பிட் அடிக்கலாம் வாங்க....

நான் சின்ன வயசில இருக்கும் போது என்னையக் கொண்டு போய் ஸ்கூல்ல சேர்த்துவிட்டாரு எங்கப்பா... (நாங்கெல்லாம் பெரிசாகிய பின்னா ஸ்கூல் போனோம் என்றெல்லாம் கேட்கப்படாது ஓK). சேர்த்துவிட்டது தான் விட்டார் பெரிய வகுப்பா பார்த்து சேர்த்து விட்டுரிக்கலாமில்ல... நேராவே ஒன்னாம் வகுப்புல கொண்டு போய் விட்டுட்டாரு

எனக்கு ஒன்னாம் வகுப்பில இருந்து படிக்கிறதுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்ல. ஒரு அஞ்சாம் ஆறாம் வகுப்புல கொண்டு போய் விட்டுறிக்க அந்த வருசத்தோட படிப்பை முடிச்சிருக்கலாம் ( நாங்க ஆறாம் வகுப்புத்தான் படிச்சமாக்கும்) ஜெஸ்டு மிஸ்ஸு என்னும் சொல்லிக்க ஏலாது... ஒன்னாம் வகுப்பில இருந்து சேர்த்தத்தால ஆறு வருஷம் வேஸ்ட்டு...

அப்பா ஏதும் செய்தா அது நம்ம நல்லதுக்குத்தான் இருக்கும் என்னு எனக்கு அஞ்சி வயசிலே தெரிஞ்சு போச்சு அதனால போனாப் போகுது  ஒன்னாம் வகுப்புல இருந்தே படிப்போம் என்னு அடுத்த நிமிசமே முடிவெடுத்திட்டேன்.

எதிர்காலத்துல ஒரு விஞ்ஞானியா இல்ல ஒரு வைத்தியனா இல்ல சமூகத்தில நல்ல அந்தஸ்துல வரப்போகிறேவன் எண்டு அட சி அதுவும் வேணாம் பிரபலமான பிகருகளையெல்லம் வச்சிருக்கிற பிரபல தாதாவா வருவானெண்டு ஒரு மருவாதை வேணாம் இந்த வாத்திகளுக்கு...

ஸ்கூல்ல சேர்ந்த அன்னைக்கே பாவி வாத்தி (நல்லா இருக்கனும்) பெரம்பால சாத்து சாத்தன்ன சாத்திப்போட்டான்...

பிகரொன்னு நல்லா இருக்கேன்னு கிட்ட போய் கிஸ்ஸு ஒன்னு கெடைக்குமா என்னுதாங்க கேட்டேன் அதுக்குப் போயி சாத்திப்பொட்டான்...

சாத்தாமலா விடுவான் கிஸ்ஸு கேட்டது அவன் பொண்டாட்டிக்கிட்ட இல்ல...
(நாங்கெல்லாம் அப்பவே அப்பிடின்னு இதத்தான் சொல்லுறது)

இந்த அதிர்ச்சியில இருந்து நான் மீளுறத்துக்குள்ள அடுத்த அதிர்ச்சி தலை மேல இடியா விழுந்திச்சுங்க...(பிரபல எழுத்தாளரெல்லாம் இப்பிடித்தான் சொல்லுவாய்ங்க.... :P )

பாவிப் பயலுகள் நம்ம திறமையை சோதிக்கனுமாம் என்னுட்டு எக்ஸாம் வைக்கப் போறதா ஸ்கூல்ல சேர்ந்து இரண்டாவது மாசத்துலே அறிவிச்சுப் போட்டானுகள்......

இங்க தாங்க விதி கன்னம் ஸ்டைல்ல டான்ஸ் ஆட ஆரம்பிச்சது.... :(

இந்த ரெண்டு மாசமும் நான் அதிர்ச்சியில இருந்ததால வகுப்புல என்ன நடந்ததெண்டே தெரியல்ல... அதிர்ச்சியில இருக்கும் போதே அடுத்த அதிர்ச்சி தகவல் கிடைச்சிச்சா அதனால நான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போயிட்டேன்.

