணையத்தளம் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன்.பத்திரிகை நிறுவனங்கள் கூட சில பல செய்திகளை இந்த இணையதளங்களின் மூலம் பெற்றுத்தான் பிரசுரிக்கின்றன.அதே போன்றுதான் தொலைக்கட்சி மற்றும் வானொலியும்.

சரி தற்கொலை அதிகரிப்பிற்கும் இந்த இணையத்தளங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கலாம் தற்கொலைக்கு இணையத்தளங்கள் எப்படி காரணமாகலாம் என நீங்கள் சிந்திக்கலாம்.சொல்கிறேன்.

தமிழ் வலையுலகில் செய்திகளைச் சுமந்து வரும் இணையத்தளங்களின் எண்ணிக்கையில் இப்பொழுதுதான் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்கால ஈசல்களைப்போல் தினம்தினம் புதிய புதிய இணையத்தளங்கள் புதிய புதிய செய்திகளுடன் வெளிவருகின்றன. தமிழ் வலையுலகைப் பொருத்தவரையில் இது பாராட்டத்தக்க ஒன்றாகும்.இப்படிப்பட்ட இணையத்தளங்கள் வந்த வேகத்திலேயே முடங்கிவிடுவதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இன்று அதிகமான இணையத்தளங்கள் உருவாகியிருப்பதுக்கு காரணமாக இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழியினை / முறையினை இணையத்தில் தேர்ச்சி பெறற ஒரு சிலர் அறித்திருப்பதனை காரணமாகவும் கூறாலம் என்பதில் தப்பில்லை என நினைக்கிறேன்.

இப்படி பணம் சம்பாதிப்பதற்க்காக தினமும் புதுப்புது செய்திகளையும் சம்பவங்களையும் உலகெமெங்கும் தேடித்துருவி அதன் உண்மைநிலையினை அறிந்தும் ? இணையத்தளங்களில் பதிவிடுகின்றனர்.இதனையே வாசகர்களும் படிக்கின்றனர் அதனையே உண்மையும் என நினைக்கின்றனர்.அந்தளவுக்கு அந்த செய்திகள் பொழிவுபெற்றிருக்கும்.

நான் செய்தித்தளங்களில் படித்த ஒரு சில செய்திகளை உதாரணத்துக்காக இங்கு கூறலாம் என நினைக்கிறேன். இவ்வாறான செய்திகளை நீங்களும் படித்திருப்பீர்கள்..?

65 வயது வயோதிபருடன் உடலுறவு வைத்துக்கொண்ட 16 வயது மாணவி....
மகளினை கற்பழித்த வயோதிப தந்தை...
8 வயது சிறுவனை உறவுக்கு பயன்படுத்திய குடும்பப் பெண் கைது....
நெட் கஃபேயில் சில்மிசத்தில் ஈடுபட்ட இளம் ஜோடிகளின் வீடியோ இணையத்தில்...
மாணவிகளை கடத்திச் சென்று பலாத்காரம் புரிந்த கும்பல்...
பேஸ்புக் நண்பருடன் காதல்...கணவன் /மனைவி விவாகரத்து கோரி வழக்குத்தாக்கல்...

இவை நான் படித்த செய்திகளில் ஒரு சில இன்னும் ஏறாளமான செய்திகள் உள்ளன.சரி நான் இப்பொழுது விடயத்துக்கு வருகிறேன்.நான் மேலே தொடர்பு படுத்திய செய்திகள் யாவையும் பிரசுரித்த இணையத்தளங்களில் பெரும்பாலானவை சம்பந்த பட்டவர்களிடம் எந்த வித அனுமதியும் பெறாமல் மேலும் சம்பவத்தின் உண்மைத்த்ன்மை பற்றி அறியாமலும் ஒரு சில சில்லறைகளுக்காக  வெறுமெனே நகலெடுத்தல் ஒட்டுதல் முறையைப் பயன்படுத்தி இந்த செய்திகளை வெளியிடுகின்றன.

இவர்கள் இவ்வாறு வெளியிடும் செய்திகளின் மூலம் சம்பந்த பட்டவர்களுக்கு நன்மை கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால் அது மிக்க ஆரோக்கியமான செயற்பாடு.ஆனால் இன்னும் சில தினங்களிலோ அல்லது அடுத்த நிமிடமோ அந்த இனையத்தளத்தில் சம்பத்தப்பட்டவர்கள் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அல்லது பஞ்சாயத்தில் ஊரைவிட்டு விளக்கி வைத்ததாகவும் அல்லது வேறு ஏதோ ஒரு துக்க செய்தியினை வெளியிடுகின்றனர்.

காரணமென்ன சம்பவத்தில் தொடர்புபட்டவர்கள் முக்கிய புள்ளிகளல்ல சாதாரண மக்களே  தொடர்புடையவர்கள் முக்கிய புள்ளிகளாக அல்லது ஒரு சமூகத்துக்கு தலைமை தாங்குபவர்களாக இருந்திருந்தால் இச் செய்தியின் மூலம் எதிர்கால புள்ளிகளுக்கும் தலைவர்களுக்கும் ஒரு விழிப்புனர்வையும் பயத்தையும் உண்டாக்கலாம் அதில் நன்மையுண்டு.ஆனால் சாதாரண மக்களினால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறுதலாக இடம்பெற்ற சம்பவத்தினை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதுக்கு முன் ஆயிரம் முறை சிந்திக்க வேண்டும்.

நான்கு சுவற்றுக்கு நடுவில் நடந்த ஒரு விடயத்தை நான்கு சில்லறைக் காசுகளுக்காக நாளு பேர் மத்தியில் கொண்டுவந்து சம்பந்தபட்டவர்களை அவமானப்படுத்தி அவர்களை சாகடித்த குற்றத்தினை ஒரு நாளும் இந்த செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்கள் ஒப்புக்கொண்டது கிடையாது...?

வயோதிபருக்கும் மாணவிக்கும் கள்ளத்தொடர்பு என்றால் அது அவர்கள் இருவரும் விருப்பப்பட்டு வைத்துக் கொண்ட ஒன்று அவர்களுடைய விடயத்தில் வீணாக மூக்கை நுழைப்பதற்கு நாம் யார்..?

வெறும் சில்லறைக்காகவும் பரபரப்புக்காகவும் அவர்களுடைய செய்திகளை பதிவிட்டு அவர்களை அசிங்கப்படுத்திய இணையத்தளங்களுக்கு பரிசு என்ன தினம் தினம் புது வாசகர்கள் கிடைத்ததும் தளத்தில் பிரசுரிக்க விளம்பரங்கள் கிடைத்ததும் தான்.இப்படி ஒரு மானங்கெட்ட இணையத்தளம் செய்வதற்குப் பதிலாக ஏதாவது கோயிலில் போய் பிச்சை எடுக்கலாம். இதைத்தான் ஒருவனின் சாவில் இன்னொருவனின் வாழ்வு இருக்கிறது என்று பெரியோர்கள்..?அன்று சொன்னார்களோ..?

அண்மைக்காலமாக இலங்கை,இந்தியாவில் உள்ள ஒரு சில இணையத்தளங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த ஆரோக்கியமற்ற நிலை தொடர்ந்தும் இருக்குமாயின் தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை விரைவில் எங்கள் நாடுகளில் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.மேலும் தற்கொலை செய்து கொள்ளப்போவது எங்கள் உறவினராகவோ அல்லது சகோதரங்களாகவோ இருக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.

நான் இங்கு உறவினரை அல்லது சகோதரங்களை சம்பந்தப்படுத்தியதுக்கு காரணம் தப்பு/தவறு என்பது யாராலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செய்யப்படலாம் இதற்கு யாரும் விதிவிலக்கில்லை.ஆகவேதான் நாம் வாழும் சூழலில் இவ்வாறான தப்புகள்/தவறுகள் ஏற்படுத்தப்பட்டு அது வெளியுலகிக்கு வெளிக்கொண்டுவரப்பட்டு அதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படுமாயின் அது எம்மைச் சார்ந்தவர்களாதலால் அவர்களும் எம்முடைய உறவினங்களாகவே கருதப்படுவார்கள் எனும் எடுகோலினை மையமாக வைத்துத்தான்.