நண்பன் ஒருத்தந்தான் தந்த மூனு பாட்டல் பீரைக் குடிச்சத்துக்கப்புறமாத்தான் சுய நெனவுக்கே வந்தேனெண்டா எப்படிப்பட்ட அதிர்ச்சியா இருக்கும்.
எக்ஸாமெண்டா என்ன கருமமென்றே எனக்குத் தெரியா... எப்பிடி எழுதுற எண்டு கூட தெரியாதுங்க. முதலாவது எக்ஸாம் தானே நான் யெல்பு பண்ணுரேண்டா மச்சி என்னு பீரு வாங்கித் தந்த நண்பன் சொன்னான். நமெக்கென்னு ஒரு கௌரவம் இருக்கில்ல அதனால நான் உடனே ஒத்துக்கெல்ல... பின்னாடி நண்பந்தானே சொல்லுறான் கடைசி வரைக்கும் தோல் கொடுக்கப் போறவன் அவந்தானே என்கிறதால ஒத்துக் கொண்டேன். 
எப்பிடியோ நண்பன் தயவுல மொதலாவது எக்சாமுல 4 சப்ஜெக்டுலயும் மொத்தமா 83 மார்க்கு எடுத்துட்டேன். ஸ்க்கூல் வாழ்க்கையில் இது ஒன்னுந்தான் எக்ஸாம் இனிமே எக்ஸாமேஇல்ல எண்டு நான் நினைச்சிருந்தேன். இது வருசக் கடைசி  எக்ஸாமில்ல எங்கிறதால இந்த  மார்குகளை பத்தி நீங்க கவலைப்படாம அடுத்த எக்ஸாமில எல்லோரும் நல்லா மார்க் வாங்கனும் அப்பதான் நீங்க இரண்டாம் வகுப்புக்குப் போவீங்க என்னு இன்னொரு அணு குண்டைத் தூக்கிப் போட்டாரு வாத்தி... 
அன்னைக்கு நானும் என் பீரு நண்பனுமா சேர்ந்து ஒரு முடிவு எடுத்தோம். அந்த முடிவுலதான் ஆறாம் வகுப்பு வரைக்கும் படிச்சி  இன்னைக்கு மக்கள் நிமிந்து பார்க்கிற அளவுக்குப் பெரிய உத்தியோகத்தில இருக்கிறோமிங்க...
ஓK நானும் என் நண்பனும் என்ன முடிவு எடுத்தோமெண்டு யோசிக்கிறீங்களா ? அத சொல்லாமப் போயிடுவேனா என்ன... கீழுக்கு கொஞ்ச படம் சேர்த்திருக்கேன் அதைப் பார்த்து தெரிஞ்சிக்கோங்க :P
இந்த வருஷத்தின் கடைசிப் பதிவு... 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் புதிய வருடத்தில் புதிய பதிவுகளுடன் உறவுகளை சந்திக்கிறேன் 

பேஸ்புக்குக்கு நடந்த மகா கொடுமை

இந்த நவீன உலகத்தில் பேஸ்புக் பற்றி தெரியாதவர்கள் இல்லையென்றே சொல்லாம். புதிதாக இணைய இனைப்பினைப் பெற்றுக் கொள்பவர்கள் கூட முதலில் பேஸ்புக் கணக்கொன்றினைத் திறந்ததுக்குப் பின்னர்தான் தன்னுடைய ஏனைய வேலைகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். (அப்பிடித்தானே...)

பேஸ்புக்கினால் என்ன நன்மை தீமை இருக்கிறது என்பதை நாம் ஆராய்வது கிடையாது. ஒரு செய்தியை மிகவும் அதிகமானவர்கள் படிக்க வேண்டுமென்று கருதினால் அதனை பேஸ்புக்கில் பதிவு செய்தால் அந்தச் செய்தி நாம் நினைத்தைவிட அதிகமானவர்களிடம் இன்றில்லாவிட்டால் என்றாவது ஓர் நாள் சென்றுவிடும்.

பேஸ்புக் ஆரம்பிக்கப் பட்டதின் நோக்கம் நிறைவேறியதோ தெரியாது ஆனால் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களின் நோக்கம் எப்படியாகினும் நிறைவேறிவிடுகிறது என்பதனை சிவகார்த்திகேயன் நடித்த பேஸ்புக் எனும் குறும்படம் சொல்கிறது.

2004 பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் தளத்தின் வருமானம் (2008 ஆம் வருட கணக்கெடுப்பின் படி) சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என  கணக்கெடுக்கப் பட்டுள்ளது. குறைந்த காலப் பகுதியில் அதிக வருமானமீட்டி இணையத்தளங்களின் வரிசையில் முதலாம் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டது. (சரி பேஸ்புக் புராணம் போதும் என நினைக்கிறேன்)

நான் முன்னர் கூறியது போன்று நாமெல்லாம் ஒரு விடயத்தின் நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்ந்து செயற்படுவது மிகக் குறைவு. முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்ற கொள்கையினை வேதவாக்காக் கொண்டு ஒரு விடயத்தில் இறங்கி அதில் பட்ட பின்புதான் அவ்விடயத்தின் நன்மை தீமைகளைப் பற்றி பேசிக் கொள்வோம்.

ஆனால் ஆங்கில சமூகத்தினர் தங்களது செயல்களில் நன்மை தீமைகள் பற்றி ஆராய்ந்துதான் செயற்படுவார்கள் என்று அன்மையில் விக்கிபீடியா வெளியிட்ட தகவல் சொல்கிறது. இதனை நன்மை தீமைகளை ஆராய்கிறார்கள் என்று சொல்வதா அல்லது பேஸ்புக் பற்றி தெரியாமல் அது தொடர்பான தகவல்களைத் திரட்டுகிறார்கள் என்று சொல்வதா என்று புரியவில்லை. இரண்டாவதாக இருந்தால் அது பேஸ்புக்குக் கிடைத்த மகா அவமானம்

இந்த வருடம் அதிகமாக வாசிக்கப்பட்ட பதிவுகளை விக்கிபீடியா தளம் அண்மையில் வெளியிட்டிருந்தது. அதிகமானவர்கள் தேடிப்படித்த தகவல்களில் முதலிடத்தில் இருப்பது பேஸ்புக் தளம் பற்றிய தகவல்களே.அதுவும் ஆங்கிலம் பேசக்கூடியவர்களே இந்த தகவலை அதிகம் தேடிப்படித்ததாகவும் விக்கிபீடியா சொல்லியுள்ளது.