இவர்களின் இந்த சில்லறைத்தனமான செயற்பாடுகளினால் இணையத்தளங்களின் மீதான வாசகர்களின் நம்பிக்கைத்தன்மை எதிர்காலத்தில் மேலும் மேலும் குறைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. எத்தனையோ இலை மறை காய்களாக இருக்கும் கலைஞர்கள் எம்மத்தியில் இருக்கின்றனர் கலைத்துறையில் எத்தனையோ விடயங்களை தமிழ்பேசும் நாம் சாதிக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் உரமிட்டு செல்லாமல் வெறுமெனே சில்லறைகளுக்காக அலைந்து உண்மைத்தன்மையற்ற செய்திகளை வெளியிடுவதும் வெளியிடப்படும் செய்திகளால் ஏற்படும் பின் விளைவுகளை அறியாமலிருப்பதையும் என்னவென்று அழைப்பது.


இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் என்னவெனில் இவ்வாறான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் தனிப்பட்ட பெயர்களில் தங்களை வெளிக்காட்டாமல் தேசியம் சார்ந்து மற்றும் முக்கியமான பிரதேசங்களின் பெயர்களில் இயங்கிக்கொண்டு இவ்வாறான கீழ்த்தரமான செய்திகளை வெளியிடுவதுதான்.


சிந்தியுங்கள் அன்பர்களே இவ்வாறான இணையத்தளங்கள் எமது சமூகத்துக்குத் தேவைதானா..? அல்லது இவ்வாறான இணையத்தளங்களுக்கு எப்படி எம்மாலான எதிர்ப்புகளைத் தெரிவிப்பது..?இவ்வாறான இணையத்தளங்கள் தொடர்ந்தும் இவ்வகையான செய்திகளை வெளியிடுமாக இருந்தால் எதிர்காலத்தில் எமது சமூகத்தின் நிலை..?

உயிர் என்பது விலைமதிப்பற்றது அதனை அற்ப பணத்துக்காக விற்றுவிடுவதும் சொற்ப பணத்துக்காக உயிரினைப் பறிப்பதும் சிறந்ததாக எவராலும் கருதப்படமாட்டாது.

எவரொருவர் ஒரு உயிரிற்கு வாழ்வளிக்கிறாறோ அவர் உலகம் முழுவதிலுமுள்ள உயிர்களை வாழவைத்தவர் போன்றவராவார். எவரொருவர் ஒரு உயிரிற்கு துரோகம் இழைக்கிறாறோ அவர் உலகம் முழுவதிலுமுள்ள உயிர்களுக்கு துரோகம் இழைத்தவர் போன்றவராவார்.

 மேட்டர்  இன்றைய வலைச்சாரத்தில் என்னையும் ஒரு புதியமுகமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்னை அறிமுகப் படுத்திய வலைச்சாரம் குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.விசேடமாக இந்த வார ஆசிரியர் டி என் முரளிதரன் சாருக்கு என்னுடைய மனமான நன்றிகள் வலைச்சார பதிவைப் படிக்க இந்த லிங்கில் செல்லுங்கள்

Post a Comment

38 Comments

  1. ம்ம்ம்ம்ம்ம் நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  2. இவற்றில் சில செய்திகளை ஏன் நீங்கள் விளிப்புணர்வுச் செய்தியாக எடுத்துக் கொள்ளக் கூடாது மூஸா

    ReplyDelete
    Replies
    1. அது தான் மேலவே சொல்லிவிட்டேன்..:)

      விழிப்புனர்வு செய்திகள் அவசியம்தான் அதுவே ஒரு சமூகத்துக்குத் தலைமைதாங்குபவர்கள் இந்த தவறுகளை செய்திருந்தால் இப்படி இணையத்தில் வெளியிட்டு விழிப்புனர்வுகளை ஏற்படுத்தலாம்.....அணுதினமும் இவ்வாறான செய்திகளை வெளியிடும் தளங்கள் இருக்கின்றனவே...?