  • 32,647,942 தடவைகள் இங்கிலாந்தில் பேஸ்புக் தொடர்பான  பதிவுகள் வாசிக்கப் பட்டுள்ளன
  •  18,569,543 தடவைகள் ஜப்பான் ஆபாசப் பட நடிகைகளின் பட்டியல் தேடிப் படிக்கப் பட்டுள்ளது  
  •  12,719,284 தடவைகள் சீனாவில் உள்ள சான்சி மலை தொடர்பான தகவல்கள் தேடிப் படிக்கப் பட்டுள்ளது 
  • 3,682,191 தடவைகள் ரஷ்யா பற்றிய தகவல்கள் தேடிப் படிக்கப்பட்டுள்ளது.
  • 11,217,715 தடவைகள் ஸ்பெயினில் பேஸ்புக் பற்றிய தகவல்கள் தேடிப் படிக்கப்பட்டுள்ளது.
  • 4,907,569 தடவைகள் சீனாவின் Baidu தேடுதல் தளம் பற்றி தேடிப் படிக்கப் பட்டுள்ளது. இத் தளம் கூகுளுக்கு இணையாகப் போட்டி போடுகிறது என்பது கூடுதல் தகவல்
  • 10,206,548 தடவைகள் ஜேர்மனியர்களால்  cul-de-sacs எனும் பாதை ஒழுங்கு (சந்தி) பற்றி தேட்ப்படிக்கப் பட்டுள்ளது. இது அதிக வாகண நெருக்கடி நிறைந்த பாதை என்பதும் குறிப்பிடத் தக்கது.
  • 2,185,387 தடவைகள் துருக்கியின் முதல் ஜனாதிபதி முஸ்தபா கமால் பற்றி தேடிப் படிக்கப்பட்டுள்ளது.
  • 4,464,618 தடவைகல் பிரஞ்சுக் காரர்களால்  Ilex crenata எனும் தாவரம் பற்றி அதிகம் தேடிப் படிக்கப் பட்டுள்ளது.
  • 1,385,687 தடவைகள் இந்தோனேசியாவில் பேஸ்புக் தொடர்பான தகவல்கள் தேடிப் படிக்கப் பட்டுள்ளன. இது பேஸ்புக் தொடர்பான தகவல்களை அதிகம் தேடிப்படித்த மூன்றாவது நாடாகும்.


இனியும் வேண்டாம் இப்படியொரு பொழுது

இரவுகளின் ஆரம்பப் பொழுதுகளை கடற்கரைகளில் கழிப்பது எங்களது வழக்கமாக இருக்கிறது. அன்றும் அப்படித்தான் நண்பர்கள் எல்லோரும் மாலைப்பொழுதில் கடற்கரைக்குச் சென்றுவிட நான் மட்டும் சிறிது தாமதமாகிவிட்டேன்.அது ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுது...
 
என்னைத் தாமதப்படுத்திய வேலைகளை முடித்துவிட்டு நண்பர்கள் இருக்குமிடம் தேடிச் சென்றேன். கடற்கரையில் வழமையாக நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அவர்கள் இருக்கவில்லை. நிலவொளியில் ஆங்காங்கே தெரிந்த கூட்டங்களை நோட்டமிட்டேன் அங்கும் அவர்கள் இல்லை. ஒரு வேளை கடலோரம் சென்றிருப்பார்களோ என்று எண்ணி, என் கண்ணுக்குப் புலப்பட்ட ஒரு மண் மேட்டில் சிறிது நேரம் படுத்துக் கொண்டேன். குளிர் கலந்த கடற்கரைக் காற்றில் நிலவொளியில் மின்னும் வானத்தையும் அதில் பவணிவரும் வெள்ளை மேகங்களையும் இரசிப்பதில் உள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை ஏனோ தெரியவில்லை.

அடுத்த நாள் ஞாயிறு காலை 8.30 மணியளவில் என்னை அம்மா குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். குளிக்கும் போது நேற்றிரவைய ஒன்று கூடலில் இன்று காலையில் எல்லோரும் கடலில் குளிக்கப் போக  திட்டமிட்டுருப்பதாக நண்பன் ஒருவன் கூறியதையும் ஞாபகப் படுத்திக் கொள்கிறேன்.

குளித்து முடிந்து தலையைத் துவட்டிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லோரும் சப்தமாக கதைத்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் என்ன கதைக்கிறார்கள் என்பது தெளிவாகக் கேட்கவில்லையெனக்கு.

என்ன ஒரே சப்தமாக இருக்கிறது என்று என் சப்தத்தை உயர்த்தினேன். கடற்கரை வீட்டுத் திட்டதினுள் கடல் வந்துவிட்டதாவும் அப்பிரதேச மக்கள் அங்குமிங்கும் சிதறிக் கொண்டுமிருப்பதாகவும் என் வீட்டிலிருந்து சப்தம் வந்தது.

எனக்கு புதுமையாக இருந்தது... கடல் வந்துவிட்டதா எனச் சிரித்துக் கொண்டே ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று நபி சொல்லித் தந்திருக்கிறார்கள் அல்லவா அவ்வாறு செய்வது தானே என்று கூறிக் கொண்டு டவலை உடுத்தியவனாக வீதியில் என்ன நடக்கிறது எனப் பார்க்கச் சென்றேன்.

வீதியில் அம்மா அப்பா அக்கா தங்கை என எல்லோரும் நின்றிருந்தனர். கடற்கரைப் பிரதேச பெண்களில் ஒருவர் சித்தப்பா என் வீட்டை கடல் கொண்டு போய்விட்டது என்று என் அப்பாவைப் பார்த்துக் கூறியவராக எங்களிடமும் நிற்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருந்தார்.

ஏதோ நிகழ்ந்து விட்டது மட்டும் புரிந்தது எனக்கு... அப் பெண் சென்று சற்று நேரத்தில் எனக்குத் தெரிந்த இன்னுமொருவர் பிரதான வீதிக்கு கடல் வந்துவிட்டது என்னுடைய சைக்கிளையும் கொண்டுபோய்விட்டது. STF உம் நானும் ரெலிகொம் டவர்ல ஏறி நின்னு தண்ணி போனதுக்குப் பொறகுதான் வாறோம் என்றார். அவரின் நிலையைப் பார்த்தேன் இடுப்பு வரையுள்ள அவரது ஆடை யாவும் நனைந்திருந்தது. அதன் பின் தான் உணர்ந்து கொண்டேன் கடல் வந்திருக்கிறது என்பதனை. இது நடக்கும் போது நேரம் காலை 9.10 இருக்கும். எனக்கு இன்னமும் அந்தக் கடிகாரமும் அந்த நிகழ்வும் ஞாபகமிருக்கிறது.

அதன் பின் பாதை முழுவதும் சனநெரிசல். கையில் அகப்பட்ட பொருட்களுடனும் கைக் குழந்தைகளுடனும் என் சொந்தகள் எல்லாம்... பலர் எங்கு செல்கிறார்கள் என்று தெரியாமல் சென்று கொண்டிருந்தனர் என் குடும்பம் உள்ளடங்களாக கொஞ்சத் தொகையினர் பள்ளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். நானும் சென்றேன்.

எல்லோரையும் பள்ளிவாசலுக்குள் வருமாறும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் சொல்லிக் கொண்டிந்தார்கள் மௌலவிகள். வெளி நிகழ்வுகள் ஒன்றும் தெரியாது. சொற்ப நிமிடங்களுக்கு ஒருமுறை கடல் இந்தச் சந்தி அருகில் வந்து விட்டது என்றும் உல்லை முழுவதும் கடலில் மூழ்கியிருப்பதாகவும் மையித்துகள் தண்ணீரில் மிதப்பதாகவும் பெரியவர்கள் கூறிக் கொள்வது மட்டும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

இவர்களின் பேச்சுக்கள் யாவையும் கேட்டு என்னுள் நான் ஒரு காட்சியை உருவாக்கிக் கொண்டேன் அந்தக் காட்சியும் இன்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது. 

என் பெற்றோர் மிகுந்த கவலையில் காரணம் என் அண்ணன்கள் எல்லோரும் வெளியூர்களில் இருந்திருந்தார்கள். இவர்களின் நிலை என்னவாகியிருக்குமோ  என்ற சிந்தனையில் அவர்கள் . தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியாத நிலை.

நேரம் 11.00 மணியிருக்கும் நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாகவே பேச்சுக்கள் இரண்டு மூன்று தடவைகள் கடல் வந்து சென்றதாகவும் இன்னும் எத்தனை தடவை வரப் போகிறதோ என்று தெரியாததால் எல்லோரையும் பள்ளிவாசல்களிலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்கள் எங்க ஏரியா பெரிசுகள் ஆனாலும் நான் வீட்டுக்குச் சென்று பார்த்து வருவதாகக் கூறிவிட்டு நண்பர்கள் சிலருடன் கடற்கரை நோக்கிச் சென்றேன்.

வீடுகள், மதில்கள், கிணறுகள் என எல்லாமுமே பிடுங்கப்பட்டு அங்குமிங்குமாய் கிடந்தன. கடலருகே சென்றேன் கடல் எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல் வழமை போன்றே காணப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு ஏரியாவையும் சென்று பார்வையிட்டேன். சில இடங்களில் பாதிப்பு அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் இருந்தது. வீடுகள் ஆள் நடமாற்றமற்றுக் கிடந்தன. வயலுக்குச் சென்றவர்கள் வருவதற்குப் பாதைகள் இல்லை இரண்டு பாலங்கள் நொருங்கிவிட்டன.
 பாதிக்கப்பட்ட பாலங்களில் ஒன்று
களப்பருகே சென்றேன். அங்கு படையினரும் இன்னும் சில ஊர்மக்களுமாய் சேர்ந்து களப்பின் மறு முனையில் இருப்பவர்களை படகுகளில் ஏற்றிவரத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு படகினில் ஏறி மற்றைய கரைக்குச் சென்றேன். அங்கே பாதிப்பு மிக மிக அதிகம் வீடுகள் முற்றாக பிடுங்கப்பட்டு வீடுகள் இருந்ததற்கான அடையாளமே இருக்கவில்லை. சில்லைறைக் காசுகளும் நூறு ரூபா போன்ற நோட்டுக்களும் கிடந்தன பணத்துக்கு அன்று பெறுமதியே இல்லாமல் இருந்தது. கடிகாரமொன்று 8.55 ஐக் காட்டியவாறு கிடந்தது. ஒரு திண்ணையில் நடுத்தர வயதுடைய ஒருவர் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்ததில் அது அவருடைய வீடு என்பது புரிந்தது.