      Delete
  3. சமூகத்திற்கு தலைமை தாக்குபவர்கள் மூலமான பிரச்சினைகளை சொல்வதன் மூலம் அவர்களது முகத்திரை கிளியும்.


    சமூகத்தில் எவ்வாறான பிரச்சினைகள் நடக்கின்றன என்பதை ஒரு பெண் பிள்ளையின் தாய் அறிந்து கொள்ள வேண்டும். தனது உறவினர்களே தனது பிள்ளையின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க கூடியவர்கள் என்பதையும் அவர்கள் அறிய வேண்டும்.

    இவ்வாறான செய்திகள் அனைத்தும் பிரசுரிப்பது சரி என நான் கூறவரவில்லை, ஆனால் தேவையும் கூட

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நீங்கள் சொல்லக்கூடியதை ஏற்றுக் கொள்கிறேன். சில பல் செய்திகளின் உண்மைத் தன்மையினையும் அந்த செய்திகளுடன் தொடர்புபட்டவர்களின் குடும்ப பிண்ணனி பற்றியும் செய்திகளை பெளியிடுவோர் ஆராய வேண்டும்...

      கௌரவமான குடும்ப பெண் ஒருவருக்கு இவ்வாறான நிகழ்வு ஏற்படும் போது அவள் சிறந்த முடிவாக தற்கொலையை தெரிவுசெய்கிறாள்.

      இங்கு விழிப்புனர்வை விட உயிர்தான் மிக முக்கியமானது.. மேலும் நிறைய சமூக சேவை நிறுவனங்கள் நேரடியாகவே இந்த விழிப்புனர்வு செயற்பாட்டினை செய்கின்றனர்.

      Delete
  4. செய்திகளை சொல்லும் விதத்தில் சில இணையத்தளங்கள் தவறு விடுகின்றன. நீங்கள் உதாரணம் காட்டிய இணையத்தளத்தில் ஒன்று பிரதான அரசியல் கட்டியினுடையது. அவ் இணையம் வேறுபல ஆரோக்கியமான செய்திகளையும் வௌியிட முடியும் ஆனால் அவை கூட இச் செய்திகளை வௌியிடுகின்றன என்றால்......?

    ReplyDelete
    Replies
    1. எவருடைய இணையத்தளத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் நான் இதனை பதிவிடவில்லை உதாரனத்துக்காக சில செய்திகளை ஸ்க்ரீன் சொட் போட்டேன்.

      மேலும் அரசியல் கட்சி சார்ந்தவர்களின் இணையத்தளங்கள் பிரதானமாக சமூக சேவை நோக்குடனே செயற்பட வேண்டும் என்பது அடியேனின் அவா...

      நம் நாட்டில் அரசியலுடன் தொடர்புடையவர்கள் நிறைய சம்பாத்தியத்தில் உள்ளனர்.இவ்வாறான இணையத்தள் பிழைப்பு அவர்களுக்கு அவசியமா...? நான் இங்கு சொல்வது முற்றுமுழுதும் தற்கொலைகளை அதிகப்படுத்தும் செய்திகளை குறித்தே

      Delete
  5. மற்றும் செய்திகள் உறுதிப்படுத்தாது எழுமானமாக எழுதுவதாக கூறினீர்கள். அப்படியல்ல பொலிஸ் நிலையங்களில் ஒவ்வொரு நாளும் அதிகளவான குற்றச் செயல்கள் துஷ்பிரயோகம் தொடர்பாகவே பதியப்படுகின்றன. பொலிஸ் ஊடக அறிக்கை பார்த்தால் தெரியும்.