நேரம் 1.00 மணியளவில் சந்தையை வந்தடைந்தேன். மீண்டும் கடல் வருவதாகக் கூறிக் கொண்டு வாகணங்கள் மிக வேகமாக செல்ல ஆரம்பித்தன. என்னடா இப்போதானே நாம அந்தப் பக்கமிருந்து வந்தோம் அதுக்குள்ள எப்பிடிடா என நண்பர்கள் நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டோம். பின் வேறு எங்கும்  செல்ல மனதின்றி வீடு வந்து சேர்ந்தேன். இப்போது பள்ளிவாசலில் யாருமில்லை எல்லோரும் வீடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

எங்க வீட்டு முற்றத்து மாமரத்தின் கீழ் பல குடும்பங்கள், சிறுவர்கள் பசியினை அம்மாக்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தனர். என் அம்மா தயாரித்து வைத்திருந்த காலைச் சாப்பாட்டையும் இன்னும் வீட்டிலிருந்த பிஸ்கட்டுக்களையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். கௌரவம் பட்டம் பதவி எதுவும் பாராமல் எல்லோரும் அன்று ஒன்றாகவும் ஒரே உணவுடனும்...

இரவுப் பொழுது நெருங்கிவிட்டது மின்சாரமில்லாததால் அனைத்து பிரதேசமும் முழுமதியில்  ஜொலித்துக் கொண்டிருந்தது. இரவில் பெண்களை வீடுகளில் வைத்துக் கொண்டிருப்பது சிரமம் என்பதால் என் குடும்பத்துடன் சேர்த்து இன்னும் சில பேர் மீண்டும் பள்ளிவாசலுக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க ஒரு சில ஆண்களும் சென்றுவிட்டார்கள். இம்முறை காலையில் இருந்ததை விட குறைவானவர்களே பள்ளிவாசலில் இருந்தார்கள். ஏனையவர்கள் எல்லோரும் உயர் பிரதேசங்களான வெளியூர்களிற்கு தங்களிடமிருந்த வாகணங்களில் சென்றுவிட்டார்கள்.

கடலை அண்டிய பிரதேசத்தில் உள்ள வீடுகளில் யாரும் இல்லை என்பதால் அங்கே திருடர்களின் நடமாட்டம் இருப்பதாக பேச்சு எழுந்தது. மொத்த ஏரியாவுக்கும் பாதுகாப்புக்கு நாங்கள் கொஞ்சப் பேர் இருந்தோம். குளிரைப் போக்க நெருப்பு மூட்டி அதில் உடம்பைக் சூடுபடுத்திக் கொண்டும், எதிர் வீட்டு மாமாவின் பெட்டரியில் இயங்கும் ரேடியோவுடனும் எங்கள் இராப் பொழுது ஆரம்பமானது. இடையில் பசி எழ அருகில் உள்ள கடை முதலாளியைத் தேடிச் சென்று பிஸ்கட்டுகளும் எங்களுடன் இருந்த பெரிசுகளுக்கு சிகரட்டும் வாங்கிவந்து கொடுத்தோம்.

நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைக் கடந்து அடிக்கடி மிக சொற்பத் தொகையினர் பிணங்களைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் யார் யாரெல்லாம் இறந்திருக்கிறார்கள் என்ற தகவல்களையும் திரட்டிக் கொண்டோம். சிறிசுகள் பெரிசுகள் நல்லவர்கள் கெட்டவர்கள் என கொஞ்சப் பேரை கடல் காவுகொண்டிருந்தது.

வெளியூர் தொடர்புகள் எதுவுமில்லாத எங்களுக்கு சக்தி எப் எம் மட்டுமே துணை புரிந்தது. பாடல்களுக்கு மத்தியில் அடிக்கடி சேதவிபரமும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். காலை 6.00 மணியிலிருந்து பாடல் ஒலிபரப்புவதைத் தவிர்த்துவிட்டு சோகம் கலந்த ஒரு இசையினை மட்டுமே ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள் சக்தி எப் எம் நிருவாகிகள். 7.00 மணி செய்தியில் தான் முதன் முதலாக கேட்டேன் அந்தப் பெயரை சுனாமி ... ஆனாலும் சுனாமி என்ற பெயரில் எனது ஊரில் ஒரு ஹோட்டல் இருந்ததும் என் ஞாபகத்தில் வராமலில்லை.