    சில அங்கீகரிக்கப்பட்ட இணையங்களை விட உத்தியோக பூர்வமாக இயங்கும் இணையங்களை நீங்கள் பார்க்கலாம்.

    வக்காளத்து வாங்கவில்லை. பிழைகளும் இருக்கின்றன. மாலையில் மீண்டும் இணைந்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தினமும் குற்றச் செயல்கள் நடக்கின்றதுதான் அதற்காக குற்றத்தை மறைக்கக்கூடிய செயல்களில் இணையத்தளத்தினர் ஈடுபடாமல் அதனை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதனால் பின் விளைவுகள் ஏறாளம் ஏற்படுகின்றன.

      ஆகக் குறைந்தது சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களை இவர்கள் நேரடியாக சந்தித்திருப்பார்களா என்று பார்த்தால் கூட அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவுதான்.

      பொலிஸ் அறிக்கைகளில் குற்றச் செயல்கள் நடப்பதாக சொல்லப்படிருக்கிறது உண்மைதான். அது அந்த பிரதேசத்தோடு முடிந்துவிடும் அப் பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் அத் அதகவல்கள் பரவி அதனளவில் மட்டுப்படுத்தப் பட்டுவிடும்.

      ஆனால் இணையத்தளத்தில் தன்னுடைய செய்தி வெளியாகியுள்ளது என்று சம்பந்த்பட்டவர்களுக்கு தெரியப்படும் போது வெந்த புண்னில் வேலைப் பாய்ச்சுவது போலதான் உணர்வார்கள்.

      என்னைப் பொருத்தவரைக்கும் துஷ்பிரயோக செய்திகளை விழிப்புணர்வுக்காக வெளியிடலாம் ஆனால் விருப்பப் பட்டு இருவர் வைத்துக் கொண்ட தப்பான உறவினை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அதனை அசிங்கப்படுத்துவதென்பது தற்கொலைக்கு காரணமாக அமைகிறது.

      மேலும் தப்பான உறவுகளுக்கு நாட்டு சட்டத்தை விட அவரவர் சமூகத்தில் ஒவ்வொரு தண்டனைகள் உள்ளன அவற்றை வழங்கினாலே போதும் இணையத்தில் போட்டு விளப்பரப்படுத்த வேண்டிய அவசியம் தேவையில்லை.

      Delete
  6. Replies
    1. நண்பா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  7. நல்ல தகவல்ங்க சிட்டுக்குருவி.

    ReplyDelete
    Replies
    1. உண்மையாவா சொல்லிரீங்க..:;)

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...சகோ...

      Delete
  8. நல்ல பதிவு நண்பரே!! அவர்களுக்கு தேவை சூடான செய்தி அவ்வளவே.. மற்றபடி சமூகத்தைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு ஏன் கவலை..

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா...

      மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் அவர்கள் சமூகத்தைப் பற்றி கவலைப் பட்டால் எப்படி பிழைப்பு நடாத்துவது..:)

      Delete
  9. சிந்திக்க வைக்கும் பதிவு. சம்பந்தப்பட்டவர்களாகவே முன் வந்து குறைகளை சமூகத்திடம் சொன்னால் அதை வரவேற்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா...சம்பந்தபட்டவர் கெலெல்லாம் சொன்னா உலகத்துல நல்லவங்க அதிகமாயிடுவாங்க அதுதான் சொல்லுவதுக்கு தயங்குறாங்க போல..:)

      கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

      Delete
  10. வாழ்த்துக்கள் அறிமுகத்துக்கு...ஆக்கப்பூர்வ பதிவு நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா வாழ்த்துக்கும் வருகைக்கும்...:)

      Delete
  11. இதிலெல்லாம் பொறுப்புணர்ச்சி தேவை.இதை அத்தளங்கள் உணர வேண்டும்.நல்லபதிவு

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா... பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டால் எவ்வளவு விடயங்களை சாதிக்கலாம்...இதனை அறிந்து செயற்படுபவர்கள் மிகக் குறைவு இதுதான் கவலையான விடயம்

      மிக்க நன்றி ஐயா

      Delete
  12. வணக்கம் சார்.அருமையான விழிப்புணர்வு.சிறிய கோபம் உங்களோடு.அடுத்த பதிவிற்காக நான் தயாராக்கிய அதே தலைப்பு.இருந்தாலும் பறவாயில்லை.மற்றொரு ஆகாணத்தில் நோக்குவோம்.சந்திப்போம் சொந்தமே

    ReplyDelete
    Replies
    1. வாங்க சொந்தமே....