சுனாமியின் பாதிப்பில் சுனாமி ஹோட்டல்
இரவு முழுவதும் விழித்திருந்ததால் காலையில் சிறிது நித்திரை கொள்வோம் என்றெண்ணி நித்திரை கொண்டேன். திடீரென முழக்கம் போன்ற சப்தம் கேட்டு இதயம் படபடக்க வெளியில் ஓடி வந்தேன். முற்றத்தில் எல்லோரும் அமர்ந்திருக்க வீட்டுக்கு மேலாக உலங்கு வாணுர்தி ஒன்று சென்று கொண்டிருந்தது. வீட்டுச் சிறுசுகள் யாவும் உயர்த்தி தலைகளைப் தாழ்த்தாமல் வாணுர்தியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின் நித்திரையில் இருக்கும் போது ஏதாவது சிறிய சப்தம் கேட்டாலும் திடீரென விழித்துக் கொள்வதும் இதயம் படபடப்பதும் வழக்கமாயிற்று. இன்றும் தொடர்கிறது.

அடுத்தடுத்த தினங்களில் வெளியூர்களுக்குச் சென்றவர்களும் ஊர் திரும்பினார்கள். வீடுகளை இழந்து பொது இடங்களில் இருப்போரின் பசி போக்க உரிமையாளர்களின் உரிமையின்றி ஆடு மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டன. சந்தையில் இருந்த சிங்கள தமிழ் சகோதர்களும் தங்கள் கடைகளைத் திறந்து எந்தவித எதிர்பார்ப்புமின்றி உணவுப்பண்டங்களும் அரிசி மூட்டைகளும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். பல கடைகள் உடைக்கப் பட்டும் பொருட்கள் எடுக்கப் பட்டிருந்தன.

காடுகளிலும் இடிபாடுகளுக்கும் மத்தியில் சிக்கியிருக்கும் பிணங்களை மீட்கும் பணியில் ஒரு சில இளைஞர்களும் ஊர்ப்பெரியவர்களும் ஈடுபட்டிருந்தார்கள். வெளிநாட்டுக் பிரஜைகள் படையினர்கள் என பிணங்கள் அடையாளம் காணப்பட்டன. பிண பூமியினை தூய்மைப் படுத்த தொடர்ந்து வந்த மூன்று நாட்களும் அடைமழை பொது இடங்களில் தங்கியிருந்தவர்களுக்கு மழைவெள்ளமும் அசௌகரியத்தைக் கொடுத்ததும் நினைவில் இருக்கிறது.

இது நடந்து 4 வருடங்களின் பின் வெளியூர் நண்பன் ஒருவனின் வீட்டில் இரவொன்றைக் கழிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது . அதிகாலையில் அவ்வூரிலிருந்து மக்கள் எல்லோரும் வேறு இடங்களுச் சென்று விட்டதாக காலையில் தகவலறிந்தேன் காரணம் வினவிய போது சுனாமி வருவதாக ஒரு தொலைபேசி அழைப்புக் கிடைத்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் உயரமாக இடம் நோக்கி நகர்ந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலை இன்றும் சில இடங்களில் தொடர்கிறது. கடல் தந்த வடுக்கள் இன்னும் மறக்க முடியாதவைகள். இந்த அனுபவத்தை விபரிக்க இவ்விடம் போதாது.அனுபவித்த பலரும் இதில் இருப்பீர்கள் என்று கருதுகிறேன். 

இனியும் வேண்டாம் இப்படியொரு பொழுது

" வன்புணர்வு " குற்றமல்ல

உலகத்தில் எங்கு பார்த்தாலும் இன்றைக்குப் பெரும் பிரச்சனையாக இருப்பது பாலியல் பலாத்காரங்கள். அண்மைய சில தினங்களாகவே நாம் பார்த்திருப்போம் வன்புணர்வு சம்பவங்கள்  மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பீதியையும் கோபத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது என்பதனை.
 
சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் ஒரு சில கொடியவர்கள் தங்கள் இச்சைகளை முறையற்ற விதமாக பூர்த்திசெய்து கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புக்களை அவர்கள் சிறிதும் சிந்திப்பதற்கு மறக்கிறார்கள். சிந்திப்பதற்கு அவர்கள் மறக்கவில்லை அவர்கள் அடிமைப்பட்டிருக்கும் போதை வஸ்துக்கள் அவர்களை மறக்கடிக்கச் செய்கின்றது என்பது தான் உண்மை.
சில வேளை வன்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுபவர்கள் கூட போதைக்கு அடிமையாகும் போது தங்கள் நிலையை மறந்தும் கருத்துக்களை மறந்தும் செயற்படலாம். அண்மையில் நடந்த குற்றங்களில்  இப்படிப்பட்டவர்கள் கூட தொடர்பு பட்டிருக்கலாம்.

ஆகவே பெரும்பாலான குற்றங்களுக்கு விதையிடுவது போதைவஸ்த்துக்களை பாவிப்பதேயாகும். வன்புணர்வு குற்றமென்று பாராளுமன்றம் வரையில்  பேசுபவர்கள் ஏன் இந்தப் போதைப் பாவனையைக் குறைப்பதற்கும் அதனை அடியோடு அழிப்பதற்கும் முயற்சிக்கவில்லை. முழு மனதுடன் சிலர் முயற்சித்தாலும் முயற்சிக்கும் இவர்களை ஊக்குவிக்க சமூகம் துணைபோவது கேள்விக்குறியதே. 