      ஐயோ நான் முந்திவிட்டேன் ஓ கே எனக்கு அவார்டு தாங்கோ இல்லேன்னா சண்டை பிடிப்பேன்..:)

      நீங்களும் பதிவிடுங்கள் விழிப்புனர்வு பதிவில் எத்தனை வெளியாகினாலும் சமூகத்துக்கு பல நன்மைகள் கிடைக்கும்

      Delete
  13. வணக்கம் நண்பரே,
    நலமா?
    நெடுநாளைக்குப் பின்னர் மறுபிரவேசம்...

    அருமையான விழிப்புணர்வு பதிவுக்கு
    நன்றிகள் பல...

    ReplyDelete
    Replies
    1. நலமாக இருக்கிறேன் சார்...நீண்ட நாளைக்கப்புறமா உங்களைக் கண்டு கொண்டதில் சந்தோஷம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  14. நீங்கள் விளங்கிக் கொள்வதில் சிறு தவறு உள்ளது மூஸா. ஒருவர் இன்னெருவருடன் வைத்திருக்கும் கள்ளத் தொடர்பை பற்றி பேசுவதற்கு எந்த ஊடகத்தி்ற்கும் உரிமை இல்லை, ஆனால் அதன் மூலமாக விளைவுகள் ஏதும் ஏற்படும் பட்சத்தில் அதனை அறிக்கை இடும் சுதந்திரம் ஊடகத்திற்கு உண்டு.

    உதாரணமாக, நேற்றைய தினம், யாழில் கள்ளத் தொடர்பு மூலம் பிறந்த குழந்தையை தாய் ஒருவர் வீசி எறிந்ததாகவும் அச்சம்பவம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவருக்கு பிணை வழங்கப்பட்டதாகவும் செய்தி வௌியானது.

    இதில் அப்பெண் கள்ளதொடர்பு கொண்டதையோ, கற்பமானதையோ முன்பு செய்திகளாக வௌியிடவில்லை. ஆனால் அந்த பிள்ளையை வீசியதும் அவருக்கு பிணை வழங்கப்பட்டதும் தான் செய்தியாக வந்துள்ளது.

    இதனையும் நீங்கள் வௌியிடக் கூடாது என்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்கிறேன் குழந்தை பிறப்பிற்கு முன் நடந்த சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதைப் பற்றி இன்னும் சொல்லப் போனால் இளவயது ஜோடிகள் பருவ வயதின் தூண்டல்களினால் ஒரு சில சில்மிஷங்களில் ஈடுபடுகிறார்கள்.சில்மிஷத்தில் ஈடுபடுபவர் மறைவான ஒரு பிரதேசத்திலே அதனை செய்கின்றார்கள்

      இதனை கள்ளத்தனமாக பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் பின் அவ்விருவரின் ரகசியங்களை அம்பலப்படுத்துவது எந்த வகையில் நியாயம்

      அம்பலப் படுத்தியவருக்கு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உறவினராகவோ அல்லது அவ் விருவரில் இவருக்கு தனிப்பட்ட முறையில் அக்கறை இருக்குமானால் அவ்விருவரிடமும் தவறின் ஆழத்தை சுட்டிக்காட்டி விழிப்புனர்வை ஏற்படுத்தலாம் அல்லது அவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்வதன் மூலம் சீரழிவினை சீர்படுத்தலாம்.

      ஆனால் இவற்றியெல்லாம் தவித்து பரபரப்புக்காக நெட் க்ஃபேயில் நடந்த சில்மிஷம்....பீச்சில் நடந்த கூத்து என்றெல்லாம் கூறி செய்திகளை வெளியிடுவது நல்ல ஒரு விடயம் என்று கூறுகிரீர்களா..?

      மேலும் இப்பதிவினை எழுதும் போது என்னுடைய மனதில் எழுந்தவை இளவயதினரின் தற்கொலைகள்தான்.அவைகள் தான் இந்த பதிவை எழுத தூண்டியது.

      யாழில் ஒரு பெண் தவறான உறவின் மூலம் குழந்தை பெற்று அதனை கொலை செய்துள்ளார் என்றால்...தவறான உறவு பற்றிய அடிப்படை அறிவு கூட அவருக்கு சரியான முறையில் தெரியவில்லை என்பதுதான் தெளிவாகிறது.

      Delete
    2. பல தவறுகளை செய்து பழக்கப்பட்ட ஒருவருக்கு கொலை செய்வது கூட சிறிதொன்றாகத்தான் தெரியும்.அவர் ஏற்னவே தவறான உறவுகளுக்கு பழக்கப்பட்டவராகத்தான் இருப்பார்.

      இல்லையெனில் இந்த நவீனயுகத்தில் தவறான உறவினால் ஏற்படும் விளைவுகளுக்கு பரிகாரங்கள் உடனுக்குடன் உண்டு.அதனை பலரும் அறிந்திருக்கின்றனர்.

      நான் இங்கு தவறான உறவினை வாடிக்கையாக கொண்டவர்களைப் பற்றி கூறவில்லை திரும்பவும் கூறுகிறேன் தவறு என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளினால்தான் ஏற்படுகின்றது அவ்வாறான தவறுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அசிங்கப்படுத்துவது என்னைப் பொருத்தவரையில் எந்த வகையிலும் நியாயமானது இல்லை.

      தன்னை ஒருத்தர் மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு அவர் செய்த தவறு தூண்டுமானால் அவர் தவறு செய்வதில் புதியவர்.அந்த தவறு அவர் விரும்பியோ விரும்பாமலோ நடந்துவிட்டது. பின்னர் அதனை எண்ணி மனம் நொந்துபோய் உயிரைவிடு தயாராகிறார் என்றால் நாம் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவதா அல்லது அந்த தவறினை மேலும் மேலும் சுட்டிக்காட்டுவதா..(இதையே சில பெற்றொர்கள் பிள்ளைகளின் படிப்பு விடயத்திலும் செய்து வருகின்றனர்)

      மேலும் விழிப்புனர்வினை ஏற்படுத்துவதுக்கு ஒருவரை உதாரணம் காட்டி சொல்லத்தேவையில்லை இப்படிப்பட்ட சம்பவங்கள் சமூகத்தில் நடக்கின்றன என பெரும்பாலான பெற்றோர்களுக்கும் தெரியும். அவர்களிடம் இலேசாக இவ்வாறான விடயங்களை சொல்லும் போது அவர்கள் தாமானவே விரைவாக புரிந்து கொள்வார்கள்.

      ஒருவருடைய ப்பெயர் முகவரியைக் கூறி விழிப்புனர்வு செய்வதற்குப் பெயர் விழிப்புனர்வு அல்ல அது புறம் பேசுதலைச் சாறும் மேலும் அவர்களுடைய குறைகளை வெளிப்படுத்தியதாகவும் கருதப்படும்.

      இதனை ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன்

      Delete
  15. உண்மையின் வலிகளை உணர்த்தும் பதிவு. சில இணையத்தளங்கள் பொறுப்பற்ற முறையில் பெயர் புகைப்படம் என்று அள்ளியிறைத்துவிடுகிறார்கள். அவர்களிடம் ஊடகதர்மம் தேவையில்லை சிறிதளவு மனிதம் இருந்தாலே போதுமானது.