பெரும்பாலான இளைஞர்கள் யுவதிகளின் பொழுதுபோக்கும் சாதனமாக இணையம் சினிமா தொடர் நாடகங்கள் போன்றன காணப்படுகின்றன. ஹாலிவூட் சினிமாவைத் தவிர்த்தாலும் இன்றைய தென்னிந்திய சினிமாக்களில் போதைபொருட்களின் பாவணையையும் வன்புணர்வு காட்சிகளையும் இன்றும் கூட தவிர்க்காமல் இருப்பது கவலைக்குறியதே.

எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்துக்களை கருத்தில் கொள்லாமல் வெளிப்படையில் கிடைக்கக் கூடிய அற்ப பணத்துக்காக இப்படியான அருவருக்கத் தக்க காட்சிகளைத் தவிர்க்க இயலாமல் இருக்கிறது இன்றைய சினிமா உலகு. சமூகத்துக்கு பலன் தரக்கூடிய செய்திகளை சுமந்து வரும் திரைப்படங்களில் கூட இப்படியான (ஆபாச) காட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆபாச காட்சிகள் உள்ளடங்கலான சினிமாவினை இன்றைய சமூகம் குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பதையும் வழக்கப்படுத்திவிட்டார்கள். தன் உறவினர்களுடனேயே சேர்ந்து தகாத காட்சிகளைப் பார்ப்பவருக்கு நாளைக்குத் தெருவில் செல்லுபவர்களை வன்புணர்வது குற்றமாக தெரியாது.

பெண்களுக்கு தங்களின் உரிமை மீதான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகத்தான் தொடர் நாடகங்களைத் தயாரிக்கிறோம் என்று பலர் கூறுகிறார்கள் இவர்களின் இக் கூற்றுக்கு  பொது மக்கள் கூட ஆதரவு தெரிவிப்பதாகவும் சொல்கிறார்கள். சமூகத்துக்கு பயன்படும் சில செய்திகள் தொடர்நாடகங்களில் இருந்தாலும் அதிகமானவை சுயநல  இழுப்படிப்புக்களாகவே இருக்கின்றன. இந்த தொடர் நாடகங்களில் கூட வன்புணர்வு காட்சிகளை சேர்ப்பதற்கு தயங்குவது கிடையாது சின்னத்திரை உலகு.

இன்றைக்கு கையடக்கத் தொலைபேசிகளிலும் பார்க்கக் கூடிய வசதிகளுடன் ஆபாசப் படங்கள் வெளிவருகின்றன. ஆபாசப் பட இயக்குனர்கள் நடிகை நடிகர்களும் இன்று சமூகத்தில் சாதாரணமாகவே கருதப்படுகிறார்கள். சொல்லப் போனால் ஆபாசம் என்பது மலிந்து சர்வ சாதாரணமாக மாறிவிட்ட இந்நிலையில் இந்த ஆபாசத் திரைப்படங்களின்  சாதக பாதகங்களை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கு சமூகவியலாளர்களும் அரசாங்கமும் எடுத்த முடிவுகளைப் பார்க்கப் போனால் பூச்சியமே. ஆபாசம் திரைப்படங்களின் எண்ணிக்கையும் குறைந்ததாக தெரியவில்லை. 

பெண் பிள்ளைகள் விடயத்தில் சிரத்தை எடுத்துக் கொள்ளும் பெற்றோர்கள் எத்தனை சதவீதத்தினர் இருக்கிறார்கள்  ? குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பெண்பிள்ளையை அவள் போக்குக்கு விட்டுவிடுவது இன்றைய புதிய கலாச்சாரமாக மாறிவருகிறது. இப்படி பெண்பிள்ளைகளை அவர்கள் போக்குக்கு விட்டுவிடும் பெற்றோர்கள் அப்பிள்ளையின் பாதுகாப்பு விடயத்தில் எந்தளவுக்கு கவணமெடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே கிடைப்பார்கள்.

பள்ளிச் சிறுவர்களை வாகணங்களில் அனுப்பும் பெற்றோர் அந்த வாகண சாரதிகளின் விபரங்கள் அவர் எப்படிப்பட்ட பண்பு கொண்டவர் என்பதை அறிந்திருப்பது மிக முக்கியம். விபரங்கள் கிடைக்கவில்லையென்றாலும் அச் சிறுவர்களிடம் தினமும் அல்லது வாரமொரு முறையாவது சாரதிகள் பற்றியும் அவர்கள் தங்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டுக் கொள்வதால் சாரதி எப்படியான நடத்தை கொண்டவர் என்பதனை அறிந்து அதற்குகந்த நடவடிக்கை எடுக்கலாம்.


வெறுமெனே பணம் உழைப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதில் எந்தப் பிரயோசனமும் கிடையாது. தன் பிள்ளைக்கு ஏதாவது ஆபத்தின் மூலம் உயிர் சென்றுவிட்டால் அந்த ஆபத்துக்கு காரணம் தன்னுடைய கவணமின்மையே என்று தனக்கு நூறுவீதம் தெரிந்திருந்தால் அந்தக் கவணமின்மைக்கான காரணம் என்னவென்று அறியவேண்டும். சாதாரணமாக தன் பிள்ளைகள் மீதான கவணமின்மைக்கு பெற்றொர்களின் பணமீட்டும் முயற்சியே காரணமாக அமைகிறது. ஆகவே அந்தப் பணத்தைக் கொண்டு தன் பிள்ளைக்கு நிகழ்ந்த அவமானத்தை அல்லது பிரிந்த உயிரை ஈடு செய்யலாம் தானே.

இப்படிச் செய்ய முடியுமென்றால் ஏன் ஊடகங்களில் தன் பிள்ளைக்கு கெடுதி இழைத்தவன் தண்டிக்கப் பட வேண்டும் என்று புலம்ப வேண்டும் ஏனையவர்களின் அனுதாபத்தைப் பெற வேண்டும்.

குற்றச் செயல்கள் நடைபெறுவதற்குறிய அனைத்து ஏற்பாடுகளையும் சமூகம் செய்துவிட்டு அக் குற்றம் நடபெற்ற பிறகு குற்றம் புரிந்தவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று கூறுவது நகைச்சுவைக்குறியதே. குற்றம் புரிந்தவருக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று சொன்னால் குற்றம் செய்வதற்குறிய சூழலை உருவாக்கியவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்.


உலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...

எம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர மற்ற எவராலும்  குறித்த தினத்தில் தான் உலகம் அழியும் என்று சொல்ல முடியாது. ஒரு பொருளைத் தோற்றுவித்தவனுக்குத் தான் அதன் அழிவுக்காலம் தெரியும் என்பதை நம் யாவருக்கும் இன்னுமொருத்தர் வகுப்பெடுத்து புரியவைக்க வேண்டும் என்கிற அவசியம் தேவையில்லை.

இதனை அறிந்திருந்தும் ஏன் தான் எம்(?) உள்ளம் வெரும் வதந்திகளையும் பரபரப்புச் செய்திகளையும் கண்டு பதற்றமடைகிறதோ தெரியவில்லை. ஆழ் மனதில் டிசம்பர் உலக அழிவு பற்றி பலர் அவ நம்பிக்கை கொண்டிருந்த போதும் வெளிப்படையாக உறவினர்களுடனும் நண்பர்களுடனும் உரையாடும் போது உலக அழிவு செய்திகளைப் பிரதானமாகக் கொண்டு உரையாடுகிறார்கள்.

இந்த உரையாடல்கள் நேரக்கழிப்புக்கு சுவாரஷ்யமாக இருந்த போதிலும் உரையாடலின் போது சிலரின் உள்ளம் தற்போது பரவியிருக்கும் செய்திகளில் சிறிதளவேணும் நம்பிக்கை கொள்கிறது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் அதி நவீனமாக வளர்ந்திருக்கும் இன்றைய அறிவியல்.

இன்றைய இந்த அறிவியல் மேதைகளால் கணித்து  தினசரி தொலைக்காட்சி செய்திகளில் சொல்லப்படும் சாதாரண வானிலை அறிக்கையே பொய்ப்பித்துப் போவதை எம் கண் முன்னே காண்கிறோம். அப்படியிருக்கும் போது எம்மால் எப்படி இந்த அறிவியளார்களின் கூற்றுக்களை நம்பமுடிகிறது? 

ஒருவிடயத்தில் 100 வீத சாத்தியப்பாட்டைக் காணும்போதே அறிவியல் வெற்றி கொண்டதாகக் கொள்ளப்பட வேண்டும். எதிர்வுகூறல்களையும் அனுமானங்களிலும் 100 வீத நம்பிக்கை கொள்ள முடியாது.

அதே போன்றுதான் டிசம்பர் உலக அழிவும். இதுவும் வெறும் எதிர்வு கூறலே தவிர 100 வீத உறுதிப்பாடு கிடையாது. ஆகவே உலக அழிவு பற்றிய பேச்சுக்களை விட்டுவிட்டு பிரயோசனமான விடயங்களில் நேரத்தையும் கவணத்தையும் செலுத்தும் போது மனதுக்கும் மற்றவர்களுக்கும் அது நன்மையாக அமையும்.

இந்த உலகம் அழிய கூடாது என்று ஆசை கொள்பவர்களுக்கு கீழே சில புகைப்படங்கள் இனைக்கிறேன் நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்...


உலகம் அழிய வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக சில புகைப்படங்களை கீழே இணைக்கிறேன்...

உலகத்தில் பெரிய பெரிய அழிவுகள் அவ்வப்போது இடம்பெற்றாலும் அது மொத்தமாக எல்லோரையும் பாதிக்காதது இவர்கள் போன்றோர் செய்யும் சேவைகளால்தான்...

உலக அழிவில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...


உணவைப் பகிர்ந்து கொள்ளுதலும் அன்பைப் பரிமாறிக் கொள்ளுதலும் ஏழைகளுக்குகென்றே உரித்தாகிவிட்டது போல...

உங்களில் பலகீனர்களின் பொருட்டால்தான் வானிலிருந்து இறங்கும் சோதனைகள் குறைக்கப்படுகின்றன