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு கருத்தினை சொன்னீர்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  16. அனைவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கத்தை
    மிக அழகாகப் ப்திவு செய்துள்ளீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  17. சில ஊடகங்கள் நீங்கள் சொல்வதைப் போல் அநாவசிய வியடங்களையும் மிகைப்படுத்துகின்றன தான். ஆனால் 72 வயது வயோதிபர் எதுவும் அறியாத 8,9 வயது சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு சக மனிதர்களைப் போல் நடமாடுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

    இருவர் மனமொத்து செய்யும் பிழைகளை தவிர எனைய வௌிப்படுத்தக் கூடியவைகள் கட்டாயம் பிரசுரிக்கப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. இங்கு ... ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் துஷ்பிரயோகம் என்பது வேறு இருவருக்கிடையிலான கள்ளத்தொடர்பு என்பது வேறு...

      இதனை அதிகம் விளங்கப்படுத்த தேவையில்லை என நினைக்கிறேன்.

      மேலும் ஒரு வயோதிபன் சிறிசுகளை துஷ்பிரயோகம் செய்திவிட்டான் என்று கண்டறியப்பட்டால் அந்த செய்திகளை வெளியிடும் போதும் சில விழுமியங்களை பேணவேண்டும்.

      எழுவாறியாக அந்த செய்திகளை வெளியிடும் போது அதில் தொடர்புபட்ட சிறுசுகளின் மன்நிலையையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

      நானும் இங்கு துஷ்பிரயோகம் செய்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்று கூறுகிறேன். அந்த கண்டிப்பே உயிர்களை பறிக்குமளவுக்கு செல்வதென்பது அர்த்தமற்ற ஒன்றாகத்தான் என்னால் கருதப்படும்.

      மேலும் கள்ளத்தொடர்பு செய்பவர்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று கருத முடியாது. பருவவயது விடயங்கள் அனைத்தையும் அறிந்து அதனை அடைவதற்காக தவறான முறைகளலில் முயற்சிக்கின்றனர். இது அம்பலத்துக்கு வரும் போது அதனை செய்திகளாக வெளியிடுவோர் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கௌரவத்திலும் கொஞ்சமாவது அக்கரை காட்டவேண்டும்.

      தற்கொலை செய்பவன் ஏன் செய்கிறான் தான் செய்த தவறு அம்பலமானதால் தனது கௌரவத்துக்கு கலங்கம் ஏற்பட்டு விட்டது இனி வாழ்வதில் என்ன பிரயோசனம் என கருதியே செய்துகொள்கின்றனர்.

      இதில் திருமணமாகாத பெண் தொடர்புபட்டிருந்தால் அவளது பெற்றோறும் தங்களது கௌரவத்தையே முன்நிறுத்தி அப் அபெண்னை கண்டிக்கின்றனர் இங்கும் கௌரவமே முக்கிய இடம்வகிக்கின்றது.

      இதையெல்லாம் சிறிதும் சிந்திக்காமல் செய்திகளை வெளியிடுவதுதான் கண்டிக்கப்படவேண்டும் என்பது இந்த அடியேனின் மனக் குமுறல்.

      Delete
  18. என்னது, இணையத்தில் எழுதுவதால் பணம் சம்பாதிக்கலாமா? அட, எனக்கு இது புதிய தகவல் சிட்டுக்குருவி. ஆனாலும் இங்கே குறிப்பிட்ட விஷயங்கள் கொடுமையானதுதான். தப்பு.

    ReplyDelete
  19. இத்தனை நல் அலுவல்கள் அதிகம் இருந்ததால் தங்கள் வலைபூ பக்கம் வர இயலவில்லை, இன்று அந்த மனக் குறை நீங்கியது, படிக்காத பதிவுகளை படிக்க வாய்ப்பு கிடைத்தது.

    சமுக அக்கறை உள்ள பதிவுகள் தெளிவான கருத்துகளுடன் எழுதி வருகிறீர்கள் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன், நன்றாக எழுதுகிறீர்கள்

    ReplyDelete